“நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கென்று தனித்தனி பண்பாடுகள் கிடையாது.
ஒவ்வொரு மாநிலமும் தனக்கென்று தனித்த அடையாளங்களையும் பண்பாடுகளையும் கொண்டுள்ளதாகக் கருதுகிறது. இவற்றின் மூலம் நாட்டின் வலிமை சிதைக்கப்படுகிறது.
“பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு வலிமையுடன் திகழ்கிறது என்றால், அதற்குக் காரணம் நமது நாட்டின் பண்பாடேயாகும். நாட்டிற்குப் பண்பாடு உண்டே தவிர, மாநிலங்களுக்குப் பண்பாடு கிடையாது. நாளுக்குநாள் வளர்ந்துவரும் பிளவுகள் பாரதப் பண்பாட்டையே சிதைத்துவிடும்” என தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
ஆளுநர் ரவியின் இந்தக் குரல் அவரின் சொந்தக் குரலல்ல. மறைந்த ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வால்கரின் குரலே ஆகும்.
“பல பண்பாடுகள், பல மொழிகள், பல சமயங்கள் ஆகியவற்றைக் கொண்ட பன்முகத் தன்மையும், சமய சார்பற்றத் தன்மையும் கொண்ட சனநாயக கூட்டரசு நாடே இந்தியாவாகும்” என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறும் கருத்தை கோல்வால்கர் மறுத்தார். அவர் கூறிய பண்பாட்டுத் தேசியம் இதற்கு முற்றிலும் எதிரானது. பல பண்பாடுகள், பல மொழிகள், பல சமயங்கள் என்ற பன்முகத்தன்மையை அவர் மறுத்து இந்துத்துவப் பண்பாடு என்னும் ஒருமுகத் தன்மையை வலியுறுத்தினார். சமய சார்பற்றத் தன்மையை அடியோடு மறுத்து இந்து சமயவாதத்தை புகுத்தும் திட்டமே இதுவாகும்.
மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவராக விளங்கிய கோல்வால்கர் மிகக் கடுமையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். “மொழி வழியாக மாநிலங்கள் அமைப்பது என்பது மாநில வாதத்தை வளர்த்து இறுதியில் நாடு சிதறுண்டு போவதற்குப் வழி வகுத்துவிடும். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தையும் அடியோடு ஒழித்துவிட்டு மூன்று அல்லது நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஜனபாத அமைப்பு உருவாக்கப்படவேண்டும். இந்தியா முழுவதும் நூறு ஜனபாத அமைப்புகள் இருக்கவேண்டும். இவற்றைக் கட்டுப்படுத்தும் மேலதிகாரம் கொண்ட ஒரேயொரு நடுவண் அரசு மட்டுமே இருக்கவேண்டும். ஜனபாத அமைப்புக்கும் நடுவண் அரசுக்கும் இடையே மாநிலமோ, மாநில அரசோ தேவையேயில்லை” எனக் கூறினார்.
பண்பாடு, சமயம், அரசியல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த குறிக்கோளைக் கொண்டதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும். சமய அடிப்படையில் இந்து தர்மம், பண்பாட்டு அடிப்படையில் இந்து சமற்கிருதம், நாட்டின் அடிப்படையில் இந்து ராஷ்டிரம் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதாகும்.
இதனடிப்படையில் உருவாக்கப்படும் பாரதப் பண்பாடு கீழ்க்கண்ட பொதுப் பண்புகளை கொண்டதாகும்.
1.வேதங்களையே முதன்மை நூல்களாகவும், முடிந்த விதிகளாகவும் நம்பிக்கைகளாகவும் கொள்ளுதல்.
2.வேத ஞானத்திற்குரியவர்களாகவும், வேதச் சடங்குகளை இயற்றுபவர்களாகவும் பார்ப்பனர்களைக் கொள்ளுதல்.
3. புனித புண்ணியத் தலங்களாக சில இடங்களை வழிபடுதல்.
4. சமற்கிருத மொழியை மட்டுமே ஒரே புனித மொழியாகக் கருதுதல்.
5.பசுவை கோமாதாவாக ஏற்று வழிபடுதல்.
