இன்று “கோபி சிந்தனைச் சுற்றம்” நடத்துகிற ஆய்வரங்கத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்கு நான் இரண்டு வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதலாவதாக “சிந்தனைச் சுற்றம்” அரசியற் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யும் அரங்கமாக அமைந்து பணியாற்றுவதைக் கண்டு மகிழ்கிறேன். அடுத்து கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பினைப் போல நான் சிந்தனைச் செம்மல், கு.ச. ஆனந்தனுடைய மலர்க மாநில சுயாட்சி நூலைப் படித்ததன் மூலமும் மடல்களின் மூலமும் அவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளேன். அவரால் இயக்கப்பெறும் இச்சிந்தனைச் சுற்றத்தில், ஆழ்ந்த ஒரு பொருளைப் பற்றி பேசுவதற்கு அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
“மலர்க மாநில சுயாட்சி” என்ற கு.ச. ஆனந்தன் எழுதிய பெரிய நூல், மாநிலத் தன்னாட்சி பற்றிய அனைத்துக் கருத்துகளையும் எடுத்து வழங்குகிறது; சிறந்த ஆய்வு நூல்; சிந்தனைத் தொகுப்பு நூல்; இன்றைய இந்திய சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய சரியான வழிவகையைத் தருகிற பொத்தகம்.
இந்திய, இலங்கைத் தேசிய இனங்கள்
இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட மொழித் தேசிய இனங்கள் (Linguistic Nationalities) உள்ளன. அவை குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் நெடுங்காலமாகத் தத்தம் தனித்தன்மை வாய்ந்த மொழி, இன, வரலாறு, பண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றன. அவைகள் இந்திய அரசமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மொழிவழி மாநிலங்களும் – அரசமைப்பும்
“மொழி வழி மாநிலங்கள்” வேண்டுமென்ற கோரிக்கைகள் இந்தியாவில் விடுதலை இயக்க காலத்திலேயே வலுப்பெற்று வளர்ந்து வந்துள்ளன. இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்ட வல்லபாய்பட்டேல் இந்தியாவிலிருந்த ஏறத்தாழ ஐநூற்று முப்பது சுதேச சமத்தானங்களையும், பிரித்தானிய ஆட்சிக்குக் கீழிருந்து விடுதலைப்பெற்ற மாகாணப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து, முழுமையான இந்தியாவை உருவாக்கிய போது, பல புதிய தற்காலிக மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் சில மாகாணங்களில் பல மொழி பேசும் மக்களும் இருந்தனர். ஆனால் அவ்வகை மாகாணங்களே இறுதி நிலையாக அமையவில்லை. மீண்டும் மொழி வழி மாநிலங்களாகப் பல கட்டங்களில் பிரித்துத் தரப்பட்டன. சுதந்திரம் கிடைத்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளிலேயே மொழி வழி மாநிலங்கள் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த அரசியல் சூழ்நிலைகளில் “வலிமையான நடுவண் அரசு வேண்டும்” என்ற கருத்து மேலோங்கி இருந்தது.
அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில், இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே வகுக்கப்பட்ட அரசமைப்பும் மொழி வழி மாநிலங்களுக்கு ஏற்றதான – மொழி வழித் தேசிய இனங்களின் உரிமைகளை வழங்கத்தக்கதான – அரசமைப்பாக உருவாக்கப்படவில்லை. தற்போதைய “இந்திய அரசமைப்பு” இன்றைய நடைமுறையிலுள்ள மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு இயைபு கொண்டதாக அமையவில்லை.
