சங்க இலக்கியத்தில் உழைக்கும் பெண்கள் -ஆர். பாலகிருஷ்ணன் (கட்டுரையாளர்: ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2023 11:00

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு, எந்தெந்தச் சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருளாதாரம்தான் விரைவாக வளரும்.

சமூகநீதியின் முதல் விதை அப்போதுதான் முளைவிடும். பாலினம் சார்ந்த பிற்போக்கு மதிப்பீடுகள் மட்டுப்படும். “வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்” என்பதெல்லாம் மாடமாளிகைகளின் வெட்டிப் பெருமிதம். பெரும்பான்மை மக்களின் யதார்த்தமான நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.

இந்தியத் துணைக் கண்டத்தில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களில் சங்க இலக்கியம் தனித்துவமானது. இவ்விலக்கியங்களில் வீரயுகக் காலத்தின் போர்கள், வீரம், கொடைப் பண்புகள் போன்ற விழுமியங்கள் முன்னிறுத்தப்பட்டாலும் தொல்தமிழர் சமூகத்தின் பண்பாட்டு அரசியல், கருத்தியல் சார்ந்த முன்னுரிமைகளையும் அன்றாட வாழ்க்கையின் நடைமுறைத் தன்மைகளையும் புரிந்துகொள்ள சங்க இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவேண்டும் என்று ஐ.நா. சபை உலகளாவிய இலக்கை நிர்ணயித்து வலியுறுத்தும் இந்த 21ஆம் நூற்றாண்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களை ‘உழைக்கும் பெண்கள்’ என்கிற கண்ணோட்டத்தில் மீள்வாசிப்பது பொருத்தமான நினைவுறுத்தலாக இருக்கும்.

மானமிகு பருத்திப் பெண்டிர்

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் போன்றவை முதன்மைப் பொருளாதாரத்தில் அடங்கும். வரகு, தினை போன்ற புன்செய் நில சிறுதானியங்களே வேளாண்மையின் தொடக்கப்புள்ளி. இதில் பெண்களின் பங்களிப்புதான் அதிகம். தினைப்புனத்தையும் ஏனலையும் (தினைவகை) பெண்கள் காவல் காப்பது பற்றிச் சங்க இலக்கியங்களில் 55 குறிப்புகள் உள்ளன. ஆண்கள் காவல் காப்பது பற்றி 14 குறிப்புகளே உள்ளன. களை எடுக்கும் உழத்தியரைச் சங்க இலக்கியம் நமக்கு அறிமுகம் செய்கிறது.

கால்நடை வளர்ப்பு சார்ந்த பொருளியலில் சங்க காலப் பெண்களின் பங்களிப்பு சிறப்பானது. மோர், தயிர் விற்கும் ஆயர் மகளிர் பற்றி அறிகிறோம். நெய் விற்ற பணத்தில் தங்கநகை வாங்காமல் தனது குடும்ப வருமானத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் எருமை, பசு வாங்கிய பெண்ணை ‘பெரும்பாணாற்றுப்படை’யில் சந்திக்கிறோம். வீட்டுப் பொருளாதாரத்தைத் தோளோடு தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தும் உழைக்கும் பெண்களின் இந்த இயல்பு இன்றும் தொடர்வதுதான். ஆனாலும், அதன் தொடக்க வேர்களை ஒரு செவ்வியல் இலக்கியத்தில் கண்டறியும்போது புதிய புரிதல்கள் கிடைக்கின்றன.

சங்க காலத்து உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் பருத்தி ஆடை முக்கிய இடம் பெற்றது.பருத்தி ஒரு பணப்பயிர் மட்டும் அல்ல; பண்பாட்டுப் பயிரும்கூட. பருத்தியை அடித்துப் பஞ்சாக்கி நூலாக நூற்கும் தொழிலில் ஈடுபட்ட பெண்களைப் ‘பருத்திப் பெண்டிர்’ என்று சங்க இலக்கியம் அழைக்கிறது. கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்திற்குப் பருத்தித் தொழில் கைகொடுத்து உதவியது. இதை ‘ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நூல் பனுவல் போல’ என்று நற்றிணை (352) பதிவு செய்கிறது. ஒருவகையில் தற்கால மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சங்கத் தமிழ்நாடு ஊன்றிய தன்மான விதை பருத்தி விதை.

