நெடிய போராட்டத்திற்குப் பின் நிலைநாட்டப்பட்ட நீதி! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:38

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி படுகொலையை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனை விதித்த செயல் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திற்று.

இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் 26 தமிழர்களின் வழக்கை நடத்துவது பற்றியும் அதற்கான நிதியைத் திரட்டுவது பற்றியும் முடிவு செய்ய தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் திரு. பழ. நெடுமாறன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் 6-2-98 அன்று சென்னை “தென்செய்தி” அலுவலகத்தில் நடைபெற்றது.

1. இக்கூட்டத்தில் கீழ்க்கண்டோரை நிருவாகிகளாகக் கொண்ட 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழு அமைக்கப்பட்டு நிதி திரட்டி வழக்கை நடத்தி நீதியை நிலைநிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

seven

தலைவராக திரு. பழ. நெடுமாறன், துணைத் தலைவர்களாக திருவாளர்கள் கரூர் பி.ஆர். குப்புசாமி, கார்முகில், ச. மெல்கியோர், ம. சண்முகசுந்தரம், ஆனூர் ஜெகதீசன், நாத்திகம் பி. இராமசாமி, நெல்லிக்குப்பம் வி. கிருஷ்ணமூர்த்தி, புதுவை அழகிரி, நாமக்கல் என்.பி. இராமசாமி செயலாளர்களாக திருவாளர்கள் பெ. மணியரசன், தியாகு, பேரா. கலியாணி, பொருளாளராக பேரா. சுப.வீரபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 42 பேர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

பிரச்சாரப் பணி

“இராசீவ் படுகொலை - மறைக்கப்பட்ட உண்மைகள்” என்னும் தலைப்பில் விடுதலை க. இராசேந்திரன் எழுதிய பல அரிய தகவல்கள் அடங்கிய நூல் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டது.

பிற மாநில - அமைப்புகளின் ஆதரவு

26 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் கண்டித்து கேரளம், ஆந்திரம், தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

Kerala Civl Liberties Committeeயின் அமைப்பாளரான திரு. முகுந்தன் சி. மேனன் 11-2-98 அன்று மே 26 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்தும் இவர்களின் வழக்கை நடத்த திரு. பழ. நெடுமாறன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 26 தமிழர்கள் உயிர்க் காப்பு வழக்கு நிதிக்குழுவிற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தும் 11-2-98 அன்று அறிக்கை வெளியிட்டார்.

கேரள மாநிலத்தில் உள்ள மனித உரிமைச் சங்கங்களின் கூட்டமைப்பானConfederation of Human Rights Organisations(Kerala)சார்பாக 25-6-98 அன்று திருவனந்தபுரத்தில் மரண தண்டனைக்கு எதிரான தேசிய மாநாடு ஒன்று திரு. முகுந்தன் சி. மேனன் முன் முயற்சியால் நடத்தப்பட்டது.

கேரள உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிநாயகம் திரு. சந்திரசேகர் மேனன் தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் இம்மாநாட்டினைத் தொடக்கி வைத்தார். ஆந்திர மாநில சமூக விடுதலைச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே. பாலகோபால் உட்பட பலர் பேசினார்கள். தமிழகத்திலிருந்து திரு. தியாகு, திரு. விடுதலை க. இராசேந்திரன், கவிஞர் குயில்தாசன், திருமதி அற்புதம் குயில்தாசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இராசீவ் கொலை வழக்கில் இயற்கை நீதிக்கும் நாகரிகமான சட்ட நடவடிக்கைகளுக்கும் எதிரான வகையில் 26 பேர்களுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை வன்மையாகக் கண்டித்து இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆந்திரா

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தOrganisation for Protection of Democratic Rights (A.P.) என்னும் அமைப்பின் பொதுச் செயலாளரான திரு. பாஸ்கரராவ் நமது குழுவின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தங்கள் அமைப்பு கண்டிப்பதாகவும், தங்கள் மாநிலத்தில் இது குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைத் திரட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகம்

பெங்களூரில் உள்ள South India "Cell for Human Rights Education and Monitoring" என்னும் அமைப்பின் சார்பில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டனம் செய்தும், அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முன்வருமாறும் வேண்டிக் கொள்ளும் கடிதங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரு. கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று அனுப்பியது.

