அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன்.
கடந்த 13.8.23 அன்று இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பர் சந்திரசேகரை சென்று பார்த்தேன். உணர்விழந்த நிலையில் அவர் கிடைப்பதைப் பார்த்த போது நெக்குருகினேன். அவருடைய இளைய மகன் எழிலை மருத்துவமனையில் பார்த்துப் பேசிவிட்டு வந்தேன்.
கடந்த வாரம் அவரும், அவருடைய இளைய மகனும் பல்லவபுரத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
இவ்வுலகமானது நேற்று உயிரோடு இருந்த ஒருவன் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டான் என்று கூறும் இரங்கத்தக்க நிலைமையை உடையது.
கடந்த வாரம் என்னோடு பேசி மகிழ்ந்தவர் இன்று இல்லை என்பதை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கு மேலாக மிக நெருங்கிப் பழகிய நண்பர். 1980களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றும் முக்கிய தளபதிகள் பலரும் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்திலேயே அவர்களின் நட்பை பெற்ற பெருமைக்குரியவர். புலிகள் மீதான வழக்குகள் அனைத்திலும் அவர்களுக்காக வாதாடியவர். 1991ஆம் ஆண்டில் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் படுகொலைக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை எதிர்த்து நான் வழக்குத் தாக்கல் செய்தபோது, தானே முன்வந்து வாதாடியவர். அதுமட்டுமல்ல, தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களின் கீழ் நான் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக ஓடோடி வந்து காவல் அதிகாரிகளுடன் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார். என்னை அவர்கள் சிறைக்குக் கொண்டு செல்லும் வரை உடன் வந்து கண்கலங்க வழியனுப்பி வைத்தார். சிறையிலிருந்து என்னை மீட்க நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். எனக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தோழர்களுக்காகப் போராடவும், அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதன் விளைவாக அவருடைய பெயருக்கு முன்னால் தடா என்ற பெயர் அடையாளமாக ஒட்டிக்கொண்டது.
இராசீவ்காந்திக் கொலை வழக்கு தடாச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு வாதாடிய பெருமை அவருக்கு உண்டு. 26 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்லவும், மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்களை வாதாட வைப்பதிலும் எனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற பெருமை அவருக்கு உண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி அனைவரையும் விடுவித்தப் பெருமையில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் நம்பிக்கை ஊட்டுவதிலும் முன் நின்றார்.
யாருக்கும் அஞ்சாது, எத்தகைய பயனையும் எதிர்பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடி அவர்களின் துன்பங்களைத் துடைத்தப் பயன் கருதாப் பண்பாளர்.
தமிழீழத்திற்கு நேரில் சென்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து அவரால் பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களோடும், தோழர்களோடும் நெருங்கிப் பழகி அவர்களின் பெருமதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார்.
அவரின் மறைவினால் பேரிழப்புக்கு ஆளாகி உள்ள அவருடைய துணைவியார் கலா அம்மையார் அவர்களுக்கும், புதல்வர்கள் சுனில், எழில் ஆகியோருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறும் வகை அறியாது திகைத்து நிற்கிறேன். காலம் அவர்களின் துயரைப் போக்கும் என நம்புகிறேன்.
நண்பர் சந்திரசேகர் மறைந்தாலும் விடுதலைப் புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டில் அடக்கு முறைகளுக்கு ஆளாகித் தவித்த தமிழர்களுக்காகவும், என்றும் உதவும் கரங்களாகத் திகழ்ந்த அவர் அனைவரின் உள்ளங்களில் என்றும் நிறைந்திருப்பார். |