கடலில் கலக்கும் காவிரி மிகை நீர் தடுத்துப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள்! பொறிஞர் முனைவர் அ. வீரப்பன் – பொறிஞர் ஆர். செயப்பிரகாசம் – பொறிஞர் ந. கைலாசபதி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:14

காவிரியாற்றில் கடந்த 4 மாதங்களில் ஓடிய வெள்ள மிகை நீர் எவ்வளவு?

தமிழ்நாடு நீர்வளத்துறை புள்ளி விவரங்களின்படி (மேட்டூர் நீர் தேக்கத்தில் வழிந்த மிகை வெள்ள நீர்)

சூன் 2022 - 7.27 டி.எம்.சி.

சூலை 2022 - 75.69 டி.எம்.சி.

ஆகஸ்ட் 2022 - 178.29 டி.எம்.சி.

செப்டம்பர் 2022 - 71.99 டி.எம்.சி.

மொத்தம் – 333.24 டி.எம்.சி

(4 மாதங்களில் வெள்ள மிகை வழி நீர் நாட்கள் (65 நாட்கள்) எப்போதும் இல்லாத அளவுக்கு 2022இல் காவிரி – மேட்டூர் அணையிலிருந்து மிகுதியாக வெள்ள மிகை நீர் வழிந்தோடியுள்ளது. அக்டோபர் 20, 2022இலும் (20.10.2022) வரை 20 டி.எம்.சி. அளவுக்கு மிகை நீர் வழிந்தோடியுள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் 2022 மாதங்களில் பெற்ற மிகை நீர் வருவதற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. இதையும் சேர்த்தால் இந்த ஆண்டில் வழிந்த மிகை வெள்ள நீர் 400 டி.எம்.சி.யைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.)

முந்தைய ஆண்டுகளில் மேட்டூர் அணையில் வழிந்த வெள்ள மிகை நீர் விவரங்கள்

1980 : 98.847 டி.எம்.சி.

1981 : 98.388 டி.எம்.சி.

1992 :53.571 டி.எம்.சி.

2005 :142.513 டி.எம்.சி.

2007 :74.582 டி.எம்.சி.

2018 :119.084 டி.எம்.சி.

2021 :79.552 டி.எம்.சி.

2022 :333.24 டி.எம்.சி. (செப்டம்பர் 2022 வரை)

எனவே 2001இல் டி.எசு. விசயராகவன் இ.ஆ.ப. வல்லுநர் குழு மதிப்பட்ட சராசரியாக 100 டி.எம்.சி. வெள்ள மிகை நீர் (நான்காண்டுகளுக்கு ஒருமுறை) காவிரியில் இருந்து கடலில் கலக்கிறது என்பது இப்புள்ளி விவரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (இணைப்பு-2)

மேற்குறிப்பிட்டுள்ள புள்ளி விவரப்படி குறைந்தது 100 டி.எம்.சி. அளவு முதல் மிகக் கூடுதலாக இந்த 2022ஆம் ஆண்டில் 333.டி.எம்.சி. அளவுக்கு இந்த நான்கு மாதங்களில் வெள்ள மிகை நீர் காவிரியாற்றில் ஓடியது என்பது தெளிவாகிறது.

எனினும் இந்த வெள்ள மிகை நீரை விரைவாகப் பயன்படுத்திட வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மெகா நீர் மேலாண்மைத் திட்டங்கள், கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றவில்லை. அதைப் பற்றியும் கருதப்பட்டதாகச் செய்தி இல்லை.

ஆந்திரா மாநிலப் பட்டி சீமா நீரேற்றும் திட்டம் மற்றும் தெலுங்கானா காளீசுவரம் நீரேற்றும் திட்டம் போல நிறைவேற்ற தமிழ்நாடும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

வெள்ள மிகை நீரைப் பயன்படுத்திட அறிவாளர் / பொறியாளர் கருத்துரைகள்…

மேட்டூருக்குக் கீழே, கல்லணைக்கு மேலே புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவது.

