13ஆவது சட்டத்திருத்தம் - ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது - சிங்கள ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:51

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கிணங்க ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும் உரிமையும் வழங்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், சிங்கள அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

அண்மையில் இலங்கைக் குடியரசுத் தலைவர் இரணில் விக்ரமசிங்கே புதுதில்லியில் தலைமையமைச்சர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசிய போது, 13ஆவது சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். இலங்கைக்குத் திரும்பிய இரணில், இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முன்வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவரைத் தவிர, அவர் கட்சியில் வேறு ஒருவர் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லை. முன்னாள் தலைமையமைச்சர் இராசபக்சேயின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தயவில்தான் தற்போது இரணில் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுள்ளார்.

இந்த நிலைமையில் ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளரான சகரா கரியவாசகம் “13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவதற்கு இரணில் விக்ரமசிங்கிற்குத் தார்மீக உரிமை கிடையாது” என மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

“இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி, கடந்த தேர்தலில் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதற்கு எதிராகவே மக்களின் தீர்ப்பு அமைந்தது. எனவே எங்கள் தயவில் பதவியிலிருக்கும் இரணில் மீண்டும் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவை பெற்றால் 13ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரலாம். அதற்கிடையில் அது குறித்துப் பேசுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்தானந்தா செய்தியாளர் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார், “13ஆவது சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதோ அல்லது செயல்படுத்தாமல் இருப்பதோ குறித்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள்தான் எடுக்க முடியும். குடியரசுத் தலைவரான இரணிலுக்கு அந்த அதிகாரம் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

பாலைவனக் கானல் நீர்

ஆளுங்கட்சியின் கடும் எதிர்ப்புக்கிடையே 13ஆவது சட்டத் திருத்தத்தை இரணில் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அதற்கான வலிமை அவருக்கு அறவே இல்லை. அவ்வாறே ஒருவேளை 13ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கையை அதன்மூலம் நிறைவேற்ற முடியாது. 13ஆவது சட்டத் திருத்தம் என்பது பாலைவனக் கானல் நீரேயாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.