1987ஆம் ஆண்டு சூலை 29ஆம் நாள் இந்திய – இலங்கை உடன்பாட்டில் அன்றைய இந்திய தலைமையமைச்சர் இராசீவ் காந்தியும், இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.
உடன்பாடு கையெழுத்திட்டப் பிறகு சுமார் 3 மாதம் கழித்து இலங்கை அரசியல் யாப்பிற்கான 13ஆம் ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பில் 17ஆம் அத்தியாயத்தின் ‘அ’ பிரிவாகவும், உறுப்பு 154 ‘அ’ பிரிவாகவும் இத்திருத்தம் சேர்க்கப்பட்டது. மாகாண சபை சட்டமும் இதே நாளில் நிறைவேற்றப்பட்டது.
தொன்றுதொட்டு ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்குப் பகுதிகளை இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவது என்ற திட்டம் இந்திய - இலங்கை உடன்பாட்டில் முதன்மையாக இடம்பெற்றிருந்தது. இதையொட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தலைமையமைச்சர் இராசீவ்காந்தி “ஈழத் தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழீழம் உருவாக்கப்பட்டுவிட்டது” என்று தம்பட்டம் அடித்தார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன?
இந்திய – இலங்கை உடன்பாட்டில் கூறப்பட்ட முதன்மை வாய்ந்த அம்சங்களான தமிழர் தாயகப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், தமிழர் பகுதியில் உள்ள சிங்கள காவலர்களையும், படை வீரர்களையும் திரும்பப் பெறுதல் போன்ற பலவற்றை சிங்கள அரசு நிறைவேற்றாத காரணத்தினால் மாகாண சபை தேர்தலை ஈழத்தமிழர்கள் புறக்கணித்தனர். ஆனால் இந்தியப் படைவீரர்களின் உதவியுடன் மோசடியான தேர்தல் நடத்தப்பட்டு வரதராசபெருமாள் என்பவர் தலைமையில் அதிகாரமில்லாத அமைச்சரவை பதவியேற்றது.
அடிப்படைத் தவறுகள்
ஈழத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மாகாண சபைச் சட்டம் அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டிருந்தது.
1.யாருடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மாகாண சபை சட்டம் கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பிரச்சனைக்குரிய ஈழத் தமிழர் தரப்புடன் கலந்தாலோசனை செய்யாமலும், அவர்களின் பங்களிப்பு இல்லாமலும் ஒப்புதலைப் பெறாமலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2. இலங்கைக் கூட்டாட்சி நாடல்ல; ஒற்றையாட்சி நாடாகும். இலங்கை அரசியல் யாப்பின்படி “இலங்கை குடியரசு ஒற்றையாட்சி அரசாகும் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையோடு அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதுடன், மக்களின் பொதுவாக்கெடுப்பு மூலமும் அவர்களின் ஒப்புதல் பெறவேண்டியது இன்றியமையாததாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 75 சதவீதம் சிங்களரே. 25 சதவீதம் தமிழர்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்திலும், நாட்டிலும் சிங்களரே பெரும்பான்மையினராக இருக்கும் நிலையில், இலங்கையைக் கூட்டாட்சி நாடாக மாற்றவேண்டும் என்ற சட்டத் திருத்தம் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாததாகும். பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலமும் ஒப்புதல் பெற முடியாது.
3. ஆனால், அரசியல் சட்டத்தின் 76ஆவது உறுப்பின் கீழ் கொண்டுவரப்படும் சட்டத் திருத்தத்திற்கு 2/3 பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும். இத்திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த தேவையல்ல. அன்றைய செயவர்த்தனா ஆட்சிக்கு 2/3 பங்கு பெரும்பான்மை இருந்தது. எனவே, 76ஆவது உறுப்பின்கீழ் அரசியல் சட்டத் திருத்தத்தை அவர் சுலபமாக நிறைவேற்றியிருக்கலாம். ஒற்றையாட்சி அரசான இங்கிலாந்து அரசு முறையில் வட அயர்லாந்து, சுகாட்லாந்து போன்ற பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பங்கீடு அளிக்கப்பட்டதைப் போல, வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் ஓரளவு அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளைச் செய்வதற்கு சிங்கள அரசு விரும்பவில்லை. அவ்வாறு செய்யும்படி அதை வற்புறுத்த இந்திய அரசும் தவறிவிட்டது.
4. 13ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது பெரும்பான்மை நீதிபதிகள் அரசியல் யாப்பு 76ஆவது உறுப்பின்படி நாடாளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களை இத்திருத்தம் கேள்விக்குட்படுத்தவில்லை எனத் தீர்ப்பளித்தனர். அதாவது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டே மாகாண சபை இயங்கவேண்டும் என்பதே இத்தீர்ப்பாகும்.
