தமிழர்களைத் திசைத் திருப்ப முயலும் குறுந்தேசியவாதிகள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 மார்ச் 2023 13:58

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892ஆம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலும் இந்தக் கணக்கெடுப்புத் தவறாமல் நடைபெற்று வருகிறது. 15ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் நடத்தப்பெற்றது. அதற்குப் பின்னர் 2021ஆம் ஆண்டில் நடைபெறவேண்டிய கணக்கெடுப்பு கொடிய தீநுண்மி தொற்று நோயின் காரணமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 6,37,53,997ஆகும். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 52,72,884ஆகும். இதில் புதுச்சேரி மாநில தமிழர்களின் எண்ணிக்கையான 11,00,976ஐ கழித்தால் மீதமிருக்கும் 41,71,908 தமிழர்கள் பிற மாநிலங்களில் வசிக்கிறார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் பெருகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாநிலங்கள் - தமிழ் பேசுவோர்

சம்மு-காஷ்மீர்- 14,728, இமாச்சல்- 1,038, பஞ்சாப்- 10,389, சண்டிகர்- 5,579, உத்தரகாண்ட்- 2,584, அரியானா- 12,658, டெல்லி- 82,719, இராசசுத்தான்- 8,939, உத்தரபிரதேசம்- 14,444, பீகார்- 986, சிக்கிம் – 762, அருணாசலப் பிரதேசம் - 1,246, நாகலாந்து - 1,127, மணிப்பூர்- 1,657, மிசோரம் – 306, திரிபுரா – 929, மேகாலயா – 913, அசாம் - 5,229, மேற்கு வங்கம் - 15,930, சார்க்கண்ட் - 10,061, ஒடிசா - 6,155, சத்தீசுகர் - 10,334, மத்திய பிரதேசம் - 20,544, குசராத் - 40,072, டையூ டாமன் – 320, தத்ரா நாகர் ஐவேலி – 739, மகாராட்டிரா - 5,09,887, ஆந்திரா - 7,13,848, கர்நாடகா - 21,10,128, கோவா - 6,947, இலட்சத்தீவுகள் – 364, கேரளா - 5,02,516, புதுச்சேரி - 11,00,976, அந்தமான் நிக்கோபர் தீவுகள் - 57,830

உலக நாடுகளில்

இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் ஏராளமான தமிழர்கள் பிழைப்பதற்காகச் சென்று குடியேறி வாழ்கிறார்கள். நாடு வாரியாக அவர்களின் எண்ணிக்கை விவரம்:

ஆசுதிரேலியா - 75,000, இந்தோனேசியா- 50,000, கனடா - 2,00,000, சிங்கப்பூர் - 1,80,000, சுரினாம் - 1,00,000, சுவிட்சர்லாந்து - 60,000, டென்மார்க் - 15,000, தாய்லாந்து - 10,000, தென்னாப்பிரிக்கா - 6,50,000, நியூசிலாந்து - 18,000, நெதர்லாந்து - 12,000, நார்வே - 10,000, பிரான்சு - 50,000, பிரிட்டன் - 3,00,000, பிஜி - 1,10,000, பெல்ஜியம் - 9,000, மலேசியா - 18,00,000, மியான்மர் - 3,00,000, மொரீசியசு - 1,15,000, கிரினிடாட்– ரொபாக்கோ - 1,00,000, ஜமைக்கா - 25,000, செர்மனி - 40,000, அரேபிய நாடுகள் - 56,000

ரீயூனியன் - 4,00,000

மேலும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,000த்திற்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் எனப்படும் ஈழத் தமிழர்கள் (ஏதிலிகளாக வெளிநாடுகள் சென்றவர்கள் மற்றும் போரில் மாண்டவர்கள் உட்பட) 50,00,000 பேர்களும், மலையகத் தமிழர்கள் எனப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 12,00,000பேர்களுக்குமேல் வாழ்கிறார்கள்.