மாற்றுத் தீர்வு – மறுக்கப்பட்டது
“மொழி வழி மாநில அமைப்பு காலப்போக்குக்கு ஒவ்வாதது” என்று பல அனைத்திந்தியத் தலைவர்கள் கருதினார்கள். ஆனால் இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த இயற்கையான மொழித் தேசிய உணர்வினடிப்படையில் தோன்றிய மொழி வழி மாநிலக் கோரிக்கைகள், அனைத்திந்தியத் தலைவர்களின் கருத்துகளை முறியடித்து மேற்சென்றன. எனவே “மொழி வழி மாநிலங்களுக்கும்”, “வலிமையான நடுவண் அரசுக்கும்” இடைப்பட்ட ஒரு தீர்வை நேரு அவர்கள் கூறினார்கள். அத்தீர்வானது, இந்தியாவை வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்தியம் ஆகிய ஐந்து பெரும் பகுதிகளாக (Zones) பிரிப்பது. தற்போதைய தமிழகம், கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களை இணைத்து “தட்சிணப் பிரதேசம்” ஆக்குவது. இப்படியே மற்ற மொழி மாநிலங்களுக்கும் அந்தந்த பெருநிலப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன. இவ்வகைப் பெரு நிலப் பகுதி அமைப்பு, மொழிவழித் தேசிய உரிமைகளையும் உணர்வுகளையும் மந்தப்படுத்தி மாய்த்துவிடும் என்று அவர் நம்பினார். ஆனால் இது ஒரு நிலவியல் அடிப்படையான தீர்வே தவிர முழுமையான – நிலையான தீர்வன்று.
சான்றாகக் குறிப்பிட வேண்டுமென்றால் ஆந்திரத்தில் பாயும் ஆறுகள் மகாராட்டிரத்தில் உருவாகின்றன. ஆகவே ஆந்திரத்தையும், மராட்டியத்தையும் இணைக்கவேண்டும் எனச் சொல்லப்பட்டது. பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம், வடகிழக்குப் பகுதிகள் ஆகியவற்றை இணைத்து “பூர்வப்பிரதேசம்” அமைக்கத் திட்டமிடப்பட்டது. “தட்சிணப்பிரதேச” அமைப்பிற்காக பெங்களூரிலே கூட்டம் நடந்தது. தமிழக முதல்வரான காமராசர், கர்நாடக, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்றனர். உருவாகப் போகும் தட்சிணப் பிரதேசத்திற்கு முதலமைச்சராக காமராசரை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், காமராசர் இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. போன்ற தமிழகத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மூதறிஞர் இராஜாஜி மட்டுமே இத்திட்டத்தை ஆதரித்தார். எனவே தட்சிணப் பிரதேச முயற்சி வெற்றி பெறவில்லை. இதன் விளைவாக நேரு வகுத்தத் திட்டம் கைவிடப்பட்டது.
நேருவைப் போன்ற மாபெரும் தலைவராலேயே மொழி வழி மாநில உணர்வைத் தடுத்து நிறுத்திவிட முடியவில்லையென்றால், இப்போதைய சிலரின் கூக்குரல்களால் இந்த இயற்கையான மொழிவழித் தேசிய உணர்வை அழிக்க முடியாது.
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராக இருந்த சவகர்லால் நேரு அவர்கள் மிகப்பெரிய சனநாயகவாதியாக இருந்த காரணத்தால் மொழி வழி மாநிலக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவர் மொழித் தேசிய மக்களுடைய எண்ணங்களுக்கு எதிராக, தன் கருத்தைத் திணிக்க விரும்பவில்லை. எனவே சில பல சிக்கல்களுடன் மொழி வழி மாநிலங்கள் இறுதியில் அமைக்கப்பட்டன. எனவே இலங்கை நிலை இங்கு வரவில்லை.
இலங்கைச் சிக்கல் ஏன்?
இலங்கையிலும் இதே சிக்கல்தான். இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களைப் போலவே இலங்கையிலும் இரண்டு தேசிய இனங்கள் உண்டு. ‘தமிழ்த் தேசிய இனம்’ ‘சிங்களத் தேசிய இனம்’ இந்த இரு இனங்களையும் சம தகுதியுடன் கூடிய கூட்டாட்சியில் (Federation) இணைக்காமல், ‘ஒற்றையாட்சி’ முறையில் (Unitary System) இயங்கக்கூடிய ஒரு நாடாக ஆக்கியிருக்கிறார்கள். முதலில் தமிழ் மாநிலம் தனியாக அமைக்கப்பட வேண்டுமென்று தமிழ் மக்கள் கோரினார்கள். “மாநிலத் தன்னாட்சி” கேட்டார்கள். ஆனால் இவ்விரண்டு கோரிக்கைகளும் சிங்களவர் அரசால் ஏற்கப்படவில்லை. ஒருகால் அவை ஏற்கப்பட்டிருந்தால் தற்போதைய தமிழீழ விடுதலைப் போர் மூண்டிருக்காது. இலங்கைத் துண்டாடப்படும் நிலையும் தோன்றியிருக்காது.
