உண்மைக் கொலையாளிகளை மறைத்தார்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:43

1991ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று திருப்பெரும்புதூரில் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

யார் படுகொலை செய்யப்பட்டாலும் வருந்தத்தக்கதேயாகும். அதிலும் அன்னை இந்திராகாந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் கொடுத்தது.

ஆனால் இராசீவ்காந்தியின் படுகொலையில் தொடர்புள்ள உண்மையான குற்றவாளிகளையும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் கண்டறிந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குப் பதில் இந்த வழக்கு புலனாய்வில் நீதி, நேர்மை, உண்மை ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டன. புலன் விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதம், தடா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றில் பல உண்மைகள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

தேசத் தந்தை காந்தியடிகளின் கொலை வழக்கு விசாரணையும், தலைமையமைச்சராக இருந்த இந்திராகாந்தியின் கொலை வழக்கு விசாரணையும் பகிரங்கமாக நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சாட்சிகள் என்ன கூறினார்கள், குறுக்கு விசாரணையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பது போன்ற சகல விவரங்களும் அன்றாடம் பத்திரிகைகளின் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இராசீவ்காந்தியின் கொலை வழக்கு விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. காந்தியடிகள் மற்றும் இந்திராகாந்தியின் கொலை வழக்குகள் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், இராசீவ்காந்தியின் கொலை வழக்கு கொடிய தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. இதனால் எல்லாமே இரகசியமாகவும் மூடுமந்திரமாகவும் நடத்தப்பட வழிவகுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13 பேர்கள் ஈழத் தமிழர்கள் 13 பேர்கள் சரிசமமான எண்ணிக்கையில் மொத்தம் 26 தமிழர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டது ஏதோ தற்செயல் அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது.

தமிழீழத்தில் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்கவும், தமிழ்த்தேசிய உணர்வைச் சிதைப்பதற்காகவும் திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது.

இராசீவ் படுகொலை நடைபெற்ற மூன்று நாட்களில் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகத்தின் பொறுப்பாளராக இலண்டனில் இருந்த தளபதி கிட்டு 24-5-91 அன்று விடுதலைப் புலிகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். அது மட்டுமல்ல, உண்மையில் இந்த கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க புலன் விசாரணைக் குழுவிற்குத் தாங்கள் உதவத் தயார் என்றும் பகிரங்கமாகக் கூறினார். ஆனால், அவரைச் சந்தித்து விசாரிக்க புலன்விசாரணைக் குழு முன்வரவில்லை.

பாலஸ்தீன இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் இராசீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என எச்சரிக்கை செய்திருந்தார். எத்தகைய அடிப்படையில் இவ்வாறு எச்சரிக்கை செய்தீர்கள் என அவரிடம் புலன் விசாரணைக் குழு விசாரிக்கவேயில்லை.

26 பேர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த ரங்கநாத் என்பவர் சிவராசனுடன் தான் டெல்லிக்கு சந்திராசாமி வீட்டுக்கு இருமுறை சென்றதாகக் கூறியிருந்தார். அது குறித்து சந்திராசாமியிடம் எதுவும் விசாரிக்கவில்லை.

இராசீவ் கொலை நடந்த நேரத்தில் சுப்பிரமணியசுவாமியின் நடமாட்டம் மர்மமாகவே இருந்ததாக அவருடனே இருந்த திருச்சி வேலுச்சாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய போதும் சுப்பிரமணிய சுவாமியைப் புலனாய்வுக் குழு விசாரிக்கவேயில்லை.

விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா நடத்திய பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட காலக்கட்டத்தில் தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையமைச்சராக இருந்த இராசீவ் காந்தியைச் சந்திக்க அனுமதி கேட்டபோது அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டு 5-3-91இல் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் விசயத்தில் தான் தவறு செய்துவிட்டதாக இராசீவ்காந்தி கூறினார். அது மட்டுமல்லாமல் தான் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும், அதுவரை போராட்டத்தைத் தாக்குப்பிடித்து நடத்திவருமாறும் இராசீவ் கூறினார். இந்த விவரம் அனைத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அதைக் கேட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

அதைப் போல அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான அர்ச்சனா சிற்றம்பலம் என்பவர் இராசீவ் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அவரிடமும் இராசீவ் காந்தி மனம் விட்டுப் பேசினார். கவிஞர் காசிஆனந்தனிடம் கூறிய செய்திகளையே இவரிடமும் இராசீவ்காந்தி கூறினார். இச்செய்திகளைக் கேட்டு இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசா அதிர்ச்சியடைந்தார். ஏற்கெனவே இராசீவ் மீது கடும் வெறுப்புக்கொண்டிருந்த அவர் புலிகளுடன் இராசீவ் சமரசமாகப் போகக்கூடிய சூழ்நிலையைக் கண்டு திடுக்கிட்டார். இராசீவ் காந்தி மீண்டும் பிரதமராகி விடுதலைப் புலிகளுக்கு உதவுவதின்மூலம் தனக்கு பெரும் நெருக்கடி ஏற்படலாம் என அஞ்சினார்.

இலங்கை அரசியலில் தனது அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர் பிரேமதாசா என்பதை மறந்துவிடக்கூடாது. பிரேமதாசா அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புவகித்த அதுலத் முதலி அமைச்சர் பதவியில் இருந்து விலகி பிரேமதாசாவுக்கு எதிராக செயல்பட்டார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் அதுலத் முதலியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தவர் பிரேமதாசா என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவராக இருந்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமார ரணதுங்கா கொலைக்கும் பின்னணியில் பிரேமதாசா இருந்தார் என்பது பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதைப்போலவே பிரேமதாசாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட காமினி திசநாயகா என்னும் தலைவரும் படுகொலை செய்யப்பட்டார். இவரின் கொலையைப் பற்றி விசாரித்த ஆணையம் இந்தக் கொலையிலும் பிரேமதாசாவுக்குத் தொடர்பு இருந்தது என கூறியது.