பண்டங்கள் மற்றும் சேவைத் துறை (Goods & Service) பொருளாதாரத்தின் முக்கியமான மதிப்புக் கூட்டல் (Value Addition) ஆகும். சங்க இலக்கியம் உழைப்பின் பெருமிதத்தை மிக வெளிப்படையாகக் கொண்டாடுகிறது. தூய ஆடையைத் துவைக்கும் பெண்கள் கஞ்சியில் தோய்த்து எடுத்துக் கல்லில் அடித்து நீரில் அலசித் துவைக்கும் முறையை விளக்கும் சங்க இலக்கியம், சலவைத் தொழில் செய்யும் பெண்ணின் அழகு நலத்தையும் பேசுகிறது என்பதுதான் தனிச்சிறப்பு. வறுமை இல்லாத சலவைப் பெண் பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது.

மீனுக்கு மாற்றாக முத்து

பண்டமாற்று வணிகத்தில் சங்க இலக்கியப் பெண்கள் முனைப்புடன் ஈடுபட்டனர். ஊர் ஊராகச் சென்று ஒரு படி நெல்லுக்கு ஒரு படி உப்பு என்று உமணர் பெண்கள் கூவி விற்றனர். (அகம் 390). இவற்றை எல்லாம்விட உப்பு மூட்டைகளை ஏற்றிய மாட்டுவண்டியைக் கைக்குழந்தையுடன் ஓட்டிச் செல்லும் ‘பிள்ளைத்தாய்ச்சி’ பெண் நம்மைப் பிரமிக்க வைக்கிறாள். (பெரும்பாணாற்றுப்படை).

தூண்டில் போட்டு விரால் மீன் பிடிக்கும் பாண் மகள். படகில் சென்று அண்ணன்மார் பிடித்துவந்த பெரிய பெரிய கடல் மீன்களைத் தெருத்தெருவாகச் சென்று விற்று வந்த பெண்கள், கடற்கரையில் கருவாடுகளைக் காய வைக்கும் பெண்கள் என்று பலரையும் நாம் சங்க இலக்கியங்கள் சந்திக்கிறோம்.

சங்க இலக்கிய உழைக்கும் பெண்களின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வாளை மீனுக்குப் பண்டமாற்றாக நெல் வாங்க மறுக்கும் பரதவர் பெண், கள்ளுக்கடைகள் உள்ள தெருவுக்குத் தயக்கமின்றிச் சென்று திறமையாகப் பேசி, வாளை மீனுக்கும் மாற்றாகக் கடல் முத்துக்களை வாங்கி வருகிறாள் (அகம் 126).

கூந்தல் நரைத்தாலும் அழகு குறையாத தொல்முது பெண்டிர், சிவப்பான பெண்கள், கறுப்பு அழகிகள், மயில் நடைக்காரிகள், மடமொழியோர் என்று பலவகையான பெண்கள் நுகர்வோர் விரும்பும் பல்வேறு பொருள்களைப் பாத்திரங்களில் எடுத்துச் சென்று வீடுவீடாக விற்கிறார்கள் (மதுரைக்காஞ்சி).

