ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் தேசியக் கட்சிகள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023 09:49

காவிரி படுகைப் பகுதியில் உள்ள 14.913 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளது. அதை எதிர்ப்பார்த்து குறுவை சம்பா பயிர்களை காவிரி விவசாயிகள் தங்களின் நிலங்களில் நட்டுள்ளனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்காததால், இப்பயிர்கள் வாடுகின்றன. சில பகுதிகளில் குறுவைப் பயிர்கள் அடியோடு கருகிவிட்டன.

உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் மாதந்தோறும் காவிரி அணைகளிலிருந்து கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரின் அளவை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் குறித்து ஆணைகளைப் பிறப்பித்துள்ளன. ஆனால், அந்த ஆணைகளை சிறிதும் மதிக்காமலும் மாதந்தோறும் தண்ணீரைத் திறந்துவிடாமலும் மழைக் காலங்களில் பெருகிவரும் நீரை கணக்கில் சேர்த்து தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரைத் தந்துவிட்டதாகவும் கர்நாடகம் அடாவடித்தனமாகக் கூறுகிறது.

கடந்த ஆகசுடு மாதத்தில் உச்சநீதிமன்றம் 10,000 கன அடி தண்ணீரை நாள்தோறும் தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டுமென ஆணை பிறப்பித்தது. ஆனால். இந்த ஆணையின்படி முழு அளவு தண்ணீரையும் கர்நாடகம் கொடுக்கவில்லை. அதற்குப் பின் மீண்டும் தமிழகம் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் புகார் செய்தபோது செப்டம்பர் 12 முதல் 15 நாட்கள் வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்தது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வெளிப்படையாகத் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, கர்நாடகத்திலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டி அவர்களின் ஆலோசனையை ஏற்று “தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது” என அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

தனக்கு உரிமையாக உள்ள காவிரி நீரைப் பெறுவதற்கு மீண்டும் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் காவிரி நீரைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமையில் தமிழ்நாடு உள்ளது.

காவிரி படுகைப் பகுதியில் உள்ள 40 இலட்சம் விவசாயிகளும் ஒரு கோடிக்கு மேலான விவசாயத் தொழிலாளர்களும் தொடர்ந்து பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதி வறண்டு போகுமானால் தமிழ்நாட்டு மக்களும் பசியாலும் பட்டினியாலும் வாடவேண்டிய நிலைமை ஏற்படும். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக காவிரிப் பிரச்சனையில் இழுபறி நீடிக்கிறது. இதற்குக் கீழ்க்கண்டவைகளே காரணமாகும்.

1.காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வாக காவிரி ஆணையம் அமைக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆணையின் சட்டத்தின்படி ஆணையம் அமைக்கப்படுமானால், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள காவிரி அணைகள் அனைத்தும் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். தண்ணீரைத் தேக்குவது, திறந்துவிடுவது போன்ற அனைத்துமே ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

2.ஆனால், அவ்விதமான முழு அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்காமல், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற பெயரில் அதிகாரமில்லாத குழுவினை இந்திய அரசு அமைத்தது.

3.ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்ட கர்நாடகம், ஒழுங்காற்றுக் குழுவின் ஆணைகளை மதிக்க மறுக்கிறது. அவ்வாறு மறுக்கும் கர்நாடகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒழுங்காற்றுக் குழுவுக்கு இல்லை. ஒவ்வொரு முறையும் தமிழகம் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டவேண்டியுள்ளது.

4.காங்கிரசு, பா.ச.க., சனதா தளம் போன்ற அகில இந்திய கட்சிகள்தான் மாறி மாறி கர்நாடகத்தில் ஆட்சிக்கு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிக்க அந்த அரசுகள் மறுக்கும்போது சம்பந்தப்பட்ட கட்சியின் அகில இந்தியத் தலைமை தலையிட்டு கண்டித்திருக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கவேண்டுமென அறிவுரைக் கூறி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அகில இந்திய கட்சிகளின் தலைமைகள் அவ்வாறு செய்வதற்குத் தயாராக இல்லை.

