வடமொழியின் ஊடுருவலால் ஊறு நேராமல் தடுக்க இலக்கண வேலி அமைத்து தமிழ்மொழியைக் காத்தவர் தொல்காப்பியர்.
வடவரின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரின் பண்பாடு அழியாமல் காக்கப் பண்பாட்டு வேலி அமைத்துப் பாதுகாத்தவர் திருவள்ளுவர்.
வள்ளுவரின் நூலுக்குத் தொல்காப்பியமே வழிகாட்டும் இலக்கணமாயிற்று. தொல்காப்பியர் வகுத்த நான்கு வகைப் பாவினங்களும், அறம் முதலிய மூன்று பொருட்கண்ணே இயங்கவேண்டும். அதற்கிணங்க அறம், பொருள், இன்பம் என முப்பாலாகத் தனது நூலை யாத்தவர் வள்ளுவர். தொல்காப்பியமோ, திருக்குறளோ மற்றும் தொகை நூற்களோ வீடு பேற்றை அல்லது மோட்சத்தைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த இலக்கண இலக்கியங்கள் எழுந்த காலத்தில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றுமே தமிழர்களின் நோக்கங்களாகவும், வழிகாட்டும் நெறிகளாகவும் திகழ்ந்தன. வீடு என்று கூறப்படும் நான்காம் உறுதிப் பொருள் பின்னர் புகுத்தப்பட்ட கருத்தேயாகும். பிற்காலத்தில் எழுந்த நூற்களிலேயே நாற்பால் பேசப்படுகிறது.
பல நூறு புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல்களே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவையாகும். ஆனால், தனியொரு புலவரால் முதன்முதல் இயற்றப்பெற்ற முழுமையானதும், முதன்மை வாய்ந்ததுமான ஒரே பெரும் தமிழ் இலக்கியம் திருக்குறளே ஆகும். இத்தகைய சிறப்பு வள்ளுவர் யாத்த நூலுக்கு மட்டுமே உண்டு.
இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவப் பாதிரியாரான பெஸ்கி தமிழைக் கற்றார். அவருடைய சிறப்பினை உணர்ந்தபோது தன்னுடைய பெயரை தூய தமிழில் வீரமா முனிவர் என மாற்றிக்கொண்டார். தேம்பாவணி என்னும் செந்தமிழ்க் காப்பியத்தை இயற்றினார். தன்னுடைய தாய்மொழியான இலத்தீன் மொழியில் திருக்குறளின் அறத்துப்பாலை மொழிபெயர்த்தார்.
இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்த கிறித்துவப் பாதிரியாரான போப் தமிழைக் கற்று அதன் இலக்கியச் சிறப்புக் கண்டு வியந்தார். திருக்குறளைப் படித்த போது அது கூறும் அறக் கருத்துக்களை உலகம் அறிய வேண்டும் என விரும்பி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதன் பின்னர் திருக்குறளின் பெருமையை உலக மக்கள் உணர்ந்து போற்றினர்.
50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்பு வேறு எந்த இந்திய மொழி இலக்கியத்திற்கும் இல்லை.
“வள்ளுவன்தனை தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என பாரதி போற்றிய திருக்குறளின் பெருமையை முற்றிலும் அறியாத ஒருவர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார் என்பது காலத்தின் கொடுமையாகும். ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தனது அறியாமையை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்.
“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தியை குறிப்பிடுவதாகும். இதை சிதைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.
சமயம் என்னும் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில்தான் முதன்முதல் இடம்பெறுகிறது. அதற்கு முன்னால் தோன்றிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் சமயம் என்ற சொல்லாட்சி இடம்பெறவே இல்லை. சமயங்களோ, சமயத்திற்குரிய கடவுள்களோ பழந்தமிழகத்தில் இல்லை. ஐந்திணைகளும் அவ்வவ் திணைகளுக்குரிய தெய்வங்களும் மட்டுமே உண்டு. அந்த தெய்வங்களும் சமய தெய்வங்களல்ல. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்குறள் கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்குறள் எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை. பழந்தமிழரின் பண்பாடு குறித்தோ, பழக்கவழக்கங்கள் குறித்தோ எதுவுமே தெரியாமல் யாரோ தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்ததைத் திருத்திப் பேசவும் தெரியாமல் ஆளுநர் உளறிக் கொட்டியிருப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை சீர்குலைப்பதாகும்.
ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார் எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்றும் ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு. போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே அவர் முயற்சி செய்துள்ளார்.
இவற்றையெல்லாம் சற்றும் உணராத ஆளுநர் ஆர்.என். ரவி, திருக்குறளை ஆங்கில ஆக்கம் செய்த ஜி.யு. போப் ஒரு கிறித்தவர் என்பதினால் வெறுப்புக்கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார். ஆனால் போப் அவர்கள் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைப் படித்து மனமுருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்ற உண்மையைக்கூட அறிந்திருக்கவில்லை.
வேதங்களையும், உபநிடதங்களையும் செர்மானிய கிறித்தவரான மாக்சு முல்லர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது அவரை வியாச முனிவரின் மறுபிறவி என இந்துத்துவாவாதிகள் கொண்டாடினர். ஆனால் இந்துத்துவாவில் ஊறித்திளைத்த ஆளுநர் குறளை மொழிபெயர்த்த கிறித்தவரான போப் மீது மட்டும் பாய்கிறார்; ஏதேதோ பேசுகிறார்.
வீரமா முனிவர், போப் போன்ற கிறித்தவர்கள் மட்டுமல்ல, இரஷ்ய நாட்டு கிறித்தவ அறிஞரான டால்சுடாய் திருக்குறளை ஆழமாகப் படித்து அறிந்தவர். அதன் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் என்பதை கீழே கண்ட நிகழ்ச்சி தெளிவுப்படுத்தும்.
டால்சுடாயும் - திருக்குறளும்
இரஷ்யநாட்டுப் பேரறிஞரான டால்சுடாய் எவ்வுயிருக்கும் ஊறு செய்யாத கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் “கடவுளின் திருநாடு உன் உள்ளத்திலேயே உள்ளது. (The Kingdom of God is within you)என்னும் நூலை 1893-ஆம் ஆண்டு வெளியிட்டார். ஜார் மன்னனின் ஆட்சி இந்நூலுக்குத் தடை விதித்தது. ஆனால், உலக சமுதாயம் இந்நூலை வரவேற்றுப் போற்றிப் பாராட்டியது. இந்நூலின் கருத்துக்களில் காந்தியடிகள் தமது உள்ளத்தைப் பறிகொடுத்தார். அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது என்பதைக் காந்தியடிகளே குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் காந்தியடிகள் டால்சுடாய் மூலமே அறிந்துகொண்டார் என்பது மற்றொரு வியப்பான செய்தியாகும். அதன்பிறகு திருக்குறளைப் படித்து அதன் சிறப்பைத் தாம் உணர்ந்துகொண்டதாகக் காந்தியடிகளே தமது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.
சென்னையில் இருந்து வெளியான தி ஆர்யா என்னும் சமூக-அரசியல் பத்திரிகையின் ஆசிரியரான இராமசேசன் என்ற தமிழர் டால்சுடாயுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். இந்தியாவில் பிரிட்டிசு அரசாங்கம் நடத்திவரும் தாங்க முடியாத அடக்குமுறைகளைப் பற்றி டால்சுடாய் அவர்களுக்கு எழுதிய தமது கடிதத்தில் குறிப்பிட்ட இராமசேசன் தங்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவுரை கூறுமாறு வேண்டிக்கொண்டார். டால்சுடாய் கூறும் ஊக்க மொழிகள் மதிப்புடன் வரவேற்கப்படும் என்றும், அதற்கு நல்ல விளைவுகள் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு டால்சுடாயை இக்கடிதம் தூண்டியது. இதன் விளைவாக “இந்துக்களுக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் டால்சுடாய் எழுதிய கட்டுரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய மக்கள் அடிமைப்பட்டதற்கான காரணங்களையும், அவர்கள் விடுதலை பெறுவதற்குரிய வழிகளையும் டால்சுடாய் விளக்கியிருக்கிறார்.
