நாம் இழந்த மண் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:49

தமிழ்நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. தூரமாகும். கோவை மாவட்டத்தில் உள்ள முதுமலையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரை தாலுகா, கொல்லங்கோடு வரையிலும் இந்த எல்லை நீண்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் உருவாகி 66 ஆண்டுகள் கழிந்த பிறகும் திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.

இரு மாநில அதிகாரிகளும் எல்லையை கூட்டாக சர்வே செய்து நிர்ணயித்திருக்க வேண்டும். இந்த வேலையில் இரு மாநில அதிகாரிகளும் ஈடுபட்டு 203 கி.மீ. தூரமுள்ள எல்லையைத்தான் நிர்ணயித்திருக்கிறார்கள். மீதமுள்ள 627 கி.மீ. தூரமுள்ள எல்லை இன்னும் நிர்ணயம் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதற்கு கேரள அரசின் ஒத்துழையாமைப் போக்குதான் காரணமாகும்.

மதுரை மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வண்ணாத்திப்பாறை ஒதுக்கப்பட்ட காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இதற்குள்தான் கண்ணகி கோயில் உள்ளது. இதை கேரள அரசு ஆக்கிரமித்துள்ளது. இதைப் போல இரு மாநிலங்களிடையே உள்ள எல்லை நெடுகிலும், மலையாளிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் புகுந்து ஆக்கிரமித்துள்ளனர். இன்னமும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். எனவேதான் எல்லையைக் கூட்டு சர்வே செய்து நிர்ணயிக்க முன்வராமல் கேரள அரசு வேண்டுமென்றே இந்த வேலையைக் கிடப்பில் போட்டிருக்கிறது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் வளமான தனது பல பகுதிகளை தமிழ்நாடு இழக்கும் என்பது திண்ணம். தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இப்பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்தாவிட்டால் மேலும் நமது மண்ணை இழப்போம்.

(தமிழர் இழந்த மண் – பழ. நெடுமாறன் – பக்கம் – 21)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.