கறாரான வணிகர்கள்

சங்க இலக்கிய காலத்திலேயே மதுரை தூங்காநகரமாகத்தான் இருந்திருக்கிறது. மதுரையின் இரவு நேரக் கடை வீதியில் பண்டங்களை விலை கூறி விற்கும் பெண்கள் பலர் கடைகளை நடத்துகின்றனர். அழகிய அணிகலன்களை அணிந்த அந்தப் பெண்கள் வியாபாரம் முடித்து, கடைகளை மூடிவிட்டுத் தூங்கச் செல்லும்போது நள்ளிரவுக்கும் மேல் ஆகிவிட்டது என்று ‘மதுரைக்காஞ்சி’ பதிவிடுகிறது. எனக்குத் தெரிந்தவரையில் இவ்வளவு துல்லியமான ஒரு வாழ்வியல் நடைமுறையை இந்தியாவின் வேறெந்த இலக்கியமும் ஆவணப்பதிவு செய்ததில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் நள்ளிரவு வரை கடை வியாபாரம் செய்த பெண்கள். வியப்பாக இருக்கிறது அல்லவா?

சங்க இலக்கியப் பெண்கள் எதற்கும் அசந்தவர்கள் இல்லை. ‘கள் அடு மகளிர்’ முற்றத்தில் கள் காய்ச்சி வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்கள் (பெரும்பாணாற்றுப்படை). கள் கலயங்களை இடுப்பில் சுமந்து சென்று விற்கிறார்கள். முரட்டுத்தனமான ஆள்களிடமும் கொஞ்சம்கூட அஞ்சாமல் கறாராக மதுபான வியாபாரம் செய்கிறார்கள் (அகம் 245).

ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சிறப்புத் திறனாளருக்கான தேவை இருக்கும். சங்க காலத்தில் குறி சொல்லும் திறமை படைத்த பெண்கள் அகவன் மகளிர் (குறுந்தொகை 298) என்று அழைக்கப்பட்டனர். கையில் ஒரு சிறுகோல் வைத்துக்கொண்டு குறி சொன்னார்கள். முறத்தில் ‘நெல் மணிகளை வட்டமாகப் பரப்பி, பின்னர் அவற்றை எண்ணி அதன் அடிப்படையில் குறிசொன்னார்கள் கட்டுவிச்சிகள். ‘ஓட்டி அடிச்சான்டா உள்ளூர் கோடாங்கி’ என்று நாம் இப்போது சொல்வது போல சும்மா வாய்க்கு வந்ததை ‘அடித்து விடும்’ குறி சொல்லும் பெண்களை ‘முதுவாய்ப் பொய்வல் பெண்டிர்’ என்று சித்தரிக்கிறது சங்க இலக்கியம் (அகம் 98).

அறுபடாத கண்ணி

அதுமட்டுமன்றி மூங்கில்களுக்கு இடையே கட்டிய கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கழைக்கூத்து ஆடுமகள் (நற்றிணை 95; குறிஞ்சிப்பாட்டு; மனமகிழ் கலைத்தொழிலில் ஈடுபட்ட, ஆடற்கலையிலும் பாடற்கலையிலும் சிறந்த விறலியர். விழாக்காலங்களில் பொது இடத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்த்துக் கலைஞர்கள், நாடக மகளிர் என்று பல்வேறு வகையான உழைக்கும் வர்க்கத்துப் பெண்களை சங்க இலக்கியச் சமூகப் பொருளாதார பண்பாட்டுப் பெருவெளியில் நாம் சந்திக்கிறோம்.

இந்தப் பண்பாட்டின், வாழ்க்கை முறை விழுமியங்களின் தொடர்ச்சியைத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து தக்க வைத்து இன்றுவரை கடைப்பிடிக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. அதனால்தான் இன்றைய தமிழ்நாட்டிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளிலும் உழைக்கும் தமிழ்ப் பெண்களுக்குக் குறைவில்லை. ‘பருத்திப் பெண்டிரின்’ மரபில் வந்த பெண்கள் இன்று தொழில் முனைவோராகத் திகழ்கிறார்கள். அதனால்தான் ‘தோற்றத் தொன்மை தொடரும் இளமை’ என்கிற இரண்டு பெருமிதங்களுக்கும் ஏற்புடைய மொழியாகத் தமிழும் தமிழரின் உலகளாவிய பண்பாட்டு விழுமியங்களும் திகழ்கின்றன.

-நன்றி! – ‘தமிழ் இந்து’ – 05-03-2023.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.