திருவள்ளுவர் ஆண்டு 2033 கடகம் 4ஆம் நாளில் (2002ஆம் ஆண்டு சூலை மாதம் 20ஆம் நாள்) உலகத் தமிழர் பேரமைப்பு தொடங்கப்பட்ட நாளில் செயலாளர் நாயகமாக பொறுப்பேற்ற மரு. பொன். சத்தியநாதன் அவர்கள் அமைப்பின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து தொண்டாற்றினார்.
தமிழீழத்தில் பிறந்த அவர், புலம்பெயர்ந்து ஆசுதிரேலியாவில் வாழ நேரிட்ட போதும், உலகத் தமிழர் பேரமைப்பின் அனைத்து மாநாடுகளிலும் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவற்றின் வெற்றிக்காகப் பெரும் தொண்டாற்றினார். நிதியுதவியையும் தொடர்ந்து செய்து வந்தார்.
பின்னர் சென்னை, கோட்டூர்புரத்தில் புதிய கட்டடம் ஒன்றினைத் திட்டமிட்டு, நன்கு வடிவமைத்துக் கட்டி, உலகத் தமிழர் பேரமைப்பின் அலுவலகம் செயல்பட வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்ததோடு, அமைப்பைத் தாங்கிய தூணாகவும் விளங்கினார்.
எதிர்பாராத வகையில் அவரது மறைவு உலகத் தமிழர் பேரமைப்பிற்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்தது. ஆனாலும், அவருக்குப் பின் அவரது துணைவியார் மரு. மேரி நளாயணி சத்தியநாதன் அவர்கள் உலகத் தமிழர் பேரமைப்பிற்குத் தொடர்ந்து ஆதரவு தந்தார்.
தற்போது கோட்டூர்புர அலுவலகக் கட்டடத்தை உலகத் தமிழர் பேரமைப்பிற்கே கொடை உள்ளத்தோடு வழங்கியுள்ளார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் உலகம் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
05.03.2023 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டத்திலும் இந்த இணையருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
07.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு கோட்டூர்புரம் தலைமையகத்தில் மரு. பொன். சத்தியநாதன் – மரு. மேரி நளாயணி சத்தியநாதன் இணையரின் படத்திறப்பு விழா உ.த.பே. செயலாளர் நாயகம் ந.மு. தமிழ்மணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உ.த.பே. அறங்காவலர் தீனதயாளன், உ.த.பே. செயலாளர் தமித்தலட்சுமி தீனதயாளன் ஆகியோர் படத்தைத் திறந்து வைத்தனர்.
Â
தலைமையக ஆவணப் பதிவு வேலையைச் சிறப்பாக செய்து முடித்த வழக்கறிஞர் வடிவேல் தீனதயாளன் அவர்களுக்கு உ.த.பே. தலைவர் பழ. நெடுமாறன் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு திரு. செ.ப. முத்தமிழ்மணி முன்னிலை வகித்தார். ஈரோடு திரு. தட்சிணாமூர்த்தி கொடியேற்றினார். உ.த.பே. செயலாளர் மு. சந்திரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உ.த.பே. நிர்வாகிகள் உள்பட பலர் இவ்விழாவில் திரளாகப் பங்கேற்றனர். |