‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். விரைவில் வெளியே வருவார்’ என்று தெரிவித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.
2009இல் இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை இராணுவம் அறிவித்த காலத்தில் இருந்தே, இக்கருத்தைத் தெரிவித்து வரும் பழ. நெடுமாறன், ‘இப்போது காலம் கனிந்திருக்கிறது. விரைவில் பிரபாகரன் ஒரு அரசியல் செயல்திட்டத்தோடு வெளியில் வருவார்’ என்று அறிவித்திருக்கிறார். உலகெங்கும் இது பேசு பொருளாகியிருக்கிறது. இச்சூழலில், பழ. நெடுமாறனிடம் உரையாடினேன்.
“பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்பட்டதற்கு டி.என்.ஏ. முடிவு உட்பட பல ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. தற்போது உயிரோடிருக்கும் பிரபாகரனுக்கு நெருக்கமான போராளிகளேகூட நீங்கள் சொல்வதை ஏற்கவில்லை. எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?
“65 ஆண்டுக் காலப் பொது வாழ்க்கையில் ஆதாரம் இல்லாமல் எதையும் சொன்னதில்லை. பிரபாகரன் இறக்கவில்லை என்று அப்போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். சிங்கள அரசு தொடர்ந்து பொய் பரப்புகிறது. 1984, செப்டம்பர் 5ஆம் தேதி சிங்களப் படையால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றார்கள். இரண்டே நாள்களில் அந்தச் செய்தி பொய்யானது. 1989சூலை 25ஆம் தேதி, பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கும் நடந்த மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இந்தியப் பத்திரிகைகளும்கூட செய்தி வெளியிட்டன. அதுவும் இரண்டே நாள்களில் பொய்த்துப்போனது. சுனாமி நேரத்திலும் இப்படிச் சொன்னார்கள். அதுவும் பொய்யானது. 2007 டிசம்பர் 15ஆம் தேதி சிங்கள விமானப்படைத் தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாகவும், பிழைக்க வாய்ப்பில்லை என்றும் இலங்கைப் பாதுகாப்புத்துறை அறிவித்தது. அந்தச் செய்தியும் வழக்கம்போலவே பொய்யானது.
2009மே 17ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் கொல்லப்பட்டதாகச் சிங்கள இராணுவம் அறிவித்தது. பிரபாகரன் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு உடலை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருவதாக சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னார். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார உடனடியாக இதை மறுத்தார். ஆனால் மறுநாளே, பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் பிரபாகரன், பொட்டு அம்மான் உடல்கள் கிடைத்தன என்றும் சொன்னார். அந்த உடல்களுக்கு மரபணு சோதனை செய்தபிறகு உறுதிப்படுத்தப்படும் என்று அறிவித்தார். 11மணிக்கு அவர் இதைச் சொல்ல, 12.15 மணிக்கு மரபணு சோதனை மூலம் அது பிரபாகரன் உடல்தான் என்று உறுதி செய்துவிட்டதாக இராணுவத் தளபதி பொன்சேகாவும் இலங்கை அரசும் அறிவித்தார்கள். ஒருமணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனை நடத்தி முடிவு அறிவிக்கும் தொழில்நுட்பம் எங்குமே இல்லை.
இறுதிப்போரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்திலும் அதிபர் இராசபக்சே பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி எதுவும் பேசவில்லை. உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் அவரது உடலைக் கொழும்புக்குக் கொண்டுவந்து சிங்கள மக்கள், வெளிநாட்டுத் தூதர்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்களின் பார்வைக்கு வைத்திருப்பார்கள். பொய்யான உடலைக் காட்டி அம்பலமாகிவிட்டால் என்னாவது என்பதால்தான் இராசபக்சே அவ்வாறு செய்யவில்லை.
