ஆளுநருக்கு எதிராக தமிழர்களின் ஆர்ப்பாட்டம் ! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:48

porattam size

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதைக் கண்டித்து 11.09.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் பனகல் மாளிகைக்கு முன்பாக தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது.

அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று உணர்ச்சிகரமான முழக்கங்களை எழுப்பினர்.

 

 

1.விடமாட்டோம்! விடமாட்டோம்!

குறளைப் பழித்தவனை எங்கள் தாய் தடுத்தாலும்

விடமாட்டோம்! விடமாட்டோம்!

2.பூசாதே! பூசாதே!

தமிழர் அற நூலான திருக்குறளுக்கு

வைதிகச் சாயம் பூசாதே!

3.குறள் அறம்! குறள் அறம்! என்பது

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்னும் தமிழர் அறமே

மனுதர்மம்! மனுதர்மம் என்பது

பிறப்பினால் ஏற்ற தாழ்வு கற்பிக்கும் ஆரியர் தர்மமே

4. உளராதே! உளராதே!

குறள் நெறியை அறியாது

உளராதே! உளராதே!

5. தேவையா? தேவையா?

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும்

தேவையா? தேவையா?

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழ. கருப்பையா, எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன், தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன், மே-17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவர் ஆ.சி. சின்னப்பா தமிழர், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத் தலைவர் சிவ. செந்தமிழ்வாணன், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த முல்லைத் தமிழன், தமிழர் விடுதலை கழகத் தலைவர் சௌ. சுந்தரமூர்த்தி, தமிழ்ச் சான்றோர் பேரவைத் தலைவர் சோழ நம்பியார், தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன், தமிழகப் பொதுவுடைமை இயக்கத் தலைவர் அ. பத்மநாபன், கோவை இயற்கை வாழ்வகத்தைச் சேர்ந்த முத்து முருகன் ஆகியோர் தலைமையில் இந்த அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர்.

tdm 2தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் வழக்கறிஞர் பானுமதி, பொதுச் செயலாளர்கள், செ.ப. முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி, ஆவல் கணேசன், பொருளாளர் உதயகுமார், மாவட்டத் தலைவர்கள், ச. இலாரன்சு, ப. இளங்கோவன், ஆத்மநாதன், இரா. பாலசுப்பிரமணியன், பேரா. முரளிதரன், இரா. சிவப்பிரியன், மாநில மகளிரணி அமைப்பாளர் செஞ்சி சாய்ரா, மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை, விழுப்புரம் கோ. பாபு, தினகரன் ஆகியோரும் மற்றும் திரளான முன்னணி தோழர்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறைத் தடை விதித்திருந்த போதிலும் அதை மீறி இந்த ஆர்ப்பாட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றிய பிறகு பழ. நெடுமாறன் உரையாற்றினார். பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

 

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.