எனவே இராசீவின் கொலையிலும் பிரேமதாசாவின் கைவண்ணம் இருக்குமோ என்ற கேள்வி நியாயமற்றது என்று கூறிவிடமுடியாது. இந்தக் கோணத்தில் புலன் விசாரணை நடைபெறவே இல்லை.

வர்மா ஆணையம் குற்றச்சாட்டு

இராசீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா என்பதை ஆராய்வதற்கு நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு சூன் மாதம் நீதிபதி தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தார். எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தலுக்குப் பிறகே 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியைக் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் தலைமையமைச்சர் நரசிம்மராவுக்கு ஏற்பட்டது. ஆனாலும் இரண்டாண்டு காலமாக இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு, மத்திய அமைச்சர் ஐவரைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு இந்த அறிக்கையைப் பரிசீலித்து அரசாங்கத்திற்குக் கூற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழு பரிந்துரை செய்தது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1996ஆம் ஆண்டு இந்த அதிகாரிகள் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்கும் குறிப்புகள் அனுப்பப்பட்டன. யார் யார் அந்த அதிகாரிகள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு மிக நெருக்கமானவர்கள் என்று கூறப்படும். அமைச்சரவைச் செயலாளராக இருந்த வினோத் பாண்டே உளவுத்துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மனி சர்மா, பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோரே இந்த முக்கியமான அதிகாரிகள் ஆவார்கள். ஓய்வுப்பெற்ற பிறகு இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகும். இந்த நான்கு பேரும் மத்திய நிர்வாக மன்றத்திற்கு மேல்முறையீடு செய்தனர். ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என்று அது ஆணை பிறப்பித்தது. மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர்.

இந்த அதிகாரிகளில் ஒருவரான எம்.கே. நாராயணன் பிற்காலத்தில் மன்மோகன் சிங் தலைமையமைச்சராக இருந்தபோது அவருக்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் என்பது முக்கியமானதாகும்.

நரசிம்மராவ்

தலைமையமைச்சராக நரசிம்மராவ் இருந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்த முக்கியக் கோப்புகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டதை புதுதில்லியில் இருந்து வெளிவரும் அவுட்லுக் வாரஏடு (24-11-97) தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இதற்கு அரசாங்கத் தரப்பிலோ அல்லது உளவுத்துறைத் தரப்பிலோ எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இராசீவ் கொலை வழக்கு தொடர்பாக குமார் என்னும் சி.பி.ஐ. அதிகாரி வெளிநாடுகளுக்குச் சென்றார். இலண்டன் வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இந்த வழக்குகள் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டது. முக்கியக் கோப்புகளைத் தொலைத்த அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளைத் திரும்பப்பெற மேற்கொண்டும் முயற்சிகள் எடுக்கவில்லையே ஏன்? இந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

கொலை வழக்கு விசாரணை

இராசீவ் கொலை வழக்கு நேர்மையுடனும் நீதிமுறையுடனும் நடத்தப்படவில்லை. சர்வதேச நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

சுமார் 5 ஆண்டுகள் வரை தடா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதல் 4 ஆண்டுகள் வரை நீதிபதியாக சித்தீக் என்பவர் பதவி வகித்தார். பிறகு அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றுச் சென்றார். அதற்குப் பிறகு நீதிபதியாக நவநீதன் என்பவர் பொறுப்பேற்றார். 4 ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கில் 288பேர் சாட்சியம் அளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. இவை அத்தனையையும் ஓராண்டு காலத்திற்குள் படித்து உண்மை என்ன என்பதை உணர்ந்து தீர்ப்பளிப்பது என்பது யாராலும் முடியாத ஒன்று. ஆனால் நீதிபதி நவநீதன் அதை சாதித்தார். 26 பேருக்கும் தூக்குத் தண்டனையை விதித்தார். அவருக்குச் சொல்லப்பட்டதை அவர் செய்தார் என்பதுதான் இதிலிருந்து அம்பலம் ஆகிறது..

தடா நீதிமன்றம் 26 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் 19 பேரை முழுமையாக விடுதலை செய்தும். 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் தீர்ப்பளித்தது. அப்படியானால் தடா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதியின்பால் பட்டதே அல்ல என்பது நிரூபணமாயிற்று. கீழ் நீதிமன்றத்தில் 26 தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சியங்களில் எந்த மாறுதலுமில்லை. புதிய சாட்சியங்கள் உச்சநீதிமன்றத்தில் கூறப்படவில்லை. அப்படியானால் மேற்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம் ஒரு தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வேறுஒருவகையான தீர்ப்பையும் அளித்திருப்பது என்பது ஒரு உண்மையை தெளிவாக்கியுள்ளது. மனிதர்களின் தீர்ப்புகளுக்கிடையே பெருமளவு வேறுபாடுகளும், குறைபாடுகளும் உண்டு என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.

இராசீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின்கீழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டும் எப்படி செல்லுபடியாகும்? அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நால்வருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயமானதாகும். ஒப்புதல் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மூன்றாந்தர முறைகளைக் கையாண்டு பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில் அடிப்படையில் தண்டனையை உறுதி செய்தது நீதியானதல்ல.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.