இன்னொரு முக்கியச் செய்தி, மே 18வரை இறுதி யுத்தம் நடந்தது. மே 20ஆம் தேதி புலம்பெயர்ந்து தலைமறைவாக வாழும் கே.பி. எனப்படும் கே. பத்மநாபன் என்னைத் தொடர்பு கொண்டு, “பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டதாகவும், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கவேண்டும்” என்று அறிவிக்கப்பபோவதாகவும் சொன்னார். நான் கடுமையாகக் கண்டித்தேன். “பிரபாகரனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அவரோடு களத்தில் நின்ற தளபதிகளோ புலிகள் அமைப்பின் உயர்மட்டக் குழுவோ அதை அறிவித்திருப்பார்கள். போர்க்களத்தில் இல்லாத நீங்கள் எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்?” “ஐயா! நீங்களே என்னை நம்பாவிட்டால் நான் என்ன செய்வது?” என புலம்பினார். “நம்பும்படி நீங்கள் எதையும் கூறவில்லை” என்று நான் பதிலளித்தேன். ஆனாலும் அவர் பிரபாகரன் மறைவுக்கு துக்கம் கொண்டாடும்படி அறிவித்தார். உலகின் எந்த நாட்டிலும் தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கவில்லை. கே.பி. இந்திய ‘ரா’ உளவுத்துறையின் பிடியில் இருந்தவர். மலேசியாவில் வைத்து சிங்கள உளவுப் பிரிவிடம் அவரை ‘ரா’ ஒப்படைத்தது. இப்போதும் கே.பி. சிங்கள அரசின் கண்காணிப்பில்தான் இருக்கிறார். உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் சிதைக்கவே பிரபாகரன் இறந்ததாகச் செய்தியைப் பரப்பினார்கள். பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்பதே உண்மை”.
“பிரபாகரனோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர் நீங்கள். பாலச்சந்திரன் கொலை, பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதையெல்லாம் பார்த்த பிறகும் தலைமறைவாக இருக்கும் இயல்புடையவரா அவர்?”
பிரபாகரனின் அண்ணன் மனோகரன் நார்வேயில்தான் இருக்கிறார். அவரிடம் ‘போர்’ முற்றிய கட்டத்திலாவது பிரபாகரன் பிள்ளைகளை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘என் மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்ன நேர்கிறதோ, அதுவே எனக்கும் என் குழந்தைகளுக்கும் நேரட்டும்’ என்று பிரபாகரன் சொன்னதாகச் சொன்னார். இறுதி யுத்த நேரத்தில் ஈழத்தில் இருந்த பெற்றோர் பற்றிக்கூட பிரபாகரன் கவலைப்படவில்லை. அவருக்குத் தன் பிள்ளையும் தம் மக்களின் பிள்ளையும் ஒன்றுதான். யுத்தக் களத்தில் எத்தனையோ தந்திரங்கள் கையாளப்படும். அதில் ஒன்றுதான் பிரபாகரன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. மூத்த தளபதிகள் கட்டாயப்படுத்தி அவரை அங்கிருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள். அதுதான் உண்மை”.
“பிரபாகரன் யுத்தக் களத்திலிருந்து தப்பித்தார் என்றால் எந்த நாட்டிலாவது அடைக்கலம் கோரியிருக்க வேண்டும். இந்த 14 ஆண்டுகளில் அதுமாதிரி செய்தி எதுவும் வரவில்லையே?”
“2009காலகட்டத்தில் சர்வதேச அரசியல் சூழல் புலிகளுக்கு எதிராகவே இருந்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த பிறகு உலகம் முழுவதுமே நிலை மாறிவிட்டது. இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகள் சிங்கள அரசுக்கு உதவிகள் செய்தன. அந்தக் காலகட்டத்தில் எந்த நாட்டிடமும் வெளிப்படையாக அடைக்கலம் கோரும் நிலை இல்லை. இன்று காலம் கனிந்திருக்கிறது. சர்வதேச சூழல் மாறியிருக்கிறது. இலங்கையில், இராசபக்சேவை ஆட்சி பீடத்தில் அமர வைத்துக் கொண்டாடிய மக்களே இன்று அவரை அகற்றியிருக்கிறார்கள். சிங்கள மக்களுக்கு இப்போதுதான் உண்மை புரிகிறது. இந்தியாவிலும் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் தக்க சூழல். எல்லாவற்றையும் ஆலோசித்துத்தான் பிரபாகரன் உயிரோடு இருக்கும் செய்தியை இப்போது வெளியிட்டேன்.”