பிழைப்புத்தேடி வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி மக்கள் செல்வதும் போர், பஞ்சம், மதக்கலவரம் காரணமாகப் புலம்பெயர்வதும் உலகெங்கும் நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை அடக்கி ஆண்டபோது இந்நாடுகளில் தேயிலை, காப்பி, கொக்கோ, ரப்பர் போன்ற பணப்பயிர்களை வளர்த்து செல்வத்தைக் குவிக்கவும், சுரங்கங்களைத் தோண்டி கனிம வளங்களை சூறையாடுவதற்கும் அவர்களுக்குக் கடும் உழைப்பாளியான மக்கள் தேவைப்பட்டனர்.  அந்த வகையில்தான் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழர்களை ஆசை வார்த்தைகளைக் கூறி அந்நாடுகளுக்குக் கப்பல் கப்பலாகக் கொண்டு சென்றனர். இப்படி கொண்டு செல்லப்பட்ட மக்கள் தங்களது கடும் உழைப்பின் விளைவாக அந்நாடுகளின் பொருளாதாரத்தை வளமாக்கினார்கள். எடுத்துக்காட்டாக, இலங்கையின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் 60% வருமானம் ரப்பர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் மூலம் கிடைத்து வருகிறது. அதைப்போலத்தான் மற்ற நாடுகளிலும் தமிழர்கள் தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை செழிக்கச் செய்தனர்.

வளங்கொழிக்கச் செய்தவர்களை விரட்டிய கொடுமை

1948ஆம் ஆண்டு இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்ற பிறகு, இலங்கை குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்படும் அபாயம் உருவாயிற்று. உடனடியாக அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் “ஐந்தாண்டுகள் தொடர்ந்து இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அனைவருக்கும் அந்நாட்டின் குடியுரிமை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை வம்சாவழித் தமிழருக்கும், சென்னை மாநிலத்தில் உள்ள அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குமிடையே எவ்விதத் தங்குதடையும் இல்லாத உறவும், போக்குவரத்தும் நீடிக்க வகை செய்ய வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1952ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன. இதைக் கண்டித்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் 12-05-1952இல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மனித உரிமைகள் மீறலாக இது வர்ணிக்கப்பட்டது.

வாக்குரிமைப் பறிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை-இந்திய காங்கிரசு நடத்திய அறப்போராட்டத்திற்கும் சென்னை சட்டமன்றம் ஆதரவு அளித்தது. அதுமட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் செல்வதற்குத் தயாரானார்கள். அனைத்துக் கட்சிகளும் போர் முரசு கொட்டின. ஆனால், அவர்கள் அவ்வாறு செல்வதற்கு இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

1953ஆம் ஆண்டு இந்திய தலைமையமைச்சர் நேரு, இலங்கை தலைமையமைச்சர் சேன நாயகா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, “நான்கு இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் என்றும், இரண்டு இலட்சம் பேருக்கு நிரந்தரமாக வாழ்வோர் அனுமதி அளிக்கப்படும் என்றும், மீதமுள்ள மூன்று இலட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்படும் திட்டத்தை” இலங்கை அரசு முன் வைத்தது. ஆனால் இந்திய தலைமையமைச்சர் நேரு இதை ஏற்கவில்லை. மூன்று இலட்சம் தமிழர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டால், மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் ஏராளமான இந்திய வம்சாவழி மக்களைத் திரும்ப ஏற்றுக்கொள்ள நேரிடும் எனக் கருதினார்.

இலங்கையில் குடியுரிமைப் பெற்ற இந்திய வம்சாவழியினருக்குத் தனியான வாக்காளர் பட்டியல் முதல் பத்து ஆண்டுகளுக்கு இருந்துவரும் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது வியப்புக்குரிய ஒன்றாகும். இது தலைமுறை தலைமுறையாக இலங்கையின் வளத்திற்குத் தங்களுடைய உழைப்பை அளித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

இந்திய வம்சாவழி மக்களை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்வதை நேரு ஏற்க மறுத்த போதிலும், அவருக்குப் பின் தலைமையமைச்சரான லால்பகதூர் சாஸ்திரி 1964ஆம் ஆண்டில் இலங்கை தலைமையமைச்சர் திருமதி பண்டார நாயகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, 5,25,000 மலையகத் தமிழர்களை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என உடன்பாடு செய்தார். அன்றைய தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். 1974ஆம் ஆண்டில் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அம்மையார் இருந்த போது இந்திய - இலங்கை செய்துகொண்ட உடன்பாட்டின்படி மேலும் 1,00,000 மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவையும் இலங்கைக்குத் தாரை வார்த்தது. இவ்வாறு தொடர்ந்து மலையகத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்தது என்பது வரலாற்றில் மறைக்க முடியாதபடி பொறிக்கப்பட்டுவிட்டது.