வன்முறைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தைக் கையாளும்படி இந்திய மக்களுக்கு டால்சுடாய் அறிவுரை கூறினார்.
மேலும் இக்கடிதத்தில் தமது உள்ளத்தைக் கவர்ந்த திருக்குறள் பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் இவை உள்ளன. “இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்” என்னும் தலைப்பில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
The aim of the sinless One consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings.
The aim of the sinless One lies in not doing evil unto those who have done evil unto him.
If a man causes suffering even to those who hate him without any reason, he will ultimately have grief not to be overcome.
The punishment of evil doers consists in making them feel ashamed of themselves by doing them a great kindness.
Of what use is superior knowledge in the one, if he does not endeavour to relieve his neighbour’s want as much as his own?
If, in the morning, a man wishes to do evil unto another, in the evening the evil will return to him.
“பிறருக்குத் துன்பத்தைச் செய்வதால் பல்வேறு சிறப்புகளைத் தரும் செல்வத்தைப் பெற இயலும் என்றாலும் அத்தகைய துன்பத்தைச் செய்யாமல் இருப்பதே குற்றமற்ற பெரியோர்கள் கொள்கை” என்பதனை டால்சுடாய் விளக்கியுள்ளார்.
“சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்” (311)
என்று குறட்பா தெரிவிக்கின்றது.
“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும் (313)
ஒரு தீங்கும் செய்யாதவனைப் பகைத்து அவனுக்குப் பெருந்தீமைகளைச் செய்தால் அது, தப்பமுடியாத துன்பத்தைத் தரும். தம் மீது பகைமை கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பலவும் செய்த அந்த நேரத்திலும், அந்தத் துன்பங்கட்கு எதிராக அவனுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலே குற்றமற்ற பெரியோர்களது கொள்கையாகும் என்ற கருத்தை விளக்குகிறது.
“கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்” (312)
என்ற குறள் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தற்குரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து அவர்கள் செய்த ‘தீங்கினையும், தான்செய்த நன்மையினையும் மறந்து விடுவதேயாகும் என்ற அறிவுரையை
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்”. (314)
என்ற குறள் தெரிவிக்கிறது. இது இயேசு பெருமானின் அறிவுரையினும் உயர்ந்தும், உளவியல் நுட்பம் வாய்ந்தும் காணப்படுவதாக டால்சுடாய் குறிப்பிட்டுள்ளார்.
‘பிற உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிரைக் காப்பாற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் உண்டாகக் கூடிய பயன் யாது எனக் கூறும் திருக்குறட் கருத்து.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போல் போற்றாக் கடை” (315)
இக்குறள், கிறித்துவ சமய அருள் கொள்கையை உணர்த்துவதாகத் டால்சுடாய் கருதுகிறார்.
ஒருவர் ஒரு நாளின் முற்பகலில் பிறர்க்குத் துன்பந் தருவனவற்றைச் செய்வாரேயானால், அந்நாளின் பிற்பகலில் துன்பந்தருவன தாமே (பிறரால் செய்யப்படாமல்) அவரை வந்தடையும் என்பதை
“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும் (319) எனக் குறள் அறிவிக்கிறது”.
இந்த ஆறு குறட்பாக்களும் டால்சுடாயின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அவருடைய ஊறுசெய்யா (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவது பற்றிய சிந்தனைக்கு உரமாக அமைந்துள்ளன.
