சென்ற இதழ் தொடர்ச்சி…
எத்தகைய குற்றம் இழைக்கப்பட்டிருப்பினும், விசாரணைக்கு முன்பும் விசாரணைக்குப் பின்பும் மனித உரிமைகள் தொடர்பான சட்டவியல் நடைமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, நாடாளுமன்றம்கூட அனுமதிக்காத அம்சங்களை உள்ளடக்கி, அமலாக்கத்துறைக்கு அதிகாரங்களை அள்ளி வழங்கிடும் உச்சநீதிமன்றத்தின் முடிவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவில் மேல் நீதிமன்றங்கள் மனித உரிமைகளுக்கும், அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாவலனாக இருக்கும் என்கிற கருத்து மெல்ல மெல்ல பழங்கதையாக மாறி வருகிறது.
கேள்வி: இந்திய சட்டவியலில் முன்னுக்குப் பின் முரணான, மாறுபட்ட கூறுகள் இருந்து வருவதாகப் பரவலாக உணரப்படுகிறது. கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் என ஒவ்வொரு நிலையிலும் ஒரே பிரச்சனைக்கு மாறுபட்ட விளக்கங்களும், வியாக்கியானங்களும் வழங்கப்படும் சூழல் உள்ளது. கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மேல் நீதிமன்றங்களால் அப்படியே மாற்றப்படுவது அடிக்கடி நடந்தேறுகிறது. 2021இல் தாங்கள் எழுதிய நூல் ஒன்றிலும் இதைப் பற்றிப் பேசியுள்ளீர்கள். சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கிறசாதிய, மத, பாலியல் ரீதியான மேலாதிக்க மனோநிலையும், அணுகுமுறையும் பல தருணங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளிலும் வெளிப்படுகின்றன. பூதாகரமாகக் காட்சி தருகிற பொருளாதார அசமத்துவம் நீதிமன்றங்களால் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட புறச்சூழலில், நீதித்துறையின் செயல்பாடு வீணானதாக, பயனற்ற ஒன்றாக மாறி வருகிறதா?
பதில்: மேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் தேர்வு என்பது வெளிப்படையான பொது ஆய்வுக்கோ, கண்காணிப்பிற்கோ உட்படுத்தப்படுவது இல்லை. இதன் காரணமாக உயர்நிலை நீதித்துறையின் செயல் திறனிலும், மதிப்பீடுகளிலும் பெரும் சரிவு காணப்படுகிறது. தங்களுடைய ஒட்டுமொத்த பதவிக் காலத்திலும் ஒரு வழக்கில்கூட முடிவெடுத்து தீர்ப்பு வழங்காத நீதிபதிகளை நாம் பார்க்க முடியும். இப்போதுள்ள தேர்வு முறைமையில், மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தி அனுபவம் பெறாதவர்கள்கூட, நீதிபதிகளாக வந்து அமர்ந்துவிட முடியும். நீதிபதிகள் நியமனத்திற்கான ‘கொலீஜியம்’ முறை நீதித்துறையின் சுதந்திரத்தை நிலை நாட்டுவதாக என்னதான் வாதங்கள் முன் வைக்கப்பட்டாலும், கண்ணெதிரே காட்சி தரும் குறைபாடுகளை அதனால் களைய முடிவதில்லை.
