தோற்றம்: 1964ஆம் ஆண்டில் இந்தியத் தலைநகரான தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு (World Conference of Orientalists) நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர்.
உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழ் ஆராய்ச்சிக்கு என உலகளாவிய அமைப்பு ஒன்றினை உருவாக்குவது குறித்து முனைவர் தனிநாயகம் அடிகளும், முனைவர் வ.அய். சுப்ரமணியம் அவர்களும் கலந்தாலோசித்து அவர்கள் பெயரால் அழைப்பு விடுக்கப்பட்டு 07.12.1964 அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. முதுபெரும் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலகளாவிய தமிழ் ஆய்வு மையம் ஒன்றினைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை குறித்து தனிநாயகம் அடிகள் விளக்கிக் கூறினார்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கியமான தமிழறிஞர்கள் அனைவரும் பங்கேற்ற இக்கூட்டத்தில் மன்றத் தலைவராக ழான் ஃபிலியோசா (பிரான்சு) தலைவராகவும், பேரா. தாமஸ் பரொ (பிரிட்டன்), பேரா. கியூடன், பேரா. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேரா. மு. வரதராசனார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பேரா. கமில் சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த அமைப்புக்கு உலகளவில் பெருமைத் தேடித் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இதன் தலைவர்களாக இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் உயரிய மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கிணங்க கீழ்க்கண்டவர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Prof. Jean. Filliozat – Ecole Pratique des hautes etudes, Paris, France.
Prof. F.B.J. Kuiper – Leiden University. The Netherlands
Prof. R.E. Asher – University of Edinburgh, United Kingdom
Prof. Noboru Karashima – University of Tokyo, Japan
Prof. Dr. Tan Sri Marimuthu – University of Kualalumpur, Malaysia.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜீன் பில் லியோஸட்; நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஃப்.பி.ஜெ.குய்பெர்;பிரிட்டனின் எடின் பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.இ. ஆஷர்; ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரான நொபுரு கரோஷிமா; மலேசிய கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் டான் சிறீ மாரிமுத்து என்று அந்த வரிசை தொடர்ந்தது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்தியுள்ளது. இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
இவற்றில் 5 மாநாடுகள் பிரான்சு, இலங்கை, மொரீசியசு, மலேசியா (இரு மாநாடுகள்) ஆகிய வெளிநாடுகளில் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய மூன்றிடங்களில் மாநாடுகள் நடைபெற்றன.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (IATR) ஒன்பதாவது மாநாடு குறித்த பிரச்சனை எழுந்தபோது அதன் தலைவர் பதவியிலிருந்து முனைவர் நொபுரு கரோசிமா பதவி விலகியதை அடுத்து முனைவர் மாரிமுத்து (மலேசியா) மன்றத் தலைவராக சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்த பேரா. இ. அண்ணாமலை சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்தார். அவருடைய முயற்சியின் விளைவாக, 10ஆவது மாநாட்டினை அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து மாநாட்டை முழுமையான கல்விசார் மாநாடாக நடத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் சிகாகோ பல்கலைக்கழகம் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
ஆனால், பொன்னவைக்கோ போன்றவர்களுக்கு இது பிடிக்கவில்லை. எனவே, அவர் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளை அணுகி இம்மாநாட்டினை நடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்.
மாநாடு முடிந்த பிறகு ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவரான பேரா. மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தின் இறுதியில் திடீரென்று புதிய தலைவராக பொன்னவைக்கோ முன்மொழியப்பட்டு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத் தலைவரான பேரா. மாரிமுத்து அதிர்ச்சியடைந்ததோடு, இதை ஏற்க மறுத்தார். கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட மறுத்து வெளியேறினார்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் சட்டதிட்டத்திற்கு மாறாக சிறிதும் சம்பந்தமில்லாத 15பேர் மட்டுமே கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்துவிட்டனர்.
இந்த அறிவிப்பு அமைப்பின் சட்டத்திற்கு எதிரானது என உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அப்போதைய தலைவரான பேரா. மாரிமுத்து அறிவித்தார்.
முறைகேடுகள்
1.உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (IATR) முதல் தலைவரான பேரா. பிலியோசாவினால் பாரிசில் யுனெசுகோ மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் “உலகத் தமிழாராய்ச்சி மன்றம்” என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் World Tamil Research Association (WTRA) என மாற்றி இந்தியாவில் கம்பெனி சட்டத்தின் கீழ் பொன்னவைக்கோ பதிவு செய்துள்ளார்.