தமிழகம்

Peoples Union for Civil Liberties Tamil Nadu and Pondicherryசார்பில் புதுச்சேரியில் “மரண தண்டனை ஒழிப்பு மாநாடு” நடத்தப்பட்டது. திருமதி. சுதா இராமலிங்கம் தலைமை தாங்கிய இம்மாநாட்டில் திரு.எம்.ஜே. மாண்டே, டாக்டர் திரு. கே. பாலகோபால், திரு. வே. ஆனைமுத்து, திரு. ந.மு. தமிழ்மணி, திரு. அ. மார்க்ஸ், திரு. தியாகு, திரு. பெ. மணியரசன், திரு. எஸ்.வி. இராசதுரை உட்பட பலர் உரையாற்றினார்கள்.

தமிழ்நாடு P.U.C.L. சார்பில் 26 பேர்களின் மரண தண்டனையைக் கண்டித்து ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இரு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.

பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் இயக்கத்தையும் இந்த அமைப்பு நடத்தியது.

பிற நாடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரைத் தலைமையகமாகக் கொண்டுச் செயல்படும் International Secretariat of the World Organisation Against Torture (O.M.C.T.)என்னும் அமைப்பு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் நேர்மையாகவும், ஒரு சார்பில்லாமலும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய கடிதங்களை ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதிக்கும் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியது.

நார்வே நாட்டினைச் சேர்ந்த Mr. Jon Rud, Chairman of the Norweigian Bar Human rights Committee26 பேர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்துக் கவலை தெரிவித்தும், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை சர்வதேச நேர்மையான விசாரணைத் தரத்திற்கு ஏற்ப நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் இதை எடுத்துக் காட்டியிருப்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளும் கடிதம் ஒன்றினை இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளது. இக்கடிதத்தின் நகல் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர்   திரு. இந்திரஜித் குப்தா அவர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரு. கே. ஆர். நாராயணன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

Amnesty International என்னும் சர்வதேச அமைப்பின் நார்வே கிளையின் செயலாளர் - நாயகமான Mr. Jan Borgenஎன்பவர் இராசீவ்காந்தி படுகொலையின் பின்னணி, தடாச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவிதம், சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையும், தீர்ப்பும் ஆகியவற்றை விளக்கமாகக் குறிப்பிட்டு ஒரு விரிவான அறிக்கையினை தனது தலைமை நிலையத்திற்கும் உலகெங்கும் உள்ள கிளைகளுக்கும் அனுப்பினார்.

தடாச் சட்டம் மனித உரிமைகளை எப்படியெல்லாம் பறிக்கிறது என்பதையும் அது எவ்வாறு இந்திய அரசினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் இந்த அறிக்கை விளக்குகிறது. தடாச்சட்டம் சர்வதேச நேர்மையான விசாரணை விதிகளுக்கு முரணானது. எனவே, இச்சட்டத்தின் கீழ் 26 பேர்கள் மீது நடத்தப்பட்ட நீதி விசாரணையும் தீர்ப்பும் நீதிக்கு மாறானவை என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

எனவே 26 பேர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதை இந்த அமைப்பு கண்டித்ததுடன் உச்ச நீதிமன்றம் நேர்மையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தியது.

குடியரசுத் தலைவருக்குக் கடிதங்கள்

26 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்தும், இதில் தலையிட்டு அவர்களின் உயிர்களைக் காக்க முன்வருமாறு வேண்டிக்கொள்ளும் தந்திகள், கடிதங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதி, அப்போதைய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்புமாறு நமது அமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடெங்கிலுமிருந்து ஏராளமான தந்திகளும் கடிதங்களும் அனுப்பப்பட்டன.

தோழர்கள் சந்திப்பு

சென்னை, வேலூர், சேலம் சிறைகளில் உள்ள 26 தோழர்களையும் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் நேரில் சென்று சந்தித்துப் பேசி குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்கிக் கூறினார். தங்கள் வழக்கை குழுவினர் பொறுப்பேற்று நடத்த அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். குழுவின் செயலாளர் திரு. தியாகு உடன் சென்றிருந்தார்.