மேட்டூர் அணையின் மிகை நீர் உயரத்தை (FRL) மேலும் 100 அடிக்கு (120 அடியிலிருந்து 130 அடிக்கு) உயர்த்திக் கட்டிக் கூடுதலாக 17 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்குவது.

கர்நாடகா அரசு – காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் கட்ட நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு இசைவு தெரிவிப்பது.

காவிரியிலும் கொள்ளிடத்திலும் 25கி.மீ. தொலைவிற்கு ஒன்றாகத் தடுப்பணைகள் / கதவணைகள் கட்டுவது.

காவிரிக் கரையின் இரு ஓரப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத (Abandoned) கருங்கல் குவாரிகள் (100 அடி முதல் 300 அடி வரை ஆழமான) உள்ளன. அவற்றினுள் நீரேற்றம் முறையில் நிரப்பிப் பயன்படுத்தலாம். இது பற்றிய எந்த விவரங்களும் தரப்படவில்லை.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் – காவிரியாற்றின் மிகை வெள்ள நீரை – நீரேற்றுதல் முறையில் திருப்பி – வறண்ட பகுதிகளிலுள்ள - ஏரி குளங்களை நிரப்புவது; அப்பகுதி ஊர்களுக்கும் குறுகிய காலத்திற்காவது குடிநீர் வழங்குவது; முடிந்தவரை நீரைச் சேர்த்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் இப்பரப்புரையை வெளியிடுகிறது.

இவற்றிற்குத் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் குறிப்புரைகள்

ஆங்கிலேயப் பெரும் பொறியாளர் ஆர்தர் காட்டன் அவர்களைப் போல காவிரியை ஆய்வு செய்த மிகச் சிறந்த பாசனப் பொறியாளர் வேறு எவருமில்லை. கல்லணையை வலுப்படுத்தி மேம்படுத்தியவர்; மேலணை (முக்கொம்பு) மற்றும் கீழணை (அணைக்கரை) கட்டியவர். காவிரிப் படுகையின் மிகக் குறைவான சரிவினால் மேட்டூருக்குக் கீழே கல்லணைக்கு மேலே – பெரிய நீர்த்தேக்கம் (10 டி.எம்.சி. அளவுக்குக் கூட) கட்டிடவழியில்லை என்பதை நன்கறிந்தவர்.

காவிரி ஆற்றுப்படுகையில் சிறப்பாகப் பணியாற்றிய எங்களின் மூத்த பொறியாளர்கள் மறைந்த பொறிஞர் கே. இராமலிங்கம் மற்றும் பொறிஞர் என். நடராசன் அவர்களும் காவிரியின் குறுக்கே கூடுதல் அணைகள் கட்டலாம் என்று கருத்துரைக்கவில்லை.

தமிழ்நாட்டின் பாசனப் பிரிவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சிய முதுபெரும் பாசனப் பொறியாளர் – அரசு அறிவுரையாளர் மதிப்பிற்குரிய மறைந்த ஆ. மோகன கிருஷ்ணன் அவர்களும் காவிரியின் குறுக்கே வேறு நீர்த்தேக்கங்கள் கட்டலாம் என்றும் பரிந்துரைத்திடவில்லை. இவற்றிலிருந்து மேட்டூர் அணைக்குக் கீழே காவிரியில் பெரிய நீர் தேக்கம் ஏதும் அமைத்திட வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

பொறியாளர் கர்னல் எல்லீஸ் அவர்கள் – மேட்டூர் அணையின் மிகை நீர்மட்டத்தை (FRL – 120 அடி) மேலும் 10 அடி உயர்த்துமாறு மேட்டூர் அணையின் வடிவமைப்பு அப்போதே செய்துள்ளார். எனவே தமிழ்நாடு அரசு வல்லுநர்களின் கருத்துரு பெற்று மேட்டூர் அணையின் மேல்மட்டத்தை 120 அடியிலிருந்து 130 அடி அளவுக்கு உயர்த்திட உடன் நடவடிக்கை எடுக்கலாம்.

