பொற்கோட்டு இமயத்தில் புலிபொறித்து ஆண்டான் பூம்புகார் சோழன் கரிகால் பெருவளத்தான்; ஆரியப் படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்; தமிழரைப் பழித்துப் பேசிய வடநாட்டு வேந்தர்களான கனக – விசயரை வென்று,
இமயத்தில் கல்லெடுத்து அவர்களின் தலையில் ஏற்றி தமிழகம் கொண்டு வந்து கற்புத் தெய்வம் கண்ணகிக்கு கோயில் எழுப்பினான் சேரன் செங்குட்டுவன் எனநமதுஇலக்கிய வழி வரலாறு பறைசாற்றுகிறது.
இமயத்தை வென்ற தமிழர் வழிவந்த இன்றைய தமிழர்கள் விண்வெளியை வென்று வெற்றிக் கொடியை நாட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் பிறந்த அருந்தமிழர் அப்துல்கலாம் அணுவைப் பிளந்து ஆற்றல் மிகு வலிமையை வெளிப்படுத்திய உலக நாடுகளிடையே இந்தியாவை இடம்பெறச் செய்து அணு வல்லரசு வரலாற்றில் இந்தியாவை பொறித்தார்.
கொங்கு நாட்டில் குக்கிராமமான கோதாவடியில் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, 1982ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி இயக்குநராக உயர்ந்து நிலவில் சந்திரயான் -1 வெற்றி பெற வைத்து நிலவில் தமிழ்க் கொடியை நாட்டிய இவரை நிலவு மனிதன் என உலகம் கொண்டாடுகிறது.
நெல்லை மாவட்டம், கோதைச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்த அருணன் சுப்பையா, விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்து இயக்குநராக உயர்ந்து செவ்வாய் கோளுக்கு விண்கலனை அனுப்பும் மங்கள்யான் திட்டத்தின் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக அதை நிறைவேற்றித் தமிழ்க் கொடியை மிளிரச் செய்தார்.
குமரி மாவட்டம், சரக்கல்விளை என்னும் சிற்றூரில் பிறந்த கே. சிவன், 1982ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து 2019இல் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவிற்கு ஏவும் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராதவிதமாக அத்திட்டம் வெற்றி பெற தவறியது. இத்தவறுகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற அடித்தளத்தை அமைத்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல், விண்வெளி ஆய்வு மையத்தில் இணைந்து தனது அயராத உழைப்பின் விளைவாக இயக்குநராக உயர்ந்து சந்திரயான்-3 நிலவில் கால் பதிக்கச் செய்து உலகளவில் மாபெரும் வெற்றியினை நிலைநாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் ஷாஜி என்னும் பெண்மணி ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராகத் திகழ்ந்து சூரியனில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்காக ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட விண்கலத்தை பூமியிலிருந்து 15இலட்சம் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அறிவியல் துறையில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு ஈடாக விண்வெளி ஆய்விற்குத் தலைமை தாங்கி வழி நடத்தி நிலவினில் இறங்கியும் சூரியனின் திறனை ஆராயவும் விண்கலன்களை வெற்றிகரமாக இயக்கி வெற்றிக் கொடி நாட்டியுள்ள தலையாய தமிழர்கள் அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறோம். உலகத்தின் பாராட்டினைப் பெற்றுள்ள இத்தமிழர்களின் வெற்றி தமிழ்கூறும் நல்லுலகின் மாபெரும் வெற்றியாகும். அவர்களின் ஆய்வுகள் தொடரட்டும்! தமிழினத்திற்குப் பெருமைத் தேடித் தரட்டும்! |