வழக்கறிஞர் ஏற்பாடு

உச்ச நீதிமன்றத்தில் 26 பேர்களின் வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞரான திரு. என். நடராசன் அவர்களைக் குழுவினர் சார்பில் தலைவர் திரு. பழ.நெடுமாறன் சந்தித்து நேரில் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவரும் முழுச் சம்மதம் தெரிவித்து பணிகளைத் தொடங்கினார். ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களான திருவாளர்கள் எஸ். துரைசாமி, இராமதாசு, என். சந்திரசேகரன், குணசீலன், குணசேகரன், ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன், கோபி. கிருஷ்ணா, இளங்கோ ஆகியோர் அவருக்குத் துணைபுரிந்தார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ. இயக்குநர் பதவி வகித்து ஓய்வுபெற்ற திரு. கார்த்திகேயன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உயர் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட பிறகு நடுநிலையோடு செயற்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையில் கலந்துகொண்டு அரசு தரப்பிற்கு உதவினார். இது அவர் வகிக்கும் பதவிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இழுக்கு தேடுவதாகும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக சனவரி 6ம் தேதியன்று சென்னையில் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இராசீவ் கொலை வழக்கு விசாரணை 15-1-99 அன்று முடிவடைந்தது. கடந்த 22-9-98இல் இவ்விசாரணை தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் டில்லியில் நடைபெற்ற இந்த விசாரணையின் 26 தமிழர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என். நடராசனும் அவருக்கு உதவியாக மேலும் 10 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டு வழக்கு செவ்வனே நடத்தப்பட்டு 22 தமிழர்களின் உயிர்கள் தூக்கு மேடையில் இருந்து மீட்கப்பட்டன. கொடிய தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

ஆளுநர் ஆணை செல்லாது

எஞ்சியுள்ள 4 தமிழர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வு விண்ணப்பமும் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட உடன் அடுத்த நடவடிக்கையாக தமிழக ஆளுநருக்கு கருணை மனு அனுப்பப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு மூத்த வழக்கறிஞர் திரு. சந்துரு (பிற்காலத்தில் நீதிநாயகம்) அவர்கள் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பெறப்பட்டது.

“தமிழக அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக முடிவெடுக்க அவருக்கு அதிகாரமில்லை” என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநரும் கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பது இதன் மூலம் தடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் போராடி தமிழக அமைச்சரவைக்கு நாம் பெற்றுக்கொடுத்த இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நால்வரின் மரண தண்டனையை இரத்து செய்ய அப்போதைய முதலமைச்சர் முன்வரவில்லை.

நசுக்க முயற்சி

இந்தியாவில் இதுவரை எந்த ஒரு அரசியல் வழக்கிற்கும் இவ்வாறு குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது இல்லை. முதன் முறையாக மக்களின் ஆதரவுடன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது கண்டு சி.பி.ஐ. தரப்பில் திகைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாம் செய்வோம் என்று அவர்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

நமக்கு எதிராக உள்ள பத்திரிகைகளும் அரசியல் தலைவர்களும் கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிதி திரட்டுவதை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு முயற்சி செய்தார்கள். சட்டத்திற்கு எதிரான வகையில் எதையும் நாம் செய்யவில்லை என்பதால் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

நிதிக்குழுவின் அத்தனை நடவடிக்கைகளும் ஒன்றிய - மாநில காவல் துறைகளினால் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன. தமிழக அரசு இதுபற்றி அரசு வழக்கறிஞரின் ஆலோசனையை நாடியது. சட்டத்திற்குட்பட்ட வகையில் நிதிக்குழு செயல்படுவதால் எத்தகைய நடவடிக்கையும் எடுப்பதற்கு வழியில்லை என்று அரசு வழக்கறிஞர் கூறிவிட்டார். அதனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மரண தண்டனை ஒழிப்பு - மனித உரிமைப் பிரச்சாரப் பயணம்

1999ஆம் ஆண்டு சூன் 22ஆம் தேதியன்று மரண தண்டனை ஒழிப்பு - மனித உரிமைப் பிரச்சாரப் பயணம் சென்னையில் தொடங்கியது. இப்பயணம் வேலூர் சென்றடைந்தபோது, இதற்குத் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையைத் தகர்த்து மீண்டும் இப்பயணம் சூலை 13ஆம் தேதியன்று தொடங்கி, சூலை 28ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இப்பிரச்சாரப் பயணத்தில் 15 முக்கிய நகரங்களில் மாநாடுகளும், 30 ஊர்களில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இந்த மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள்.

இராசீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்களும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டார்கள். அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் இக்கூட்டங்களில் விவரித்தபோது மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சிகள் உருவாயின.

15-5-99 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிநாயகம், திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்பட பலர் பேசினார்கள். இக்கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அதற்குத் தலைவராக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை திரு. பழ. நெடுமாறன் முன்மொழிந்தார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் திருமதி. சுதா இராமலிங்கம் வழிமொழிந்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தின் தலைவரான நீதிநாயகம் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் நால்வரின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதத்தினை 29-7-99 அன்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

சூன் 25, 26 தேதிகளில் பெங்களூரிலும், ஆகஸ்ட் 22ஆம் தேதி ஐதராபாத்திலும் மரண தண்டனை ஒழிப்பு மாநாடுகள் நடைபெற்றன. நமது குழுவின் சார்பில் திரு. தியாகு அவற்றில் பங்கேற்றார்.

இராசீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் தண்டனை உட்பட இந்தியாவின் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி பெங்களூரில் கூடிய 50க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டன.

மனிதநேயப் பேரணி

30-11-99 அன்று இந்தியாவில் முற்றாக மரணத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும் நால்வர் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்தும் வகையில் சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மனித நேய பேரணி நடத்தப்பட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இந்த பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டு அன்றைய முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

தலைமையமைச்சரிடம் முறையீடு

1999ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 12 வரை பழ. நெடுமாறன், தியாகு, மணியரசன், கார்முகில் ஆகியோர் அடங்கிய குழு தில்லிக்குச் சென்று திரு. வைகோ அவர்களின் துணையுடன் தலைமையமைச்சர் வாஜ்பாய் உள்துறை அமைச்சர் திரு. அத்வானி பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சட்டத்துறை அமைச்சர் இராம்ஜெத் மலானி மற்றும் பல அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து நால்வர் கருணை மனு பற்றிய கோரிக்கையை முன்வைத்தது.

மக்களைத் திரட்டுதல்

மீண்டும் மக்களைத் திரட்டும் பணி தொடங்கப்பட்டது.

05-01-2000 சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாணவர் மாநாடு.

11-01-2000 சென்னையிலும் தமிழகமெங்கும் மனிதச் சங்கிலி

01-04-2000 திருச்செந்தூர் பேரணி

08-04-2000 இராணிப்பேட்டை மாநாடு

28-04-2000ஆம் அன்று குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசினால் அனுப்பப்பட்டிருந்த கருணை மனுக்களின் மீது 11 ஆண்டு காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மூன்று தமிழர் உயிர்க் காப்புக் குழு

18-08-11 அன்று தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட 40 பேர் கூடி மூன்று தமிழர் உயிர்க் காப்புக் குழு ஒன்றினை அமைத்தனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22-08-11 அன்று மூவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கொடி உயிர்த் தியாகம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி என்னும் இளம்பெண் மூன்று தமிழர்களுக்காகத் தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்தார்.

30-08-11 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மூன்று தமிழர்களின் மரண தண்டனைக்கு தடைவிதிக்க வேண்டும் என வைகோ அவர்களின் ஏற்பாட்டின்படி மூத்த வழக்கறிஞர் இராம்ஜெத்மலானி வாதமிட்டார். உயர்நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 8 வார காலம் தடைவிதித்தது.

22-09-11 மூவர் விடுதலை தொடர்பாக தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை நல்லகண்ணு, பழ.நெடுமாறன் தொடங்கிவைத்தனர்.

01-11-11 மூன்று தமிழர்களுக்காக சென்னையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை வைகோ தொடக்கி வைத்தார். தா. பாண்டியன் முடித்து வைத்தார்.

