பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களைப் பகடை காய்களாக்கி மதக்கலவரங்களை மூட்ட சூழ்ச்சி! -பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 02 அக்டோபர் 2022 12:38

“இந்துத்துவாவாதிகளின் தேசியம் இந்தியாவின் பகுத்தறிவுப் பாரம்பரியத்தை, அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, வானியல் போன்ற துறைகளில் முன்னோடியாக நடை பயின்ற ஒரு நாட்டின் - தசமமுறை தோன்றிய நாட்டின் - முந்தைய தத்துவமானது மதச் சார்பற்றதாகவும் - மத ரீதியாகவும் விளங்கிய, செஸ் போன்ற விளையாட்டுக்களை உருவாக்கிய, பாலியல் கல்வியில்

முன்னோடியாக விளங்கிய, அரசியல், பொருளாதாரம் குறித்த முதன் முதலாகத் திட்டமிட்ட வகையில் ஆய்வு மேற்கொள்ளத் துவங்கிய ஒரு நாட்டின் பாரம்பரியத்தை அவர்களது தேசியம் புறக்கணிக்கிறது. அதற்கு மாறாகக் கேள்வி கேட்காத வகையில் சிலையை வணங்குவோர், சமநிலையற்ற வெறிபிடித்தோர், தீவிரமான பக்தர்கள், மதவெறி பிடித்த கொலையாளிகள் ஆகியோரை இந்தியாவிற்குத் தரவே இன்றைய தீவிரவாத இந்து விரும்புகிறான்.”

இந்து பாசிசவாதிகள் எத்தகைய இந்தியாவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் துல்லியமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்து பாசிசவாதிகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், நடைமுறைத் தந்திரங்களை மாற்றிக் கொள்ளவும் ஒருபோதும் தயங்கியதில்லை.

வர்ண தர்மத்தின்படி யாரைத் தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கி வைத்தார்களோ, பல கட்டங்களில் யாருக்கு எதிரான படுகொலைகளை நடத்தினார்களோ அதே ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறிச் செல்வதைத் தடுக்கவும், முசுலீம்களைத் தாக்கி அழிக்கவும், அதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்து வெறியூட்டிப் பயன்படுத்தினார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தவித்த இந்து பாசிசவாதிகள் தொண்ணூறுகளில் புதிய உத்தியைக் கையாண்டு உள் நுழைந்தனர். தமிழகத்தில் விநாயகர் விழா என்பது இந்துக்களின் வீடுகளுக்குள் அடங்கி இருந்தது. வீட்டிற்குள் களிமண்ணால் செய்த சிறிய பிள்ளையார் சிலையை வைத்து பூசை செய்துவிட்டு மறுநாள் ஆற்றிற்கோ அல்லது குளத்திற்கோ எடுத்துச் சென்று வீசிவிடுவது பழக்கமாக இருந்தது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திலகர் மராட்டிய மாநிலத்தில் விநாயகர் விழாவை வீதிக்குக் கொண்டு வந்தார். பெரிய பெரிய சிலைகளைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திச், செல்லும் வழி நெடுக மதக் கலவரங்கள் நடைபெற வழி கோலினார். ஆனால் தமிழ்நாட்டில் இந்தப் பழக்கம் பரவவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தான் இந்து முன்னணி இப்பழக்கத்தைத் தொடக்கி வைத்தது. இது குறித்துக் எஸ்.ஆனந்தி என்பவர் நடத்திய கள ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்தன.