பிற நாடுகள்

மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள், மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா மற்றும் தீவுகளில் ஏராளமான தமிழர்கள் பிழைப்பதற்காகச் சென்று குடியேறியுள்ளனர். சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக அந்நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உடல் உழைப்பு ஒன்றே நம்பி இந்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் அங்கு எத்தகைய நிலையில் வாழ்கிறார்கள் என்பது பற்றிகூட தாய்த் தமிழகம் எண்ணிப் பார்த்ததில்லை. அவர்களின் நிலைக் குறித்து அக்காலத்தில் பாரதி மனமுருகிப் பாடிய ஒரு பாடலில் பின்வருமாறு கூறுகிறான்-

சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்

ஆழமும் விரிவு மழகுங் கருதியும்,

‘எல்லையொன் றின்மை’ யெனும்பொரு ளதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலு

முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்

சாதியை “யமரத் தன்மைவாய்ந்தது” என்று

றுறுதிகொண்டிருந்தேன். ஒருபதினாயிரஞ்

சனிவாய்ப் பட்டுந் தமிழச் சாதிதான்

உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக்

கண்டென துள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலுந்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதந்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாங் கேட்டு மெனதுள மழிந்திலேன்.

திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பன் போன்ற உலகின் மிகச்சிறந்த புலவர் பெருமக்களின் வழிவந்த தமிழினம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து சென்று துயரச் சேற்றில் சிக்கிச் சீரழிவதைக் கண்டு மனம் நொந்து பாரதி “விதியே! விதியே! தமிழச் சாதியை என் செய்ய நினைத்தாய் எனக்கு உரையாயோ” எனப் பாடினான்.

ஆனால் இந்த மக்கள் தங்களது சொந்த முயற்சியினால் அடிமை வாழ்விலிருந்து விடுதலைப் பெற்று தாங்கள் வாழும் நாட்டின் மக்களது அன்பினையும், மதிப்பினையும் பெற்று சிறிது சிறிதாக உயர்ந்து இன்று எந்த நாடுகளுக்கு அடிமைகளாக சென்றார்களோ, அதே நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக, வணிகர்களாக, தொழிலதிபர்களாக வளம்பெற்று விளங்குகிறார்கள். அவர்களின் இந்த உயர்வுக்கும், வளமான வாழ்விற்கும் தமிழ்நாடோ, இந்தியாவோ எந்தவிதத்திலும் உதவவில்லை. ஆனாலும் அந்த மக்கள் இன்னமும் தாய்த் தமிழகத்தை மறந்துவிடவில்லை. உளமார நேசிக்கிறார்கள். தங்களது வாழ்க்கையில் ஒருமுறையாவது தாய்த் தமிழ்நாட்டின் மண்ணை மிதிக்கவேண்டும் என கனவு காண்கிறார்கள்.

உண்மை என்ன?

வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 80.09% மக்கள் எழுத்தறிவுப் பெற்றவர்கள். பள்ளிப் படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுவதால் கல்லூரியில் சேர்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் தேசிய விகிதத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமானதாகும். முனைவர் பட்டம் பெறுவோர் விகிதத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த நூறு கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கு கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளதாக தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்புக் கூறுகிறது. மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன. எனவே, இங்கு படித்துப் பட்டம் பெற்ற ஏராளமான மருத்துவர்களும், பொறிஞர்களும் பிற நாடுகளுக்குச் சென்று வேலை பார்த்து தமிழகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதின் மூலம் அந்நியச் செலாவணி நமக்கு அதிகம் கிடைக்கிறது. அதைப்போல, சுகாதார வசதிகள், தனிநபர் வருமானம் ஆகியவற்றிலும் தமிழகம் வடமாநிலங்களைவிட முன்னேறி உள்ளது. ஆண்டுதோறும் உயர்கல்விக் கற்பதற்காக ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் அமெரிக்கர. ஐரோப்பா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். அதைப்போல, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தேடிவந்து கல்வி கற்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் மருத்துவம் பெறுவதற்காகத் தமிழகத்தைத் தேடி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி அதிகம் இருப்பதால் தமிழ்நாட்டில் உடல் உழைப்புத் தொழில் செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, குடும்பக் கட்டுப்பாட்டு முறை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுவதால் நமது பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவற்றின் காரணமாகவும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ளது.

வட தொழிலாளர்

வட இந்திய தொழிலாளர்கள் சுமார் 6இலட்சம் பேர் தமிழ்நாட்டில் உடல் உழைப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த ஊதியத்திற்கு நாளொன்றுக்கு 12மணி நேரம் உழைக்க வைக்கப்படுகிறார்கள். பணி பாதுகாப்பு அவர்களுக்கு அறவே இல்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் அவர்களுக்கு உதவுவதில்லை. வறுமையின் காரணமாகக் குடும்பங்களை விட்டுப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து மோசமான வாழ்விடங்களில் தங்கி வேலை செய்யும் அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு சிலரால் விதைக்கப்படுகிறது. இத்தகையவர்களுக்குத் தொலைநோக்கோ அல்லது மனிதநேயமோ அறவே இல்லை. குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இவர்கள் குறுந்தேசியவாதம் பேசுகிறார்கள். குறுந்தேசியவாதம் என்பது பாசிசத்தில் போய் முடியும்.

