உலகம் கண்டறியாத வகையில் இனப்படுகொலைக்கு ஆளாகி நலிந்து கிடக்கும் ஈழத் தமிழர் நிலை குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாநாட்டினை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கூட்டியுள்ளதை வரவேற்று மனமாறப் பாராட்டுகிறேன்.

“ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொது மக்கள் வாக்கெடுப்புக் கூட்டம்” என்ற பெயரில் நடைபெறும் இக்கூட்டத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று வெளியிட்டுள்ள இந்த பிரகடனம் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர் வாழ்வில் விடிவைக் கொண்டுவருவதற்கு உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உலக வரலாற்றில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களின் விடுதலைக்கான பிரகடனங்களை வெளியிட்டு சுதந்திர அரசுகளையும் அமைத்துள்ளன. இந்திய நாட்டின் விடுதலைக்காக அயல்நாடுகளிலிருந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திய இந்தியப் புரட்சி வீரர்களின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.
1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாளன்று இராசா மகேந்திர பிரதாப் தலைமையில் ஆப்கானித்தானின் தலைநகரமான காபூலில் முதலாவது இந்திய சுதந்திர அரசு நிறுவப்பட்டுப் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழன் செண்பகராமன் பொறுப்பேற்றார்.
1917ஆம் ஆண்டில் மூண்டெழுந்த அக்டோபர் புரட்சியின் விளைவாக கொடுங்கோலன் ஜார் ஆட்சி அகற்றப்பட்டு மாபெரும் தலைவர் லெனின் அவர்கள் தலைமையில் சோவியத் ஆட்சி பதவியேற்றது. இந்நிகழ்ச்சி இந்திய விடுதலை வீரர்களுக்கு எழுச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஊட்டியது. உடனடியாக இராசா மகேந்திர பிரதாப் லெனினைச் சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1919ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் அவர் தலைமையில் ஐவர் கொண்ட ஒரு தூதுக்குழு மாஸ்கோ சென்று லெனின் அவர்களைச் சந்தித்து இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவுமாறு வேண்டிக்கொண்டது. இக்குழுவில் மண்டயம் திருமாச்சாரியா என்னும் தமிழரும் கலந்துகொண்டார் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் ஒன்றாகும். இவரின் குடும்பம் பாரதியாரைப் போற்றி அவருக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்த குடும்பமாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் காவலில் இருந்து தப்பி செர்மனி நாட்டுக்குச் சென்று அங்கு இட்லர் அரசின் உதவியுடன் இந்திய தேசிய இராணுவம் அமைத்ததும், பிறகு சிங்கப்பூர் சென்று அங்கு சப்பானிய அரசின் உதவியுடன் சுதந்திர இந்தியப் பிரகடனத்தை வெளியிட்டு சுதந்திர அரசு ஒன்றை நிறுவியதும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.
உலக வரலாற்றில் பல்வேறு நாட்டு மக்கள் இவ்வாறு அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்காகத் தொடர்ந்து போராடியதும் சுதந்திரப் பிரகடனங்களை வெளியிட்டதும் பதிந்துள்ளது. அந்த வகையில் இன்று ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப்பிரகடனம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தகைய நாடுகள் சிலவற்றின் விடுதலைப் போராட்டம் குறித்தும் அவர்களுக்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்கு முறைகள் குறித்தும் ஐ.நா. பேரவை தலையிட்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகள் விடுதலைபெற வழிவகுத்தமை குறித்தும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எரித்திரியா
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளஎரித்திரியா நாடு 1880ஆம் ஆண்டு வரை இத்தாலியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு குடியேற்ற நாடாக விளங்கியது. இரண்டாம் உலகப் போரில் இத்தாலி தோற்கடிக்கப்பட்டதின் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்நாடு ஒப்படைக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு ஐ.நா. பேரவை இந்நாட்டினை எத்தியோப்பியா நாட்டுடன் இணைத்தது. 10ஆண்டுகளுக்குமேல் இந்த இணைப்பு நீடிக்கவில்லை. எரித்திரியா மக்கள் தங்களுக்கு சுயாட்சி உரிமை கோரி போராடத் தொடங்கினார்கள். எத்தியோப்பிய மன்னராட்சி கடும் ஒடுக்குமுறைகளை ஏவி எரித்திரியா மக்களை அடக்கியது.
1974ஆம் ஆண்டில் எத்தியோப்பிய மன்னருக்கெதிராக அந்நாட்டின் மக்கள் செய்த கிளர்ச்சியின் விளைவாக அவர் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். அதற்குப் பிறகு எத்தியோப்பியாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. இதற்கு சோவியத் நாடு அனைத்து உதவியையும் செய்தது. மற்ற கம்யூனிஸ்டு நாடுகளும் இதற்கு அங்கீகாரம் அளித்தன. ஆனால், இந்த ஆட்சியை எதிர்த்து போராடிய எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி என்னும் அமைப்புக்கு செஞ்சீனம் உதவ முன்வந்தது.