“தொண்ணூறுகளில் இந்து மதவெறியைத் தமிழகத்தில் கடை விரிக்கத் தொடங்கிய தீவிர மதவெறியர்கள் தமது விநாயகர் ஊர்வலத்தில் இசுலாமியரைத் தாக்கும் சக்தியாகத் தாழ்த்தப்பட்டோர்களைப் பயன்படுத்திய அவலம் நேர்ந்தது. அத்தகைய தாக்குதலுக்கு மதவெறியர்கள் பிரயோகித்த தந்திரங்களையும், தாக்குதலுக்கு முன் அத்தாழ்த்தப்பட்ட மக்களும் முசுலீம்களும் எவ்வளவு அந்நியோன்யமாய் வாழ்ந்தார்கள் என்பதையும் எஸ்.ஆனந்தியின் கள ஆய்வு பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறது. நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருவல்லிக்கேணிப் பகுதி, ஏராளமான சேரிகளைத் தன்னுள் கொண்டிருந்தது. இருப்பினும் நாங்கள் எங்கள் ஆய்விற்குத் தமிழ் முசுலிம்களும் தாழ்த்தப்பட்டோர்களும் பெரிய அளவில் சேர்ந்து வசிக்கின்ற மூன்று சேரிகளையும் மற்றும் மீர்சாகிப் பேட்டையிலுள்ள ஒரு தெருவோரக் குடியிருப்பையும் எடுத்துக் கொண்டோம். புலம்பெயர்ந்த இந்தப் பகுதித் தமிழ் முசுலிம்கள் திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டத்தில் இருந்து பெரும்பான்மையான அளவு வந்தவர்கள். அவர்கள் மிகவும் கீழ்மட்டப் பொருளாதார வாழ்க்கையைத் தான் பெற்றிருந்தார்கள். சமயச் சார்பற்ற சமூகத்தின் துடிப்பான குடிமகன் என்ற வகையிலும் பொதுநல ஆர்வமுள்ள தல சமூக சேவகர் என்ற முறையில் ஒருவர் ‘இந்து மதவெறி கலவர அரசியல்’ வெடிப்பதற்கு முன்னர், இங்குள்ள முசுலீம்கள் இங்குள்ள தல இந்துக்களின் வழிமுறைப்படியே அல்லாவை உருவவழிபாடு செய்யும் அளவுக்கு இருந்தார்கள் என்கிறார்கள். இங்குள்ள தல அம்மன் கோயில் ஆடிவிழாவின்போது அடுப்புகளுக்குத் தேவையான விறகைக் கொடுப்பது முசுலீம்கள் தான் என்ற பழக்கம் காலம் காலமாய் இருந்து வந்துள்ளது. முசுலீம் இளைஞர், இளைஞிகள் ‘தீமிதி’விழாவில் நேரடியாகப் பங்கேற்ற நிலையும் இங்கு இருந்தது. அதுபோல இந்தப் பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்டோர் இன சேரி வாழ் மக்கள் தங்கள் குழந்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்தால், தர்காவிற்குப் போய் மந்திரித்துப் பிரார்த்தனை செய்து வருவது அண்மைக் காலம் வரை உள்ள பழக்கம் தான். முசுலீம்களின் பண்டிகையான ‘ரம்சான்’ ‘அல்லாச்சாமிப் பண்டிகை’என்று தாழ்த்தப் பட்டோர்களாலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இங்கு முன்னர் இந்து-முசுலீம் சச்சரவுகள் ஏற்பட்டதே இல்லை. பணம் படைத்த உருது பேசும் ஷியா முசுலீம்களுக்கும் பரம ஏழைகளான தமிழ் பேசும் சன்னி முசுலீம்களுக்கும் தான் முன்னர் சச்சரவுகள் ஏற்பட்டன என்பது தான் உண்மை.”

திருவல்லிக்கேணி பகுதியில் ஆனந்தி கண்டறிந்த உண்மை நிலவரம் தமிழகத்தின் பெரும் பகுதியில் நிலவுகிறது. இந்துக்களும் - முசுலீம்களும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள்.

பார்ப்பனப் பாசிஸ்டுகள் தங்களின் கொலை நோக்கத்திற்கு அப்பாவிகளான தாழ்த்தப்பட்டோர் மக்களை எவ்வாறு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை யாக்கன் “சூலத்தை வழிமறிப்போம்” என்ற கட்டுரையில் தோலுரித்துக் காட்டியுள்ளார். அது வருமாறு:

“1998-க்குப் பிறகு நாடு முழுவதிலும் பார்ப்பனப் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய படுகொலைகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், தாழ்த்தப்பட்டோர்-சிறுபான்மையினரின் மேல் கவிழ்ந்திருக்கும் பயங்கரத்தை உணர்ந்து கொள்ளமுடியும். எந்த மக்களை, வேத, இதிகாச புராணப் புளுகுகளைச் சொல்லிக் கீழ்நிலைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்தினார்களோ, அதே மக்களிடம் இன்று கொலைக் கருவிகளைக் கொடுத்து, தங்களின் நிரந்தர எதிரிகளைக் காவு கொள்கிறார்கள் - அதே புராணப் புளுகுகளைச் சொல்லி.