பிறருக்கு ஊறு செய்யாத அறநெறித் தத்துவங்களின் அடிப்படையில் போராடுமாறு உலக மக்களுக்கு அறிவுரை வழங்கிய டால்சுடாய், தமது கொள்கைக்கு உரம் சேர்க்கக் குறள் காட்டிய நெறியைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருக்குறளின் சிறப்பினை நாமெல்லாம் உணர்வதற்கு முன்பாகவே உணர்ந்து அதை உலக மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கருதிக் குறளைப் பின்பற்றி வாழ்ந்த அவரைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றியோடு பாராட்டுகிறது.
டால்சுடாய் கட்டுரை வடிவத்தில் எழுதிய மேற்கண்ட கடிதத்தை சென்னையிலிருந்து வெளிவரும் “இந்து” ஆங்கில நாளிதழுக்கு இராமசேசன் அளித்து வெளியிடச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக விளங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் பார்வைக்கு இந்த இந்து நாளிதழ் எப்படியோ போய்ச் சேர்ந்தது. இக்கட்டுரையை முழுவதுமாகப் படித்த காந்தி அவர்களின் உள்ளத்தில் மின்னல் கீற்றுப்போல ஒரு புதிய ஒளிப் பிறந்தது.
தென்னாப்பிரிக்கா வாழ் இந்திய மக்கள் வெள்ளையரின் நிற வெறிக்கு ஆளாகி பல்வேறு துன்பங்களையும், அவமதிப்புகளையும் தாங்கி வந்தனர். அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வழி தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்த காந்தி அவர்களுக்கு, டால்சுடாயின் கட்டுரை செல்ல வேண்டிய பாதையைக் காட்டிற்று. வெள்ளையரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக அகிம்சைவழிப் போராட்டத்தை காந்தி தொடங்கினார். வெள்ளை ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகி அவர் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிறை புகுந்தனர். சிறையில் தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் உயிரீகம் செய்தனர். தென்னாப்பிரிக்காவில் அகிம்சைவழிப் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்குத் திரும்பி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியிலேயே நடத்தினார் என்பதும், அதில் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது அழிக்க முடியாத வரலாறாகும். வழக்கறிஞர் காந்தியாக தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியவர் இந்தியாவில் மகாத்மா காந்தியாக மக்களால் ஏற்றுப் போற்றப்பட்டார்.
டால்சுடாய் காட்டிய வழியை காந்தியடிகள் ஒருபோதும் மறக்கவில்லை. டால்சுடாயை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அதை தனது சுயசரிதையான சத்திய சோதனையிலும் பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் அகிம்சைவழிப் போராட்ட வீரர்களுக்காக அவர் அமைத்த பண்ணைக்கு டால்சுடாய் பண்ணை என்ற பெயரைச் சூட்டினார். அகிம்சைவழிப் போராட்டத்திற்கு காந்தியடிகளுக்கு டால்சுடாய் குரு; டால்சுடாய் அவர்களுக்கு திருவள்ளுவர் குரு என்பது தமிழர்களுக்குப் பெருமை தருவதாகும்.
தேசத் தந்தை காந்தியடிகள் இந்திய விடுதலைக்கான போராட்டத்தை அறநெறியில் நடத்தி வெற்றி காண்பதற்கு திருக்குறள் காட்டிய வழியே காரணம் என்பதை டால்சுடாயின் மூலம் உணர்ந்தார். ஆனால் இவை எதையும் அறியாத நிலையில் உயர் பதவியில் அமர்ந்திருக்கிறோம் என்ற மமதையின் காரணமாகவும், அவை அடக்கம் சிறிதும் இல்லாமலும், உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பைக் குறித்தோ, உலகின் மூத்த குடியான தமிழரின் பண்பாட்டுப் பெருமை குறித்தோ எள்ளளவுகூட அறியாமல் ஆளுநர் ஆர். என் ரவி பேசியிருப்பதை வள்ளுவரின் வழித்தோன்றல்களான தமிழர்கள் மன்னிப்பார்களாக. |