தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வள்ளலார் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜனவரி 2023 12:07

கி.பி. 1757 முதல் 1887ஆம் ஆண்டு வரையிலான நூற்றாண்டுக் காலம் இந்தியப் பெரு நாடு அந்நியர்களின் படையெடுப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான காலகட்டமாகும்.

700க்கும் மேற்பட்ட சிற்றரசர்களும், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் ஓயாது முயன்று சிறுகச்சிறுக வெற்றி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டமாகும். கி.பி. 1806ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி தமிழ்நாட்டில் வேலூரில் வெடித்தது. அதற்கு முன்பாக மைசூரில் திப்புசுல்தானும் நெற்கட்டும் சீமை பூலித்தேவரும், சிவகங்கை இராணி வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டம் மூண்டெழுந்து அவர்கள் அனைவரும் வீரச்சாவைத் தழுவினர். அதற்கு 50ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் வட இந்தியாவில் வெடித்தது..

“தடியெடுத்தவன் தண்டல்காரன்” என்ற நிலையில் நாடு அமைதியற்று தத்தளித்தது. சமய வேறுபாடுகளும் சாதி வேறுபாடுகளும் மக்களைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தன. தீண்டாமை என்னும் தீமை புற்று நோயாக வளர்ந்திருந்தது. மொத்தத்தில் சமுதாயம் புரையோடிக்கிடந்தது. இந்த சூழ்நிலையில் வங்காளத்தில் இராசாராம் மோகன்ராய், இராமகிருட்டிணர், பஞ்சாபில் தயானந்த சரசுவதி சுவாமிகள், தமிழகத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகள் ஆகியோர் தோன்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், சமுதாயக் கேடுகளை களையவும், ஆன்மநேய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தவும் முயன்றார்கள்.

மேற்கண்ட சமுதாய சிந்தனையாளர்களில் தனித்தன்மை வாய்ந்தவராகவும், அனைவருக்கும் முன்னோடியாகவும் வள்ளலார் அவர்கள் விளங்கினார். விக்கிரக வழிபாட்டை அவர் ஏற்கவில்லை. சமயம் கடந்து அனைவரும் ஏற்கும் வண்ணம் சோதி வழிபாட்டை மக்களிடையே பரப்பினார்.

தொடக்க காலத்தில் வள்ளலார் அவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்து முருகன், தில்லை நடராசன் ஆகியோரை வழிபட்டுப் பாடினார். அவர் இயற்றிய திருவருட்பாவில் முதல் ஐந்து திருமுறைகள் சைவத்தையும், சிவவழிபாட்டையும் போற்றியவையே ஆகும். அவருடைய ஆறாம் திருமுறைதான் சோதி வழிபாட்டினையும், சுத்த சன்மார்க்க நெறியையும் வலியுறுத்தியது. முதல் ஐந்து திருமுறைகளில் எவ்வளவு பாடல்கள் உள்ளனவோ அவைகளைவிட, அதிகமான பாடல்கள் ஆறாம் திருமுறையில் மட்டும் அடங்கியுள்ளன.

சாதி, சமய, வேறுபாடின்றி சன்மார்க்க நெறியில் வாழ்வதுதான் இகத்தில் பரத்தைப் பெறுவதாகும் என்பதே வள்ளலாரின் கோட்பாடாகும். மக்களிடம் புரையோடியிருந்த மூடநம்பிக்கைகள், சடங்குகள், பல கடவுளர் வழிபாடு, ஆகியவற்றை மாற்றிச் சீர்திருத்த முயன்றார். அனைவருக்கும் பொதுமையான ஒளி வடிவில் வழிபடுதல், சாதி, சமய வேறுபாடின்றி உலகோர் அனைவரும் ஆன்மநேய ஒருமைபாட்டை அடைதல், செல்வர் – வறியர் நிலை மாற்றல், ஆண் – பெண் யாவருக்கும் கல்வி அளித்தல், புலால் மறுத்தல், கொல்லாமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட சன்மார்க்க சங்கம் என்னும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

“தையலார் கொண்டாடும் விளக்கீடு” என மாணிக்கவாசகரும், “தீப மங்களா நமோ நம” என அருணகிரியாரும் சுட்டியது இம்மரபைதான். தமிழர் மரபில் நெடுங்காலமாக நிலவி வந்த சோதி வழிபாட்டை தத்துவ நெறிக்குக் கொண்டு சென்றவர் வள்ளலார் மட்டுமே. புறத்திலே விளங்கும் இறையொளி (அக்கினி, கதிரவன், சந்திரன், விண்மீன்களின் ஒளி) அகத்திலும் உண்டு. அவ்வாறு உள்ளொளியாக (ஆன்ம ஒளி, சீவ ஒளி, மன ஒளி, கண்ணொளி) விளங்கும் இறைவனைக் கண்டு தொழவேண்டும் என்பதை விளக்கவே சத்தியஞான சபையில் சோதி வழிபாட்டு முறையை எல்லோருக்கும் பொதுவான இறைவழிபாடாகச் செயல்படுத்தினார்.