இந்தியாவில் நீண்டகாலமாக இருந்துவரும் குற்றப் பரம்பரை எதுவெனக் கேட்டால், அது பார்ப்பனச் சமூகமே எனச் சொல்ல முடியும். ஏனெனில், ஒரு சொட்டு இரத்தம் கூட தங்கள் மேல் தெறித்து விழாமல் ஆயிரக் கணக்கில் குழந்தை குட்டிகளோடு கொன்றொழிக்க அவர்களால் முடிகிறது. அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நாடு முழுவதும் பரிசோதித்துப் பார்ப்போம் என்று கெக்கலிட முடிகிறது. மிகப் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்லுகிறார்கள்.

இந்துத்துவத்தை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கிறார்கள். வறுமையினாலும், வேலையின்மையினாலும் கிராமங்களில், நகரங்களில் உழன்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் கொடுத்து பயிற்சிகள் என்ற பெயரில் இந்து வெறியூட்டி பார்ப்பன அடிமையாக்கி, அவர்கள் கையில் கூர்வாள் போன்ற சூலத்தைக் கொடுத்து ஒரு இசுலாமியனையாவது அல்லது ஒரு கிறித்துவனையாவது கொல்ல வேண்டும் என்று ஏவி விடுகிறார்கள்.

இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உயர்ந்த பதவியிலிருக்கும் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளாக இருக்கும் உயரதிகாரிகளும் அரசின் இரகசியப் புள்ளிவிபரங்களை, இந்து பயங்கரவாதிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஆர்.எஸ்.எஸ். தலைவரிடமும், வி.எச்.பி.யின் சர்வதேச செயல் தலைவரிடமும் கலந்தாலோசிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வருகின்றன.

இந்தியப் புலனாய்வுத் துறையிலிருக்கும் பார்ப்பனர்கள் இந்து பயங்கரவாத எதிர்ப்பாளர்களைப் பற்றிய புள்ளி விபரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த பார்ப்பன மூளைகள், இந்து பயங்கரவாதத்திற்குச் செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்த வண்ணமிருக்கின்றனர். மிகக் கூர்மையாகப் பார்த்தோமேயானால், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளுடன் ஆட்சியாளர்களும், அரசு நிர்வாக உயர் அதிகாரிகளும் ஒரு சேர நிற்பது புலனாகும்.

தனது இரு பெரும் எதிரிகளான இசுலாமியர்களையும் தாழ்த்தப்பட்டோர்களையும் மிகச் சாதுர்யமாகக் கையாளுகிறது. பார்ப்பனப் பயங்கரவாதம், பார்ப்பனப் புத்தியான பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் தனது இரு பெரும் எதிரிகளை இணையவிடாமல் செயலாற்றுகிறது.

மதமாற்றத்தில் ஈடுபடும் கிறித்துவ பாதிரியார்களையும், பெண்துறவிகளையும் மட்டுமே இந்து மதவெறியர்கள் வேட்டையாடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இசுலாமியரையும் கொல்லத் துடிக்கிறது இந்துப் பாசிசம்.

பார்சிகளைப் பற்றியோ, சீக்கியர்களைப் பற்றியோ பார்ப்பனப் பயங்கரவாதம் கவலைப்படுவதில்லை. ஏனெனில், படிநிலை சாதியமைப்பைப் போற்றுகின்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். எனவே தான் இசுலாமியர்களையும், தாழ்த்தப்பட்டோர்களையும் தாழ்த்தப்பட்டோர் மக்களின் மூதாதையரான பெளத்தர்களையும் இருபெரும் எதிரிகளாகக் கருதுகிறது இந்து பயங்கரவாதம்.

