காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் - உச்சநீதிமன்றத்தின் ஆணை பெரும்பாலான மாநிலங்களில் நிறைவேற்றப்படவில்லை - நீதிநாயகம் கே. சந்துரு குற்றச்சாட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:05

தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவரும், அவரின் கீழ் பணியாற்றிய காவல் அதிகாரிகளும், காவலர்களும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுபவர்களின் பற்களைக் கல்லால் உடைத்தும், குறட்டினால் பிடுங்கியும் செய்த அட்டூழியங்கள் தமிழக மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

chandru edit2016-2017 முதல் 2021-2022 ஆகிய 5 ஆண்டு காலத்தில் தமிழகக் காவல் நிலையங்களில் 478பேர் மரணமடைந்துள்ளனர். இது குறித்து இதுவரை யார் மீதும் குற்றப்பத்திரிகையோ அல்லது தண்டனையோ விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்துள்ளார்.

“1986ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கைது செய்யப்பட்டு காவல் நிலைங்களுக்குக் கொண்டுவரப்படுபவர்கள் குறித்து 11 வழிகாட்டும் குறிப்புகளை வழங்கியுள்ளது.

காவல்துறையினால் பாதிக்கப்பட்டதின் விளைவாக மருத்துவ சிகிட்சை தேவைப்படுகிறதா? என குற்றவியல் நீதிபதி அவர்களிடம் விசாரித்தறியவேண்டும். ஆனால், காவலர்களால் மிரட்டப்பட்டுள்ள நபர்கள் இல்லை என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், இவ்வாறு குற்றவியல் நீதிபதிகள் ஒருபோதும் விசாரித்து அறிவது கிடையாது; ஆனால் எத்தகைய குற்றச்சாட்டும் கூறப்படவில்லை” என்று அவராகவே பதிவு செய்துகொள்வார்.

அண்மைக் காலத்தில் காவல்நிலைய சாவுகளுக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. ஆனால், அமெரிக்காவில் இதற்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவின் சட்டத்திற்குப் புறம்பாக காவலர்கள் ஏதாவது செய்தால், விசாரணையை அது ஒருபோதும் பாதிக்காது. இந்தியாவில் பிணை விடுதலையோ, இழப்பீடோ மட்டும்தான் பெற முடியும். இதைத் தவிர குற்றச் செயல் புரிந்த அதிகாரிகளைத் தண்டிக்கும் வழிமுறை எதுவும் நம்நாட்டில் இல்லை. அமெரிக்காவில் அதற்கான வழிமுறைகள் உண்டு. காவல்நிலைய சாவு நேர்ந்தால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.

காவல்துறை அதிகாரிகளை நிர்வாக ரீதியில் விசாரிக்க முடியுமே தவிர, இதற்கென்று தனியான ஒரு அமைப்பு இங்கு இல்லை. காவல்துறையின் சித்ரவதைகளுக்குட்பட்டோ அல்லது சாவுக்கோ இரையான ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். குற்றப் பரம்பரையினர் என அழைக்கப்படும் மக்களின் பாதிப்பு இன்னும் அதிகமாகும். கிராமத்தில் உள்ள ஒருவர்கூட அவர்களுக்கு ஆதரவாக பேச முன்வரமாட்டார்கள். அவர்கள் பெயருக்குப் பக்கத்தில் குறவர் அல்லது இருளர் என காவல்துறையினர் குறிப்பிடுவார்கள். அவ்வாறு குறிப்பிடப்படக் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியும்கூட, காவல்துறை செவிசாய்க்க மறுக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால், அந்த கிராமத்தின் பகுதியினராக அம்மக்கள் கருதப்படவேண்டும். இதற்கு சமுதாயம் ஒத்துழைத்தால் மட்டுமே இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

காவல் நிலையங்களிலோ, சிறைகளிலோ கண்காணிப்புக் கருவிகள் அமைப்பதின் மூலம் இக்கொடுமைகளைத் தடுக்கலாம் என்ற கருத்தும் தவறானதாகும். காவல்நிலையத்திற்கு வெளியே அழைத்துச் சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலர்கள் சித்ரவதைக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்குகிறார்கள். இதற்கென போராடுவதற்குத் தனியான மனித உரிமை அமைப்பு எதுவும் இல்லை. காவல்நிலையங்களில் நடப்பவற்றை மக்களின் கண்காணிப்புக்குள்ளாக்கப்படவேண்டும். அதற்கென தனியான சட்டமும் கொண்டுவரப்படவேண்டும்.

கடந்த 14.04.2023 ஆம் நாள் அன்று நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்தப் பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார். அவர் கூறியதை உறுதிபடுத்தும் வகையில் மறுநாளே 15.04.2023 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

ஹென்றி டிபேன் திரட்டிய திடுக்கிடும் உண்மைகள்

“உச்சநீதிமன்றம் அனைத்து காவல் நிலையங்களில் உள்ளே நுழையும் வழி, வெளியே வரும்வழி, கைதுhendry செய்யப்பட்டவர்களைப் பூட்டி வைக்கும் அறை, காவல் நிலைய வராண்டாக்கள், வரவேற்பு அறை, வெளி அறைகள், காவல் ஆய்வாளரின் அறை, துணை ஆய்வாளர் அமர்ந்திருக்கும் இடம், காவல் நிலைய பொது மண்டபம், வெளியில் இருக்கும் கழிவறைகள், காவல் நிலைய அதிகாரியின் அறை, காவல் நிலையத்தின் பின்புறம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். இருட்டில்கூட அவை படம் பிடிக்கும் வசதியும், ஒலிப்பதிவு செய்யும் திறனும் பெற்றிருக்கவேண்டும். இந்த கண்காணிப்புக் கேமரா 18 மாதங்கள் பதிவு செய்யும் திறன் உள்ளவையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு திட்டவட்டமாகவும், தெளிவாகவும் 2020ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தப் பிறகும், கர்நாடகத்தில் உள்ள மைசூர், மேகாலயத்தில் உள்ள சிலாங் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் காவல் நிலையங்களில் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் ஆணை முழுமையாக செயல்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மதுரையிலிருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் என்னும் மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநரான ஹென்றி டிபேன் செய்தி அறியும் உரிமையின்கீழ் கேட்டபோது, “தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்கள் அனைத்திலும் 406 காவல் நிலையங்களில் 106 மட்டுமே எங்களுக்குப் பதிலளித்துள்ளன. தமிழ்நாட்டில் எந்த காவல் நிலையத்திலும் உச்சநீதிமன்றத்தின் ஆணை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 252 காவல் நிலையங்கள் எங்களுக்குத் தகவல் கொடுக்க மறுத்துவிட்டன. சேலம், இராமநாதபுரம் உள்பட 48 காவல் மாவட்டங்களிலிருந்து எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி, உச்சநீதிமன்றத்தின் ஆணை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள 37 காவல் நிலையங்களில் 213 கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 34 காவல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் 6 கண்காணிப்புக் கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்பாசமுத்திரம் உள்பட 3 காவல் நிலையங்களில் 3 கண்காணிப்புக் கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. எங்களுக்குக் கிடைத்த அத்தனை தகவல்களையும் ஏப்ரல் 18 அன்று உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்போவதாக” ஹென்றி டிபேன் கூறினார்.

நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் சாட்டியுள்ள குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.