சமுதாயப் புரட்சியாளர்

வள்ளலார் உலகிற்கு வழங்கிய முழுமுதற் கோட்பாடு சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பாகும். உயிர்கள் யாவும் சமம் என்பதை உணர்ந்து அவற்றின் இன்ப – துன்பத்தில் பங்குகொண்டு ஒன்றினையும் உணர்வைத்தான் சீவகாருண்யம் அல்லது ஆன்மநேயம் என்றார் வள்ளலார். அவரின் சீவகாருண்யம் என்பது ஒழுக்கத்தோடு இணைந்ததாகும். “சீவகாருண்ய ஒழுக்கம்” என்ற பெயரில் ஒரு நூலையே எழுதியுள்ளார்.

“பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்பதே அவர் போதித்த மூன்று மந்திரங்களாகும். வள்ளலாருக்கு முன்பு வாழ்ந்த அருள்நெறிச் சான்றோர் அனைவரும் பிறவாமையை வேண்டினர். ஆனால். வள்ளலார் இறவாமையை வேண்டினார்.

தனக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலரும், திருநாவுக்கரசரும் வேதங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக சாடியதைப் போலவே வள்ளலாரும் அவற்றை சாடி புறத்தொதுக்கினார்.

சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்

பார்த்தஇப் பார்வை பசுமரத் தாணிபோல்

ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே!” என்றார் திருமூலர்.

“சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்!

பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே” என்றார் திருநாவுக்கரசர்

அவர்களைப் போலவே சாதி – சமய சடங்குகள் நிறைந்த வேதங்களிலும், சாத்திரங்களிலும் ஆன்மநேய ஒருமைப்பாடு காண அவர் விரும்பவில்லை. அவை அனைத்தும் பொய், சழக்கு எனக்கூறி வெறுத்தார்.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுக

நீதியியல் ஆச்சிரமம் நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று,

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.

வேதங்களையும் விரிவுகளையும் புராண சாத்திரங்களையும் வடமொழி வாயிலாகவே திறம்படக் கற்றவர் எனினும் பகுத்தறிவுக்கும் உலகவொற்றுமைக்கும் உயிர் நலத்துக்கும் ஒவ்வாதவற்றைக் கடுஞ் சொற்களால் இகழ்ந்துரைத்தவர் வள்ளலார் போல் எவருமில்லை.

“உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்களெல்லாம் உறவினத்தார் அல்லர்; அவர் புறவினத்தார்” என்று கூறிய வள்ளலார் அவர்கள், உயிர்க்கொலை செய்பவரோ, புலால் தின்பவரோ பசி என்று வந்துவிட்டால் சத்திய தர்ம சாலையில் அவர்களுக்கு சோறிடும்படி கூறிய பெருங்கருணையாளராகத் திகழ்ந்தார்.

தனது சமுதாயப் புரட்சிக்குக் கருவிகளாகக் கீழ்க்கண்ட நான்கு அமைப்புகளை அவர் நிறுவினார்.

1. சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

2. சத்திய தரும சாலை

3. சத்திய ஞான சபை

4. சித்தி வளாகம்

முதல் மூன்றும் வடலூரிலும், நான்காவது அருகிலுள்ள மேட்டுக்குப்பத்திலும் அமைந்துள்ளன. தனது கோட்பாடுகளைப் பரப்புவதற்கு புத்தர் தோற்றுவித்தப் பௌத்த சங்கத்திற்குப் பிறகு வள்ளலார் அவர்கள் தனது கோட்பாடுகளைப் பரப்ப சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். வேறு யாரும் தங்கள் கோட்பாடுகளைப் பரப்புவதற்கு சங்கங்களை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மடமும் - சங்கமும்

தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமயத் துறவிகள் மடங்களையே நிறுவினார்கள். தீட்சைப் பெற்று காவி ஆடைத் தரித்தார்கள். அந்தந்த சாதிகளைச் சேர்ந்த துறவிகள் தங்களின் சாதிகளைச் சேர்ந்தவர்களையே தாங்கள் நிறுவிய மடங்களின் தலைவர்களாக நியமித்தார்கள். இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.

