உத்தராகண்ட மாநிலத்தில் வெளியார் நிலம் வாங்கத் தடை! பா.ச.க. முதல்வர் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:40

uttarkhandஇமயமலைச் சாரலில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் வெளியார் நிலம் வாங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இம்மாநிலத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களும், உல்லாச விடுதி உரிமையாளர்களும், விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கும் போக்கு நாளுக்கு நாள் பெருகி வந்தது. இதன் விளைவாக அம்மாநில மக்கள் தங்கள் மண்ணை முற்றிலுமாகப் பறிகொடுக்கும் நிலைமை உருவாயிற்று.

அம்மாநிலத்தில் பா.ச.க. கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாநில முதல்வரான புஷ்கர் சிங் தாமி என்பவர் இப்பிரச்னைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு அம்மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் குமார் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு 23 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.

“விவசாய நிலங்களை வாங்குவதற்காகத் தொழிலதிபர்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்ததை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்; மாநில அரசிடமே அந்த அதிகாரம் இருக்கவேண்டும்; தொழில், மருத்துவமனை, கல்வி நிலையங்கள், சுற்றுலா நிறுவனங்கள் போன்றவை தங்களது தேவைக்கு என்று கூறி ஏராளமான விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர். அதில் நட்சத்திர உணவகங்கள், உல்லாச விடுதிகள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள், தொழிற் கல்லூரிகள் போன்றவற்றை அமைத்து உள்ளூர் மக்களுக்கு எத்தகைய வேலை வாய்ப்பும் தராமல் பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.” என அக்குழு கூறியுள்ளது.

“இத்தகைய சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிலச்சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும்” என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தில் காசுமீர், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோராம் போன்ற பல மாநிலங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் நிலம் உள்பட அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. அந்த மாநில மக்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் காசுமீர் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த உரிமைகளை இந்திய அரசு பறித்துவிட்டது. ஆனால். இப்போது பா.ச.க. அரசு ஆளும் மாநிலத்தில் வெளியார் நிலம் வாங்குவதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.