இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுக்கான குழு வெளிநாடுகளில் சமற்கிருதம், இந்தி, தமிழ், உருது ஆகிய மொழிகளுக்கும் வரலாறு, பொருளாதாரம், தத்துவம், வங்காள நாட்டுப்புற நடனம், புத்தக்கோட்பாடு,
இந்தியக் கல்வி என சுமார் 11வகையான பாடப் பிரிவுகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைத்து அதில் நியமிக்கப்படும் வருகைதரு பேராசிரியர்களுக்கு ஊதியத்தை இந்திய அரசே வழங்கும். அவர்களின் உணவு, தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கான செலவை சம்பந்தப்பட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள் அளிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர் இருக்கைகள் இருந்தன. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இவைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன.
இந்தப் பட்டியலில் தமிழுக்கு இரண்டே இரண்டு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக்கழகத்திலும், எலோனியன் பல்கலைக்கழகத்திலும் இரண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் இந்த இருக்கைகளுக்குரிய தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ஜெயகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் போலந்துக்கு அனுப்பப்படவில்லை. அந்த இருக்கை இன்னும் காலியாகக் கிடக்கிறது.
இந்தியப் பண்பாட்டு உறவுக்கான குழு இந்த ஆண்டு வெளியிட்ட விளம்பரத்தில் தமிழ் இடம்பெறவில்லை. ஆனால் சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கான இருக்கைகள் இன்னமும் நீடிக்கின்றன. ஆண்டுதோறும் இவற்றுக்கான பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தமி்ழ்மொழிக்கான பேராசிரியர் மட்டும் நியமிக்கப்படவில்லை.
“போலந்து நாட்டில் கடந்த 48 ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைகள் உள்ளன. அவற்றுக்கான பேராசிரியர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்தார்கள். போலந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இவற்றுக்கான தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாதது வருந்தத்தக்கது” என அந்நாட்டில் பணியாற்றியவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவருமான பேரா. ஜி. பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சில வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசே தமிழ்மொழிக்கான இருக்கைகளுக்குத் தங்களது செலவில் பேராசிரியர்களே நியமித்து வருகின்றன. சில நாடுகளில் அங்கு வாழும் தமிழர்களே நிதித் திரட்டி இருக்கைகளை அமைக்க உதவுகிறார்கள். இன்னும் சில நாடுகளுக்கு இருக்கைகளுக்குரிய செலவினங்களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கு உதவுகிறதே தவிர, தமிழ்மொழிக்கு உதவ மறுக்கிறது. |