தாங்கள் உயர்நிலை நீதித்துறையின் ஓர் அங்கம் என்பதைப் பெரும்பாலான நீதிபதிகள் உணர்ந்து கொள்ளாத போக்கினால், அரசியலமைப்புச் சட்ட நெறி முறைகளின் பார்வையோடு முடிவுகளை மேற்கொள்வது என்பது அரிதாகி, படிப்படியாக மறைந்துபோய் மங்கும் நிலையில் உள்ளது. நீதித்துறையில் பெரும் பொறுப்பினை ஏற்பவர்கள், தாங்கள் பதவியேற்கும் போது, அரசியலமைப்புச் சட்டத்தினை அடிபிறழாது பின்பற்றுவதாக உறுதியேற்பதோடு நின்றுவிடக் கூடாது. தங்களைத் தொடர்ந்து நீதிபதி பொறுப்பை அடைய விரும்புவோர், அந்தப் பதவியை அலங்கரிப்பதற்குரிய உண்மையான தகுதியையும், அரசியலமைப்பு சட்டம் பற்றிய சரியான பார்வையையும் கொண்டு செயல்படக் கூடியவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கெடுவாய்ப்பாக, இன்றைய தினம் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த பலர், அவ்வமைப்புகளின் அரசியல் அடித்தளத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் மிக அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளார்கள். சரியாகச் சொல்வதென்றால், தேசிய நீதித்துறை நியமனக் குழு (NJAC) அமைக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அதற்கு மீண்டும் உயிரூட்டி, சட்டப்பூர்வமாகவே அத்தகு குழுவை அமைப்பதற்கு பிஜேபி அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், தற்போதைய கொலீஜியம் முறையில் இன்றைய ஆட்சியாளர்கள் முழு மன நிறைவு கொண்டிருப்பதும், தங்களைச் சேர்ந்தவர்களை எவ்வித இடையூறுமின்றி எளிதாக நீதித்துறையில் ஊடுருவச் செய்ய கொலீஜியம் முறை மிகவும் வசதியாக இருப்பதுமே அதற்கான காரணங்கள். இது குறித்த பொது வெளி விமர்சனங்களையும் பா.ச.க. ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வருகின்றனர்.
உயர்நிலை நீதித்துறையில், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி சரிவர பின்பற்றப்படுவதில்லை என்பதும் கசப்பான உண்மையாக இருந்து வருகிறது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த போது, தனது தீர்ப்புரையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்திருந்த நீதிபதி ஜெ.பி. பர்திவாலா, பெரும் நிர்ப்பந்தங்களுக்குப் பிறகே, அந்தப் பகுதியைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதுவும் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்ட பிறகு, இத்தகைய ஆதிக்கச் சிந்தனை மனிதர், அவர் இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டை விவாதத்திற்கு உள்ளாக்கியதற்குப் பரிசாக, தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே நியமனம் பெற்றுள்ளார். அவரைவிடக் கூடுதலான சீனியாரிட்டி உள்ள மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள அவலமும் நிகழ்ந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் பர்திவாலா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்பதுதான். இவ்வாறாக நீதிபதிகள் நியமனத்தில் நெறிமுறைகள் மீறப்படுவது, தங்களைச் சேர்ந்தவர்களை நீதித்துறை முழுவதும் நிரப்புவது, இவற்றின் மூலம் ஆட்சியாளர்கள் தங்களின் விருப்பத்திற்கிணங்க நாட்டை நகர்த்திச் செல்வது என்கிற கவலையளிக்கும் சூழல் இருந்து வருகிறது.
கேள்வி: சமீபத்தில், உச்சநீதிமன்ற விசாரணையின் போது ஒரு சில மூத்த வழக்கறிஞர்கள், உடனடிக் கவனம் பெற வேண்டிய சில வழக்குகளைக் குறிப்பிட்டு அவற்றின் விசாரணையைக் கோரிய போது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, கடும் அதிருப்தி வெளியிட்டு, இவ்வாறு கோருவதை அனுமதிக்க முடியாது என்று ஆவேசமாகக் கூறினார். பொதுவாக நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களின் – குறிப்பாக அரசு நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர்களின் – நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நடந்து கொள்கிறார்களா? மேல்முறையீட்டிற்கென, ஓரளவே வருமானம் உள்ள சாதாரண எளிய மக்கள் எளிதில் எட்ட முடியாத நிலையில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மாறி வருகிறதா? இந்தப் பின்னணியில் இவற்றைச் சரி செய்வதற்குரிய வழிவகைகள் என்ன?