ஆனால் வள்ளலார் எந்த குருவிடமும் போய் தீட்சைப் பெறவில்லை; மடம் அமைக்கவில்லை; காவி ஆடை தரிக்கவில்லை; வெள்ளாடை உடுத்திய துறவியாகி மடம் அமைக்காமல் சங்கம் அமைத்தவர் அவரே. மடம் என்பது துறவிகளுக்கு மட்டுமே உரியது. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு. சங்கம் என்பது ஆடவர்க்கும், பெண்டிர்க்கும் பொதுவானது. பக்குவம் பெற்றவர்கள் பெறாதவர்கள் ஆகிய அனைவர்க்கும் அங்கு இடமுண்டு. இதற்காகத்தான் மடம் எனப் பெயரிடாமல் சங்கம் என்ற பெயரினை அவர் இட்டார். “தயை உடையார் எல்லோரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே” எனவும் “அருளுடையார் எல்லோரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே” எனவும் அவர் பாடிய பாடலடிகளில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அமைத்த சங்கத்திற்குத் தானே தலைவராகிவிடவில்லை. “சுத்த சிவ சன்மார்க்க சங்கத் தலைவனே” என அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரையே சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைவராக அவர் ஏற்றுக்கொண்டார்.

தமிழ் நூல் புறக்கணிப்பு

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருக்கு முன்பாகவும், பின்பாகவும் தமிழ்நாட்டில் சாதிப் பூசல்கள் மட்டுமல்ல, சமயப் பூசல்களும் மலிந்திருந்தன. இந்தப் பூசல்கள் தமிழ் இலக்கிய உலகிலும் ஊடுருவின.

சைவ மடங்களில் சைவ சமய நூல்களைத் தவிர, மற்ற நூல்களைப் படிக்கவோ, ஓதவோ கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடு நிலவியது. தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவகசிந்தாமணி, சூளாமணி போன்ற நூல்களைப் பயில்வது பயனற்றது எனக்கூறி அவற்றை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் போக்கு நிலவியது. வைணவ மடங்களிலும் சைவ சமய நூல்களைப் புறக்கணிக்கும் போக்கு நிலவியது.

இந்த வேண்டாத வெறுப்பின் விளைவாக மடங்களில் இருந்த பழந்தமிழ் சுவடிகள் பல பேணுவாரின்றி அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. மடங்களில் வடமொழிக்கு முதன்மை கொடுக்கும் போக்குக் காணப்பட்டது. தமிழ்மொழித் தனித்து இயங்க வல்லமைப் படைத்தது அல்ல என்ற கருத்தோட்டமும் பரப்பப்பட்டது.

இத்தகைய சூழலில் வள்ளலார் அவர்கள் தமிழ்க்கொடியை உயர்த்திப் பிடித்தார். வள்ளலாரின் மொழிக் கோட்பாடு என்பது சைவ சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை. அவரின் கோட்பாடு தமிழ்த் தேசியம் சார்ந்ததாக அமைந்திருந்தது. மொழி சார்ந்த தன்மான உணர்வு மிக்கவராக அவர் திகழ்ந்தார். தமிழைத் தாழ்த்திப் பேசியவர்களின் நடுவில் தமிழின் உயர்தனிச் சிறப்பை உரக்கக் கூவினார். மிகத் தொன்மையான மொழி தமிழ் என்றும், உலக மொழிகள் பலவும் அதிலிருந்து கிளைத்தவை என்றும் கூறினார்.

அவர் காலத்தில் வாழ்ந்த சங்கராச்சாரியார் “சமற்கிருதம் மாத்ருபாஷா” எனக் கூறியபோது “அவ்வாறாகின் தமிழ் “பித்ரு பாஷா” என ஆணித்தரமாகப் பதிலளித்தார். சமற்கிருதம் என்னும் தாய்மொழியிலிருந்துதுான் பிறமொழிகள் பிறந்தன என்ற கூற்றை மறுக்கும் வகையிலேதான் தமிழ் தந்தை மொழி என வள்ளலார் பதிலடிக்கொடுத்தார். தந்தையில்லாமல் தாய் பிள்ளை பெற முடியாது தானே.

பற்றற்றவரின் தமிழ்ப் பற்று

உலகப் பற்றை துறந்தவரான வள்ளலார் அவர்கள் தமிழ்மொழியின் மீது மட்டும் என்றும் தணியாத பற்றுக்கொண்டிருந்தார். தமிழின் இனிமை குறித்தும் ஆரியம் முதலிய மொழிகளின் இன்னாமைக் குறித்தும் அவர் பின்வருமாறு கூறியது சிந்தையில் இருத்தத் தக்கதாகும்.