சீக்கியர் கோரிக்கை – மொழித் தேசியமே
பாகித்தானுடன், பஞ்சாப் சேர்ந்தால் அப்பாகித்தானத்திற்குள்ளேயே தனிவுரிமைகளுடன் இயங்குகிற “சீக்கிய நாடு” தருவதாக முசுலீம் லீக் தலைவர் ஜின்னா அவர்கள் வாக்குறுதி தந்து சீக்கியத் தலைவர்களை அழைத்தார். ஆனால், இந்தியாவோடு தான் இணைந்து வாழ்வோம் என்று அவர்கள் மறுத்துவிட்டனர். அதன் பயனாகப் பஞ்சாப் மக்கள், நாட்டுப் பிரிவினையின் போது பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். பாகித்தான் பகுதிகளில் பலர் நாடிழந்து, உயிரிழந்து, வன்முறைகளுக்கும், பல துயரங்களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாயினர். பிற்காலத்தில் “பஞ்சாப் சிக்கல்” மதவழிச் சிக்கலாக மாற்றப்பட்டுவிட்டது.
“மொழிவழி மாநிலங்களாக, இந்தியாவைப் பிரித்ததைப் போன்ற ஒரு மாபெரும் தவறு, வேறொன்றும் இல்லை. இச்சிக்கலை நான் பின்னால் அணுகுகிறேன்” என்று தலைமையமைச்சர் இராசீவ்காந்தி அண்மையில் கூறினார். இந்தக் கருத்து சரியானதல்ல. இந்தியா முழுவதையும் தற்போதைய இரணகளரி கொண்ட பஞ்சாபைப் போல மாற்றக்கூடிய முதல் சாற்றாணையே (பிரகடனம்) இது. இராஜாஜி, நேரு, பட்டேல் இன்னும் பல இந்தியத் தலைவர்கள் தொடக்கத்தில் “இந்திய ஒருமைப்பாட்டிற்கு மொழிவழி மாநிலங்கள் ஊறுவிளைவிக்கும். எனவே மொழி வழியாக இந்திய மாநிலங்கள் பகுக்கப்படக் கூடாது” என்று பிடிவாதமாக வற்புறுத்தி வந்தனர். ஆனால் காலத்தின் கட்டாயத்தால், பின்னால் அவர்கள் அக்கருத்தை மாற்றிக்கொண்டனர். இராசீவ்காந்தி அச்சிக்கலில் மீண்டும் ஈடுபட்டால் வரலாறு திரும்பிவிடும். (History will repeat itself)
உருசியா தரும் மொழித் தேசிய இன உரிமைகள்
உருசியா நாட்டில் நூற்று நாற்பத்து ஐந்து (145) மொழிகளுக்கும் மேல் உள்ளன. நூற்று (100)க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்கின்றன. அந்நாடு பதினைந்து (15) குடியரசுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐம்பத்து மூன்று (53) “மொழிவழிப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு குடியரசினுள்ளும் வேற்றுமொழிப் பேசும் மக்களுக்குரிய தனித்த “தன்னாட்சிக் குடியரசுகளும்” (Autonomous Republics) அதற்கும் அடுத்த நிலையில் “தன்னாட்சிப் பகுதிகளும்” (Autonomous Regions) அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியரசிலும் உள்ள மொழிச் சிறுபான்மையருக்கு தனித்த மொழி, இன, பண்பாட்டு உரிமைகள் தரப்பட்டுள்ளன.
