தலைவன் வாழும் மலையை மறைத்த பட்டுப்பூச்சிகள் – தலைவியின் ஏக்கம் ஆண்டாள் பாசுரம் எடுத்துக்காட்டும் அறிவியல் உண்மை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2024 12:31

பண்டைய தமிழகம் முப்புறமும் கடலால் சூழப்பட்டு சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.  தமிழகத்தின் கிழக்கில் வங்கக் கடலும் அதன் கரையோரத்தின் தென் பகுதியில் பாண்டிய நாடும், வட பகுதியில் சோழ நாடும் அமைந்திருந்தன.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலும், அதன் கரை நெடுகிலும் சேர நாடும் அமைந்திருந்தது. பழந்தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இயற்கையாக எழுந்து நின்று அரண் அமைத்தன. தமிழ்நாட்டின் தெற்கே இந்திய பெருங்கடல் அலைமோதிக் கிடந்தது. 

butterfly smallதமிழ்நாட்டின் கிழக்குக் கடலில் பாண்டிய நாட்டில் கொற்கை, சோழநாட்டில் புகார், மேற்குக் கடலில் முசிறி போன்ற பழந்துறைமுகங்கள் புகழ்பூத்துக் காட்சித் தந்தன. மேற்கு நாடுகளான கிரேக்கம், எகிப்து, ரோமாபுரி போன்ற நாடுகளின் வணிகர்களும், கிழக்கு நாடுகளான சீனம், கடாரம், சாவகம் போன்ற கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும் தமிழ்நாட்டின் துறைமுகங்களுக்கு வந்து தங்களின் மது, சாடிகள், பாவை விளக்குகள் போன்ற சரக்குகளை விற்று பதிலுக்கு தமிழ்நாட்டின் முத்துகள், மணிகள், அகில், சந்தனம், பட்டை, மிளகு, துணி போன்ற பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர். தமிழ்நாட்டின் துறைமுக நகரங்களில் 18 மொழிகள் பேசிய புலம்பெயர்ந்த மக்கள் திரிந்தனர் என நமது இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றானதும் மாங்குடி மருதனாரால் இயற்றப்பெற்றதுமான மதுரைக் காஞ்சி, பாண்டியர் தலைநகரமான மதுரை நகரின் அழகினையும் சிறப்பினையும் குறித்துப் பாடுகிறது. அதைப்போல கடிகலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை சோழர் தலைநகரமான பூம்புகார் நகரின்எழில் தோற்றத்தைப் பாடுகிறது.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் மதுரை நகரின் தோற்றம் புலப்பட்டது. மதுரைக் காஞ்சியில் வர்ணிக்கப்பட்டது போலவே அகழ்வாராய்ச்சியில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன. அதைப்போலவே பூம்புகார் கடல் ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மைகள் பட்டினப்பாலையில் வர்ணித்ததைப் போலவே அமைந்திருந்தன. ஆக நமது புலவர்கள் எதையும் மிதமிஞ்சிய கற்பனையால் படவில்லை. உள்ளதை உள்ளபடியே பாடியுள்ளனர் என்பது புலனாயிற்று.

நமது இலக்கியங்கள் கூறுவது புலவர்களின் கற்பனை என்ற கருத்தோட்டம் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களின் மூலம் முற்றிலும் தவறானது என்பது நிறுவப்பட்டது. நமது புலவர்கள் தாங்கள் நேரில் கண்டதை எழுத்தில் வடித்திருக்கிறார்களே தவிர, கற்பனையாக அவர்கள் எதையும் கூறியதில்லை. சங்ககால இலக்கியங்களானாலும் சரி, அதைத் தொடர்ந்து எழுந்த சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களானாலும் சரி, அவற்றுக்குப் பின்னர் எழுந்த பக்தி இலக்கியங்களானாலும் சரி அதையெல்லாம் கற்பனையல்ல; உண்மைகளே என்பதற்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்களிலிருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.

சூடிக்கொடுத்த சுடர் நாச்சியாரான ஆண்டாள் பாடிய திருமொழிப் பாசுரம் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்,

“சிந்துரச் செம்பொடிப் போல்

திருமாலிருஞ் சோலை எங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்

பரந்திட்டனவால்;

மந்தரம் நாட்டி யன்று

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையில்

நின்று உய்தும் கொலோ” (587)

என்பது நாச்சியார் திருமொழி.