மேற்கண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் பண்பாட்டுத் தேசியம் ஒன்றை உருவாக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது
தமிழர் பண்பாடு, வங்காளிகள் பண்பாடு, பஞ்சாபியர் பண்பாடு என்றெல்லாம் பல்வேறு பண்பாடுகள் கிடையாது. பாரதப் பண்பாடு ஒன்றுதான் இருக்கவேண்டும் என்பதுதான் சங்கப் பரிவாரத்தின் கருத்து. அதேதான் ஆளுநர் ரவி எதிரொலிக்கிறார்.
கோல்வால்கருக்கோ அல்லது அவரது சீடர் ரவிக்கோ பண்பாட்டின் இலக்கணம் தெரியாது. எந்தவொரு பண்பாடும் மொழியடிப்படையில் உருவாகுமே தவிர, சமய அடிப்படையிலேயோ நாட்டின் அடிப்படையிலேயோ ஒருபோதும் உருவாகாது. சமயம் ஒருபோதும் ஒரு தேசிய இனத்திற்கோ அல்லது பண்பாட்டிற்கோ அடிப்படையாக இருக்க முடியாது.
ஒரு தேசிய இனம் உருவாவதற்கு நில எல்லை, ஒருபடித்தான வாழ்க்கை முறை, இலக்கிய உடைமை, பொது பழக்க வழக்கங்கள், சமுதாய மரபு நிலை, ஒரு அரசு ஆகியவை அடிப்படைகளாகும். ஒரு மொழி தேசிய இனத்தை உருவாக்கியதைப் போல, அந்த மொழியின் இலக்கியங்களும் அந்த தேசிய இனத்திற்குரிய பண்பாடுகளை உருவாக்குகின்றன.
பண்டைய தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்த போதிலும் மூன்று நாடுகளிலும் தமிழ்மொழியே பேசப்பட்டது. மூன்று நாடுகளைச் சேர்ந்த புலவர்களும் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்தனர். மூன்று நாடுகளிலும் தமிழ்ப் பண்பாடே நிலவியது. சேரர் பண்பாடு, சோழர் பண்பாடு, பாண்டியர் பண்பாடு என்றெல்லாம் பல பண்பாடுகள் உருவாகவில்லை. சமணம், பௌத்தம், ஆசீவகம், சைவம், வைணவம், இசுலாம், கிருத்தவம் போன்ற சகல சமயங்களைச் சேர்ந்த தமிழர்களும் தமிழ்ப் பண்பாட்டையே பின்பற்றினர். ஒவ்வொரு சமயமும் தனித்தனிப் பண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய பழந்தமிழ் நூல்களை இயற்றிய புலவர்கள் பல்வேறு சமயங்களைப் பின்பற்றியவர்களாக இருந்தாலும்கூட மொழியடிப்படையில் அமைந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் தமது பாடல்களை யாத்தனர்.
சமண சமயத்தைச் சேர்ந்த இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரம், பௌத்தரான சாத்தனார் இயற்றிய மணிமேகலை, சைவரான சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், வைணவரான கம்பன் பாடிய இராமகாதை, பிற்காலத்தில் இசுலாமியரான உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம், கிறித்தவரான வீரமாமுனிவர் பாடிய தேம்பாவணி போன்ற காப்பியங்கள் தமிழ்ப்பண்பாட்டையே சிறப்பித்துப் பாடின. இவர்கள் சார்ந்த சமயங்களின் அடிப்படையில் பண்பாட்டை அவர்கள் உருவாக்கவில்லை; உருவாக்கவும் இயலாது.
பல்வேறு மன்னர் குலங்களின் ஆட்சியின்கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் இருந்தாலும், மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். மொழியடிப்படையில் அமைந்த இந்தப் பண்பாட்டுத் தேசிய உணர்வுதான் மொழிக்கும், மக்களுக்கும் அரணாகத் திகழ்ந்தது.
பிற மொழிப் படையெடுப்பிலிருந்து தமிழ்மொழியைக் காக்க இலக்கண வேலி அமைத்து தொல்காப்பியர் காத்தார். பிற மொழிப் பண்பாடுகளின் தாக்கத்திலிருந்து தமிழரைக் காக்க பண்பாட்டு வேலி அமைத்தார் திருவள்ளுவர்.
