நிலை கெட்டுத் தடுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகள் (நீதிநாயகம் கே. சந்துரு - நேர்காணல்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 04 மே 2023 10:34

chanduru-1அண்மைக் காலமாக இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ள ஒரு சில தீர்ப்புகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களையும், மதிப்பு வாய்ந்த கோட்பாடுகளையும் அறவே புறந்தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.நீதிமன்றங்களின் இத்தகைய போக்குகள் குறித்து ஃபிரண்ட்லைன் இதழுக்கென மூத்த இதழாளர் இளங்கோவன் ராஜசேகரனுக்கு அளித்த நேர்காணலில் விரிவாக விவாதித்துள்ளார்.

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே. சந்துரு, அடிப்படை மனித உரிமைகளையும், குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் உறுதிப்படுத்தி, கண்காணித்திட வேண்டிய தங்களது கடமைப் பொறுப்பிலிருந்து இந்திய நீதிமன்றங்கள் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன என்று தனது வலிமையான கருத்தை முன்வைக்கும் கே. சந்துரு அவர்கள்:

கேள்வி: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதன் சிற்பியான அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் “பொய்யுரைகள், தலைகீழான வாதங்கள், நீர்த்துப் போகச் செய்தல் முதலான காரணங்களால் நமது அரசமைப்புச் சட்டம் செயலிழந்து போகும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதா?” என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதிலுரைத்த அம்பேத்கர், “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பின் பற்றாமல் இருந்தாலே அது செயலற்றுப் போகும் அபாயம் நிச்சயமாக உள்ளது” என்று கூறினார். நீதிமன்றங்களின் சமீபத்திய தீர்ப்புகள் வாயிலாக, இந்திய நீதித்துறை நடுநிலையிலிருந்து வழுவி, நிர்வாகத்தின் பக்கமாகச் சாய்வது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே, இதை எப்படிப் புரிந்து கொள்வது?

பதில்:நீங்கள் இங்குள்ள சட்ட நிபுணர்களிடம், ‘இந்தியா எவ்வாறு சுதந்திரம் பெற்றது?” என்று கேட்டீர்களென்றால், அவர்கள் ஒரே வரியில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம் வாயிலாக’ என்று பதில் சொல்வார்கள். இதில் வியப்படைய எதுவுமில்லை. சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நாம் அவ்வாறு தான் புரிந்து வைத்துள்ளோம். அதாவது, புதிதாக உருவாகியுள்ள ஒரு குடியரசு தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் என்பதற்கு மாறாக, ஏற்கெனவே இங்கு இருந்து வந்த சட்டங்களின் தொடர்ச்சியே என்ற சிந்தனைப் போக்கே இங்கு நிலவி வந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய துவக்க கால வருடங்களில், மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் இல்லை. அவர்கள் பழமைவாதக் கண்ணோட்டத்திலேயே தங்கள் பதவிகளைத் தொடர விரும்பினார்கள். சட்டமும், சட்ட நடவடிக்கைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்று காட்டிக் கொள்ளும் தன்மையோடு அவை சிறப்பு அந்தஸ்துடன் தனியே அமர வைக்கப்பட்டன. உண்மையில் அரசமைப்புச் சட்டமானது ஒரு அரசியல் ஆவணமே. உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்பது அரசியல் ரீதியான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இந்தியாவில் உயர்மட்ட நீதித்துறை, அரசியல் அணுகுமுறை சார்ந்த உருவாக்கம் பெறாமல், சடட அறிஞர்களின் தொழில்முறை சார்ந்த அனுபவங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையிலேயே அமைந்தது.

இத்தகைய பிரத்யேகமான சூழ்நிலை காரணமாக, இந்தியாவில் நீதித்துறையின் செயல்பாடு என்பது குடியரசின் அடிப்படை நோக்கங்களுக்கு முரணானதாக, பெரும்பாலான நேரங்களில் நிர்வாக அமைப்பையும், சட்டமன்ற/நாடாளுமன்றங்களையும் பாதுகாக்கக் கூடியதாக, சுருங்கக் கூறின் ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டுவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வதாக மாறிப்போனது. இந்தியாவில் தேர்தல் நடைமுறை துவங்கிய பின், முதல் 25 ஆண்டுகள் ஒரே கட்சியின் (காங்கிரஸ்) ஆட்சி நீடித்திருக்க, அதிகாரம் சிறு குழுவின் கைகளுக்குச் சென்று மையப்படுத்தப்பட்டதும், அதன் காரணமாக சுதந்திரப் போராட்டக் காலத்துப் புரட்சிகர உணர்வுகள் சுருங்கிப் போனதும் தேசத்தின் அனுபவமாக அமைந்தது. இதில் நீதித்துறை பயணம் மேற்கொண்ட வழியும் நேரான நெடுஞ்சாலையாக இல்லாமல், பெரிதும் வளைந்து வளைந்து செல்லும் பாதையாகவே இருந்தது.