2.IATR அமைப்பு விதிமுறைகளும், WTRA அமைப்பின் விதிமுறைகளும் முற்றிலும் வெவ்வேறானவை. WTRA என்பது சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் அடங்கிய Limited Company ஆகும். உறுப்பினர்கள் தமிழறிஞர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைப்பின் இயக்குநர்கள் (Directors) அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களை கொண்ட தேசியக் குழுவினர் IATR அமைப்பின் உறுப்பினர்களாவார். பல்வேறு நாடுகளின் தேசியக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதுதான் IATRன் பொதுக்குழுவாகும். இந்த அமைப்புதான் தலைவரையும், இதர நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும். எனவே IATR அமைப்பு வேறு. WTRA அமைப்பு முற்றிலும் வேறானதாகும்.
3.IATR அமைப்பு பிரான்சில் யுனெஸ்கோ அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. WTRA அமைப்பு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பையும் இரண்டு நாடுகளில் பதிவு செய்ய முடியாது.
4.எனவே, சிகாகோவில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 10ஆவது மாநாடு என்றாலும், அதன் பெயரைப் பயன்படுத்தி WTRA நடத்திய மாநாடாகும்.
5.ஆனால், இந்த உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, தமிழக அமைச்சராக இருந்த திரு. பாண்டியராசன் அவர்களும் பங்கேற்றார். தமிழக அரசின் சார்பில் இம்மாநாட்டிற்காக 10கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
பேரா. ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), பேரா. ஸ்டீவ் ஹட்ஸ் (பிரிட்டன்), பேரா. பிரான்சிஸ் கோடி (கனடா), பேரா. ஒல்ரிக் நிக்லஸ் (செர்மனி), பேரா. அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரசியா – இவர் தற்போது உயிருடன் இல்லை) உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 தமிழறிஞர்கள் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்கள்.
1.உலக அளவில் புகழ்ப்பெற்ற தமிழறிஞர் ஒருவர்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு பின்பற்றப்படவேண்டும்.
2.இம்மன்றத்தின் செயற்பாடுகள் தமிழ்நாட்டுடன் சுருங்கிவிடக் கூடாது. உலகளவில் அமையவேண்டும்.
3.உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களைக் கொண்ட குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர்கள் இம்மன்றத்தின் நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
4.அறிவியல் பூர்வமாகவும், தொழில்நுட்ப கோணத்திலும் இம்மன்றம் தமிழாய்வுப் பணிகளைத் தொடருமாறு முடுக்கிவிடப்படவேண்டும்.
5.உலகநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அரசியல் சார்பற்ற உண்மையான கல்வி ஆய்வு அமைப்பாக இம்மன்றம் திகழவேண்டும்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் புத்துயிர் கொடுத்துச் செயல்பட வைக்கவேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
46 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டுத் தமிழ் ஆராய்ச்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச்சென்ற இந்த அமைப்பு தற்போது பெரும் சீர்குலைவில் சிக்கியுள்ளது. இதிலிருந்து இந்த அமைப்பை மீட்டி, புத்துயிர் ஊட்டி காக்கவேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. கீழ்க்கண்ட அம்சங்களை அவர்கள் நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அ. தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர்களும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், பேராசிரியர் மாரிமுத்துவின் தலைமையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகிகளும் கூடிப்பேசவேண்டும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைவரும் சந்தித்து பேசுவதில் உள்ள இடர்ப்பாடுகளைப் போக்கும் வகையில் இணைய வழியில் நடத்தலாம். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் செயல் திட்டம் ஒன்று வகுக்கப்படவேண்டும்.
ஆ. IATRஐ பதிவு செய்த ஆவணத்தை யுனெஸ்கோவிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்துதவவேண்டும். பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் நிலுவைச் சந்தாவையும் கட்டி மீண்டும் யுனெஸ்கோ ஆதரவில் IATR இயங்குவதற்கு தமிழக அரசு உதவிடவேண்டும். வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லாத இந்தப் பெருமையை தமிழுக்குப் பெற்றுத்தர தமிழக அரசு முன்வரவேண்டும்.
இ. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு நிரந்தரமான அலுவலகம் இதுவரை இல்லை. இம்மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரின் இல்லத்தில் அலுவலகம் இயங்கியது. ஒவ்வொரு முறையும் புதிய தலைவர் எந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அவரின் இல்லத்திற்கு அலுவலகம் மாறும். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலக வளாகத்திலோ இம்மன்றத்திற்கு நிரந்தரமான அலுவலகக் கட்டடம் உருவாக்கப்படவேண்டும். நிரந்தரமான அலுவலர்களும் நியமிக்கப்படவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், நிருவாகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்து கூடிப் பேசிச் செயல்படவேண்டும். இதற்குத் தேவையான நிதி உதவியை தமிழக அரசு மட்டுமல்ல, இந்திய அரசிடமும், ஐ.நா. யுனெஸ்கோ அமைப்பிடமும் கேட்டுப் பெற்றுத்தரவேண்டும்.
-தினமணி – 26.07.2023 |