(எங்களின் மூத்த பொறியாளர் சங்கத் தலைவர் மதிப்புக்குரிய மறைந்த பொறிஞர் சி.எசு. குப்புராஜ் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் அணையினை மேலும் 10அடி உயர்த்திட வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தினார்.)

மேக்கேதாட்டுவில் கர்நாடகம் நீர்த்தேக்கம் கட்ட தமிழ்நாடு இசைவு தருவது தற்கொலைக்குச் சமமானது. நம் கழுத்தில் நாமே சுருக்கு மாட்டிக் கொள்வது – காவிரிப் பாசனப் பகுதியை பாலைவனமாக்குவது. எப்போதும் ஒப்புக்கொள்ளக் கூடாது. கர்நாடகாவின் 1970-2022கால நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்காமல் தெரிவிக்கும் பொறுப்பற்ற கருத்து இது. எந்த ஒப்பந்தத்தையும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு. காவிரி நதிநீர் ஆணைய அறிவுறுத்தல்கள் – எதையும் அரசோ, காவிரி நதிநீர் நீர்வள மேலாண்மை ஆணையமோ ஏன் உச்சநீதிமன்றமோ ஒருபோதும் கண்டித்ததும் இல்லை. அரசின் சட்டப்பிரிவு 385இன் படியும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்பது இங்கே குறிப்பிட்டுரைக்கப்படுகிறது. (மேக்கேதாட்டுவின் தீய பாதிப்புகளை விளக்கமாக அறிய – எங்களின் – “காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டில் அணை - கர்நாடகாவின் தொடர் அட்டூழியம்” எனும் – பரப்புரை வெளியீடு – மார்ச்-2022 படித்திடுக)

த.நா.பொ.ப.து மூத்த பொறியாளர் சங்கம் தெரிவிக்கும் செயல்திட்ட முன்னீடுகள்

தடுப்பணைகள் கட்டல்

காவிரியில் ஒரு தடுப்பணை மூலமாக மிக அதிகமாக 0.05 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே சேர்த்து வைக்க முடியும். 10 தடுப்பணைகள் கட்டினால்கூட 0.50 டி.எம்.சி.க்கு (அரை டி.எம்.சி.) மேல் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது. இன்றைய தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாட்டு ஆறுகளின் குறுக்கே 5ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளைக் கட்டத் திட்டம் தீட்டி வருகிறோம் என்று தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. எனினும் இவை நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் ஆற்றின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பெரிதும் பயன்படும். இவற்றிலும் தமிழ்நாடு நீர்வளத்துறை முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தவேண்டும்.

காவிரியாற்றின் வெள்ள மிகை நீரை நீரேற்றிகளின் மூலமாகத் திருப்புதற்கு கீழ்க்கண்ட உறுதிமொழிகளை / கட்டுப்பாடுகளைத் தெரிவிக்கிறோம். இவற்றை தமிழக அரசு திட்டவட்டமாக உறுதிப்படுத்திடவேண்டம்.

1.காவிரியாற்றில் - காவிரிப் பாசனப் பகுதிகளுக்குரிய நீரின் அளவை 177.25 டி.எம்.சி.யை (அதுவும் சூன் 12 முதல் ஜனவரி 30 வரை) முழுவதும் காவிரி நதிப் படுகைப் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும். இது அவர்தம் பாரம்பரிய மரபுரிமை. இது கண்டிப்பாக எல்லாக் காலங்களிலும் காப்பாற்றப்படவேண்டும். காவிரிப் பாசனப் பகுதி மக்களும் அவர்களும் பயன்படுத்த இயலாத வெள்ள மிகை நீரைப் பிற பகுதிகளுக்குத் திருப்பிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

2.ஆண்டு முழுவதும் காவிரி நதியில் நிலத்தடி நீரை நிலைநிறுத்திடவும் குடிநீர் வழங்கலுக்காகவும் நாள்தோறும் 1000 கன அடி / வினாடிக்கு ஓராண்டிற்குத் தேவையான 32 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து விடுவது தொடரவேண்டும்.