கே.பி.ஹெட்கேவார், 1925-இல் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தொடங்கியபோதே, இசுலாமியர்களுக்கெதிரான வெறியுணர்ச்சியும், வன்முறைச் சிந்தனையும் அவருக்கு இருந்தது. 1921-இல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் முடிந்த பிறகு, நிலவுடைமையாளர்களாக இருந்த பார்ப்பனர்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய ‘மாப்ளா கிளர்ச்சி’யின் போதும், கோஹாட், முல்டான், நாக்பூர், கான்பூர் ஆகிய நகரங்களில் நடந்த கலவரங்களின் போதும் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால் கொதிப்படைந்த ஹெட்கேவார், பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் ஒற்றுமையைப் பற்றி பேசினார். பொது எதிரியாக இசுலாமியரைச் சித்தரித்தார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் ‘இந்துப் பெரும்பான்மை’ தாழ்த்தப்பட்டோர்கள் இல்லையெனில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், அவர்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. எனவேதான், மதமாற்றத் தடைச் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர நூற்றாண்டு காலமாகப் பேசி வருகிறார்கள்.

1934வரை தாழ்த்தப்பட்டோர்களை ‘இந்துக்கள்’ என்று சொல்வதில் இந்து பயங்கரவாதிகளுக்குள் பெரிய கருத்து மோதல்கள் நடந்தன. இன்றுவரை தாழ்த்தப்பட்டோரை உரிய மரியாதையுடன் நடத்துவதற்கு, குறைந்தபட்சம் கோயில்களுக்குள் அனுமதிப்பதற்குக் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எண்ணம் வரவில்லை. விடுதலைக் கருத்தியலுக்கு வந்துவிட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும், தலைவர்களையும், தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை - இந்து பார்ப்பனப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்காரையும் கூட, ஒரு இந்து என்று ‘அடையாளம்’ காட்டி, தன்னுள் இழுத்துக் கொள்ள முயலுகிறார்கள்.

மண்டல் எதிர்ப்பு

இந்தக் கட்டத்தில் நீண்ட காலமாக மூலையில் கிடந்த மண்டல் பரிந்துரைகளைத் தூசி தட்டி எடுத்த பிரதமர் வி.பி.சிங் மத்தியஅரசுப் பதவிகளில் பிற்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்தார். மண்டல் பரிந்துரைகளை முழுமையாக அவர் செயல்படுத்தவில்லை. ஒரு பகுதியை மட்டுமே செயல்படுத்தினார். பிற்பட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனியம் கொதித்து எழுந்தது.

பிற்பட்டவர்களும் இந்துக்கள் தானே? அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் இந்து மதத்தவருக்குத் தானே கிடைக்கின்றன என மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் இந்துத்வாவாதிகள் கொதித்து எழுந்தது ஏன்? இந்துத்வா என்பது பார்ப்பனிய நலனுக்காக மட்டுமே என்பது இதன் மூலம் அம்பலமாயிற்று.

பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்த ஆணைக்கு எதிராகக் கலவரத்தை சங்கப் பரிவாரம் தூண்டிவிட்டது. அப்பாவி மாணவர்களைத் தீ வைத்துக் கொளுத்தி அவர்களே தீக்குளித்ததாகப் பரப்புரை செய்தனர். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தங்கள் மீது யாரோ தீ வைத்த கொடுமையைக் கண்ணீரும் கம்பலையுமாக அம்பலப்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகாரப்பூர்வமான ஏடான ஆர்கனைசர் “ராஜாவின் சாதிய யுத்தம்”என்ற தலைப்பில் இவ்வாறு எழுதியது.

“பிரிட்டிஷாரின் 150 ஆண்டுக்கால அன்னியர் ஆட்சியில் செய்ய முடியாத ஒன்றை வி.பி.சிங் தனது ஓராண்டு ஆட்சியிலேயே செய்து முடிக்கப் போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்குக் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீவிரமான முயற்சிகளை இவர் சிதைக்கப் பார்க்கிறார். விவேகாநந்தர், தயானந்த சரசுவதி, காந்தியடிகள், டாக்டர் ஹெட்கேவர் போன்ற தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து மேற்கொண்ட இந்து சமுதாய ஒற்றுமை முயற்சிக்கு இது எதிரானது. வி.பி.சிங், சமூகத்தை மண்டல் மயமாக்குவதன் நோக்கமே, சமூகத்தை முன்னேறியவர், பிற்படுத்தப்பட்டவர், ‘அரிஜன்’ என்று கூறுபோடுவது தான்” (ஆர்கனைசர், 26 ஆகஸ்டு, 1990)