இட்லர், செர்மனியில் வாழும் யூதர்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த செமிட்டிக் (Semitic) இன மக்களுக்கு எதிரான வெறியை கிளப்பினார். செர்மானியர்கள் மட்டுமே மிகத் தூய்மையான ஆரியர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் பேசியதோடு நிற்கவில்லை. ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிய பிறகு இம்மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தினார். இரண்டாம் உலகப் போரின் போது ஏறத்தாழ 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களும், பிற மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். இட்லரின் இந்த குறுந்தேசியவாதம் பாசிசத்தை நிலைநாட்டுவதற்கு வழி வகுத்தது. அதன் விளைவை செர்மானியர்கள் அனுபவிக்க நேர்ந்தது. இதிலிருந்து அவர்கள் மீண்டு எழுவதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாயிற்று.

மேலும் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து தமிழகத்தையே தங்களது தாயகமாகக் கொண்டுள்ள தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், உருது பேசுகிற முசுலீம்கள், சௌராட்டிரர் போன்ற மொழிச் சிறுபான்மை இனத்தவர்கள் மீதும் குறுந்தேசியவாதிகள் பாய்கிறார்கள். அவர்களை பகைவர்கள் போலக் கருதுவதும், அவர்களுக்கெதிராக வெறியூட்டும் வகையில் பேசுவதையும், எழுதுவதையும் தொடர்ந்து செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் பிற மொழிப் பேசுபவர்களின் எண்ணிக்கையும்,

தமிழகத்தின் மக்கள் தொகையில் அவர்களின் சதவிகிதமும் கீழே தரப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுகிற மக்களின் எண்ணிக்கை- 42,34,302- 5.87%, கன்னடம் - 10,45,238 - 1.45%, மலையாளம் - 5,57,705 - 0.77%, சௌராட்டிரர் - 9,02,621 - 1.25%, உருது  - 12,64,537 - 1.75% மொத்தம் - 80,04,403 - 11.09%

இவர்களை தவிர, பழங்குடி மக்கள் பேசுகிற மொழியினர் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளைப் பேசுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணத்தகும் அளவிற்கு மிகமிகக் குறைவாகும்.

ஒரே மொழி - நாடு இல்லை

ஒரே மொழிவழித் தேசிய இன மக்கள் மட்டுமே தனித்து வாழும் ஒரு நாடு உலகில் எங்கும் அறவே இல்லை. உலக நாடுகள் எல்லாவற்றிலும் பெரும்பான்மை தேசிய இன மக்களும், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் கூடி வாழ்கிறார்கள். பெரும்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள், சிறுபான்மை இன தேசிய மக்களுக்குரிய உரிமைகளை அளித்தும், அவர்களை அரவணைத்தும் வாழ்கிறார்கள். சிறுபான்மை தேசிய இன மக்களும் தாங்கள் வாழும் நாட்டையே தங்களின் தாயகமாகக் கருதி பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அந்த மக்கள் தமிழர்களுடன் இரண்டறக் கலந்து வீட்டு மொழியாகத் தங்கள் மொழியையும், நாட்டு மொழியாகத் தமிழையும் ஏற்று வழங்கி வருகிறார்கள்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பல்வேறு வகையில் சிறப்பாக தொண்டு புரிந்த தொண்டாற்றி வருகிற பல அறிஞர்கள் சிறுபான்மை மொழிப் பேசுகிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தாலி நாட்டிலிருந்து சமயப் பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வந்த அறிஞர் ஜியுபோப், இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பெஸ்கி என்னும் வீரமா முனிவர், அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அறிஞர் கால்டுவெல் போன்றவர்கள் தமிழின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் உலகறியச் செய்தார்கள் என்பதை ஒருபோதும் நாம் மறக்க முடியாது. தமிழ்நாட்டில் நிலவிய சமண – பௌத்த சமயங்கள், அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்கள், அவர்களின் வரலாறு ஆகியவற்றை ஆய்ந்து முதன்முதலாக நூல்களாகப் படைத்தப் பெருமைக்குரிய மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தெலுங்கர். அதைப்போல கீழடி ஆய்வில் முனைந்து ஈடுபட்டு வைகைக் கரை தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையான கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்த முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் சௌராட்டிர மொழிப் பேசுபவர் என்பதை உணரவேண்டும். இத்தகைய அறிஞர்களுக்குத் தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

