“தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை தெரிவிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்று பழ. நெடுமாறன் நிருபர் கூட்டத்தில் அறிவித்தது ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘இலங்கையில் இராசபக்சேக்களின் வீழ்ச்சி பிரபாகரன் தன்னை வெளிபடுத்திக்கொள்ளும் முகாந்திரமாக இருக்கிறது’ என்றும் நெடுமாறன் கூறியிருக்கிறார். “பிரபாகரன் குடும்பத்தினர் சொல்லச் சொல்லியே சொன்னேன்” என்பதோடு அந்த அறிவிப்பை முடித்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் இந்த திடீர் அறிவிப்பு ஏன் என்று நெடுமாறனைத் தவிர மீதி தமிழகத் தலைவர்கள் குழப்பத்தில்!
“அரசியல் மர்மம் நிறைந்த வார்த்தைகள்” என்று காங்கிரஸ் எம்.பி வர்ணித்தார்.
இந்த அறிவிப்பில் ‘பிரபாகரன் பாணி’ இருப்பதாக பேச்சு இருக்கிறது. யோசித்து அளவோடு வார்த்தைகள், அதற்கு மேல் டைட்லிப் –இது பிரபாகரன் பாணி என்கிறார்கள்.
இது புலிகள் தரப்பில் தரப்படாதது ஏன்?அவர்கள் கலைந்து கிடப்பது காரணமா? அவர்கள் மனம் மாறியிருப்பார்கள், நம்பமுடியாது என்ற சந்தேகம் காரணமா? விடை கிடைக்காத கேள்விகள்.
ஆனால், பழ. நெடுமாறன் நம்பற்குரிய தலைவர். அவர் கூறினால் மக்கள் ஏற்பார்கள் என்று கருதினார்களா?
பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் நெருக்கமானவர் என்பதும் அன்று தலைமையமைச்சர் இந்திராவிடம் பிரபாகரன் பெயர் போய் சேர்ந்ததற்கு அவரே காரணம் என்பதும் உலகம் அறிந்தது. ஆகவே, இதை அறிவிக்க அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!
பழ. நெடுமாறன் – ப. நெடுமாறனாக காங்கிரசில்இருந்தபோது காமராசரால் பெரிதும் மதிக்கப்பட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அவர் சாட்டிய குற்றச்சாட்டுகளைக் கண்டு கலைஞரும் மாறனும் அவரை ‘அனாமதேய பேர்வழி’ என்று தாக்கினார்கள். உடனே காமராசர் வெகுண்டு, “யார் அனாமதேயம்” என்று நெடுமாறனைப் பற்றி புகழ்ந்து வரிசையாக பட்டியலிட்டார். தி.மு.க. ஆட்சி நெடுமாறனை ஆறு மாதம் சிறையிலிட்டது. வெளியே வந்தவுடன் அவருக்கு மதுரையில் விழா எடுக்கப்பட்டது. அதில் பேசிய காமராசர் ‘மாவீரன்’ என்று அவருக்கு பட்டம் சூட்டினார். தலைமையமைச்சராக இருந்த இந்திரா அவரை ‘மை சன்’ என்றார்.
காலமும் அரசியலும் மாறினாலும் நெடுமாறன் இன்னமும் அதே கம்பீரத்துடன் இருப்பது உண்மையே.
பிரபாகரன் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் இவரிடம்! திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது, நெடுமாறன் இரகசியமாக யாழ் சென்று அங்கே பேசினார்.
மிகப் பெரிய நாடான இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய நாடு இலங்கை. அயர்லாந்து அப்படித்தான் இங்கிலாந்துடன் இருந்து வருகிறது. உக்ரைன் யுத்தத்துக்குரஷியாவுக்கு எதிராக நேட்டோவுடன் அந்த நாடு சேர்ந்ததுதானே காரணம். நமது தோழனாக இருக்க நினைக்காமல் பாகித்தான், சீனா, அமெரிக்கா என்று அவர்களுக்கு பல்லக்குத் தூக்க தயாரானது இலங்கை. தந்திரமிக்க சிங்கள அரசியல் இந்திராவை கவலைப்பட வைத்தது. பலமுறை சொல்லிப் பார்த்தும் பயனில்லை. வங்கதேசப்போரில் பல விதங்களில் பாகித்தானுக்குத் துணை நின்றது சிங்கள அரசு. உச்சகட்டமாக திரிகோணமலையை அமெரிக்காவுக்கு இராணுவத் தளமாக தாரை வார்க்க முடிவு செய்தது. இந்தியப் பெருங்கடலில் நமது ஆளுமைக்கு ஆபத்து. இப்போதோ சீனாவுடன் தோளோடு தோள் உரசல். திரிகோணமலை மீது சீனாவுக்கு கண்.
அன்று அந்தக் காலகட்டத்தில் யாழ் பகுதியில் தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டு இனப்படுகொலைகள் நடந்தன. தலைமையமைச்சர் இந்திரா இனப்படுகொலைகள் என்றே வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அதனால்தான் பிரபாகரனுக்கு ஆதரவுக் கரம்.
இந்திய அமைதிப் படை யாழ் சென்றபோது, புலிகளுடன் மோதும் நோக்கமில்லை.இந்திய வீரர்கள் ஒரு கை கட்டப்பட்ட நிலையில்தான் சண்டையிட்டனர். அப்போதே பிரபாகரனை இந்தியப் படை சுற்றி வளைத்த நிகழ்ச்சிகள் உண்டு. உரிய மரியாதை அளித்து அவர் செல்ல அனுமதித்தனர் என்ற தகவல் உண்டு.
இன்றைய நிலை என்ன?
ஒரு வேளை இராசபக்சேக்கள் விழுந்தும் சிங்கள அரசியல்வாதிகள் மனம் மாறவில்லை என்ற அதிர்ச்சி இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உலா வருகிறது. வெளி உறவு அமைச்சர் செய்சங்கர் பல முறை கொழும்பு செல்ல நேர்ந்ததே!
இந்த சூழ்நிலையில்தான் ‘திரும்பலாம்’ என்று பிரபாகரன் கருதுகிறாரா? பதினைந்தாண்டுகள் அவர் மறைந்து வாழ்ந்தது சாத்தியமா? முள்ளிவாய்க்கால் கடும்போரில் அவர் தப்பியது எப்படி? பிரபாகரன் என்று இலங்கை அரசு காட்டிய உடல் யாருடையது?
இந்த கேள்விகளுக்கு நெடுமாறன் நம்பிக்கையான உதடு பிரியாதபுன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார்.
அவர் பேசும்போது அவரது கண்களை உற்றுப் பார்த்தாலும் அதில் கலக்கமேதும் தெரியவில்லை.
“அவர் வருவார்” என்பது எல்லாவற்றுக்கும் நெடுமாறனின் திடமான பதில்.
அவர் வருவாரா?
-நன்றி! – wowதமிழா.com (USA) |