முதல்வரின் காணொலி உரையை ஒளிபரப்ப மறுத்தது ஏன்? தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023 15:33

பிரிட்டன் பேரரசாக உருவான போது இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தனது படை வலிமையினால் கைப்பற்றியது.

கைப்பற்றப்பட்ட இந்நாடுகளில் தேயிலை, காபி, ரப்பர், கரும்பு போன்ற வணிகப் பயிர்களைப் பயிரிட்டால் பெரும் ஆதாயம் கிடைக்கும் என்பதைக் கண்டறிந்தது. அவற்றைப் போல தங்கம், இரும்பு, நிலக்கரி மற்றும் சுரங்கங்களை வெட்டி எடுத்து தொழில் வளர்ச்சியின் மூலம் பெரும் ஆதாயம் ஈட்டவும் திட்டமிட்டது. ஆனால் இந்தப் பணிகளை செய்ய கடும் உழைப்பாளிகளான மக்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். அத்தகைய மக்கள் இந்தியாவில் எப்பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிய குழு ஒன்றையும் பிரிட்டானிய இந்திய அரசு அமைத்தது.

இந்த குழு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து அரசுக்குக் கொடுத்த அறிக்கையில் “அன்றைய சென்னை மாகாணத்தில் வாழக்கூடிய தமிழர்கள் மிகக் கடும் உழைப்பாளிகள் என்றும், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யக் கூடியவர்கள் என்றும்” அறிக்கை கொடுத்தது.

அதன் விளைவாக பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கப்பல் கப்பலாக இலங்கை, பர்மா, மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் மிகக் கடுமையான உழைப்பால் பணப் பயிர்கள் செழித்து வளர்ந்து ஆங்கிலேய முதலாளிகளுக்குப் பெரும் பொருளைத் தேடிக் கொடுத்தன.

அண்டை நாடான இலங்கைத் தீவின் வட-கிழக்குப் பகுதியில் வீரத்தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் மலைப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் குடியேற்றப்பட்டு, ரப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களைத் தமது கடும் உழைப்பினால் உருவாக்கினர். இலங்கையின் தேசிய வருமானத்தில் 60% மலையகத் தமிழரின் உழைப்பினால் கிடைக்கிறது.

இவர்களின் முன்னோர், இலங்கைத் தீவில் காலடி வைத்து இருநூறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இலங்கைத் தமிழ் அமைச்சர் ஜீவன் தொண்டைமான் நவம்பர் 3ஆம் நாள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் பங்கேற்கவும், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வழியாக பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் முதல்வரின் உரையை மாநாட்டில் ஒளிபரப்பவும், அமைச்சர் தங்கம் தென்னரசு இலங்கை செல்லவும் அனுமதிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது. ஆனால் அதேவேளையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவும் குறிப்பாக, மலையகப் பகுதியில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய அரசு நன்கு திட்டமிட்டே இவ்வாறு செய்திருக்கிறது என்பது புலப்படும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எக்காரணம் கொண்டும் தாய்த் தமிழ்நாட்டுடன் எத்தகைய உறவும் கொள்ளக் கூடாது என இந்திய அரசு கருதுகிறது.

வெளிநாடுகளுக்கு இந்தியத் தூதுவர்களை நியமிக்கும் போதுகூட, அப்பதவிகளுக்குத் தமிழர்கள் யாரும் நியமிக்கப்படுவது கிடையாது. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கூட தூதுவர்களாகத் தமிழர்கள் நியமிக்கப்படுவது இல்லை. இந்திய அரசின் இப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக முதல்வருக்கும் அமைச்சருக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பாக இதைத் தமிழர்கள் பார்க்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் அவமதிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர் என்பதை இந்திய அரசு உணரவேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அதுகுறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

கடந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. இவை குறித்த சில விவரங்களை இப்போதைய அரசு உணர்வதற்காக அவற்றைக் கீழே தருகின்றோம்.

இந்தியாவில் உள்ள மேற்குவங்க மாநிலத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையே ப்ராக்கா அணைப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் கிடந்தன.

மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு, வங்க தேசத்திற்குச் சென்று அந்நாட்டின் குடியரசுத் தலைவரான ஷேக் ஹசினா பேகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக பிரச்சனைகளுக்குச் சுமூகமான தீர்வுக் காணப்பட்டது. மாநில முதல்வர் என்ற முறையில் அந்நிய நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டில் ஜோதிபாசு அவர்கள் கையெழுத்திட முடியாது. எனவே அவர் டெல்லிக்குச் சென்று அப்போதைய தலைமையமைச்சர் தேவ கௌடாவைச் சந்தித்துப் பேசி, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடும்படிச் செய்தார்.

அதைப்போலவே இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கும், பாகித்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்குச் சுமூகமான தீர்வைக் கண்டனர். பின்னர் இரு முதல்வர்களும் தத்தமது நாடுகளின் தலைமையமைச்சரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாட்டில் கையெழுத்திடச் செய்தனர்.

இந்தியாவின் பிற மாநிலங்களான மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகியவற்றின் முதல்வர்கள், அண்டை நாடுகளுடன் தங்கள் மக்கள் பிரச்சனை குறித்து பேசவும் உடன்பாடு காணவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் பேச்சை இலங்கைத் தமிழர் மாநாட்டில் ஒலிபரப்பவும், தமிழக அமைச்சர் ஒருவர் அம்மாநாட்டில் பங்கேற்கவும் இந்திய அரசு தடை விதிக்கின்றது. மொத்தத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு அவமதிப்பும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் இதை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.