மண்டலை எதிர்க்கக் காவிப்படை கமண்டலத்தைக் கையில் எடுத்தது. அத்வானி உடனடியாக இராமர் கோவில் யாத்திரையைத் தொடங்கினார். நாடெங்கும் மதக் கலவரங்கள் மூண்டன. வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

பிற்பட்ட மக்களுக்குச் சிறிதளவு சலுகைகள் அளிக்க முன்வந்த வி.பி.சிங் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்ததில் இருந்தே அவர்கள் பிற்பட்டவர்களுக்கு முழுமையான எதிரிகள் என்பது புலனாகும். இந்த உண்மையை மறைத்துப் பிற்பட்ட மக்களை இந்துத்வா பிடிக்குள் கொண்டுவர அவர்கள் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை “காஞ்சா அய்லைய்யா” பின்வருமாறு விளக்குகிறார்.

“சாதியால் பிளவுபட்டுக் கிடக்கும் இந்து சமுதாயத்தை மதவாத தேசிய சக்தியாக மாற்ற வேண்டுமெனத் திட்டமிட்ட இந்துத்வாவாதிகளுக்கு ஒன்றுதான் பெரும் பிரச்னையாக இருந்தது. ஆன்மீக அடிப்படையில் சமவுரிமை அளிக்காமல் சூத்திரர்களை அல்லது பிற்பட்ட சாதியினரை எப்படித் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது தான் அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்தக் குறிக்கோளை அடைவதற்காக இந்துத்வாவாதிகள் தேச நிர்மாணப் பணியில் ஒத்துழைக்குமாறு படிப்பறிவில்லாத பிற்பட்ட மக்களை வேண்டிக் கொண்டனர். ஆனால் தேசச் செல்வத்தில் அவர்களுக்குப் பங்களிக்க முன்வரவில்லை. இந்து மதத்தின் சமுதாய அடித்தளத்திற்கு சாதிய முறை வேட்டு வைத்தது. ஓடுக்கப்பட்ட மக்களும் பிற்பட்ட மக்களும் வேறு மதங்களைத் தழுவத் தொடங்கினார்கள். பார்ப்பனியத் தத்துவத்தின் அரசியல்-சமுதாய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இந்து மதத்தின் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். பிற்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் நலனுக்காகவும் மண்டல் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது இந்து தேசியவாதத்தைச் சிதறடிக்கும் செயலாகவும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மையினரை ஒன்றுபடுத்தும் திட்டமாகவும் அதை இந்துத்வாவாதிகள் கருதினார்கள்.

இதை முறியடிப்பதற்காகப் பிற்பட்ட மக்களை அணிதிரட்டும் வேலையில் சங்கப்பரிவாரம் ஈடுபட்டது. பல ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்த போதிலும் காங்கிரசுக் கட்சியோ சமதர்மம் பற்றிப் பேசும் கட்சிகளோ தங்கள் கட்சி அமைப்புகளில் பிற்பட்டோருக்கு உயர்ந்த பதவிகள் எதையும் வழங்கவில்லை.

ஆங்கிலம் கற்ற பார்ப்பனர்கள் எல்லாவகையான அரசியல் அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்து ராஷ்ட்ரம் அமைக்கப்பட்டால் முசுலீம்கள் இந்தியாவை விட்டு விரட்டப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு எல்லாமே கிடைக்கும் எனப் பிற்பட்ட மக்களுக்கு ஆசை காட்டினார்கள். இந்தக் கட்டத்தில் பிரதமராக இருந்த வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தியபோது பா.ஜ.க. பெரும் பாதிப்புக்குள்ளானது. மண்டல் பிரச்னையிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இராமர் கோவில் பிரச்னையை எழுப்பியது. சங்கப்பரிவாரத்திலிருந்த பிற்பட்ட மக்கள் தங்களுடைய உடல் வலிமையைக் கொண்டு பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தனர். இந்துத்வாவை நிலைநிறுத்த அவர்களின் தொடர்ந்த ஆதரவு வேண்டும் என்பதற்காக அத்வானி, கோவிந்தாச்சாரியா ஆகியோர் ஒரு திட்டம் வகுத்தனர். அதற்கிணங்க பிற்பட்ட சாதிகளைச் சார்ந்த பலர் பல்வேறு மாநிலங்களில் பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டார்கள். உத்திரப் பிரதேசத்தில் கல்யாண்சிங், வினய்கட்டியார் - மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி, குசராத்தில் மோடி போன்ற பலர் பொறுப்புகளில் அமரவைக்கப் பட்டார்கள். இதனைத் தொடர்ந்து பிற்பட்ட தலைவர்களின் அரசியல் ஆசைகள் கூர்மையடைந்தன. ஆனால் சமுதாய ஆன்மீக மாற்றத்தில் அவர்களுக்கு எவ்வித ஆதாயமும் கிடைக்கவில்லை.

