ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வறிக்கைகளை வெளியிடுக! இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் வலியுறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024 12:27

11.02.2024 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுவின் கூட்டம் பழ. நெடுமாறன் தலைமையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

துணைத் தலைவர்கள் கவிஞர் காசி ஆனந்தன், சா. இராமன், துரை. மதிவாணன், சி. முருகேசன், த. பானுமதி, பொதுச் செயலாளர்கள் ந.மு. தமிழ்மணி, ஜோ. ஜான்கென்னடி, செயலாளர் து. குபேந்திரன், இலக்கிய முற்றத் தலைவர் வி. பாரி உள்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

2022-2023 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கை பொதுச் செயலாளர் ஜோ. ஜான்கென்னடி கூட்டத்தில் முன் வைத்து உரையாற்றினார். வரவு-செலவு கணக்கிற்கு ஆட்சிக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

இக்கூட்டத்தில் சி. முருகேசன், சா. இராமன், ஆத்மநாதன், து. குபேந்திரன், அறிவுறுவோன், சு. பழனிராசன், வேங்கடேசன், கடவூர் மணிமாறன், நல்லதுரை, பானுமதி, காசி ஆனந்தன் உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இறுதியாக உரையாற்றிய பழ. நெடுமாறன், உறுப்பினர்களின் கருத்துகளை வரவேற்றும், அவைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி முன்மொழிந்தார்.

இரங்கல் தீர்மானம்

1. தொல்லியல் அறிஞர், உலகப் பெருந்தமிழர் புலவர் செ. இராசு அவர்கள், வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ஆகியோரின் மறைவிற்கு ஆட்சிக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2.வள்ளலார் அவர்களின் பெயரில் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை இந்த ஆட்சிக்குழு வரவேற்றுப் பாராட்டுகிறது. வள்ளலார் அவர்களின் தத்துவச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டியது இன்றியமையாததாகும். அந்தப் பணியினைத் தொடக்கி வைத்திருக்கும் முதல்வருக்கு இக்குழு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையின் முன்னால் அமைந்திருக்கும் பெருவெளியில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளன்று இலட்சக்கணக்கான மக்கள் கூடி அவரை வழிபாடு செய்கிறார்கள். அந்த இடத்தில் பன்னாட்டு ஆய்வு மன்றக் கட்டடத்தை எழுப்பாமல் அதற்கு அருகேயுள்ள வேறு இடத்தில் இந்த மையத்தை அமைக்க முன்வருமாறு முதல்வரை இக்குழு வேண்டிக்கொள்கிறது.

3.1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஏராளமான தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகுகள், வலைகள் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கும் கடமையிலிருந்து முற்றிலுமாக தவறிவிட்ட இந்திய அரசை இக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அத்துமீறி நமது மீனவர்களைத் தாக்கிவரும் சிங்களக் கடற்படை மீது நடவடிக்கை எடுத்து நமது மீனவர்களைக் காப்பதற்குக் கடலோரக் காவல்படை இதுவரை ஒருமுறைகூட எவ்விதமான எதிர் நடவடிக்கையும் மேற்கொள்ளாததை ஆட்சிக்குழு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை அமைக்கப்பட்டு ஊர் தோறும் செயல்பட்டு வருகிறது. அதைப்போல மீனவர்கள் காவல்படை ஒன்றை அமைத்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்குவதற்குத் தமிழக அரசு முன்வரவேண்டும் என ஆட்சிக்குழு வேண்டிக்கொள்கிறது.

4.இராசீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்களில் 19பேரை முதலிலும், தற்போது 7தமிழர்களையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. ஏறத்தாழ 31 ஆண்டு காலம் சிறையில் சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாகி வெளிவந்திருப்பவர்களில் நால்வர் ஈழத் தமிழர்கள் என்பதால், அவர்களை மீண்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் வைத்திருப்பதை இக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு முன்பாக விடுதலையான 19தமிழர்களில் 9பேர் ஈழத் தமிழர்கள் என்பதையும், அவர்களும் இவ்விதமே சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை இந்திய அரசின் கவனத்திற்கு இக்குழு கொண்டு வருகிறது. எனவே இந்த நால்வரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டுமென இக்குழு வேண்டிக்கொள்கிறது.

5.கீழடியில் அகழாய்வு செய்து அதன் முடிவுகளைத் தொல்லியல் அறிஞர் குழு சார்பாக திரு. அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் ஏழு மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். அதற்கு முன்பாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளும் இந்திய ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளையும் இதுவரை வெளியிடாமல் இந்திய அரசு மிகுந்த காலதாமதம் செய்து வருவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்அறிக்கைகளை உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென இக்குழு வலியுறுத்துகிறது.

6. தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த செப்டம்பர் 23, 24 – சனி-ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாட்டில்” இடம்பெற்றிருந்த “தமிழர் தொன்மை வரலாற்றுக் கண்காட்சி”யை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி, பொது மக்களுக்குத் தமிழர் தொன்மை வரலாற்று உணர்வை ஏற்படுத்துவது என இந்த ஆட்சிக்குழு முடிவு செய்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.