3.இதைப்போல புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய 7.00 டி.எம்.சி. மற்றும் சுற்றுச்சூழலுக்காகக் கடலில் விடவேண்டிய 10 டி.எம்.சி.யையும் தவறாது தருவதற்கு உறுதியான வழிவகை செய்திடவேண்டும்.

4.மேலும் காவிரிப் பாசன காலம் அல்லாத பிப்ரவரி முதல் மே மாதம் வரையுள்ள காலங்களில் காவிரியில் 32 டி.எம்.சி.க்கும் கூடுதலாக வரும் / கிடைக்கும் நீரையும் நீரேற்றும் மூலம் திருப்பலாம்.

வெள்ள மிகை நீரை நீரேற்றும் திட்டங்களின் வழியாக வறண்ட பகுதிகளுக்குத் திருப்புதல்

இவற்றிற்கு மேலாக - கூடுதலாக வரும் வெள்ள மிகை நீரை மட்டும் முதல் கட்டமாக, மிக அதிகமாக 100 டி.எம்.சி. / மிகக் குறைவாக 20 டி.எம்.சி.) நீரேற்றும் திட்டங்களின் வழியாக வறண்ட, பகுதிகளுக்கு 50/60 கி.மீ. தொலைவுக்கு உறுதிபெறு காங்கிரீட் குழாய்கள் (NP3 Class) மூலமாக தேசிய நெடுஞ்சாலை (National Highway) / மாநில நெடுஞ்சாலை (State Highway) / முக்கிய மாவட்ட சாலை (Major District Road) போன்ற சாலையோரங்களில் பதித்து எடுத்துச் சென்று வழியிலுள்ள நீர்நிலைகளை நிரப்பிடவேண்டும் + குடிநீர் வழங்கலுக்கும் பயன்படுத்திடவேண்டும். வரும் வெள்ள மிகை நீரின் அளவு / கால அளவு பொறுத்து 30 நாட்களிலும் / 10 நாட்களிலும் நீரேற்றம் செய்யப்படும்.

இந்த வறண்ட பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் இப்படித் திருப்பும் வெள்ள மிகை நீரை அடிப்படை உரிமையாகவோ / சட்ட வழி / மரபு வழி உரிமையாகவோ கேட்க முடியாது; கேட்கக் கூடாது.

இந்த வெள்ள மிகை நீர் – காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியான தமிழ்நாட்டில் பயன்படுத்துவதை மேலே உள்ள கர்நாடகா மாநிலம் எதிர்ப்புத் தெரிவிக்க (இந்திய அரசின் அரசியல் சட்டத்தின்படி / காவிரி ஒப்பந்தம் / உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி) வாய்ப்பில்லை. அப்படி எதிர்த்தாலும் தமிழ்நாடு அரசு அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

2016ஆம் ஆண்டிலேயே மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து மிகை வெள்ள நீரில் 0.545 டி.எம்.சி. தண்ணீரை நீரேற்றம் மூலம் சரபங்கா வடிநிலப் பகுதியிலுள்ள (எடப்பாடி உள்ளிட்ட) 100 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிட்டுரைக்கப்படுகிறது.

எங்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் - நீரேற்றும் திட்டமாகக் குழாய்களைச் சாலைகளின் ஓரங்களில் பதித்த, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோம்புத்தூர் மாவட்டங்களிலுள்ள 32+42=74 ஏரிகள் / கண்மாய்களுக்கும் 971 குட்டைகளுக்கும் நீரைப் பகிர்ந்தளிக்கும் அத்திக் கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டம்.

