பெற்ற தாய் பிச்சையெடுக்கிறாள்! மகன் காசியில் கோ தானம் செய்கிறான்! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 மார்ச் 2024 11:00

இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களிடம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மால்டா நாட்டின் சரக்குக் கப்பல் ஒன்றினை சோமாலியா கொள்ளையர்கள் பிடித்து 10கோடி ரூபாய் பெறுமான சரக்கினைக் கொள்ளையடித்ததோடு, அந்தக் கப்பலைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு, பிற கப்பல்களைக் கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தி வந்தனர். இக்கப்பலில் பணியாற்றிய 17பேர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

கடந்த மார்ச் 16ஆம் நாளன்று இந்தியக் கடற்படையைச் சார்ந்த போர்க் கப்பல்கள் மற்றும் விமானப் படையினர் 40மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி மால்டா நாட்டின் கப்பலையும், அதன் பணியாளர்கள் 17 பேரையும் மீட்டதோடு, கடற் கொள்ளையர்கள் 35பேரைக் கைது செய்தனர்.

கடந்த பல ஆண்டு காலமாக இந்தியப் பெருங்கடலில் செல்லும் பிற நாட்டுக் கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படைத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய சாதனைகளை புரிந்துவரும் இந்தியக் கடற்படை கரையோர கடற்படை என்ற நிலையிலிருந்து ஆழ்கடல் கடற்படை (Blue Water Navy) என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதாக இந்தியக் கடற்படைத் தளபதி அறிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்த சோமாலியா நாடு, இந்தியாவிலிருந்து 1600 கடல் மைல்களுக்கப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டும் போகிறார்கள். நமது மீனவர்களுக்குச் சொந்தமான இயந்திரப் படகுகள், மீன் வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. நமது மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியக் கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை சிங்களக் கடற்படைக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை. எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற் கொள்ளையர்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, சிங்களக் கொள்ளையர்களிடமிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?

“தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாகவே இந்தியக் கடற்படை கருதவில்லை. எனவே, அவர்களைப் பாதுகாக்க முன்வரவில்லை” என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாகச் சிங்கள வெறியர்களின் அட்டூழியங்களுக்கு இரையாகி வருகிறார்கள். இவர்களின் பிரச்சனையைத் தமிழ்நாட்டின் தேசியப் பிரச்சனையாகக் கருதித் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்று தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழவேண்டும்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை இந்திய அரசு கொண்டுவந்த போது, பஞ்சாப் விவசாயிகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு நின்று, தில்லியை முற்றுகையிட்டு நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசு பணிந்தது; மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றது.

ஆனால், காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்றுபட்டுப் போராட முன்வரவில்லை. காவிரி சமவெளிப் பகுதியில்கூட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து போராடவில்லை. ஆனால், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றன. காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நமக்கு நியாயம் வழங்கியிருந்தும்கூட நமது ஒற்றுமையின்மையின் காரணமாகக் கர்நாடகம் அத்தீர்ப்பை மதிக்க மறுக்கிறது. இந்திய அரசும் நம்மை அலட்சியப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் ஒன்றுபடாததே ஆகும்.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனையைத் தமிழக மக்கள் தங்களின் பிரச்சனையாகக் கருதவேண்டும். மீனவர்களுக்கு ஆதரவாகக் கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வந்தாலொழிய இப்பிரச்சனை ஒருபோதும் தீராது. இந்திய அரசும் நம்மை மதிக்கப்போவதில்லை. இதை எவ்வளவு விரைவில் நாம் உணர்ந்து செயல்படுகிறோமோ அவ்வளவு விரைவில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.