வடசொல் உள்பட பிற மொழிச் சொற்கள் தமிழில் பெயர்க்கப்படவேண்டுமென்றால், இவ்வாறுதான் செய்யவேண்டும் என வரையறுத்தார்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.884
வடமொழிக்குரிய சொல்லை தமிழில் பெயர்க்கவேண்டுமென்றால், இப்படித்தான் செய்யவேண்டும் என வகுத்துக்காட்டினார் தொல்காப்பியர். அவர் வகுத்த வழியில்தான் சங்கப்புலவர்களிலிருந்து இன்றுவரை தமிழ்ப்புலவர்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் எழுத்தாக்கங்களைப் படைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வால்மீகியின் இராமாயணத்தை தமிழாக்கம் செய்த கம்பர், இராமன், இலக்குவன், அநுமன், சுக்கிரீவன், கும்பகருணன், வீடணன், இரணியன் என்றவாறு முதலிடையிறுதி எழுத்துக்களை இலக்கணம் பொருந்த ஆண்டார்; வச்சிர தந்தனை ‘வச்சிரத் தெயிற்றவன்’ எனவும் மகாபார்சுவனை ‘மாபெரும் பக்கன்’ எனவும் சூரிய சத்துருவைச் ‘சூரியப் பகைஞன்’ எனவும், தூமிராட்சனைப் ‘புகைநிறக் கண்ணன்’ எனவும் இரணியாட்சனைப் ‘பொன்கணான்’ எனவும், இரணியனைக் ‘கனகன்’ எனவும், மகராட்சனை ‘மகரக் கண்ணன்’ எனவும் பிறமொழிப் பெயர்களைக் கம்பர் பொருள் பெயர்த்துள்ளார்.
அதைப்போல பிறப்பினால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வுகள் உண்டு என வலியுறுத்தியது வடவரின் மனுதர்ம சாத்திரம். இது வடமொழியினரின் பண்பாடு.
“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
என்றார் திருவள்ளுவர்.
பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது தமிழரின் பண்பாடாகும்.
ஒரு மொழியும் அதன் அடிப்படையில் உருவாகும் பண்பாடும் எப்படியெல்லாம் மொழிக்கு மொழி மாறுபடுகின்றன என்பதை மேலே காட்டிய எடுத்துக்காட்டுகள் இயம்புகின்றன.
இந்தியப் பெரு நாட்டில் பல்வேறு மொழிப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு அவரவர் மொழியின்படி அமைந்த பண்பாடுகள்தான் அடையாளமாகத் திகழ்கின்றன. பல்வேறு பண்பாடுகளையும் அழித்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாளத்தை சூட்டிவிட முடியாது.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிற மக்கள் அனைவரும் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுக்கிடையே இரண்டு உலகப் போர்கள் மூண்டன. ஒரே சமயத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். சமயத்தால் அவர்களை ஒன்றிணைக்க முடியவில்லை.
இமயம் முதல் குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் இந்து சமயம் பரவியிருக்கிறது. ஆனாலும் பல்வேறு வழிபாட்டு முறைகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒரிசாவில் உள்ள பூரி செகன்னாதர் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் திருமாலின் நாமங்களான இராமபிரானின் பெயரையும் கோவிந்தனின் பெயரையும் சூட்டிக்கொண்டிருந்தாலும் பூரி வைணவக் கடவுளான செகன்னாதரை வழிபடச் சென்ற போது அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கோவில் பூசாரிகள் வழியை மறித்து உள்ளே நுழையவிடாமல் தடுத்துத் திருப்பியனுப்பினார்கள். குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை என்றால், பிற எளிய மக்களின் நிலை என்ன?
இந்த இந்து பண்பாட்டைத்தான் எல்லோரும் மீதும் திணிப்பதற்கு கோல்வால்கர் முதல் ஆளுநர் ரவி வரை வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.
இராமன் பழங்குடியைச் சேர்ந்த குகனை தன்னுடைய சகோதரனாகக் கொண்டாடுவதாகவும், அவனுடைய கொழுந்தியாக சீதையை கருதுமாறு கூறுவதாகவும் கம்பன் தனது காப்பியத்தில் படைக்கிறான். காரணம், கம்பன் தமிழ்ப்பண்பாட்டில் திளைத்தவன்.
ஆனால் அந்த இராமனின் பெயரைத் தாங்கியவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக விளங்கினாலும் குடியரசுத் தலைவராகக் கொண்டாடப்பட்டாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சாதி உயர்வு தாழ்வுகளை 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் இந்து சமய பண்பாட்டைத்தான் இந்தியா முழுவதிலும் ஒரே பண்பாடாகப் பதிப்பதற்கு முயல்கிறார்கள். |