1980களில் எத்தியோப்பிய அரசுக்கு அளித்த ஆதரவை சோவியத் நாடு விலக்கிக் கொண்டது. எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி தனது போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி 1991ஆம் ஆண்டு மே மாதத்தில் எத்தியோப்பிய படைகளைத் தோற்கடித்தது. பின்னர் ஐ.நா. தலையிட்டு இருதரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்விளைவாக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் எரித்திரிய மக்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மிகப்பெரும்பான்மையினர் எரித்திரியாவின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கொசோவோ
ஐரோப்பா கண்டத்தில் உள்ள யூகோசுலோவிய நாட்டிலிருந்த ஒரு குடியரசான செர்பியாவின் ஒரு மாநிலமாக கொசோவோ திகழ்ந்தது. கொசோவோவில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலோர் அல்பேனியர் ஆவார்கள். எனவே செர்பியர்களின் ஆதிக்கத்தின்கீழ் அவர்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை. கொசோவோ சட்டமன்றம் கூடி, கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகவேண்டும் என்ற தீர்மானத்தை மிகப்பெரும்பாலான வாக்குகளினால் முடிவு செய்தது. 1968ஆம் ஆண்டில் கொசோவோ தனி மாநிலமாக்கப்பட்டது.
1980களில் யூகோசுலோவியாவில் இருந்த பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய கிளர்ச்சிகளின் விளைவாக அந்நாடு உடைந்து சிதறியது. 1990ஆம் ஆண்டு சூலையில் கொசோவோ தனி நாடு பிரகடனத்தை வெளியிட்டது. அல்பேனியா நாடு இதற்கு அங்கீகாரம் கொடுத்தது. யூகோசுலோவியா இதற்கு எதிராக தனது படைகளை அனுப்பியது. இதன்விளைவாக கொசோவோ விடுதலைப் படைக்கும் யூகோசுலோவியா படைகளுக்குமிடையே பெரும் போர் மூண்டது. 1999ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தலையிட்டு யூகோசுலோவியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது. வேறு வழியின்றி நேட்டோ அமைப்பு தனது படைகளை கொசோவோவுக்கு அனுப்பியது. அதன் விளைவாக அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது. 2008ஆம் ஆண்டு கொசோவோ தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. 13ஆண்டு காலத்திற்கும் மேலாக சர்வதேச நாடுகள் இதை புறக்கணித்தன. இறுதியாக சர்வதேச நீதிமன்றம் கொசோவோ பிரகடனம் சர்வதேசச் சட்டபடி சரியானதே எனத் தீர்ப்பளித்தது. அதன்பின் சர்வதேச நாடுகள் கொசோவோ நாட்டை அங்கீகரித்தன.
கிழக்கு திமோர்
ஆசியா கண்டத்தில் உள்ள கிழக்கு திமோர் இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள திமோர் நாட்டை 1976ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா ஆக்கிரமித்து வைத்திருந்தது. இக்காலகட்டத்தில் 1,80,000த்திற்கும் மேற்பட்ட கிழக்கு திமோர் மக்கள் இந்தோனேசியப் படைகளால் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். மனித உரிமை மீறல்களும் நடைபெற்றன. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திர நாடு கோரிக்கை எழுந்தது.
கிழக்கு திமோர் மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக போர்ச்சுக்கல், பிலிப்பைன்சு, ஆசுதிரேலியா மற்றும் மேற்கு நாடுகள் பல குரல் கொடுத்தன. ஆனால், அமெரிக்கா இந்தோனேசியாவிற்கு ஆதரவாக தனது படைகளை அனுப்பியது. அமெரிக்காவின் இச்செயல் கிழக்கு திமோர் மக்களால் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றாலும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது. எனவே அமெரிக்கப் படைகள் வெளியேறின. 1999ஆம் ஆண்டு ஆகசுடு 30ஆம் நாள் அன்று கிழக்கு திமோரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிழக்கு திமோர் சுதந்திர நாடாக வேண்டும் என மிகப்பெரும்பாலான மக்கள் தீர்ப்பளித்தனர். அதை உலகம் ஏற்று கிழக்கு தைமூர் நாட்டிற்கு அங்கீகாரம் அளித்தது.