நமது நாடாளுமன்ற அவையில் “மக்கள் அவை” “மாநிலங்கள் அவை” என இரண்டு அவைகள் உள்ளன. அதைப்போலவே உருசிய மத்திய நாடாளுமன்ற அவை, சுப்ரீம் சோவியத் (Supreme Soviet) என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு அவைகள் உள்ளன. “மத்திய சோவியத்” (Soviet of Union) மற்றும் “தேசிய இனங்களின் சோவியத்” (Soviet of Nationalities) இந்த இரண்டாவது அவை உருசியக் குடியரசுகளை (மாநிலங்களை) எதிரொலிக்கின்றன. அதிக மக்கள் தொகையுள்ள மாநிலத்திற்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலத்திற்கும் ஒரே அளவுள்ள பிரதிநிதிகள்தான் “தேசிய இனங்களின் சோவியத்” அவைக்கு அனுப்பப்படுகின்றனர். மொழித் தேசிய இனங்களில் மாநிலங்களின் சமவுரிமை காக்கப்படுவதை இதில் காண்கிறோம்.
உருசிய நாட்டின் அரசமைப்பில் “சோவியத் குடியரசுகள் (மாநிலங்கள்) விரும்பினால் பிரிந்துபோகும் உரிமை” தரப்பட்டுள்ளது. இது உண்மையானதுதானா? என நான் உருசியாவிற்குச் சென்றிருந்த போது கண்டறிய விரும்பினேன். உருசிய நாட்டின் ஒவ்வொரு குடியரசுக்கும் அமைக்கப்பட்டுள்ள நாற்புற எல்லைக்கோடுகளில், ஏதோ ஒரு எல்லைக்கோடு “சர்வதேச எல்லைக் கோடாக” (International Boundary Line) அமைக்கப்பட்டிருப்பதை கண்டேன். அதாவது எப்போது வேண்டுமானாலும், எந்தக் குடியரசும், விரும்பினால் உருசியாவிலிருந்து தனித்து இயங்கும் வகையில் திட்டமிட்டு இச்சர்வதேச எல்லைக்கோடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டில் பல மாநிலங்களுக்கு ஏதோ ஒரு எல்லையில் சர்வதேச எல்லைக்கோட்டை விரும்பினாலும் ஏற்படுத்த முடியாது. சான்றாக மத்தியப் பிரதேசம், அடுத்து உருசியாவில் மொழிவழி மாநிலங்களின் தனித்த பண்பாடுகள் போற்றிக் காக்கப்படுகின்றனவா? என்பதையும் தெளிவாக அறிய விரும்பினேன். இரண்டு வேறுபட்ட மொழிகளைப் பேசுகிற மாநிலங்களான உஸ்பெக்கும், டாஷ்மேனியாவும் இசுலாமிய மதத்தைச் சார்ந்த மக்களைப் பெற்றுள்ளன என்றாலும், அவை இரண்டும் தத்தம் மொழிப் பண்பாடுகளை தனி உரிமைகளுடன் காத்து வருகின்றன.
இந்த இரண்டு குடியரசுகளின் நடனங்களையும் நான் பார்த்தேன். எனக்கு அதிக வேறுபாடுகள் தெரியவில்லை. ஆனால் உஸ்பெக் குடியரசின் தலைவர்கள், துஷ்மேனிய நடனத்திலிருந்து அவர்களுடைய உஸ்பெக் நடனம் எந்தெந்த வகையிலெல்லாம் மாறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறினார்கள். அது மட்டுமல்ல, அவற்றின் பண்பாடுகள் தனித்தனியானவை என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.
ஒடுக்குமுறையால் ஒருமைப்பாடு அழியும்
மொழிவழி வளர்ந்த தேசிய இனத்தின் பாற்பட்ட தனிப் பண்பாட்டு உரிமைகளை ஒவ்வொரு மொழித் தேசிய இனமும் காத்துக்கொள்வது தவறல்ல. இதற்கு உதாரணம் சோவியத் நாடு. இவற்றை ஒருமைப்பாடு என்ற பெயரால் அடக்க முயற்சிப்பதுதான் தவறானவை. இதற்கு உதாரணம் இலங்கை.
இலங்கையில் ஒரு மொழித் தேசிய இனத்தை (தமிழரை) அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கி அடிமைப்படுத்தக்கூடிய தவறை மற்றொரு தேசிய இனம் (சிங்களர்) செய்தது, அதனால் இன்றைய போர் சூழ்நிலை அங்கு வந்தது.