பதில்: மூத்த வழக்கறிஞர்கள் அவசர வழக்குகள் என்ற பெயரில் அழுத்தம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்று ஒரு சில தலைமை நீதிபதிகள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஆனால் அடுத்து வருபவர்கள் அதைத் தொடர்வதில்லை. அதுபோல மூத்த வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்தும் இந்த முயற்சியும் பெரிதாகப் பலனளிக்கப் போவதில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில மூத்த வழக்கறிஞர்கள் மேலாதிக்கம் செலுத்துவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. தங்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லாமல் அவசர வழக்கு விசாரணைக் கோரிக்கையில் மூத்த வழக்கறிஞர்கள் ஈடுபடுவதுமில்லை. அவர்களிடமிருந்து வரும் அழுத்தத்தால் ஒரு சில வழக்குகள் விசாரணையை முன் தேதியிட்டு விரைவாக நடத்திக் கொள்வதால் அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிட்டப் போவதுமில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஆழமான பரிசீலனையோடு விசாரித்து முடிவெடுக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வந்தபாடில்லை. இந்திய தலைமை நீதிபதி, வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவது பற்றி என்னதான் மார்தட்டிக் கொண்ட போதிலும், உண்மை நிலவரம் அதற்கு நேர் மாறானதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிப்பு மற்றும் யூனியன் பிரதேசமாகத் தகுதி இறக்கம், சட்டப்பூர்வமற்ற முறையில் காஷ்மீரிகள் சிறையிலடைப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை தொடர்பான வழக்குகள் ஆண்டுக் கணக்காக நிலுவையில் உள்ளன. பீமா கொரேகான் வழக்கில் சர்ச்சைக்குரிய உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட, தங்களது அறிவாற்றல் வழியே அறியப்பட்ட 13 சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு, பல மாதங்களாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலங்கடத்துதல் ஆகியவை குறித்தான வழக்குகளும் இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தின் முடிவுக்காகத் தவமிருந்து கொண்டிருக்கின்றன. முக்கியமான பல வழக்குகள் எப்போது விசாரணை என்பதே தெரியாமல் நெடுங்காலமாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்க, சாதி, மதம் மற்றும் பாலியல் ரீதியான பாகுபாடுகளும், பாரபட்சங்களும்கூட உயர்நிலை நீதித்துறையைப் பீடித்துள்ள நோயாக உருவாகியுள்ளன. இவற்றுக்கு ஊடாகத்தான் இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 72,000 வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் நெடிய கோப்புகளில் நிலுவையில் உள்ளன. இவற்றைச் சரி செய்வதற்கென ஒற்றை வரியில் தீர்வு சொல்லிவிட முடியாது. உடனடித் தேவை என்னவென்றால், ‘நீதிபதிகள் நியமனம்’ என்பது குறித்து புதிய கண்ணோட்டத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமான முறையில் தங்களைத் தகவமைத்துக்கொள்ள உயர்நிலை நீதிமன்றங்கள் முன்வரவேண்டும்.
கேள்வி: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சுற்று முறையில் பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் தெரிவித்து நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியது, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. உயர்நிலை நீதித்துறையில் நிறைய உள் விவகாரங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாகவே இது பார்க்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, நீதிபதி பி.எச். லோயாவின் அகால (மர்ம) மரணம் தொடர்பான பொதுநல வழக்கு விசாரணை, ஒரு ஜீனியர் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதையொட்டி, நீதிபதிகளுக்குப் பணி ஒதுக்கீடு செய்வதில் பெஞ்ச்-பிக்ஸிங் என்று சொல்லப்படுகிற முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய ஐயங்களைக் களைந்திடும் வகையில் முக்கியமான அம்சங்களில், மூத்த நீதிபதிகள் கூட்டாக முடிவெடுத்தல் (Collective Decision Making) என்கிற முறைமையை அமல்படுத்துவது சரியாக இருக்குமா?