இப்போது (2019-2022) ரூ. 1852.00 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பவானியாற்றின் குறுக்கே உள்ள காளிங்கராயர் அணைக்கட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 1.50டி.எம்.சி. மிகை நீரை 70 நாட்களில் ஆறு கட்டங்கள் கொண்ட நீரேற்றம் மூலம் 250 மீட்டர் உயரம் உயர்த்தி 142.50 கி.மீ. தூரத்திற்குப் பெரும் எஃகுக் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கும் – அப்பகுதி மக்களின் 60 ஆண்டு கனவுத் திட்டம் – நிறைவேறி வருகிறது. இத்தகைய திட்டம் எங்களின் தொடர்ந்த வேண்டுகோள் இப்பொழுது செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காகத் தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களையும் தமிழக அரசையும் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இடையில் ஒரு சிறு கணக்கு போடுவோமா?

2000 மி.மீ (2.00மீ) விட்டமுடைய உறுதியூட்டிய காங்கிரீட் குழாய் (NP3 Class) வழி வினாடிக்கு 2.00 மீட்டர் வேகத்தில் நீரேற்றம் வழியாக / புவிஈர்ப்பு விசை ஓட்டம் (Gravity Flow) மூலமாக எவ்வளவு தண்ணீரைத் திருப்ப முடியும்?

திருப்பும் கொள்ளளவு = Area x velocity x % of Efficiency

=nD2 / 4 x v x 0.90 = 3.14 x (2.002 / 4) x 2.00 x 0.90 = 5.652m3 / sec 200 கன அடி / விநாடி

ஒரு நாளில் = 24 x 60 x 60 x 200 – 1,72,80,000 கனஅடி

30 நாட்களில் = 30 x 17.28 x 106 கன அடி = 518.40 x 106 கன அடி – 0.50 டி.எம்.சி.

4 + 4 குழாய்களில், 30 நாளில் = 0.50 x 8 = 4 டி.எம்.சி.

8 + 8 குழாய்களில், 30 நாளில் = 0.50 x 16 = 8 டி.எம்.சி.

காவிரி வெள்ள மிகை நீரைத் திருப்பிடக் குறிப்பிடப்படும் இடங்கள்

1. மேட்டூர் அணை

இடது – 4 வழித்தடங்கள்  இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

வலது – 4 வழித்தடங்கள்  இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

2. ஜேடர்பாளையம் நீரொழுங்கி

வலது – 2 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 2 டி.எம்.சி.

இடது – 2 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 2 டி.எம்.சி.

3. மாயனூர் தடுப்பணை

வலது – 4 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

இடது- 4 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

4. முக்கொம்பு அணை

வலது – 4 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

இடது – 4 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 4 டி.எம்.சி.

5. கல்லணை

இடது – 2 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 2 டி.எம்.சி.

6. கீழணை (அணைக்கரை)

(கொள்ளிடம் இடது 2 வழித்தடங்கள் இரு குழாய்கள் வீதம் 2 டி.எம்.சி.

மொத்தம் நீரேற்றும் அளவு 32 டி.எம்.சி.

மேற்குறிப்பிட்ட 6 இடங்களிலிருந்து - நீரேற்றம் மற்றும் இயல்பான நீரோட்டம் வழி எடுத்துச் செல்லப்படும் வழித்தடங்களின் விவரங்கள் – இப்பரப்புரையின் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டுகளில் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்த வெள்ள மிகை நீர் விவரங்களும் பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளன. (இணைப்பு – 3-17)

9. இவை தவிர எங்களின் மதிப்புமிகு மூத்த பொறியாளர் மறைந்த பொறிஞர் என். நடராசன், முன்னாள் மேற்பார்வைப் பொறியாளர், பொதுப்பணித்துறை அவர்கள் கருத்துரைத்த – காவிரியின் குறுக்கே கண்டிபாளையம் (ஊஞ்சலூர்), கொண்டாலம் மரப்பாளையம், குமாரபாளையம் (நன்னையூர்), ராமசத்திரம், முத்தரசநல்லூர், கிளிக்கூடு, லாலாபேட்டை, பேட்டைவாய்த்தலை, குணசீலம் என்ற இடங்களிலும் கொள்ளிடத்தில் வேங்கூர், நொச்சியம், கூ.கூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக்கருப்பூர் என்ற இடங்களிலும் கதவணைகள் அமைத்திடவேண்டும்.