1960களின் இறுதியில் தான் நாட்டு மக்களை நேரடி பாதிப்புக்குள்ளாக்கும் சமூக, பொருளாதார அம்சங்களில் நீதித்துறையின் பங்கும், பார்வையும் பொது வெளியில் பெரும் விவாதத்திற்கு வந்தன. வங்கிகள் தேசவுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு ஆகிய திருமதி இந்திராகாந்தி அரசின் முடிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதிய போது, அத்தகைய முட்டுக்கட்டைகளை அகற்றி, சரி செய்திடும் வகையில் உடனடியாக நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நாட்டின் விடுதலைப் போரிலோ, தேச நிர்மாணத்திலோ பெரிய பங்கு எதுவும் வகிக்காத சட்ட வல்லுநர்களும், மூத்த வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரம், ஆளுமை இவை குறித்த விவாதங்களை நடத்தி, தேசத்தின் இயக்கத்தில் தங்களது சட்டம்/ நீதித்துறையின் பங்கை உறுதிப்படுத்த முற்பட்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு முற்றிலும் முரணாக. நீதிபதிகள் நியமனம் என்பதைத் தாங்களே நடத்திக் கொள்வதற்கான அதிகாரத்தையும் மெல்ல மெல்ல கைப்பற்றிக் கொண்டு, செயல்படுத்தத் துவங்கினர். இதன் காரணமாக நீதிபதிகள் நியமனம் என்பது தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகிய முன்னுரிமைகளின் அடிப்படையில் நடைபெற்றதே தவிர, மக்கள் நலன், வறுமை ஒழிப்பு முதலான அரசின் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சட்டவியல் முறைமைகளைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படவில்லை.

இந்திய நீதித்துறையில் வாராது வந்த மாமணி போல அவ்வப்போது சில ஆளுமைகள் பிரகாசித்து, அழுத்தமான தெறிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள். நீதியரசர்கள் வி.ஆர் கிருஷ்ணய்யர், ஓ. சின்னப்ப ரெட்டி, கே. ராமசுவாமி போன்றோரை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். நீதிபதிகளின் மனவோட்டம் குறித்து ஒருமுறை வி.ஆர். கிருஷ்ணய்யர், “புதுதில்லியில் ஒரு உச்சநீதிமன்றம் இருக்க, அதற்குள் 34 உச்சநீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன” என்று கூறியுள்ளார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அரசியல் தலைமையும், அதன் விருப்பத்திற்கிணங்க இயங்கிவரும் நிர்வாகமும் நாட்டைச் சரிவர வழிநடத்துவதற்குரிய தெளிவான கொள்கைகளை வகுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன. இத்தகைய தெளிவற்ற பின்புலத்தில் வெளிவரும் நீதிமன்றத் தீர்ப்புகளும் பெரும்பாலும் போதிய அழுத்தமின்றி, வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இதன் எதிரொலியாக அரசின் அங்கமாக உள்ள நீதிமன்றம், நிர்வாகம், சட்டமன்ற/நாடாளுமன்றம் ஆகிய மூன்று அமைப்புகளுக்குள்ளும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் இருப்பது போலத் தோற்றம் தருகின்றன. ஆனால் உண்மையில், நீதிபதிகள் நியமனம் செய்திடும் உரிமையைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டது. தேசிய நீதித்துறை நியமனக் குழு (National Judicial Appointments Commission – NJAC) அமைப்பதற்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்தது போன்ற அம்சங்கள் நீங்கலாக, நிர்வாக அமைப்பின் முடிவுகளில் பெரும்பாலும் விலகல் எதுவுமில்லாமல் அவை அப்படியே தொடரும் வகையிலேயே அண்மைக் காலத்திய உச்சநீதிமன்ற முடிவுகள் அமைந்திருக்கின்றன.

கேள்வி: உச்சநீதிமன்றம் சமீபத்திய சில தீர்ப்புகளில், சிக்கல் நிறைந்த பிரச்சனைகளை மேலும் திசைதிருப்பிக் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதே. எடுத்துக்காட்டாக, குஜராத் கலவரம் மற்றும் ஜாகியா இஷான் ஜாப்ரி வழக்கு, சத்தீஸ்கரின் ஹிமன்ஷ்குமார் வழக்கு ஆகியவற்றில், மனுதாரர்கள் மீது விமர்சனக் கணைகளைக் கடுமையாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. சமூகச் செயல்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய வழிமுறைகளைத் தாங்கள் எவ்வாறு உற்று நோக்குகிறீர்கள் என்று கூற முடியுமா?

பதில்: அண்மைக் காலமாக நீதித்துறையில், புகார் கொடுப்பவர்களையே திருப்பியடிக்கும் புதிய ‘பழிவாங்குதல்’ போக்கு தலைகாட்டுகிறது. இது நீதித்துறையில் இதற்கு முன் கேள்வியுற்றிராத ஒன்று என்பது மட்டுமன்றி, சட்டப்பூர்வ அணுகுமுறைக்கு உகந்ததும் அல்ல. விளம்பரத்திற்காகத் தொடுக்கப்படுகிற ஒரு சில விளையாட்டுத்தனமான, பயனில்லாத வழக்குகளில்கூட, மனுதாரர்களை எச்சரிக்கும் விதமாக, ஓரளவு பெரும் தொகை அபராதம் மட்டுமே விதிக்கப்படுமேயன்றி, ஒருபோதும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றங்கள் கூறியதே கிடையாது.