பதில்: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்குப் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இந்தப் பணி ஒதுக்கீடு அதிகாரத்தை, அவர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள ‘மந்திரக் கோல்’ என்று நான் வர்ணித்துள்ளேன். இது எந்தவொரு வழக்கின் முடிவையும் தீர்மானிக்கும் சக்தி படைத்தது. நீதிமன்றங்களின் இயல்பான முடிவெடுக்கும் தன்மையை, இம்மாதிரியான பணி ஒதுக்கீடு பட்டியலிடல் அதிகாரங்கள் எந்த அளவுக்குச் சீர்குலைக்கும் என்பதை இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட என்னுடைய சுயசரிதை நூலில், இதற்கென ஒரு முழு அத்தியாயமே ஒதுக்கி, விரிவாக விளக்கியுள்ளேன். 2018 ஜனவரியில் நான்கு நீதிபதிகள் பகிரங்கமாக நடத்திய பத்திரிகையாளர் கூட்டம், இருள் மண்டிக் கிடக்கும் இந்தப் பிரச்சனையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்த முக்கியமான நிகழ்வு. ஆனால் அந்த நால்வரில் ஒருவரான ரஞ்சன் கோகோய், பின்னர்தான் தலைமை நீதிபதியாக வந்த பின்பும் அதே பாதையில் சென்றதும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
தற்போது, அடுத்தடுத்து பல நீதிமன்ற முடிவுகள் ஆளும் தரப்புக்குச் சாதகமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளைப் புறந்தள்ளியும் வெளியாவதைக் கண்ணுற்று பல எதிர்ப்புக் குரல்கள் ஒருசேர எழுகின்றன. இந்தப் பின்னணியில், முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனை குறித்த ஒரு மீள் பார்வை அவசியம் தேவைப்படுகிறது. இரண்டு மிக மூத்த நீதிபதிகளின் முன் முயற்சியோடு, கொலீஜியம் முறையில் நிறைய முன்னேற்றங்கள் எட்டப்பட்டது ஒரு சாதகமான அம்சம். அதுபோல, வழக்குகள் ஒதுக்கீடு விஷயத்திலும், மந்திரக் கோல் கொண்ட ஒரு தனி நபரிடம் அதிகாரக் குவிப்பு என்பதுஅகற்றப்பட்டு, அதிகாரப் பகிர்வு என்பது செயல்படுத்தப்பட்டால் நீதித்துறையின் சேவையையும் உரிய முறையில் கொண்டு சேர்க்க இயலும்.
கேள்வி: நம் சமூக அமைப்பில், அடிப்படை நீதியை நிலைநாட்டும் வழிமுறைகளில் பல தரப்பட்ட மீறல்களும், முரண்பாடுகளும் அரங்கேற அனுமதிக்கப்படுகின்றன. ஓர் இளைஞனிடம் பேசும் இளம்பெண்ணை, ‘ராக்கி கட்டிவிடு’ என்று மிரட்டுவது, ‘வன்புணர்வு செய்தவனையே திருமணம் செய்துகொள்’ என்று வற்புறுத்துவது, ‘புல்டோஸர்’ நீதி வழங்கலை வரவேற்று ஆர்ப்பரிப்பது ஆகியவற்றைத் தாங்கள் எவ்வாறு உற்று நோக்குகிறர்கள்? உள்ளூர்த் தலைவருக்கு வானளாவிய அதிகாரத்தைத் தரும் ‘காப் பஞ்சாயத்து’ போன்றவை ஹரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் செல்வாக்குடன் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கருத்திற்கொண்டு, இந்திய சமூகம் நவீன மேற்கத்திய சட்டவியல் நடைமுறைகளைக் காட்டிலும், இங்குள்ள உள்ளூர் நீதி பரிபாலன முறைகளை வசதியாகக் கருதுகிறதா?