உலக ஏற்பு
ஒரு தேசிய இனத்தின் நாட்டினை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமானால், அதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
1.வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி
2.நிரந்தரமான மக்கள் தொகை
3.ஒரு அரசு ஆட்சி
4.மற்ற நாடுகளுடன் உறவு கொள்ளத்தக்க வகையில் அமைந்திருப்பது
மேற்கண்ட நான்கும் இருந்தால் உலக நாடுகள் அதை ஏற்கும். சில நாடுகளின் பகுதிகள் அந்நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, சீனாவின் ஒரு பகுதியான தைவான் தீவகத்தை தேசிய சீன அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கிறது. எனவே தைவானை செஞ்சீனம் உள்பட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதைப்போல, வடகொரியா, தென்கொரியா ஆகியவை இரு நாடுகளாகத் திகழ்கின்றன. வடகொரியா கம்யூனிஸ்டு நாடாகவும், தென்கொரியா அமெரிக்க சார்பு நாடாகவும் விளங்குகின்றன. தென்கொரியாவை வடகொரியா அங்கீகரிக்கவில்லை.
வேற்று நாட்டின் கட்டுப்பாட்டில் சில நாடுகள் உள்ளன. செர்மானிய கட்டுப்பாட்டில் சுலோவக் குடியரசு உள்ளது. சப்பானின் கட்டுப்பாட்டில் மஞ்சுகோ உள்ளது. பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுதந்திர நாடாக பெரும்பாலான அரசுகள் அங்கீகரிப்பதில்லை.
ஐ.நா. பேரவையில் தற்போது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. பேரவையின் பட்டயத்தில் தேசிய இனம் என வரையறுக்கப்பட்ட இனங்களுக்குத் தன்னாட்சி உரிமை உண்டு என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகள் கூடி அமைத்த பேரவைக்கு ஆங்கிலத்தில் United Nations என்ற பெயரைச் சூட்டினர். தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பது இதன் பொருளாகும். உலகத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்கென தனி அரசை நிறுவிக்கொள்ளவும், ஆட்சி நடத்தவும் அதிகாரம் பெற்றவை என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.
சுதந்திர நாடுகள் என தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிற சில நாடுகளை ஐ.நா. பேரவை அங்கீகரிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சைப்ரஸ் தீவில் கிரேக்கர்களும், துருக்கியர்களும் வாழ்கிறார்கள். இதில் துருக்கியர்கள் வாழும் பகுதியினர் தனியாகப் பிரிந்து துருக்கிய சைப்ரஸ் நாடு என்ற பெயரில் இயங்குகிறார்கள். அதை துருக்கிய அரசு அங்கீகரித்திருக்கிறது. ஆனால், உலக நாடுகள் ஏற்கவில்லை.
பல தேசிய இனங்கள் தங்களை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக ஆகவேண்டும் என்பதற்காக போராடுகின்றன. திபெத் தனி நாடாக விளங்கியதை செஞ்சீனம் ஆக்கிரமித்து தனது நாட்டிற்குள் இணைத்துக்கொண்டது. இதை எதிர்த்து தலாய் லாமாவும் அவரைச் சார்ந்தவர்களும் திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தலாய் லாமாவுக்கு அரசுக்குரிய மரியாதையை இந்தியா வழங்கியுள்ளது. அதன் விளைவாக இந்தியாவில் உள்ள திபெத்தியர்கள் அகதிகளாகக் கருதப்படவில்லை. மாறாக, உலக நாடுகளின் உதவிகளை தலாய் லாமா பெற்று அவருடைய நிர்வாகத்தின் கீழ் இந்த திபெத்திய மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.
பாகித்தானில் உள்ள பட்டாணியர்கள் தங்களுக்கென்று பக்டுத்தான் நாடு அமைக்கப் போராடி வருகின்றனர்.
