“சாதியை உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்” பாவேந்தர் பாரதிதாசன் ஆணித்தரமான கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2022 09:45

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த பாண்டித்துரைத் தேவர், செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் கருத்துப் பின்வருமாறு:

தமிழ்நாட்டைப் பற்றிச் சுருக்கமாக எல்லோரும் பாடக்கூடிய மெட்டில் பாட்டு எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகிறோம் என்பது.

அந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்படி நானும், வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.

அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்.

‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்று தொடங்கிய பாட்டொன்று எழுதினார்.

பாட்டின் கருத்துக்களை ஊன்றி நோக்கிய நான், பாரதியாரை நோக்கிக் கேட்டவை வருமாறு:

‘நாவலந்தீவு’ ஆரியர் நாடு என்று பன்முறை கூறியுள்ளீர்கள். நானும் பன்முறை அதுபற்றிக் கேட்டதற்கு நீங்கள் தக்கவாறு விடை கூறவில்லை. இப்போது தமிழ்நாட்டை எங்கள் தந்தையர் நாடு என்று சொல்லுகிறீர்கள்.

தமிழ் பற்றியும், தமிழ்நாடு பற்றியும் நீங்கள் எழுதியுள்ள உரைநடையில், தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய சில நூற்கள் இருப்பதாக மட்டும் கூறினீர்கள். ஆனால் இப்போது இந்தப் பாட்டில் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் கூறியுள்ளீர்கள்.

தமிழ்நாடு இலக்கியவளம் உடையதென்பதையும், பிற பெருமைகளை உடையது என்பதையும் கூறுகின்றீர்கள்.

பரிசு கருதி இப்போது இப்படிப் பாடினீர்களா?

என்று கேட்டதற்கு அவர் சொன்னது என்னவெனில் கூறுவேன்:

‘என் தந்தை எட்டயபுரத்து அரச புலவர். அவரோடு அடிக்கடி பல புலவர் வந்து தமிழ் பற்றிப் பேசுவார்கள். எல்லாம் புராணங்களும், கம்பராமாயணம் போன்றவைகளுமாகவே  இருக்கும். தமிழ்க் கல்வி என்பது எனக்கு அங்குக் கிடைத்ததுதான்.

இந்தப் பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை.

பண்டைய தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூற்களில் காணவேண்டும். எனக்கு போன ஆண்டு வரைக்கும் பழந்தமிழ் நூற்களில், தொல்காப்பியம், அகம், புறம் முதலியவைகள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன். தமிழர் நாடு என்பது நாவலந்தீவே என்பது என் இப்போதுள்ள கருத்து” என்று விரிவாகவும் உண்மையாகவும் கூறினார்.

இதை நான் சொற்பொழிவுகளிலும் பாட்டுக்களிலும் கூறி வந்துள்ளேன். பார்ப்பனர்கள் பாரதி பற்றிய கூட்டம் முதலியவற்றிற்கு என்னை அழைக்காததற்கு ஆன பல காரணங்களில் இதுவும் ஒன்று.

பாரதியார் செந்தமிழ் நாடு பற்றி இவ்வளவு பாடியபின்  நாவலந்தீவை ஆரியர் நாடு என்ற கருத்தில் ஏதாவது எழுதினாரா என்றால் ஓர் எழுத்துமில்லை. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு பற்றியும், தமிழ்ப் பற்றியும், தமிழ்ப் புலவர் பற்றியும் பாரதியார் தவிர எவராவது இத்தனை சுவையுடன் எழுதியுள்ளாரா எனில் இல்லவே இல்லை.

நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக – உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம். அவருக்கு நூறாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியார் இறந்த பின் சாதியை எதிர்த்த - சீர்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்கத் தொடங்கினேன். இன்று வரை ஆதரித்து வருகின்றேன்.  இனியும் அந்தக் கொள்கையைத்தான் நான் ஆதரிப்பேன். ஏனெனில் பெரியார் கொள்கைகள் தமிழர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டால்தான் தமிழர்கள் வாழ்வார்கள்.

பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும் ஏதாவதொரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று.

சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே.

பாரதியை நான் ஆதரித்தேன். பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக்கொண்டேன் என்பதால் ஒரு கூட்டத்தாரிடம் நன்மை பெற விரும்பியதே இல்லை என்பது மட்டுமன்று, நான் அந்தக் கூட்டத்தின் முதல் எதிரி என்று எண்ணப்பட்டு வருவதும் உலகமறிந்த செய்தியாகும்.

நான் பாரதியிடமுள்ள பெரியார் காலத்துக்கும் பொருந்தாத கருத்துகளை ஓர் இம்மியும் ஆதரித்ததில்லை. அது மட்டுமா? ஆணித்தரமாக எதிர்த்து வருகின்றேன். சொல்லால் மட்டுமன்று ஏறத்தாழ 60 பெருநூற்களால்! செய்யுட்களால்!

நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகிறேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.

அதிலொரு காரணம் வருமாறு:

என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கைவிட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறந்ததுண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூற்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள்.

பார்ப்பன எதிர்ப்பாளராயுள்ள பலர் கேட்டு உரிமை பெற்று வெளியிட்டுப் பிழைத்தார்கள். அதிலெல்லாம் நான் பாரதிதாசன் எதிர்ப்பைப் பார்க்கவே இல்லை. ஆனால் பெரியார்க்கு வெளியீட்டுரிமை கொடுக்க வேண்டாம்; கொடுத்தால் உம்மை நான் என் கூட்டத்தோடு எதிர்ப்பேன் என்று சொன்ன பிச்சைக்காரப்  புரட்டர்களைத்தான் காண முடிந்தது.

என் நூற்களுக்குக் காலிக்கோ அட்டைக் கட்டி அதன் மேல் தங்க நிறத்தால் பாரதிதாசன் என்று அச்சிட்டு தலையில் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய்த் திரிந்தவர்கள் குருசாமி பி.ஏ., குஞ்சிதம் பி.ஏ.எல்.டி. என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

அப்போதெல்லாம் பாரதிதாசன் என்ற பெயர் பற்றியோ நான் பாரதியாரை ஆதரித்தவன் என்பது பற்றியோ என்னிடம் மூச்சுவிட்டதுண்டா இந்தப் பதர்கள்!

கொள்கை பற்றித் தலைவர்கள், ஒருவனை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ கிடையாது. ஆள் தமக்கு வேண்டியவனா? இல்லையா?அவனால் நமக்கு ஏதாவது வரும்படி உண்டா? இல்லையா? என்பது பற்றித்தான் அவர்கட்குக் கவலை.

-குயில், கிழமை இதழ், 20.09.60 – ப. 13-14. 10.

முனைவர் இரா. இளவரசு தொகுத்த ‘குயிலோசை’ என்னும் நூலிலிருந்து

 

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.