குஜராத் படுகொலைகளைப் பொறுத்தமட்டிலும், அப்பிரச்சனை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பேசப்பட்டது. உலக அளவில் சமய சகிப்புத் தன்மை குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த அறிக்கையில்கூட, குஜராத் கலவரங்கள் இடம் பெற்றுள்ளன. இருபதாண்டுகளுக்கு முன்பு டீஸ்டா செதல்வாத் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி, பல சுதந்திரமான அமைப்புகள் கள ஆய்வும், விசாரணையம் நடத்தி, தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான உண்மையறியும் குழுவும் அதில் ஒன்று. இப்படிப்பட்ட பிரச்சனையை விளையாட்டுத்தனமான, சிறுபிள்ளைத்தனமான ஒன்று என்றோ, பொறுப்பற்ற செயல் என்றோ ஒருபோதும் முத்திரையிட முடியாது. ஆனால் திடீரென்று, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல், இரவோடிரவாக நீதிமன்ற உத்தரவுகள் பறப்பதும், குஜராத் காவல்துறை உடனடியாகக் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும், முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் பழிவாங்கல் என உறுதிபடக் கூறலாம். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களில் பொது மக்களின் பார்வையில் படாதவண்ணம் அனைத்தையும் இரகசியமாகவே வைத்திருந்துவிட்டு, திடீரென ஒருநாள் அரசியல் எதிரிகள் மற்றும் அவர்களது ஆலோசகர்கள் மீது சட்ட வளையத்தைப் பாய்ச்சுவது, நீதித்துறையின் புதிய முறைமையாக மாறி வருகிறது.

கேள்வி: விஜய் மதன்லால் சௌத்ரி வழக்கில் உச்சநீதிமன்றம், திருத்தப்பட்ட பணமாற்று மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act – PMLA) ஒன்றிய அரசின் அமலாக்கத்துறைக்கு, கைது செய்தல், சொத்துக்கள் பறிமுதல், சோதனையிடுதல், கைப்பற்றுதல், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வது என அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளது. இது, தனி நபர்களின் சிவில் உரிமைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுக்கே இட்டுச்செல்லும் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியுள்ள மதிப்பு வாய்ந்த பாதுகாப்புக் கவசங்கள் தாக்குதலுக்குள்ளாவதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) நடைமுறைக்கு வந்த பிறகு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே, குற்றம் சாட்டப்படும் நபர்களுக்குச் சட்ட ரீதியாகவே சில பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்று கருதி, அதன் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைக் குறியீடு (Criminal Procedure Code) 1898ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. 1872ஆம் வருடத்திய இந்திய சாட்சிய சட்டமும் (Indian Evidence Act) காவல்துறையினர் குற்றம் சாட்டப்படுபவர்களிடமிருந்து பெறும் அறிக்கைகளை சட்டப்பூர்வமான சாட்சியமாக அப்படியே எடுத்துக் கொள்வதைத் தடை செய்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைக்கும் தனி நபர் உரிமைக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘உபா சட்டம்’ (Unlawful Activities Prevention Act UAPA) நடைமுறைக்கு வந்துள்ளது. பல முனைகளிலிருந்தும் கண்டனத்திற்குள்ளான, அதே வேளையில் அண்மையில் உச்சநீதிமன்றத்தால் நற்சான்றிதழ் வழங்கப்பட்ட 2002ஆம் வருடத்திய பணமாற்று மோசடி தடுப்புச் சட்டமும் நடைமுறையில் உள்ளது. அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை, குற்றவியல் நடைமுறைக் குறியீடுகளின் விதிமுறைகளிலிருந்து பிரித்து வைத்துள்ள உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறையின் தகவல் தொகுப்பு என்பது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அல்ல என்றும், ஆகவே அது வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை ஊழியர்களைக் காவல் துறையினரோடு ஒப்பிட இயலாது என்று கூறியதன் மூலம் உச்சநீதிமன்றம், பல்வேறு சட்டங்களின் வாயிலாகத் தனி நபர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு முறைமைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டது.

மேற்சொன்ன உச்சநீதிமன்ற விளக்கங்களைத் தொடர்ந்து, பெரிய எதிர்க்கட்சியின் தலைவருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் கிட்டத்தட்ட தினமும் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்படுகிறது. இதன் நோக்கம் உண்மையை வரவழைப்பதா? அல்லது அந்தக் குறிப்பிட்ட தலைவரை அரசியல் ரீதியாக அவமானத்திற்குள்ளாக்குவதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இவர்களது நவீன சட்டவியல் கூறுகளை நியாயப்படுத்துவதற்காக, பணமாற்று மோசடியானது, தீவிரவாதத்தை விடவும் மிகவும் கொடிய குற்றமாகக் கட்டமைக்கப்படுகிறது.

தொடரும்…

-நன்றி! – ஃபிரண்ட்லைன் – (தீக்கதிர் – தமிழில்: கடம்பவன மன்னன் – 29.09.2022)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.