5. இலங்கையில் சிங்களர் – தமிழர் என இரு இனங்கள் வாழ்கின்றன. எனவே மாகாணங்கள் அமைக்கும் போது இனரீதியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், சிங்களருக்கு ஒரு மாகாணமும், தமிழருக்கு மற்றொரு மாகாணமும் ஆக இரு மாகாணங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஏற்கெனவே மத்திய ஆட்சி சிங்கள ஆட்சியாகவே உள்ளது. ஆனால், செயவர்த்தனா மிக தந்திரமாக பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்களருக்கு எட்டு மாகாணங்களையும், தமிழருக்கு ஒரு மாகாணத்தையும் அளிக்கும் வகையில் ஒன்பது மாகாணங்களை உருவாக்கினார். ஆனால், வடக்கு – கிழக்குப் பகுதிகளை இணைத்து ஒரு மாகாணமாக ஆக்குவது குறித்து 13ஆவது சட்டத்திருத்தத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இணைப்புக் குறித்து நாடாளுமன்றம் ஒரு சட்டம் மூலம் நிறைவேற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது அல்லது குடியரசுத் தலைவர் ஒரு பிரகடனத்தின் மூலம் இணைப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்காலிக இணைப்பிற்குக் கூட அரசியல் யாப்புத் தகுதி வழங்கப்படவில்லை. எனவே, பிற்காலத்தில் உச்சநீதிமன்றம் மூலம் இந்த இணைப்பு செல்லாததாக்கப்பட்டு வடக்கு – கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட போது இந்தியாவில் காங்கிரசு கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனாலும்கூட இந்திய – இலங்கை உடன்பாட்டிற்கு சிறு எதிர்ப்பைக்கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.
6. இலங்கை மத்திய அரசுக்குரிய அதிகாரங்களும், மாகாண அரசுக்குரிய அதிகாரங்களும் திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. இதன் விளைவாக மாகாண அரசுகள் மத்திய அரசின் ஆணைகளுக்கிணங்கவே செயல்படவேண்டி வந்தது. அப்பட்டமாகக் கூறினால் மாகாண அரசுகள் பொம்மை அரசுகளாகவே விளங்கின.
7. மாகாண அரசிடம் இருந்த அதிகாரங்கள்கூட ஆளுநருக்குக் கட்டுப்பட்டவையாக இருந்தன. அவரை மீறி மாகாண முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட முடியவில்லை.
வடக்கு – கிழக்கு பிரிவும், புலிகளின் பின்னடைவும் சிங்கள அரசுக்கு மேலும் ஊக்கம் அளித்தன. முன்பு செய்யப்பட்டதைவிட, விரைவாகவும், அதிகமாகவும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட எல்லைகளை திருத்தியமைத்தல், முதலீட்டு முயற்சிகளுக்காகவும், இராணுவ முகாம்களுக்காகவும் நிலங்களை ஒதுக்குதல், சிங்கள மீனவர்களுக்கு வாடிகளை அமைத்தல், சிங்கள வணிகர்களின் கடைகளைத் திறத்தல் போன்றவை இராணுவ உதவியுடன் நிறைவேற்றப்படுகின்றன.
8. மாகாண சபைக்கு தன்னிச்சையாக சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை. சட்ட முன் வடிவுகளை ஆளுநருக்கு அனுப்பி அவரின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலையில் அத்தகைய அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. அனுமதி பெற்று சட்டங்களை நிறைவேற்றினாலும், ஆளுநரின் ஒப்புதலை பெறுவதிலும் பெரும் இடர்ப்பாடு உருவானது. ஆளுநர் ஒப்புதல் கொடுத்தாலும் அச்சட்டங்களை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பலாம்.
9. மாகாண முதலமைச்சரின் ஆலோசனைப்படி காவல்துறைத் தலைவரை ஆளுநர் நியமிக்கவேண்டும். ஆனால், இதில் முரண்பாடு தோன்றுமானால், குடியரசுத் தலைவரே அந்த நியமனத்தை மேற்கொள்வார். இதன்மூலம் காவல்துறையின் அதிகாரம் முதலமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டது.
10. குறிக்கப்பட்ட கல்வி நிலையங்களைத் தவிர, ஏனைய கல்வி நிலையங்கள் அனைத்தும் மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், குறிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் சிறிது சிறிதாக தேசிய கல்வி நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. மற்றும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இவற்றில் மாகாண அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
11. நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை மாகாண அரசிடம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்பவே மாகாண அரசு நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குத் தேவையானால் நிலங்களை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் உண்டு.
நிலத்தின்மீது அதிகாரம் இல்லாமல் ஒரு தேசிய இனம் தனது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளின் விளைவாக தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றங்களைத் தடுக்க மாகாண அரசினால் இயலாமல் போய்விட்டது.
