தஞ்சையில் 2023, செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு நமது தொன்மை - பெருமை குறித்து அறிய தமிழர்களே திரளுவீர்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 செப்டம்பர் 2023 13:04

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

அதே நூற்றாண்டில் 1905ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகம் அது என்பதை கண்டறிந்தார்.

“சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் தடயங்களுக்கும், ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தடயங்களுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் உள்ளன” என அறிஞர் சுனிதி குமார் சட்டர்ஜி அறிவித்தார்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை ஆற்றின் கரையில் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் அதிகாரியான அமர்நாத் இராமகிருட்டிணா நடத்திய அகழாய்வின் மூலம் “சங்க இலக்கியக் குறிப்புகளும், கீழடியில் கிடைத்த தடயங்களும் ஒத்திருக்கின்றன” என்பதையும் தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் கீழடி என்பதையும் கண்டறிந்து அறிவித்தார்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே வியப்பில் ஆழ்த்தியதைப் போலவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், முசிறி (கேரளம்) போன்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மையின் சிறப்பையும் பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது.

இத்தகைய தொன்மைக்கும் பெருமைக்கும் உரிய தமிழர்கள் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்துகொண்டு பெருமித உணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு தனது 10ஆம் ஆண்டு மாநாட்டினை “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடத்தவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சையில் இம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது. தமிழர் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அரியதொரு கண்காட்சி ஆகும்.

இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

முதல் மாநாட்டிற்கு முனைவர் வீ. அரசு தலைமை தாங்குகிறார். முதுமுனைவர் ஆ. சிவசுப்ரமணியம் தொடக்கவுரை ஆற்றுகிறார். இரண்டாம் நாள் கருத்தரங்கிற்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியம் தலைமை தாங்குகிறார். வழக்கறிஞர் த. பானுமதி தொடக்கவுரை ஆற்றுகிறார். பல்வேறு கருத்தரங்குகளில் பேரா. த. செயராமன், முனைவர் இரா. காமராசு, முனைவர் ஆ. பத்மாவதி, முனைவர் பெ. இரவிச்சந்திரன், முனைவர் வீ. செல்வகுமார், முனைவர் கோ. விசய வேணுகோபால், முனைவர் சு. இராசவேலு, முனைவர் க.த. காந்திராசன், கணியன் பாலன், முனைவர் தியாக சத்தியமூர்த்தி, முனைவர் நா. மார்க்சிய காந்தி, முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா ஆகியோர் பேருரையாற்றுகிறார்கள்.

மிக சீரிய வகையில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர்களுக்கு “உலகப் பெருந்தமிழர் விருது” வழங்கப்பெறவிருக்கிறது. முதல் நாள் நடைபெறும் விருதளிப்பு விழாவிற்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், இரண்டாம் நாள் நடைபெறும் விருதளிப்பு விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் தலைமை தாங்குகிறார்கள்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விருதுகளை வழங்கி நிறைவுரையாற்றுகிறார்.

மாநாட்டு மலர்

மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்கள், தொல்லாய்வு அறிஞர்கள் ஆகியோர் ஆற்றும் உரைகள் எழுத்தாக்கம் செய்யப்பெற்று கட்டுரைகளாக மாநாட்டு மலரில் இடம்பெறுகின்றன. மற்றுமுள்ள தமிழறிஞர்களின் கட்டுரைகளும், தமிழகத் தொல்லாய்வுத் தடயங்கள் குறித்த ஏராளமான வண்ணப்படங்களும் மாநாட்டு மலருக்கு மணம் சேர்க்கின்றன.

ஒவ்வொரு தமிழரும் தங்கள் வீடுகளில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக விளங்கும் இம்மலர், மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

திரண்டு வருக!

கடந்த 2016ஆம் ஆண்டில் மறைமலை அடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினை மாபெரும் மாநாடாக தஞ்சையில் நாம் நடத்தினோம். அதற்குப் பின்னர் தீ நுண்மி தொற்று நோய் பரவி நாடே முடங்கியது. அதன் காரணமாகவும் மற்றும் சில காரணமாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் 10ஆவது மாநாட்டினை நடத்த இயலாத நிலைக்கு ஆளானோம்.

இக்குறையை போக்கும் வகையில் உலகத் தமிழர் பேரமைப்பின் 10ஆம் மாநாட்டினை தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக 2023, செப்டம்பர் 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் மிகச் சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நமது வரலாற்றின் தொன்மைக் குறித்து அறிஞர்கள் ஆற்றும் உரைகளை கேட்டுப் பயன்பெறவும் நமது நாகரிகத் தொன்மை குறித்துப் பெருமிதம் கொள்ளவும், தமிழர்கள் குறிப்பாக, மாணவர்களும், இளைஞர்களும் இம்மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அனைவரையும் அழைக்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.