“மத்திய அமைச்சர் முருகன் இலங்கையில் இருக்கும்போது பிரபாகரன் குறித்து அறிவிக்கிறீர்கள். பா.ச.க. தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டுகிறீர்கள். ‘நெடுமாறன் இந்திய உளவுப் பிரிவின் சதிக்குத் துணை போய்விட்டார்’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?”
“அபத்தமான கேள்வி. இருந்தாலும் இந்தக் கேள்விக்குப் பதிலாக இன்னொரு வரலாற்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். வாஜ்பாய் தலைமையில் பா.ச.க. அரசு அமைந்திருந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவர்தான் பா.ச.க. கூட்டணிக்கு கன்வீனர். பல நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவியவர் அவர்தான். அப்போது இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அட்மிரல் விஷ்ணு பகவத். “இந்தியாவின் கடற்கரையைப் பாதுகாக்க வேண்டியதுதான் இந்தியக் கடற்படையின் முக்கியமான பணியாகும். இலங்கை கடற்கரையையும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை” என ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவரிடம் கூறினார். ஆனால் அவர் அதை மதிக்காமல் இலங்கைக் கடற்பரப்பையும் சேர்த்துப் பாதுகாத்த போது அவரைப் பதவி நீக்கம் செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். வெளியே போன விஷ்ணு பகவத், ‘பெர்னாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். ஆனால் பெர்னாண்டஸ் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அப்போது பா.ச.க. அமைச்சரவையில் இருந்த பெர்னாண்டஸை இங்கிருந்த எல்லோரும் பாராட்டினார்கள். அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா?”
“இன்னும் இராணுவ முற்றுகைக்குள்தான் ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அறிவிப்பு, அவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்காதா?”
“நான் அப்படி நினைக்கவில்லை. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்ற அறிவிப்பு அவர்களை உற்சாகமாக்கியிருக்கிறது. அவர்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது”
“ஒருவேளை நீங்கள் சொல்வது போல பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். இன்றைய சூழலில் பிரபாகரன் என்ன செய்ய வேண்டும்? இந்திய அரசு என்ன செய்யவேண்டும்?”
“பிரபாகரன் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்தான் முடிவெடுப்பார். அவர் என்ன முடிவெடுத்தாலும் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அவர் பின்னால் நிற்போம். இந்தியாவைப் பொறுத்தவரை நான் சொல்ல விரும்புவது, ஈழத் தமிழர் பிரச்சனையும் இலங்கையில் சீனா காலூன்றுவதன் மூலம் இந்தியா எதிர்நோக்கும் அபாயமும் வேறு வேறு அல்ல. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஒன்றின் தீர்வில்தான் இன்னொன்றுக்கான தீர்வு இருக்கிறது. தென்னிந்தியாவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட இராணுவத் தொழிற்சாலைகளும் தளங்களும் இருக்கின்றன. இவைகளை சீனா திபெத்திலிருந்து தாக்குவதைவிட, மன்னாரிலிருந்து தாக்குவது எளிதாகும். மற்றொரு அபாயமும் இந்தியமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் கைக்குப் போய்விட்டால் இந்தியா மட்டுமல்ல, மேற்கு நாடுகளும் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகும். எனவே இந்தப் பிரச்சனையில் இந்தியா நன்கு சிந்தித்து ஈழத் தமிழர்களின் ஒத்துழைப்போடு சீன அபாயத்தை முறியடிக்க முன்வரவேண்டும்”.
“இறுதியாக ஒரு கேள்வி… நீங்கள் சொன்னபடி, பிரபாகரன் எப்போது வருவார், எப்படி வருவார்?”
“அதை அவர்தான் தீர்மானிப்பார். அவருக்குத்தான் அது தெரியும்!”
-நன்றி! – ஆனந்த விகடன் – 01-03-23 |