இன்று மாவீரர் நாள்
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில் உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பு அளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல் என்றோ ஒரு நாள் தமிழீழத்
தாயகம் திரும்பி, அங்கு எமது மக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணி செய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.
எனது அன்பார்ந்த மக்களே,
முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமது வளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கான விநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படை இயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம் பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படை இயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில் தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கி நின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்கு இதுவே காரணமாகும்.
ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவா கருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலை சூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப் பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்கள அரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறதுஇவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப் படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழ தாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்து சுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவே ஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமது மக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும் வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்கு ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்த நாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத் தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத் தானும் பெற்றுத் தரவில்லை.இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமது தேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக் கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளைய தலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப் படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும் எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும் எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்ட எமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர் வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதை நிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம் மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம்.
எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமது சுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்த போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும்.
ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின் அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ் பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையே அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மிய வாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்ட தரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கான பொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படாது.
இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும் உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்து துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடு பற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும் எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
எனது அன்பார்ந்த மக்களே,
நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமது மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்த ஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவை ஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில் எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமது மக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேர வேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன்.
மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல் வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையான போராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின் நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமது மக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மிய வளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடிய வகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்ட மக்களாட்சியாகத் “தமிழீழம்” என்ற தனியரசு அமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள் கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு வழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடிய அரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல் இல்லை.
சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்கு எதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்கள இனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம் கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்ட வகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டு அப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும் நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீக உரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமது அறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எனது அன்பார்ந்த மக்களே,
எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமது பாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம் மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின் ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” |