12. நீதித்துறை அதிகாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் நீதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண நீதித்துறை நீடிக்கிறது. மாகாண அரசுக்கும், மாகாண மேல் நீதிமன்றத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.
13. இலங்கையின் இணை ஆட்சிமொழியாக தமிழ் விளங்கும் என அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரையிலும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை.
மேற்கண்ட யதார்த்த உண்மைகளை சிறிதளவுகூட உணராமல் இந்திய அரசு 13ஆவது சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என சிங்கள அரசிடம் வற்புறுத்தி வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டையொட்டி மேற்கு நாடுகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இலங்கை இனப் பிரச்சனைக் குறித்தோ. 13ஆவது சட்டத் திருத்தம் குறித்தோ சிறிதளவுகூட புரிந்துகொள்ளாமல் இந்நாடுகள் செயல்படுவது என்பது போகாத ஊருக்குப் புரியாத வழியைக் காட்டுவதாகும்.
13ஆவது திருத்தம் குறித்து சிங்கள ஆய்வாளர்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இலங்கை இனப் பிரச்சனையின் தீர்வுக்கு 13ஆவது திருத்தம் எந்த வகையிலும் உதவாது, சற்றும் பொருத்தமற்றது என அக்கட்டுரைகளில் வலியுறுத்தியுள்ளனர்.
13ஆவது திருத்தம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டது. இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகார அலகோ, பகிர்வு அதிகாரங்களோ, கூட்டு அதிகாரங்களோ, அதிகாரங்களுக்கான பாதுகாப்போ எதுவும் இல்லாததாகும். இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஈழத் தமிழர்களைக் கலந்து ஆலோசித்து இத்திருத்தத்தை முன்மொழிந்திருந்தால் மேலே கூறப்பட்ட குறைபாடுகளை அகற்றியிருக்க முடியும். ஆனால், ஈழத் தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு அன்றைய இந்திய தலைமையமைச்சர் இராசீவ்காந்தி இலங்கையுடன் உடன்பாடு செய்துகொண்டார்.
இந்தியா போன்ற சில நாடுகளில் பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்தாலும் எந்தவொரு தேசிய இனமும் மிகப் பெரும்பான்மையாகவோ அல்லது மிகச் சிறுபான்மையாகவோ இருக்கவில்லை. எனவே, ஏதாவது ஒரு தேசிய இனம் பாதிக்கப்படும்போது அந்த இனத்துடன் சேர்ந்து மற்றும் பல தேசிய இனங்களும் குரல் கொடுக்கின்றன. அதன் விளைவாக உருவாகும் அரசியல் அழுத்தம் இந்திய அரசை செயல்பட வைக்கிறது.
ஆனால் இலங்கையில் அதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை. அங்கு நிரந்தர பெரும்பான்மையினராக சிங்களரும், நிரந்தர சிறுபான்மையினராகத் தமிழரும் உள்ளனர். இலங்கை அரசும் சிங்கள அரசாகவே அமைந்துள்ளது. அந்த நாட்டின் குடியரசுத் தலைவராகவோ தலைமையமைச்சராகவோ ஒரு தமிழர் எக்காலத்திலும் வர இயலாது. ஆனால் இந்தியாவில் சிறுபான்மை மதமான சீக்கியர்களில் ஒருவரான ஜெயில் சிங் குடியரசுத் தலைவராகவும், மற்றொரு சீக்கியரான மன்மோகன் சிங் தலைமையமைச்சராகவும் வர முடிந்துள்ளது. மற்றும் சிறுபான்மை மதமான முசுலீம்களில் ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அகமது, அப்துல் கலாம் ஆகிய மூன்றுபேர் குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகிக்க முடிந்துள்ளது. மேலும் இந்திய அமைச்சர்களாக, அதிகாரிகளாக, மாநில அமைச்சர்களாக, அதிகாரிகளாகவும் இந்திய இராணுவத்தில் உயர் தளபதிகளாகவும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால், இலங்கையில் இதற்கு நேர் மாறாக உயர் பதவிகளில் எதிலும் தமிழர்கள் நியமிக்கப்படுவதில்லை.
ஈழத் தமிழர்கள் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகி வந்தபோதிலும் இந்தியாவோ அல்லது உலக நாடுகளோ அல்லது ஐ.நா. பேரவையோ அவர்களைப் பாதுகாக்க முன்வரவில்லை.
எனவே, ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் அரசியல் மத, சாதி பேதங்களுக்கப்பால் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுத்தாலொழிய, அழிவின் விளம்பில் நின்று கதறும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு உலகத் தமிழினத்தை வேண்டுகிறோம். |