தூயவனைப் பிரிந்திருக்கும் நிலையில் அவன் வாழுமிடமான திருமாலிருஞ்சோலை மலையைக் கண்ணாலே கண்டாவது உயிர் வாழலாம் என்று நினைக்கிறாள் தலைவி. ஆனால் அதுவும் வாய்க்காதபடி சிந்துரச்  செம்பொடியைப் போன்ற பட்டுப் பூச்சிகள் மலை முழுவதையும் மறைத்துவிட்டனவாம். எனவே, அழகர்  விரித்த வலையிலிருந்து நாம் தப்புவோமா? என்று வருந்துகிறாளாம் தலைவி.

இதற்கு உரையெழுதிய பெரிய வாச்சான் பிள்ளை, ‘தலைவனைக் காணப் பெறாவிடினும் அவன் நாட்டு மலைகளையாவது கண்டு ஆற்றியிருக்க முடியாதபடி அவையும் தோன்றாது ஒழிய வேண்டுமோ?’ என்கிறார், மேலும்,

“அவன் நாட்டில் குன்றும் கொடியவோ

ஒன்றும் தோன்றா?”

என்று தமிழ் இலக்கியங்களிலும் கவி பாடினார்களன்றோ?” என்றும் குறிப்பிடுகின்றார். ‘தலைவனுடைய நாட்டில் அவனுடைய மலையும் தலைவிக்கு விரும்பத் தக்கதாயிருக்கும்’ என்பதைத் தமிழருடைய துறையிலே அருளிச் செய்கிறார்” என்று அரும்பத உரை இதற்கு விளக்கம் அளிக்கிறது.

இங்குத் தமிழர் துறை என்றது அகப்பொருள் துறைகளையே. அத்துறை தழுவியமைந்த நாச்சியார் பாசுரத்தையும் தமிழர் துறையறிந்து விளக்கம் தந்த பெரிய வாச்சான் பிள்ளை உரையையுமே அரும்பதம் இவ்வாறு குறிப்பிடுகின்றது. மேலே பெரியவாச்சான் பிள்ளை காட்டியது போன்ற செய்யுளடிகளை நாம் சங்க நூல்களிற் காணவியலாது. எனினும், அது சங்கச் செய்யுளின் போக்கை ஒத்திருக்கின்றது; கீழ்வரும் பாடல்களை நோக்கி இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

“அவர்நாட்டுக்

குன்றம் நோக்கினென் தோழி!

பண்டை யன்றோ கண்டிசின் நுதலே” என்பது கபிலரின் குறுந்தொகைச் செய்யுள்.

“கண்ணீர் அருவி யாக

அழுமே தோழி அவர்பழமுதிர் குன்றே”

என்பது நற்றிணைச் செய்யுள். பாடியவர் நல்லந்துவனார். இதனாலும் ஆழ்வார் பாசுரங்களில் அகத்திணை மரபின் தொடர்ச்சியைக் காணலாம்”.

மலையை மறைக்கும் அளவுக்குச் சின்னஞ்சிறு பட்டுப் பூச்சிகள் பறந்து வந்து அம்மலையைச் சூழ்வது நம்ப முடியாத கற்பனையாக உள்ளது என இப்பாசுரத்தைப் படிப்போர் கருதலாம். ஆனால், ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டாள் பாடிய இப்பாசுரத்தில் கூறியபடி வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாகவே கிழக்குத் தொடர்ச்சி மலை பகுதிகளைச் சேர்ந்த ஏற்காடு, பச்சைமலை, கொல்லி மலை, கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து ஏராளமான பட்டுப் பூச்சிகள் கிளம்பி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியைச் சேர்ந்த நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மலைகளை நோக்கிப் பறந்து சென்று அங்குள்ள மரங்களில் தஞ்சமடைவதை இன்றும் காணலாம்.

இயற்கை மற்றும் பட்டுப்பூச்சி சங்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2013ஆம் ஆண்டிலிருந்து கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செப்டம்பர் மாதத்தில் பட்டுப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்வதை ஆய்வு செய்து வருகின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ள இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் நாச்சியார் அறிந்து தனது பாசுரத்தில் பதிவு செய்துள்ளது வியப்புக்குரிய செய்தியாகும்.

(28.11.2023 – HINDU – ஆங்கில நாளிதழில் Observes of ‘The Nature and Butterfly Society’ கூறியுள்ள செய்தி)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.