பாராட்டுவதற்கு பதில் தண்டனையா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 நவம்பர் 2023 16:20

இந்திய அரசின் தொல்லியல் துறையின் தென் மண்டல ஆணையப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் இராமகிருட்டிணன் அக்டோபர் 23-ஆம் நாள் தில்லிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் இரண்டாண்டுகள் முடியும் முன்பே அமர்நாத்திற்கு அவசரக் கோலத்தில் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது. அதற்கான காரணம் எதையும் இந்திய அரசு அறிவிக்கவில்லை.

amar nov2015-ஆம் ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளராக அமர்நாத் இராமகிருட்டிணன் இருந்த போது சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நிகழ்த்தி 2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் நகர்ப்புற நாகரிகம் கீழடியில் செழித்தோங்கி இருந்திருக்கிறது என்பதை உலகறிய அறிவித்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான வரலாற்றுத் தடயம் எதுவும் இல்லை என ஆய்வாளர்கள் கருதினர். சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி. பட்டினப்பாலை ஆகியவற்றில் மதுரை நகரம் குறித்தும் பூம்புகார் நகரம் குறித்தும் குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் புலவர்களின் கற்பனையே தவிர அவற்றை அறிவியல் பூர்வமாக ஏற்க இயலாது வரலாற்றாய்வாளர்கள் கருதினர். ஆனால் கீழடி அகழாய்வு முதன் முதலாக தமிழரின் நகர்ப்புற நாகரிகத்திற்கு யாரும் மறுக்க முடியாத அகழ்வியல் தடயமாக அமைந்தது. தமிழக வரலாற்றில் சங்க காலத்தின் வரையறையை கீழடி அகழாய்வு மாற்றியமைத்தது.

இத்தகைய மிகச் சிறந்த வரலாற்று ரீதியான உண்மையைக் கண்டறிந்த அமர்நாத் இராமகிருட்டிணாவைப் பாராட்டுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு அவரை உடனடியாக அசாம் மாநிலத்திற்கு மாற்றியது.

keeladi - pictureஇப்போதும் அவரை தில்லிக்கு மாற்றி இருப்பதின் பின்னணி என்னவென்றுப் பார்த்தால் அது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பான உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் கடந்த செப்டம்பர் 23-24 ஆகிய நாட்களில் தஞ்சையில் ”தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு” சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் தொல்லாய்வு அறிஞர்கள் உட்பட பல்வேறு துறைகளில் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்த்த முதுபெரும் தமிழறிஞர்கள் பலருக்கும் “உலகப் பெருந்தமிழர்” என விருதுகள் வழங்கப் பெற்று பாராட்டப் பெற்றனர். அவர்களில் அமர்நாத் இராமகிருட்டிணாவும் ஒருவர் ஆவார். இந்த மாநாட்டில் கீழடி ஆய்வு குறித்தும் தமிழரின் தொன்மையான நாகரிகம் குறித்தும் அவர் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது. இதைப் போல தமிழகத்தின் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் அவர் தொடர்ந்து ஆற்றிய உரைகள் தமிழக மக்கள் மத்தியில் தங்களது தொன்மை குறித்த விழிப்புணர்வையும் பெருமித உணர்வையும் ஊட்டின.

தமிழ் இலக்கியங்கள் ஈடு இணையற்ற செவ்விலக்கியங்களாகும். அத்துடன் இந்தியாவிலேயே மிகப் பழமையும் தொன்மைச் சிறப்பும் கொண்வையாகும் என்பதை கீழடி ஆய்வு மெய்ப்பித்து விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை ஒன்றிய அரசின் நடவடிக்கை மெய்ப்பித்திருக்கிறது.

அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களின் கண்ணோட்டத்தின்படி கீழடி ஆய்வு எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

  • தமிழ்நாட்டில் கீழடி ஆய்விற்கு முன்னர் சுமார் 150-க்கு மேற்பட்ட தொல்லியல் இடங்கள் அகழாய்வுச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒரு தொடர்ச்சியான கால நிலையைக் கணிக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் விரிவான அகழாய்வுகளாக அமையவில்லை.
  • தமிழகத்தில் மாநில அரசினாலும் மற்றும் பல்கலைக்கழகங்களின் மூலம் செய்யப்பட்ட அகழாய்வுகள் அனைத்தும் பெரும்பாலும் சிறிய அளவிலான வாழ்விடத்திலோ அல்லது புதைப்பிடப் பகுதியைச் சார்ந்ததாகவோ மட்டுமே அமைந்ததே தவிர ஒரு முழுமையான மக்கள் வாழ்விடத்தைத் தேர்ந்தெடுத்து பெரியதாக அகழாய்வுகள் செய்யப்படவில்லை. ஆனால் கீழடி அகழாய்வு என்பது மக்கள் வாழ்விடத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய அகழாய்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • குசராத்தில் உள்ள தோலாவீரா போன்ற சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைக்கின்ற புதைப்பு முறைகள் தமிழகத்தில் கிடைத்திருக்கின்றன. அவை பெரும் கற்கால புதைப்பு முறையோடு தொடர்புடைய முறையாகதான் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது. தொடர் பண்பாட்டு முறைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் காலத்திற்கேற்ப சிறிய மாற்றங்களே தொடர்ந்துள்ளன.
  • keeladi picureஅசோக மன்னனால் பிறப்பிக்கப்பட்ட அரச ஆணைகளில் உள்ள பிராமி எழுத்து வடிவமே இந்தியாவின் பழமை வாய்ந்த எழுத்து வடிவம் எனவும் அசோகர் பிராமியை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழகத்தின் எழுத்துக்கள் வளர்ச்சியடைந்தன எனவும் பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் கொடுமணல், பொருந்தல், புலிமான்கோம்பை, தாதப்பட்டி, கீழடி போன்ற இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகளும் மற்றும் தமிழி கல்வெட்டு ஆதாரங்களையும் முறையாகக் கொண்டு தமிழ் பிராமி என்றழைக்கப்படும் தமிழி எழுத்துக்கள் தமிழகப் பகுதியில் தோன்றியதற்கானச் சான்றுகளாக வெளிவந்திருக்கின்றன. அச்சான்றுகள் அசோகர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பாமர மக்களும் எழுத்தறிவுப் பெற்றிருந்தார்கள் என்று அகழ்வாய்வு மூலம் கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களின் காலக் கணிப்புகள் தெளிவாக உணர்த்துகின்றன.
  • வட இந்தியப் பகுதிகளில் காணப்படும் அசோகர் பிராமி எழுத்து வடிவமானது பெரிய பாறைகளில் அல்லது தூண்களில் பொறிக்கப்பட்ட அரசனின் ஆணைகளாகவும் கட்டளைகளாகவும் மட்டுமே நமக்கு காணக் கிடைக்கின்றன. இதைத் தவிர அகழாய்வுகளில் கிடைக்கப் பெறும் பானை ஓடுகளில எழுதப்பட்ட எந்த வகையான எழுத்துப் பொறிப்புகளும் வட இந்தியப் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கப் பெறவில்லை. அந்த வகையில் ஆய்வுகளை எடுத்துச் சென்றோமென்றால் தமிழகத்தில்தான் முதலில் எழுத்து அமைவு தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்ற கருத்து உறுதியாகின்றது. அதன் பிறகுதான் வட இந்தியாவிற்கு இந்த எழுத்து முறைகள் சென்றிருக்கக் கூடுமென்றும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற தொல் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • 1924-ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிகத்தை சர் ஜான் மார்ஷல் என்பவர் கண்டுபிடித்து வெளியிடும் வரையில் இந்தியாவின் முதல் நாகரிகமாக வேதகால நாகரிகம் என்ற வரலாறு கட்டமைக்கப்பட்டிருந்தது. சமஸ்கிருத இலக்கியங்கள், புராணங்களின் அடிப்படையில் வேதகால நாகரிகம் இந்தியாவின் முதல் நாகரிகமாக கருதப்பட்டதே தவிர தொல்லாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. சிந்துவெளி நாகரிகம் அகழ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டப் பிறகு அது வேதகால நாகரிகத்திற்கும் முற்பட்டது என்ற உண்மை நிலைநிறுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் சங்க காலம் என்றுச் சொல்லப்படுகின்ற ஒரு வரலாற்றுக் காலம் கி. மு. 300-இலிருந்து கி. பி. 300 வரை இருந்தது என்ற கருதுகோள் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்தக் கருதுகோள் எந்த அடிப்படையில் காலக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று அறிஞர் பெருமக்களால் சரிவர விளக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் கீழடி அகழாய்வு ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் பல தொல்லியல் அகழாய்வுகள் நடந்திருந்தாலும் நம்முடைய வரலாற்றின் தொன்மையை துல்லியமாகக் கட்டமைக்கிறச் செயல் நடைபெறாமல் இருந்ததே ஒரு முக்கிய காரணி எனக் கூறலாம். வட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆற்றங்கரை நாகரிங்களைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைப் போல தமிழகப் பகுதிகளிலோ தென்னிந்தியப் பகுதிகளிலோ விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததன் காரணமாக தமிழக வரலாற்றில் தொய்வு ஏற்பட்டது.
  • சங்க இலக்கிய என்ற கருவூலத்தில் பல வரலாற்று உண்மைகள் மறைந்துள்ளன. அதைப்பற்றிய ஆய்வுகள் தொடர வேண்டும். இலக்கியங்களில் சொல்லப்பட்டச் செய்திகளைப் பற்றிய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் கீழடி என்ற தொல்லியல் ஆய்விடம் இன்றைய சமூகத்தின் ஆய்வுப் பார்வையை மறு சீரமைப்புச் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
  • தமிழகத்தின் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் செய்திருந்தாலும் கீழடி என்ற இடம் மட்டுமே நாம் எவ்வாறு வருங்காலங்களில் அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும் என்பதை சொல்கிறது. தமிழர்களின் தொன்மையை எடுத்துக் கூறும் பல இடங்கள் நமது தமிழகத்தில் பெரும்பாலானப் பகுதிகளில் காண கிடைக்கின்றன. வைகை நதி எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தி செய்யப்பட்டதோ அதைப் போல அந்தப் பகுதிகளிலும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதின் மூலம் மேலும் பல தொல்லியல் இடங்களை நம்மால் கண்டுபிடிக்க இயலும். இங்கு கிடைக்கும் தொல் பொருள் எச்சங்களை முறையாக தமிழ் இலக்கியங்களோடு ஒப்பீடு செய்து ஆய்வுகள் செய்தோமேயானால் தமிழர்கள் நாகரிகத்தின் தொன்மை வரலாற்றை மிகச் சரியாகக் கட்டமைக்க முடியும்.