அவ்வகைத் தவறை முதலில் நமது அரசமைப்பிலும், மத்திய – மாநில உறவுகளிலும், பின்னர் நிர்வாக நடைமுறைகளிலும், ஆட்சிமொழியிலும் செய்து வருகின்றனர். இப்போது அவற்றை தீவிரப்படுத்துவதற்கும், நிலைப்படுத்துவதற்கும் பலவாறாக முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், தமிழீழம் இந்தியாவுக்குத் தரும் பாடம், ஒரு மொழித் தேசிய இன மக்கனை வேறொரு மொழித் தேசிய இன மக்கள் ‘நடுவண் அரசு’ என்ற பெயரால், ‘ஒருமைப்பாடு’ என்ற பெயரால் ஒடுக்க முற்பட்டால், நாடு பிரியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு தேசிய இனத்தின் மொழி, பண்பாடு, உரிமைகளை அழிப்பது தேசிய ஒருமைப்பாடு அல்ல. அவற்றைப் போற்றி வளர்த்து, சமநிலையில் இணைப்பதுதான் தேசிய ஒருமைப்பாடு.
தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி – தமிழீழத்தின் விளைவு
தமிழீழப் போரால் வேறு பல அடிப்படையான தாக்கங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய உணர்வு இலங்கையில் ஒரே சீரான வளர்ச்சியைப் பெற்று முதிர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தேவையான அளவிற்கு மொழித் தேசிய உணர்வு பரிணாம வளர்ச்சியைப் பெறவில்லை. அதாவது தமிழகத்தின் ‘தமிழ் இயக்கம்’ முறையாக வளரவில்லை. இதற்கு நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. ‘தமிழ்த் தேசியம்’ ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து, எழுச்சி பெற்று, பின்னர் மங்கிப் போனதை நாம் தமிழக வரலாற்றில் காணலாம்.
ஆனால் இலங்கையில் தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் “தமிழ் இயக்கம்” முறையான சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழினம், ஒடுக்கப்பட்ட போது, அத்தமிழியக்கமும் வளர்ந்து முதலில் அறப்போராட்டங்களாகவும், பின்னர் ஆயுதப் புரட்சியாகவும் மலர்ந்துள்ளது.
எந்த ஒரு குறிக்கோளும், இயக்க வழியில், தடுமாற்றமின்றி திணறலில் சிக்காமல் சீராக இறுதிவரை எடுத்துச் செல்லப்படவேண்டும். தமிழகத்தில் இது நடைபெறவில்லை. மாறாக, இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் போன்ற இல்லாத தேசிய உணர்வுகள் பரப்பப்பட்டன.
ஆனால் ஈழத்தின் தமிழ்த் தேசிய இனத்தின் முறையான வளர்ச்சியும், எழுச்சியும் தமிழகத்திற்குப் பின்பற்றத்தக்க படிப்பினையாக அமைந்துள்ளது. தமிழீழத்தின் போராட்டம் தமிழகத்தில் “தமிழ்த் தேசிய மறுமலர்ச்சிக்கு” (The Revival of Tamil Nationalism) வழிகோலிவிட்டது. அது சரியான வளர்ச்சிப் பெற்றால் வெற்றியுண்டு. தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி, தமிழர் வாழும் பல நாடுகளிலும் தற்போது உருவாகியுள்ளது என்றால் மிகையாகாது. அதற்குக் காரணம் தமிழீழப்போர்.
தமிழ் மாணவர்களின் மாற்றம்
குறிக்கோளில்லாத தமிழக மாணவர்களிடம் ஈழத் தமிழ் இளைஞர்கள் அஞ்சா நெஞ்சுடன் நடத்தும் இனப் போராட்டங்கள், ஓர் ஆழமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் தமிழுக்காக உயிர்விடும் ஒரு தலைமுறை உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புரட்சிச் சிந்தனைகள்
விடுதலை இயக்க காலத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் தமிழகத்தில் புரட்சி இயக்கத்தை நடத்தினார்கள். அவ்வகைப் புரட்சி இயக்கங்கள் தமிழகத்தில் பின்னர் துளிர்விடவில்லை. வாஞ்சிநாதன் துப்பாக்கி சத்தத்திற்குப் பின்னால் தமிழகத்தில் வேறு புரட்சிப் போர்க்குரல் கேட்கவில்லை.
