“6.5கோடி கன்னட மக்களின் தன்மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஊறு ஏற்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை காங்கிரசுக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்திப் பேசியது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகும்.
இந்தியாவின் ஒரு மாநிலமான கர்நாடகம் தனி நாடாகப் பிரிந்து போவதற்கான தூண்டுகோலாக இந்த பேச்சு அமைந்திருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திடம் பா.ச.க. புகார் செய்துள்ளது. அதற்கிணங்க தேர்தல் ஆணையமும் சோனியா காந்தியிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி இவ்வாறு பேசியதை தேசத் துரோகக் குற்றமாக பா.ச.க.வினர் விமர்சிக்கிறார்கள். இந்திய நாட்டில் கர்நாடகம் ஒரு அங்கமே தவிர, அது தனி நாடல்ல. இறையாண்மை என்பது இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமே உண்டு. அதில் அங்கம் வகிக்கும் மொழிவழித் தேசிய இனங்களுக்கு இல்லை என்ற புதிய விளக்கத்தை இந்துத்துவா வாதிகள் அளிக்கிறார்கள். இறையாண்மைக் குறித்தோ, இந்திய ஒன்றியம் எவ்வாறு உருவானது என்பது குறித்தோ எதுவும் அறியாதவர்கள்தான் இவ்வாறு கூப்பாடு போடுகிறார்கள்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டை இறையாண்மை உள்ள குடியரசு என்று அழைக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது அறிஞர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவினர் இறையாண்மை என்பதற்குச் சரியான விளக்கத்தை அளித்தார்கள். மக்களே இறையாண்மை உள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான் குடியரசு என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். கொடுங்கோலாட்சியிலிருந்து மக்கள் நாயக ஆட்சிக்கு மாற்றம் வரும்போது மக்களின் இறையாண்மையையே முதன்மைப்படுத்தப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் பொருளின் அடிப்படையில்தான் இறையாண்மை என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தி இறையாண்மை உள்ள குடியரசு என்று இந்தியாவைக் குறிப்பிட்டார்கள்.
ஆனால், இது மறக்கடிக்கப்பட்டது. இறையாண்மை உள்ள மொழிவழித் தேசிய இனங்கள் அடங்கிய நாடு என்பது அழிக்கப்பட்டு இறையாண்மை உள்ள நிலப்பகுதியும், அதிகாரமும் கொண்ட நாடு என இன்று பொருள் கொள்ளப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் இறையாண்மையை பறித்து அடக்கி ஒடுக்கி ஆண்டனர். 1947ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் 15ஆம் நாள் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது அந்த இறையாண்மை அந்தந்த தேசிய இனங்களுக்கே உரிமையானதாகும். ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டுப் பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மை அவைகளின் ஒப்புதலின்றி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இந்தியக் கூட்டாட்சி அமைக்கப்படும்போது அதில் அங்கம் வகித்த பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் தாமாகவே விரும்பி இணைந்த கூட்டாட்சியாக உருவாக்கப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இனங்கள் கட்டுண்ட நிலையிலேயே இந்தியக் கூட்டாட்சிக்குள் கொண்டுவரப்பட்டன.
இதன் விளைவாக மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படும் போக்கு தொடங்கி இன்றுவரை நீடிக்கிறது. ஆகவேதான் கன்னட தேசிய இன மக்களுக்கு இறையாண்மை உண்டு என சோனியா காந்தி பேசியதை ஏக இந்தியவாதிகளால் ஏற்க முடியவில்லை.
மாநிலங்களின் உரிமைகளையும், அதிகாரங்களையும் பறித்து தில்லியில் குவித்துக்கொண்ட போக்கு காங்கிரசு ஆட்சியில் தொடங்கி இன்றுவரை நீடிக்கிறது.
மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்த காங்கிரசுக் கட்சி நாடு விடுதலை பெற்ற பிறகு அதற்கு மாறாகச் செயல்படத் தொடங்கியது. தலைமையமைச்சராக இருந்த நேரு உள்படக் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு எதிர்க் கருத்துக் கொண்டிருந்தனர். ஆனால், பல்வேறு தேசிய இன மக்களின் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிய பிறகு மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு இந்திய அரசு மறுக்கிறது. எந்த கட்சி அரசாக இருந்தாலும் அவைகள் இதில் பிடிவாதமாக இருக்கின்றன.
“இந்தப் பின்னணியில் கன்னட மக்களுக்கு இறையாண்மை உண்டு” என சோனியா காந்தி பேசியதை நாம் பார்க்கவேண்டும். மொழிவழித் தேசிய இன மக்களுக்கே இறையாண்மை உண்டு. இந்திய நாட்டிற்கு அது கிடையாது என்ற பேருண்மையைக் காங்கிரசுக் கட்சி புரிந்து கொண்டிருக்கிறது என்பதை சோனியா காந்தி தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கருதலாமா? அல்லது தேர்தல் தந்திரத்திற்காக இவ்வாறு பேசினாரா?என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
“கர்நாடகத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதற்குக் கன்னட மக்களுக்கு இறையாண்மை உண்டு. அதற்கு எதிராக யார் செயல்பட்டாலும் காங்கிரசுக் கட்சி அனுமதிக்காது” என்ற வாக்குறுதியை சோனியா காந்தி வழங்கியது முதன்மையான காரணமாகும். மக்களுக்கே இறையாண்மை என்பதை உணர்ந்து காங்கிரசுக் கட்சி மட்டுமல்ல, பா.ச.க. உட்பட அகில இந்தியக் கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும்.
120தடவைகளுக்குமேல் அரசியல் சட்டத்தைத் திருத்தி அதை அலங்கோலமாக்கியதில் அகில இந்தியக் கட்சிகள் அனைத்திற்கும் பங்கு உண்டு. எனவே, மொழிவழித் தேசிய இன மக்களுக்கு இறையாண்மையும், தன்னுரிமையும் உண்டு என்பதை அரசியல் சட்ட ரீதியாக நிலை நிறுத்த இக்கட்சிகள் முன்வரவேண்டும். |