வேட்டைக் காடாகும் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தொழில், வணிகம் போன்றவற்றில் வடநாட்டைச் சேர்ந்த மார்வாடிகளும், குசராத்திகளும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையும் அவர்களிடம் தமிழ் வணிகர்களும், தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் கைகட்டி சேவகம் புரியும் நிலை நீடிக்கிறது. இத்தகைய பேரபாயத்தை தமிழக மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, குறுந்தேசியவாதிகள் உண்மையான பிரச்சனையை மறைத்து திசைத்திருப்புவதில் முனைந்து ஈடுபடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மார்வாடிகள், குசராத்திகள், மேல்நாடுகளைச் சேர்ந்த பெருந்தொழிலதிபர்கள் ஆகியோரால் தமிழ்நாட்டின் கனிம வளம் சூறையாடப்படுகிறது. தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. நமது பொருளாதாரம் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கிறது. இதற்கெதிராகத் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதைத் திசைத் திருப்புவதற்காக வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தை இந்தக் குறுந்தேசியவாதிகள் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அலுவலகங்களிலும், வங்கி, ஆயுள் காப்பீடு, தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தகவல் தொடர்புத்துறை, இந்திய அரசின் பல பெருந்தொழில்களான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரம்பலூர் தொடர்வண்டி உற்பத்தித் தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, சேலம் எஃகு தொழிற்சாலை, திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் போன்ற பல பெருந்தொழிற்சாலைகளில் குறைந்த அளவு 75% வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு அளிக்கப்படவேண்டும் எனப் போராட வேண்டிய மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் வகையில் குறுந்தேசியவாதிகள் செயல்படுகிறார்கள்.

இவர்களின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான உணர்வைத் தோற்றுவித்து அவர்களை அந்தந்த மாநில மக்கள் வேண்டாதவர்களாகப் பாவித்து அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்குத் தூண்டுவதாகும். குறுந்தேசியவாதிகளின் பொறுப்பற்ற செயல்களின் விளைவாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பும். வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அந்தந்த மக்களின் அன்பினையும் மதிப்பினையும் பெற்று அவர்களோடு இணைந்து வளமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு குறுந்தேசியவாதிகள் அநீதி இழைக்கிறார்கள். இவர்களின் பொறுப்பற்றப் போக்கின் விளைவாக பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கள் மாநிலத் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராயும் சூழ்நிலை உருவானது. உடனடியாக வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. நல்லவேளையாக வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாட்டுத் தொழிலாளர்களோ அல்லது மக்களோ இல்லை என்பதையும், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எத்தகைய அபாயமும் நேரவில்லை என்பதையும் பீகார் அரசு அதிகாரிகள் உணர்ந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகள் தமிழ்நாட்டிலும் ஆழமாகக் கால் பதித்துள்ளனர். தமிழ்நாட்டின் வேளாண்மைத் துறையைகூட அம்பானி விட்டு வைக்கவில்லை. “ரிலையன்ஸ் – பிரெஷ்” என்ற பெயரில் காய்கறி, கனிகள் விற்கும் பெரும் கடைகளை தமிழக நகரங்களில் திறந்துள்ளனர். நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்குக் கடனுதவி அளித்து காய்கறிகளைப் பயிரிடச் செய்து அவற்றை குறைந்த விலையில் கொள்முதல் செய்து விற்று கொழுக்கின்றனர். இதன் விளைவாக சிறு காய்கறிக் கடைகளை வைத்துப் பிழைத்தத் தமிழர்களும், வீடு வீடாகக் காய்கறிக் கூடைகளை கொண்டு சென்று விற்று வாழ்ந்த தமிழ்ப் பெண்களும், தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். இத்தகைய முதலாளித்துவ முதலைகளின் பிடியிலிருந்து தமிழக விவசாயிகளை மீட்பதற்கு போராடுவதற்குப் பதில் சிறு மீன்களான வடமாநிலத் தொழிலாளர்களுக்கெதிராகப் போராடுவது என்பது பொறுப்பற்ற செயல் என்பது மட்டுமல்ல, மக்களை ஏமாற்றித் திசைத்திருப்பும் செயலாகும். குறுந்தேசியவாதிகளின் உண்மை உருவத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாம் போராடவேண்டிய களங்களும் சந்திக்க வேண்டிய உண்மை பகைவர்களும் வேறு என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.