இங்கிலாந்திலிருந்து சுகாட்லாந்து பிரிந்து தனி நாடு ஆகவேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. அதற்காக பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 48% மட்டுமே ஆதரவு தந்ததால் பிரிய முடியவில்லை. ஸ்காட்லாந்தில் ஆங்கிலேயரும், பிற தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்வதால் தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று சுகாட்லாந்தியர் கூறுகின்றனர். எனவே மீண்டும் சுகாட்லாந்தியருக்கு மட்டுமே வாக்குரிமை அளித்து தேர்தல் நடத்தவேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
இதைப்போன்று இன்னும் பல நாடுகளில் பல தேசிய இனங்கள் தங்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தமிழீழம் ஆகும். தமிழீழத்தின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மிகச் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அரசை அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வரவில்லை. அவ்வாறு அங்கீகரிப்பதற்குத் தேவையான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, நிரந்தரமான மக்கள் தொகை, ஒரு அரசு, உலக நாடுகளுடன் உறவு கொள்வதற்குத் தேவையான தகுதி அத்தனையும் தமிழீழத்திற்கு இருந்தும்கூட, இந்தியாவின் தூண்டுதலின் விளைவாக 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து நின்று சிங்களருக்கு ஆயுத உதவி, நிதியுதவி உள்பட அத்தனையும் அளித்து தமிழீழத்தை மீண்டும் சிங்களப் பேரினவாத ஆட்சி ஒடுக்குவதற்குத் துணை நின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் இந்த மாநாடு இங்கு கூட்டப்பட்டு ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான “பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:
தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம்
ஆதி காலத்திலிருந்தே, தமிழ்நாட்டு மக்களும், தற்போது இலங்கை என்று அழைக்கப்படும் தீவில் உள்ள ஈழத் தமிழ் மக்களும் இன, மொழி, கலாச்சாரம் மற்றும் மத மரபுகளின் வழியாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டு மக்கள், ஈழத் தமிழர்களுக்கு வரலாற்று ரீதியாக உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கி வந்துள்ளனர். ஆகையாலும்;
இலங்கைத் தீவின் முதல் பூர்வீகக் குடிகள் ஈழத் தமிழர்கள் மற்றும் 16ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த போரத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு தொடங்கும் வரை, அத்தீவில் தனித்தனி இறைமையுள்ள தமிழ், சிங்கள அரசுகள் இருந்துள்ளன என்பதுடன் மற்றும் 1833இல் இருந்து மட்டுமே, ஆங்கிலேயர்களால் முழுத் தீவும் ஒன்றிணைக்கப்பட்டதுடன், அதன்பின்னர், 1948இல் ஆங்கிலேயர்கள் தீவை விட்டு வெளியேறிய போது, தமிழர்களின் அனுமதியின்றி அதிகாரம் ஒருதலைப்பட்சமாக சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகையாலும், மற்றும்
1948ஆம் ஆண்டு முதல் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற இலங்கை அரசாங்கங்கள், ஈழத் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்து, பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று, தமிழ் இனப்படுகொலை செய்து, முழுத் தீவையும் கைப்பற்றி அதில், ஒற்றை சிங்கள பௌத்த நாட்டை உருவாக்கும் குறிக்கோளுடன், தற்போது தமிழர்களின் தாயகத்தை அடாவடித்தனமாகவும், வேகமாகவும் அழிப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆகையாலும்,
எனவே, இப்போது, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கூட்டாக பின்வருவன பிரகடனப்படுத்தப்படுகின்றன.
1.1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டதன் மூலம், ஈழத் தமிழ் மக்களின் தாயகத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, ஈழத் தமிழ் மக்களின் ஆறு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும், ஈழத் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், அன்றைய இந்திய தலைமையமைச்சர் வழங்கிய வாக்குறுதியின்படி, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை 19 வருடங்களாக உறுதிப்படுத்திய இந்தியா, 2007ஆம் ஆண்டில் இலங்கை ஒருதலைப்பட்சமாக ஈழத்தமிழ் மக்களின் தாயகத்தை வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிளவுபடுத்தியதைக் கருத்திற்கொண்டு, நிலத்தொடர்பான வடக்கு-கிழக்கு மாகாணங்களை மீண்டும் நிரந்தரமாக இணைத்து ஈழத் தமிழர் தாயகத்தைப் பேண இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
2. ஈழத் தமிழர் தாயகத்தை அழிக்கும் இலக்குடன் சிங்கள-இலங்கையானது தமிழர் நில அபகரிப்பு, தமிழர்-வரலாற்று இடங்களை அழித்தல், மேலும் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் போன்றவற்றை கட்டும் நடவடிக்கைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றதை கருத்தில் கொண்டு, இந்த தமிழர் விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி, ஈழத்தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க இந்தியா உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3.ஏற்கெனவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இலங்கையின் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை, தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கவோ, நிர்பந்திக்கவோ கூடாது.
4.ஈழத் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை இந்தியா முறையாக அங்கீகரித்து, தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அவர்களின் பாரம்பரிய தாயகத்தில், சர்வதேச சட்டங்களின்படி அவர்களின் அரசியல் நிலையை சுதந்திரமாகத் தீர்மானிக்க இந்தியா உதவ வேண்டும்.
5.ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிரான கடந்தகால அத்துமீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும், தமிழ் ஈழத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாகத்தை (UN Transitional Administration) நிறுவும் பொருட்டு, சர்வதேச பங்காளி நாடுகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், மேலும் சுதந்திர இறையாண்மை கொண்ட தமிழீழத்தின் அரசியல் தகுதியை சட்டரீதியாகவும், சனநாயக ரீதியாகவும், அமைதியாகவும் தீர்மானிக்க, புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கு சுதந்திரத்திற்கான பொது மக்கள் வாக்கெடுப்பு (Independence Referendum) நடத்த இந்தியா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும்
6.ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (United Nations Human Rights Council) நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கவும், வழிநடத்தவும் வேண்டும். மேலும் இந்த வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (International Criminal Court) மற்றும் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்திற்கும் (International Court of Justice) கொண்டு செல்ல இந்தியா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். |