வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான குழுவின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில் போலந்தின் 2 வருகை தரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை.
ஒன்றிய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் நிறுவனத்தில், 1970ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் மூலம் தேர்வாகும் இவர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்குமிடங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
சமற்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், வங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிகபட்சமாக இந்தி, அடுத்த நிலையில், சமற்கிருதமும் உள்ளன.
இந்தப் பட்டியலில் தமிழுக்காக வெறும் 2 இருக்கைகள், போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் இவை அமைந்துள்ளன. இவற்றுக்கு, கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கடந்த 2015இல் கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெயகிருஷ்ணனை ஐசிசிஆர் தேர்வு செய்தது. ஆனால் அவரையும் போலந்து அனுப்பவில்லை. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணைய தளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், வார்சா தமிழ் இருக்கையில் வருகை தரு பேராசிரியராக பணியாற்றிய ஜி. பாலசுப்பிரமணியன் கூறும்போது, “இந்தி, சமற்கிருதத்தைவிடப் பழமையானதும் பல வெளிநாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள தமிழுக்கு போலந்தில் மட்டும் 2 இருக்கைகள் உள்ளன. அதற்குகூட பல ஆண்டுகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்படாதது வருந்தக் கூடியது. போலந்தின் மாணவர்கள் தமிழைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்கள். எனவே உடனடியாக ஐசிசிஆர் பட்டியலில் தமிழை சேர்ப்பதுடன் மேலும் பல வெளிநாடுகளில் இதற்காக இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
வார்சா பல்கலைக்கழகத்தில் 48 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் தமிழ் இருக்கை உள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது. தொடக்கக் காலங்களில் போலந்து இருக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியருக்கு 3 ஆண்டுக்கு மேல் பணி வாய்ப்பு கிடைத்தது. இதில் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தங்கும் இடமும், உணவும் போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. பிறகு பேராசிரியரின் குழந்தைகளுக்கானச் செலவு குறைக்கப்பட்டது. அடுத்து பணிக்காலம் ஓராண்டானது, பின்னர் 9 மாதமாக குறைக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சனை, இந்தி, சமற்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப் பிரிவுகளில் இருப்பதாகத் தெரியவில்லை. |