மேடையிலே பேசுவதே ஒரு பெரும்புரட்சி என்ற அளவுக்கு தமிழகம் தாழ்ந்துவிட்டது. செயலுக்கு மதிப்பு இல்லை, தியாகத்திற்குப் பொருள் இல்லை. பத்துநாள் சிறையிலிருந்தால், பெரும் தியாகியாம். ஓராண்டுக்கு வரவேற்புகள் தரப்படுகின்றன. இதுதான் தமிழகத்தின் “புரட்சி நிலை”.
தமிழீழப் போருக்குப் பின்னால் தமிழகத்தில் உண்மையான புரட்சிச் சிந்தனைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. பேச்சு மேடைகள் பயனற்றவைகளாகக் கருதப்படுகின்றன. செயலுக்கே மதிப்பு என்ற நிலை வளர்ந்து உள்ளது. இன்று அப்புரட்சி எண்ணங்களின் தாக்கம் மிக மிக மென்மையானதாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய போராட்டமாக அவை உருவாகலாம்.
இதழியலில் மாற்றங்கள்
தமிழக இதழியல் துறையில் சில கருத்து மாற்றங்களைத் தமிழீழப் போர் செய்துள்ளது. தமிழீழ இதழ்களில் வரும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள்கூட மிகச் சிறந்தவையாக உள்ளன. ஆனால் தமிழக இதழ்களோ, பொழுதுபோக்கு இதழ்கள், பாலியல் பின்னணியில் பொது மக்களைக் கெடுத்துவரும் இதழ்கள், இன்று தரமான இலக்கியப் படைப்புகளை குறைந்த அளவிலாவது தமிழீழச் செய்திகளையும் தரவேண்டிய கட்டாயத்திற்கு அந்த இதழ்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கம் –தடைப்படுத்தப்பட்டது
அனைத்துலக மட்டத்திலும் தமிழீழப் போர் பல விழிப்பு நிலைகளைத் தந்துள்ளது.
வியட்நாம் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. அதற்கு இலங்கை அரசு துணை போகிறது. தமிழீழப் போர் அதனைத் தடுத்து நிறுத்துகிறது. டிக்கோ கார்சியா தீவில் ஏற்கெனவே அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. அங்கிருந்து, ஏழாம் கப்பற்படையை வங்காள நாட்டுப் போரில் இந்தியாவுக்கு எதிராக, அமெரிக்கா அனுப்பியது. ஆனால் 1000 மைல் தொலைவில் இருந்ததால் உரிய நேரத்தில் வந்து சேர முடியவில்லை. அதனால் தெற்காசியாவில் தமிழீழப் பகுதியான திருகோணமலையில் தன் படைத்தளத்தை அமெரிக்கா அமைக்க முற்பட்டுள்ளது. அதற்கு செயவர்த்தனே அரசு உடன்பட்டுள்ளது.
இந்துமாக்கடலில் அமைதி நிலவ வேண்டுமென இந்தியா அனைத்து உலக மட்டத்திலும், பன்னாட்டு அவையிலும் முழங்குகிறது. ஆனால் ஈழத்திலுள்ள அமெரிக்க ஆதிக்க நிலையை உணர மறுக்கிறது. இந்துமாக்கடலில் அமெரிக்கா ஏகாதிபத்திய நடவடிக்கைகளை, தமிழீழப் போர் இந்தியாவுக்கு உணர்த்திவிட்டது. அதனை ஒரு வகையில் தடுத்து நிறுத்தவும் முற்பட்டுள்ளது.