பதில் : இந்தியாவில் வளர்ச்சியடைந்த நீதி வழங்கல் முறையும், பல அடுக்கு நீதிமன்றங்களும் வெகு காலமாக இயங்கி வந்துள்ள போதிலும், நமது நாட்டின் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு இன்னமும் வலிமையோடு தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதனால்தான் காப் பஞ்சாயத்து போன்றவை புற்றீசல் போல நாடெங்கிலும் கிராமங்களில் பெருகிக் கிடக்கின்றன. நீதிமன்றங்களிடமிருந்து ஒரு முடிவைப் பெறுவதில் ஏற்படுகிற மிக நீண்ட கால தாமதமும் மேற்சொன்ன போக்கிற்கு முக்கியக் காரணமாக உள்ளது. பல நேரங்களில் நீதிமன்றங்களும், சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பிற்போக்குக் கருத்துக்களை அங்கீகரிக்கிற தன்மையில் முடிவுகளை அறிவிக்கின்றன. இதுவும் மக்களைக் கட்டப் பஞ்சாயத்தை ஏற்கும் மனநிலைக்குத் தள்ளுகின்றன.
நீதி வழங்குதலை விரைவுபடுத்தும் வகையில், நீதித்துறையின் அதிகாரங்களைப் பரவலாக்கும் தன்மையிலும் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் திறக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இன்றும் செல்வாக்குடன் விளங்கும் நிலப்பிரபுத்துவ அணுகுமுறை, சாதிய மேலாதிக்கம் முதலான காரணங்களாலும், போதிய அளவு தகுதியான நீதிபதிகளை நியமனம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிரமங்களாலும் மேற்கூறிய பஞ்சாயத்து நீதிமன்றங்கள் துவக்கப்படுவதற்கு ஆதரவு கிட்டாமல் எதிர்க்கப்படக் கூடிய சூழ்நிலை உள்ளது.
சில நேரங்களில் சட்டவியல் படிப்பும், நீதித்துறையில் முழுமையான பயிற்சியும் கொண்டவர்களே, சாதாரண, எளிய மக்கள் நடத்துகிற உள்ளூர் நீதி பரிபாலன முறையை சிலாகித்துப் பேசுவதைக் கேட்க முடிகிறது. கிராமப்புற நீதிமன்றங்கள் சட்டம் குறித்து உரையாற்றிய வழக்கறிஞர் பி.சிவசாமி ஐயர், ‘கிராமங்களில் உயிர்ப்புடன் இயங்கும் பஞ்சாயத்து நீதிமன்றங்களின் உண்மையை வெளிக் கொணரும் திறனும், முடிவு செய்யும் பாங்கும் தனி நீதிபதிகளின் செயல்பாட்டைக் காட்டிலும் கூடுதலாக, சிறப்பானதாக உள்ளன’ என்று கூறி பாராட்டுத் தெரிவித்தார்.
நம் நாட்டில் சட்டவியல் வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு நீதி வழங்கல் முறையை வகுத்துக் கொண்டு, அதை அரை-நிலப்பிரபுத்துவ அணுகுமுறையுடன் இயங்கி வருகிற ஒரு சமூகத்தில் செயல்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியச் சூழலுக்கு முழுவதும் பொருந்தக்கூடிய ஒரு சட்டவியல் நடை முறையையும் படிப்படியாக உருவாக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் திசை வழியில் பயணிப்பதற்கு மாறாக, நாம் முரண்பாடுகளைக் களைவதற்கான மாற்று வழிமுறைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். தனியார் நடுவர் மன்றங்கள் (arbitrations),லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சுருங்கக் கூறின், நமது நீதிமன்றங்களில் கிட்டும் ’தாமதமான நீதியைவிட, கங்காரு நீதிமன்றங்கள், காப் பஞ்சாயத்துகள், மூலம் ‘விரைவான முடிவு’ கிடைக்கட்டும் என்பது மக்களின் மனவோட்டமாக உள்ளது. இத்தகைய சூழலிலேயே, நம் தேசியச் சின்னத்தில் ‘சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும்’ போன்ற வாசகங்கள் இடம் பெறுவது ஏன்? என்கிற கேள்வி முள்ளாய் நெஞ்சைக் குத்துகிறது.
-நன்றி! – ஃபிரண்ட்லைன் – (தீக்கதிர் – தமிழில்: கடம்பவன மன்னன் – 29.09.2022) |