ஆரியம் முதலிய மொழிகள் இடம்பத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் இடம்பம் இல்லை.

ஆரியம் முதலிய மொழிகள் ஆரவாரத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் ஆரவாரம் இல்லை.

ஆரியம் முதலிய மொழிகள் பிரயாசத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் பிரயாசை இல்லை.

ஆரியம் முதலிய மொழிகள் பெருமறைப்பை உண்டுபண்ணுவன. தமிழ் மறைப்பில்லாதது. உள்ளதனை உள்ளபடி உணர்த்துவது.

ஆரியம் முதலிய மொழிகள் போது போக்கை உண்டுபண்ணுவன.

தமிழில் போது போக்குக்கு இடமில்லை.

தமிழ் பயிலுவதற்கு மிகவும் இலேசுடையது.

ஆரியம் முதலியவை பயிலுவதற்கு இலேசுடையனவன்று.

தமிழ் அறிதற்கு மிகவும் இலேசுடையது.

ஆரியம் முதலியவை அறிதற்கு இலேசுடையனவன்று.

தமிழ் பாடுதற்கு மிகவும் இனிமையுடையது.

ஆரியம் முதலியவை பாடுதற்கு இனிமையுடையனவன்று.

தமிழ் துதித்தற்கு மிகவும் இனிமையுடையது.

ஆரியம் முதலியவை துதித்தற்கு இனிமையுடையனவன்று.

தமிழ் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பது,

ஆரியம் முதலியவை சாகாக் கல்வியை அறிவிக்கா.

தமிழ் திருவருள் வலத்தாற் கிடைத்தது.

ஆரியம் முதலியவை திருவருள் வலத்தாற் கிடைத்தனவன்று.

தமிழ்மொழி மீது தன்னுடைய உள்ளம் பற்றுக்கொள்ள செய்ததற்காகவும், ஆரிய முதலிய மொழிகளிடம் ஒட்டாது தடுத்ததற்காகவும் இறைவனுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

19ஆம் நூற்றாண்டில் புலவர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த தமிழை எளிய மக்களுக்கும் உரிமையாக்கிய பெருமை வள்ளலார் அவர்களையே சாரும். மக்கள் பேசும் மொழியில் தனது பாடல்களை அவர் யாத்தார். தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு என்பது ஈடுஇணையில்லாததாகும்.

பாரதியின் முன்னோடி

பாட்டுக்கொரு புலவன் பாரதி எனப் போற்றப்பட்ட சுப்பிரமணிய பாரதியாருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பெருமைக்குரியவர் வள்ளலாரே. அவரின் திருவருட்பாவை நன்கு பயின்று அதன் சுவை நயத்தில் இன்புற்றவர் பாரதியார் என்பது அவருடைய பாடல் மூலமே வெளிப்படுகிறது. கோகலே சாமியார் குறித்து பாரதியார் பாடியுள்ள பாடல் இதற்குச் சான்றாகும். அப்பாடலின் தலைப்பில் பாரதி “களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்” என்று இராமலிங்க சுவாமிகள் பாடிய பாடலை திரித்துப் பாடியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதிகாச – புராண சொற்பொழிவுகளே பாமர மக்களுக்காக ஆற்றப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதன்முதலாக மக்களுக்காக திருக்குறள் வகுப்பு நடத்தத் தொடங்கியவர் வள்ளலாரே ஆவார். அவர் காலத்திற்கு முன் பெரும் புலவர்கள் அதைக் கேட்கும் தரம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே திருக்குறள் பாடம் நடத்தினார்கள். “திருக்குறள் ஒன்றுதான் தமிழர்களின் அறநெறிகளை எடுத்துணர்த்தும் நூல். அதை ஒவ்வொரு தமிழனும் பயில்வதின் மூலம் அவன் வாழ்க்கை மேலும் செம்மைப் பெறும். எல்லாவகையான மூடநம்பிக்கைகள் சாதி, சமய வேறுபாடுகள், சமுதாயக் கேடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வான்” எனக் கருதிய அவர் குறள் வகுப்புகளை நடத்தச் செய்தார்.

பிற்காலத்தில் தமிழ்ப் பற்றும், தமிழன் என்ற உணர்வும் பரவி ஓங்கும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டப் பெருமை வள்ளலாருக்கு உண்டு. தங்களைத் தாங்களே உணர்ந்து வளர்ந்தோங்க தமிழர்களுக்கு வழிகாட்டிய பெருமைக்குரியவர் வள்ளலார் அவர்களேயாவார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.