இலங்கையில் அந்நிய அரசுகளின் ஊடுறுவல்
பாகித்தான், சீனா, இசுரேல் போன்ற நாடுகள் இலங்கை அதிபர் செயவர்த்தனாவுக்கு ஆதரவு, ஆயுத உதவி, பணம் போன்றவைகளைத் தருகின்றன. இதன் பின்னணியில் அமெரிக்கா நிற்கிறது. இவ்வகையான ஆயுத உதவிகள் எதற்காகத் தரப்படுகின்றன? இலங்கையை வாழ வைப்பதற்காக அல்ல. இந்தியாவை மிரட்டுவதற்கு – தேவையானால் இந்தியாவை எதிர்ப்பதற்கு? ஆதிபத்திய வல்லரசுகளின் இந்தச் சதியை எதிர்த்தும் ஈழப்போராளிகள் போராடுகிறார்கள்.
(26.07.1986 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் கோபி சிந்தனைச் சுற்றத்தின் சார்பில் நடைபெற்ற அய்ந்தாம் ஆய்வரங்கத்தில் “எதிர்கால இந்தியாவுக்கு தமிழீழப் போர் தரும் படிப்பினைகள்” என்ற ஆய்வுத் தலைப்பில் பழ. நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்தாக்கம்)
பின் குறிப்பு
அன்றும் - இன்றும்
1.விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் திருகோண மலை இருந்ததால், அமெரிக்காவோ அல்லது வேறு எந்த வல்லரசோ அங்குக் காலூன்ற முடியவில்லை.
2.விடுதலைப்புலிகள் தங்களின் மண்ணை மீட்பதற்காகவும், காப்பதற்காகவும் மட்டும் போராடவில்லை. இந்தியா உள்பட தென்னாசிய நாடுகளுக்கு நேரிட இருந்த அபாயத்தைத் தடுப்பதற்கும், அதிலிருந்து பாதுகாப்பதற்கும் போராடினார்கள்.
3.இந்தியாவுக்கு எதிராக அப்போது இருந்த அமெரிக்கா, பாகித்தான், இசுரேல் போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி, நிதியுதவி போன்றவைகளை மட்டுமே செய்ய முடிந்ததே தவிர, அந்நாட்டில் காலூன்ற முடியவில்லை.
4.ஆனால், 2009ஆம் ஆண்டு போரில் விடுதலைப்புலிகள் தங்களின் ஆயுதங்களை மௌனித்தப் பிறகு, இந்தியாவின் எதிரி நாடான சீனா அங்கு மிக வலிமையாக காலூன்றி நிற்கிறது. இதன் விளைவாக இந்தியாவுக்கும், தென்னாசிய நாடுகளுக்கும் பேரபாயம் உருவாகியுள்ளது.
5.விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இராணுவ உதவி மட்டுமல்ல, எல்லா வகையான உதவிகளையும் செய்த அன்றைய இந்திய அரசு செய்த மாபெரும் தவறின் விளைவாகவே இந்தியாவுக்கு இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
6.30 ஆண்டு காலத்திற்கு மேலாகச் சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போராடிய விடுதலைப்புலிகள், அந்த காலகட்டத்தில்கூட இந்தியாவின் எதிரி நாடுகள் எவற்றிலும் இருந்து ஆயுத உதவியோ, வேறு எத்தகைய உதவியோ பெறுவதில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தனர். கடைசி வரை அந்த உறுதியைக் கடைப்பிடித்தனர்.
7.ஆனால், சிங்கள அரசோ 1980களில் இந்தியாவுக்கு எதிராக இருந்த அமெரிக்கா, பாகித்தான், இசுரேல் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுத உதவி, நிதியுதவி ஆகியவற்றை பெறத் தயங்கவில்லை. 2000த்திற்குப் பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவிடமிருந்து இராணுவ உதவி உட்பட எல்லா உதவியும் பெறுவதற்கு ஒருபோதும் தயங்கவில்லை.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல விடுதலைப் புலிகளை ஒழிக்கவேண்டும் என்ற வெறியில் இந்தியா செயல்பட்டதின் விளைவை இன்று எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் வடக்கிலும், தெற்கிலும் சீனா வலிமையாகக் காலூன்றி நிற்கிறது.
37ஆண்டுகளுக்கு முன்னால் 1986ஆம் ஆண்டில் கோபியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் எச்சரித்தது தற்போது நடந்தேறிவிட்டது. |