நெருக்கடிகளிலிருந்து இந்தியாவை மீட்ட தமிழர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2024 14:58

ஆற்காடு சகோதரர்கள் என அழைக்கப்பட்ட திரு. அ. இராமசாமி முதலியார் & திரு. இலட்சுமணசாமி முதலியார் ஆகிய இரு சகோதரர்களும் இரட்டையர்களாவார்கள்.

இருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்தத் துறைகளில் உயர்நிலையை எட்டினார்கள். இராமசாமி முதலியார் சர்வதேசச் சட்டத்துறையில் உலகப் புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார். இலட்சுமணசாமி முதலியார் மருத்துவத்துறையில் மிகச்சிறந்த வல்லுநராகத் திகழ்ந்தார்.

twins 2இருவரும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக விளங்கினார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சுதந்திர ஆட்சியிலும் இருவரும் பல உயர் பதவிகளை வகித்தனர். அதைப்போலவே தமிழகச் சட்டமன்ற மேலவை, ஒன்றிய நாடாளுமன்ற மேலவை போன்றவற்றில் அங்கம் வகித்து அரசுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த இரு சகோதரர்களும் காங்கிரசுக் கட்சியின் சிந்தனைப் பள்ளிக்கு நேர் எதிரான நீதிக்கட்சியின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டவர்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பேரவையை உருவாக்கிய உலக நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட பெருமை இராமசாமி முதலியாருக்கு உண்டு. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமுதாயப் பேரவை அமைப்பின் (unesco) தலைவராக 1945-1947ஆம் ஆண்டுகளில் அ. இராமசாமி முதலியார் பதவி வகித்தார். அதே உலக அமைப்பின் தலைவராக அ. இலட்சுமணசாமி முதலியார் 1954-1956ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தார். மேலும், 1961ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவராக அவர் திகழ்ந்தார். இங்ஙனம் உலக அமைப்புகளின் தலைவர் பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றி புகழ்பெற்ற இருவருமே தமிழர்கள் என்பது மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பெருமை கிட்டியதில்லை.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1942ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகாலம் பதவி வகித்த பெருமை அ. இலட்சுமணசாமி முதலியாருக்கு மட்டுமே உண்டு. வேறு யாரும் இந்தியாவின் எந்த பல்கலைக்கழகத்திலும் இவ்வாறு தொடர்ந்து துணைவேந்தராக விளங்கியதில்லை. அதைப்போல திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அ. இராமசாமி முதலியார் திகழ்ந்தார்.

1947ஆம் ஆண்டு ஆகசுடு 15ஆம் நாள் இந்தியா மற்றும் பாகித்தான் ஆகிய நாடுகள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இந்தியாவிலிருந்த 600க்கும் மேற்பட்ட சுதேச சமத்தானங்களை ஆண்ட மன்னர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அவர்களே முடிவு செய்துகொள்ளலாம் என ஆங்கிலேயர் ஆட்சி அறிவித்துவிட்டு வெளியேறியது. திருவிதாங்கூரில் அப்போது திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயர் தங்களது சமத்தானம் இந்தியாவுடனோ அல்லது பாகித்தானுடனோ இணையாமல் சுதந்திர நாடாக விளங்கும் என அறிவித்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

திருவிதாங்கூருக்கு அருகே அரபிக் கடலில் இருந்த இலட்சத்தீவுகளில் முசுலீம்கள் பெரும்பான்மையினராகத் திகழ்ந்தார்கள். எனவே அத்தீவுகளை கைப்பற்ற பாகித்தான் திட்டமிட்டுப் போர்க்கப்பல் ஒன்றினை அங்கு அனுப்பியது. இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த சர்தார் வல்லபாய் படேல் உடனடியாக அ. இராமசாமி முதலியார் மற்றும் அ. இலட்சுமணசாமி முதலியார் ஆகியோருடன் தொடர்புகொண்டு பேசினார். அவரது அறிவுரைப்படி இரு சகோதரர்களும் திருவிதாங்கூர் மக்களைத் திரட்டி இலட்சத்தீவுக்குச் சென்று இந்தியக் கொடியை ஏற்றினர். இந்தியக் கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பலும் விரைந்து வந்தது. இதன்மூலம் பாகித்தான் பிடியில் சிக்காமல் இலட்சத் தீவு மீட்கப்பட்டது. அதற்கான பெருமை சகோதரர்களான இந்த இரு தமிழர்களையே சாரும்.

அதுமட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய சமத்தானமான ஐதராபாத் மன்னராக இருந்த நிஜாம், தனது நாடு சுதந்திர நாடாக விளங்கும் என்று அறிவித்ததோடு, ரசாக்கர் படை என்ற பெயரில் ஒரு படையையும் திரட்டினார். இந்தியாவுடன் இணையவேண்டும் என்று போராடியவர்களை இந்தப் படை கடும் நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்குவதற்கு முயன்றது. இதற்கு மறைமுகமாக பாகித்தான் அரசு ஆதரவளித்தது. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் அறிவுரையின்படி இந்திய இராணுவம் ஐதராபாத்தை மீட்பதற்கு அனுப்பப்பட்டு மூன்றே நாட்களில் ரசாக்கர் படையை ஒடுக்கி ஐதராபாத்தை மீட்டது.

ஆனால், பாகித்தான் இது குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் புகார் செய்தது. அப்போது சர்தார் வல்லபாய் படேல் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவின் சார்பில் வாதாடுவதற்காக அ.இராமசாமி முதலியார் அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார். அங்கு அவர் “இந்தியா மேற்கொண்டது இராணுவ நடவடிக்கை அல்ல. அதுவொரு போலீசு நடவடிக்கை” என வாதாடினார். அதாவது, இராணுவ நடவடிக்கை என்பது, இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது; அல்லது தனது நாட்டின் மீது படையெடுத்து வரும் அந்நிய நாட்டை எதிர்த்துப் போரிடுவதாகும். ஆனால் போலீசு நடவடிக்கை என்பது உள்நாட்டில் மூண்டெழும் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்குப் பயன்படுவதாகும். இந்த வாதத்தை பாதுகாப்புக் குழுவில் இருந்த பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டன. பாகித்தான் தீர்மானம் தோல்வியடைந்தது. அன்று அ. இராமசாமி முதலியார் சென்று திறமையுடன் வாதாடி ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததை ஐ.நா. பாதுகாப்புக் குழு ஏற்கும்படிச் செய்தார். இல்லாவிட்டால், காசுமீர் பிரச்சனை போல இதுவும் இன்றுவரை தீராத தலைவலியாக இந்தியாவிற்கு அமைந்திருக்கும்.

காங்கிரசு அரசியல் சிந்தனையோட்டத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த இரு தமிழர்களும் காங்கிரசு ஆட்சியில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் அதிலிருந்து அதை மீட்பதற்குத் தங்களது அறிவாற்றலைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்ததாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.