5.தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் தலைவர்கள் தில்லிக்குச் சென்று தங்களின் அகில இந்திய தலைமையிடம் தமிழகத்தை கர்நாடகம் வஞ்சிப்பதைக் குறித்து முறையிட்டு அவர்களின் மூலம் கர்நாடகத்திற்கு அறிவுறுத்திருக்கவேண்டும். ஆனால், இக்கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்காக காவிரிப் பிரச்சனையில் இங்கே கூப்பாடு போடுகிறார்களே தவிர, தில்லிக்குச் சென்று தங்களின் தலைமையை வற்புறுத்தத் தயாராக இல்லை.

6.கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்கின்றன. அத்தகைய ஒற்றுமை தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கிடையே இல்லை. காவிரிப் பிரச்சனை ஒரு கட்சிக்குரிய பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்சனை. ஆனாலும்கூட நம்மால் ஒன்றுபட்டுப் போராட இயலவில்லை.

7.காவிரிப் படுகையில் உள்ள விவசாய சங்கங்களாவது ஒன்றுபட்டுப் போராட முன்வந்திருக்கவேண்டும். ஆனால், தனித்தனியாக அவைகள் காவிரிப் பிரச்சனைக்காகப் போராடுகின்றனவே தவிர, ஒன்றிணைந்த போராட்டத்திற்குத் தயாராகயில்லை.

8.காவிரிப் பாசன மாவட்டங்களிலுள்ள கட்சிகளும் விவசாய சங்கங்களும் இணைந்து தொடர்ந்து 15 நாட்களுக்காவது இம்மாவட்டங்களில் தொடர் வண்டிகள் ஓடாது. இந்திய அரசின் அலுவலகங்கள் செயல்படாது என மாபெரும் போராட்டத்தை நடத்த முன்வந்தால் தில்லி பணியும். அத்தகைய ஒற்றுமை இங்கு இல்லாத காரணத்தினால் தில்லி நம்மை மதிக்க மறுக்கிறது.

9.கர்நாடகத்தில் உள்ள காவிரிப் பாசன பகுதிகளில் உள்ள ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்தி அணைகளில் உள்ள நீரை கால்வாய்கள் வழியாக வெளியேற்றி இவற்றை நிரப்பி வைக்கிறது. பிறகு அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என வாதாடுகிறது. இந்தப் பொய்மையை இந்திய அரசும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் வேடிக்கைப் பார்க்கின்றன.

10.கர்நாடகத்தில் காவிரி உற்பத்தியாவதால் அதன் நீர் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், தனக்குப் போக எஞ்சியுள்ள நீரைத் தமிழகத்திற்குத் தர முடியும் என்றும் கர்நாடகம் விதண்டாவாதம் செய்கிறது. ஒரு ஆற்றின் மேல் பகுதிக்கும், கீழ்ப்பகுதிக்கும் அவ்வாற்றின் நீரில் எத்தகைய உரிமையும், பங்குகளும் உண்டு என்பதை சர்வதேச அளவில் முடிவு செய்து ஹெல்சிங்கி உடன்பாடு என்னும் ஏற்பாடு உலக நாடுகளால் இன்றளவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றது. ஆனால் அதற்கு எதிராக கர்நாடகம் செயல்படுவதை ஏன்? என்று கேட்க யாருமில்லை.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20% கர்நாடகத்திற்கு இன்றுவரையிலும் அளிக்கப்படுகிறது. கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கும் 20% அளிக்கப்படுகிறது. இந்திய அரசின் தொகுப்பிற்கு 20% அளித்தது போக எஞ்சிய 20% மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படுகிறது. காவிரி நீரில் கர்நாடகம் உரிமையும், சொந்தமும் கொண்டாடுவதைப் போல நெய்வேலி மின்சாரத்திலும் தமிழகம் சொந்தம் கொண்டாடினால், பெங்களூரில் உள்ள தொழிற்சாலைகளெல்லாம் செயலற்றுப் போகும்.

தேசிய ஒருமைப்பாடு என வாய்கிழிய பேசும் அகில இந்திய கட்சிகளான காங்கிரசும், பா.க.க.வும் ஆளும் கர்நாடகம் காவிரிப் பிரச்சனையிலும், இடதுசாரி கூட்டணியும் காங்கிரசு கூட்டணியும் மாறி மாறி ஆளும் கேரளம், பெரியாறு அணைப் பிரச்சனை மேற்கு நதி நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை போன்றவற்றில் தன்னலத்தோடே செயல்படுகின்றன. தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதி என பார்க்காமல் பகை நாட்டின் பகுதியாகப் பார்க்கின்றன. இந்தப் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் என்பதை உணரவேண்டியவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.