மற்ற கட்சிகளை விட பா.ஜ.க. பிற்பட்ட மக்களை அரவணைத்துக் கொண்டு இந்துத்வாவின் வலிமைமிக்க தளமாகப் பயன்படுத்தத் தொடங்கிற்று. மதசார்பற்ற கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் இந்தப் பிரச்சனையில் பின் தங்கி விட்டார்கள். படிப்பறிவில்லாத பிற்பட்டசாதி மக்கள் மதச்சார்பின்மை, சமதர்மம், வகுப்புவாதம் போன்றவை குறித்து நடைபெற்ற விவாதங்களை கொஞ்சமும் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய மக்களைச் சங்கப் பரிவாரம் தன்னுடைய நோக்கத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டது. முசுலீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நடத்துவதற்கு இவர்களை முழுமையாகப் பயன்படுத்தியது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்துப் பார்ப்பனிய சமூகத்தின் அங்கீகாரத்தைப் பிற்பட்ட மக்கள் பெற்றனர். சங்கப் பரிவாரத்தில் தலைவர்களாக வேண்டுமானால், முசுலீம்களுக்கு எதிராகத் தீவிரமாகப் பேச வேண்டும் என்பது நியதியாக இருந்தது. மோடி, உமாபாரதி போன்றவர்கள் அதைச் சிறப்பாகச் செய்தார்கள். பிரதமராக பி.வி.நரசிம்மராவ் இருந்த காலம் காங்கிரசுக் கட்சியின் உண்மையான பார்ப்பனிய காலமாகும். அவர் காலத்தில் காங்கிரசுக் கட்சியிலிருந்த பிற்பட்ட தலைவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தார். எனவே, சராசரி படிப்பறிவுள்ள பிற்பட்டச் சாதித் தலைவர்கள் சங்கப் பரிவாரத்தில் ஐக்கியமாவது தான் தங்கள் உயர்வுக்கு வழி என்று கருதினார்கள்.

பார்ப்பன ஆதிக்க வர்க்கம் தங்கள் சாதியைச் சேர்ந்த வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, ஆகியோருக்கு முழுமையான ஆதரவு அளித்தது. அதே வேளையில் பிற்பட்ட தலைவர்களின் எழுச்சியை வேண்டா வெறுப்பாகப் பார்த்தது. சங்கப் பரிவாரத்தில் இருந்த பிற்பட்ட மக்களின் இணையற்ற தலைவராக மோடி உருவானார். பிரதமர் வாஜ்பாயையே அலட்சியம் செய்யும் அளவிற்கு அவர் வளர்ந்தார். முதல் தடவையாகப் பார்ப்பனர்களாலும் மற்ற மேல்சாதித் தலைவர்களாலும் பாராட்டப்பட்ட பிற்பட்ட தலைவராக மோடி திகழ்ந்தார். தன் ஆணைக்குக் கட்டுப்பட்ட பிற்பட்ட மக்களின் துணை கொண்டு கற்பனைப் பகைவர்களான முசுலீம்களை அவர் கடுமையாகத் தாக்கியபோது அவரைப் பாராட்டுவதைத் தவிர வேறுவழி பார்ப்பனியத் தலைமைக்கு இருக்கவில்லை.

(உருவாகாத இந்தியத் தேசியமும் – உருவான இந்து பாசிசமும் – பக்கம் -512 -520)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.