27.11.2023 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 11ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் பேரமைப்பின் துணைத் தலைவர்கள் அயனாபுரம் சி. முருகேசன், சா. இராமன், த. மணிவண்ணன், ஜோ. ஜான்கென்னடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாவீரர் நாளையொட்டி பிரபாகரனின் மகள் துவாரகா இணையதளம் வழியாக உரையாற்றினார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் பழ. நெடுமாறன் கூறியதாவது-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா, மாவீரர் நாளில் இணையம் வழியாக உரையாற்றியிருக்கிறார். பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் போராட்டம் தொடரும் எனவும், அதற்கு தமிழர் உதவ வேண்டும் எனவும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல, நாங்கள் அவர்களை எதிரிகளாக கருதவில்லை. சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இனவெறியர்களும் தான் தங்களுடைய தன்னலத்துக்காக சிங்கள மக்களிடம் வெறியூட்டி எங்களுக்கு எதிராக ஏவிவிட்டுள்ளனர். நாங்கள் ஒருபோதும் சிங்கள மக்களை வெறுத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த போரின் போது பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாகக் கூறினர். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்னாள் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பொருள் என்ன? அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
துவாரகாவின் பேச்சை கேட்ட மக்கள் எல்லோருக்கும் எழுச்சி ஏற்படும். எல்லோருக்கும் நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்படும். மீண்டும் தமிழீழ மக்களுக்கு ஆதரவளிப்பார்கள்.
கடந்த ஆண்டு சிங்கள மக்கள் இராசபக்சேவுக்கு எதிராகப் போராடினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அங்குள்ள தமிழர்களும்தான். அனைத்து சிங்கள அரசியல் கட்சியினருக்கும் எதிராக போராடினார்கள். அந்த போராட்டம் இன்னும் ஓயவில்லை.
உலகில் 50 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இந்த தாய் தமிழகம்தான். தாய் தமிழகத்தில் எத்தனை அரசியல் பாகுபாடு இருந்தாலும், நாம் ஒன்றுபட்டால்தான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். எனவே நாம் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். |