காவிரி வெள்ள மிகை நீரைத் திருப்பிடத் தேவைப்படும்

கட்டுமானச் செலவு: கட்டமைப்புகளின் தோராய மதிப்பீட்டுச் செலவு

16 நீரேற்றும் நிலையங்கள் - 16 x ரூ. 6.50கோடி = ரூ. 104கோடி

16 நீர் இறைப்பிகள் & கட்டமைப்பு 16 x ரூ. 60கோடி = ரூ. 960கோடி

NP3உறுதிபெறு காங்கிரீட் குழாய்கள் பதிப்பு 3200கி.மீ. x ரூ. 4.50கோடி = ரூ. 14400 கோடி

தேவைப்படும் குறுக்குக் கட்டுமானங்கள் ஏரிகளுக்குத் திருப்ப 3200 x ரூ.3கோடி= ரூ. 9600கோடி

காவிரி – கொள்ளிடத்தில் 14 கதவணைகள் கட்ட 14 x ரூ. 100கோடி = ரூ. 1400 கோடி

இவற்றில் 14 நீரேற்றும் நிலையங்கள் 14 x ரூ. 500கோடி = ரூ. 70 கோடி

14நீர் இறைப்பிகள் & கட்டமைப்பு 14 x ரூ. 40கோடி = ரூ. 560 கோடி

உறுதிபெறு காங்கிரீட் குழாய்கள் NP3 பதிப்பு 700கி.மீ. x ரூ. 4கோடி = ரூ. 2800 கோடி

தேவைப்படும் குறுக்குக் கட்டுமானங்கள், திருப்பமைப்புகள் 700 x ரூ. 3கோடி = ரூ.2100கோடி

தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்தல் – 200கோடி

செயலாக்கத்தின் போது ஏற்படும் எதிர்பாராச் செலவுகள் – 2806கோடி

செயலாக்கக் காலத்தில் ஏற்படும் விலை உயர்வு கூடுதல் நிதி – 1530கோடி

மொத்த மதிப்பீடு – ரூ. 36,500கோடி

குறிப்புரை: தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்கள் இத்தொகையை விரிவான திட்ட அறிக்கைகளின் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டுகிறோம்.

இந்த கட்டுமானச் செலவுகளை நபார்டு வங்கி, எல்.ஐ.சி. மற்றும் ஒன்றிய அரசு முதலியவற்றிலிருந்து பெற்று நிறைவேற்ற வேண்டும். உலக வங்கி/ ஆசிய வளர்ச்சி வங்கி முதலியவற்றில் கடன் வாங்கக் கூடாது. ஏனெனில் இவர்கள் International Consultancy / National Consultancy என்ற பெயரில் தனியார் ஆலோசனையாளர்களை நியமித்து திட்ட மதிப்பீட்டை வேண்டுமென்றே மிகைப்படுத்தி (ஒரு லட்சம் கோடிக்குக்கூட) தண்டச் செலவுக்கு வழி வகுப்பார்கள். இத்தொகை நம் மக்களின் வரிப்பணம். எனவே கட்டாயமாகத் தவிர்த்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள், எங்களின் மேற்குறிப்பிட்ட செயல்திட்ட முன்னீடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, திறமையுள்ள பாசன வல்லுநர்களின் தெளிவான பரிந்துரைகள் பெற்று இத்திட்டங்களை குறைந்தது 5 ஆண்டுகளிலாவது நிறைவேற்ற முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டில் இத்தகைய திட்டங்களை வடிவமைத்திட, தகுதியுள்ள அரசுப் பொறியாளர்களும், தமிழ்நாட்டு நீர்வள வல்லுநர்களும் உள்ளனர். அவர்களின் சேவைகளைப் பயன்படுத்திடத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று அன்புடன் வேண்டுகிறோம். அதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்திட தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் அணியமாய் உள்ளது.

-நன்றி - தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் - பரப்புரை வெளியீடு – அக்டோபர் – 2022

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.