08-11-11 மூவருக்காக ஓவியர் சந்தானம் தலைமையில் ஓவியர்களும் எழுத்தாளர்களும் ஈடுபட்ட உண்ணாநிலைப் போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடக்கி வைத்தார்.

10-11-11 மூவருக்காக விழியிழந்தவர்களின் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது.

29-11-11 மரண தண்டனை குறித்த இயக்குநர் சேரன் அவர்களின் குறும்படம் வெளியிடப்பட்டது.

26-11-11 குடந்தையில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

27-11-11 செங்கொடி நினைவு இல்லத் திறப்பு விழா.

14-12-11 மூவர் மரண தண்டனையைக் குறைக்க இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதின் தலைமையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கருணை மனு

28-04-11 மூவர் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பியது.

12-08-2011 மூவர் கருணை மனுக்களை ஏற்க மறுத்து குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார்.

19-02-11 மூவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக்கொள்ளும் தீர்மானம் தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டுகாலமாக ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

18-02-14 உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433ஏ பிரிவுகளின்படி தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் ஆகியன அரசு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

19-02-14 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 23 ஆண்டு காலமாக சிறையில் இருந்துவரும் மூவரையும் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று சிறையில் இருக்கும் நால்வரையும் குற்றவிசாரணை முறைச் சட்டம் 432ன்கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 435ன்படி தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து ஒன்றிய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே இதற்கிணங்க தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒன்றிய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் குற்ற விசாரணைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் இந்த 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

ஒன்றிய அரசும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும் என 20-2-14 அன்று முறையிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தடை தர மறுத்துவிட்டது. தமிழக அரசுக்கும் மூன்று தமிழர்களுக்கும் முன்னறிவிப்பு அனுப்பி அவர்களின் பதிலைப் பெறுவதற்காக இரண்டு வார காலத்திற்கு இப்போது இருக்கும் நிலையே நீடிக்கும் என ஆணையிட்டது.

மீண்டும் 14.02.2014 அன்று தமிழக அமைச்சரவை கூடி 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முடிவெடுத்தது. பிறகு 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை மீண்டும் இதே தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டு வைத்தார்.

இதற்கிடையில் தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொள்ளும் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிநாயகங்களான நாகேஸ்வரராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திற்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யும் தீர்ப்பினை” கடந்த மே மாதம் 18ஆம் நாளன்று அளித்தது.

இதைப்போல தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என நளினி, இரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு அளித்தனர். இந்த மனுவை நீதிநாயகங்கள் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் சார்பில் இந்த 6பேர்களின் நன்னடத்தை தொடர்பான பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 12.11.2022இல் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6பேரையும் விடுவிக்கும் உத்தரவை வழங்கியது.

31ஆண்டுகள் கடும் சிறை வாழ்விற்குப் பிறகு இவர்கள் விடுதலை ஆன செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

இந்த 6பேரில் நால்வர் ஈழத் தமிழர்கள் ஆவார்கள். இந்த நால்வரையும் இலங்கைக்கு அனுப்பாமல் அவர்களின் உறவினர்கள் எந்த வெளிநாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு அவர்களை அனுப்புவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். அதைப்போல இந்த 7பேரின் புனர்வாழ்விற்கான நிதியளித்து உதவ தமிழக அரசு முன்வரவேண்டும்.

26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அவர்களை உயிருடன் மீட்பதற்காக அமைக்கப்பட்ட 26 தமிழர்கள் உயிர்க் காப்பு வழக்கு நிதிக்குழுவில் அங்கம் வகித்து அரும்பணியாற்றிய தோழர்களுக்கும், நிதி உதவிய அனைவருக்கும் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வாதாடி இவர்களின் விடுதலைக்கு உதவிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும், பல்வேறு காலகட்டங்களில் துணை நின்று உதவிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தொடர்ந்து பதவியில் இருந்த தமிழக அரசினருக்கும் மற்றும் இந்த வெற்றியை பெறுவதற்கு உதவிய பிற மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும், உலக நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கும் இக்குழுவின் சார்பில் உளம்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.