நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
ஆனால், 10 ஆண்டுகள் கழித்தே அந்த நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அது போதாது என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு செல்ல வாய்க்கால் வெட்டும் பணியினை நெய்வேலி சுரங்க நிர்வாகம் தொடங்கியது. அந்நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருந்தன. ஆனால், ஈவு இரக்கமில்லாமல் அந்தப் பயிர்களை அழித்து வாய்க்கால் தோண்டும் பணியினை நெய்வேலி நிர்வாகம் நடத்தியது. இந்நிகழ்ச்சி நெய்வேலிப் பகுதியில் உள்ள உழவர்களை மட்டுமல்ல, தமிழ்நாடெங்கிலுமுள்ள உழவர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்தை எதிர்த்து தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என்று இந்த நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. இந்த அவசர வழக்கு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான தண்டபாணி முன் 28.07.23 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நிர்வாகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் “20 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்ட பிறகும் நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைக்க மறுக்கிறார்கள். எனவேதான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது” எனக் கூறினார்.
ஆனால், அவர் கூறிய காரணத்தை நீதிபதி ஏற்காமல் பின்வருமாறு குறிப்பிட்டார் “20 ஆண்டுகளாக நிலத்தை கையகப்படுத்தாமல் இருந்துவிட்டு தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்குக் காத்திருக்க முடியாதா? என்ற கேள்வியை எழுப்பியதோடு, நிலத்தைத் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உழவர்கள் என்ன செய்ய முடியும்? மக்கள் பாதிக்கப்படுவதைப் புரிந்துகொள்ளாமல் அதிகாரிகள் இயந்திரத்தனமாக செயல்பட்டிருக்கிறார்கள்” என கண்டனம் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், “இந்த நீதிமன்ற அறையில் எரியும் மின்விளக்குகள், குளிர்சாதன வசதிக்கான மின்சாரம்கூட நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான்” என கூறியபோது, நீதிபதி கோபமடைந்தார். உடனடியாக அந்த அறையிலிருந்த குளிர்சாதன வசதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, “பூமியில் வாழும் அனைவரும் குளிர்சாதன காற்றினால் வாழ்வது இல்லை. புங்க மரத்தின் காற்றிலும், வேப்ப மரத்தின் காற்றிலும் இளைப்பாறும் மக்கள் ஏராளமாக உள்ளனர். அதிகாரிகள் இதனை உணர்ந்து செயல்படவேண்டும்” என தனது வேதனையையும் அதிருப்தியையும் தெரிவித்தார். |