மேற்கண்டவாறு அமர்நாத் இராமகிருட்டிணன் கூறியுள்ளவற்றை நாம் ஆழ்ந்துப் படிப்போமானால் அவர் ஏன் தமிழகத்திலிருந்து மீண்டும் மீண்டும் பந்தாடப்படுகிறார் என்பது நமக்குத் தெளிவாகும்.

இந்தியத் தொல்லியல் துறையின் அதிகாரி என்கிற முறையில் மாற்றப்படுவது என்பது வேறு. ஆனால் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை தமது கீழடி அகழ்வாய்வின் மூலம் அவர் புலப்படுத்தியதால் இந்த மாற்றம் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு தமிழ் மக்களும் தமிழக அரசும் வாளாவிருக்கக் கூடாது. தமிழ் மக்களின் கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். “அமர்நாத் இராமகிருட்டிணாவின் தொண்டு எங்களுக்குத் தேவை. எனவே அவரை தமிழகத் தொல்லியல் துறைக்கு அனுப்புங்கள்” என தமிழக அரசு இந்திய அரசிடம் வற்புறுத்தி அவரை இங்கு கொண்டு வந்து கீழடி மற்றும் வைகைக் கரைகளில் அவர் குறித்துள்ள 293 இடங்களிலும் அகழ்வாய்வு செய்யும் பணியினை ஒப்படைக்க வேண்டும். இதில் நாம் உடனடியாகச் செயலாற்றாவிட்டால் தமிழரின் தொன்மை வெளிப்படக் கூடாது என்று கருதுபவர்களின் நோக்கம் எளிதில் நிறைவேறிவிடும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.