சோழர் – பாண்டியர் பேரரசுகளில் இசுலாமிய அதிகாரிகள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2024 14:38

பிற்காலச் சோழர்கள் மற்றும் பிற்காலப் பாண்டியர்கள் ஆகியோரின் அரசுகளில் உயரதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் முசுலிம்கள் பதவிகளை வகித்துள்ளார்கள் என்ற செய்தி பலருக்கு வியப்பை அளிக்கலாம்.

ஆனால் இவை வரலாற்றுப்பூர்வமான உண்மை என்பதை சோழர் - பாண்டியர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எடுத்துக் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் அரபு, பாரசீகம் ஆகிய மொழிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் உள்ள புதுமை என்னவென்றால் இவற்றுக்கு அருகிலேயே தமிழிலும் இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தமிழ்க் கல்வெட்டுகளில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் ஆகியவையும் தமிழ் எண்களுமே காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் மிகுந்த புகழ்பெற்று விளங்கிய முதலாம் இராசராசசோழன் காலத்தில் (985 – 1014) வடக்கே கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து தெற்கே இலங்கை வரை அவனுடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. இப்பேரரசின் வெற்றிப் பெருமிதத்தின் அறிகுறியாகவும் தமிழர் சிற்பக்கலையின் உயர்சிறப்பினை நிலை நிறுத்தும் வகையிலும் தஞ்சையில் அவன் எடுப்பித்த பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்றும் மெருகு குறையாத வகையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

க்கோயிலுக்கு அவனும் அவனுடைய குடும்பத்தினைச் சேர்ந்தவர்களும் ஏராளமான மானியங்களை வழங்கி உள்ளனர். இக்கோயிலின் நிர்வாகம் குறித்து பல கல்வெட்டுகள் இக்கோயிலிலேயே உள்ளன. இக்கோயிலில் திருமுறைகளை இசையுடன் பாடுபவர்கள் காந்தர்விகள் என்றும் இக்கோயிலில் நடனம் புரிபவர்கள் தளிச்சேரி பெண்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களை நாயகம் செய்யும் உயர் அலுவலராக இருந்தவர் “சோனகன் சாவூர் பரஞ்சோதி” என்பவராவார். உயர் அதிகாரியாக இருந்து தனது கடமையை செய்ததோடு இவர் இக்கோயிலுக்கு விளக்குகள் எரிக்க நெய் வழங்கத் தேவையான 96 ஆடுகளை 32 பொற்காசுகள் கொடுத்து வாங்கி அளித்துள்ளார்

இராசேந்திர சோழன் காலத்தில் (1012 – 1044) கங்கைகொண்ட சோழபுரத்தில் இவர் திருமந்திர ஓலை நாயகமாகவும் பெருந்தரத்து அதிகாரியாகவும் விளங்கியுள்ளார். இந்த இரண்டு பதவிகளும் மிகவும் பொறுப்பான பெரும் பதவிகள் ஆகும். இவருடைய சிறப்பான தொண்டினை பாராட்டும் வகையில் “இராசேந்திர சோழ கந்தர்வப் பேரரையன்” என்ற உயர் பட்டத்தை சோனகன் சாவூருக்கு இராசேந்திர சோழன் வழங்கி உள்ளான். இராசேந்திர சோழனின் எசாயம் செப்பேட்டில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

சோனகன் என்பது இசுலாமியரை குறிக்கும் சொல் என வரலாற்று அறிஞர்களான முனைவர் ஏ. சுப்பராயலு, சா. கிருஷ்ணமூர்த்தி, மா. சந்திரமூர்த்தி ஆகியோர் கூறியுள்ளனர். சோனகன் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் துலுக்கர் என பொருள் கூறுகின்றன. இராசராச சோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு கொடுத்த அணிகலன்களில் “சோனகச் சிடுக்கு” என்பதும் ஒன்றாகும். திருச்செந்தூருக்குச் செல்லும் சாலையில் “சோனகன் விளை” என்ற ஊர் இன்றும் உள்ளது. அதைப்போலவே சோனகன் பேட்டை என்பதும் இசுலாமிய ஊர்கள் ஆகும். கடலூர், தொண்டி, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் இசுலாமியப் பெருமக்கள் வாழும் தெருக்கள் “சோனகர் தெரு” என்று அழைக்கப்படுகின்றன.

ஆனைமங்கலச் செப்பேடு

கடாரத்து மன்னன் மாற விஜயோதுங்க வர்மன், சோழ நாட்டு நாகப்பட்டினத்தில் கட்டிய சூளாமணி பௌத்த விகாரத்திற்கு இராசராசசோழன் ஆனைமங்கலம் என்ற பேருரைக் கொடையாக அளித்தான். இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்தில் அதற்குரிய செப்பேடு எழுதப்பட்டது. இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்தக் கொடைக்குப் பல உயர் அலுவலர்கள் சான்று கையெழுத்திட்டுள்ளனர்.

“சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டின கூற்றத்துப் பிரம்மதேயம் சன்னமங்கலத்துச் சபையோம் சொல்ல எழுதினேன். இவ்வூர்க் கரணத்தான் மதியஸ்தன் துருக்கன் அகமுதனேன் இவை என் எழுத்து என்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து கொடுத்தோம்” துருக்கர் என்பது இசுலாமியர்களை குறிக்கும் சொல். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய கொங்கு நாட்டு அடியார்க்கு நல்லார் “எவனதுருக்கர்” என்ற சொல்லை கையாளுகிறார்.

அஞ்சு வண்ணத்தார்

இலங்கையில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான எஸ். பொன்னுதுரை (எஸ். பொ) “வரலாற்றில் வாழ்தல்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள தன் வரலாற்று நூலில் சோழர்கள் ஆட்சி உச்சம் பெற்றிருந்த காலத்தில் முசுலிம்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்று மட்டுமல்ல, உயர் பதவிகளையும் வகித்தார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

சோழர் காலத்திலே முசுலிம்கள் அஞ்சு வண்ணத்தார் என அழைக்கப்பட்டனர். ஐந்து நேரத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபடியால் அவர்கள் அஞ்சு வண்ணத்தார் என அழைக்கப்பட்டார்கள். இதே பெயரில் வணிகக் குழு ஒன்றும் இயங்கியது. கடல்கடந்த நாடுகளில் இக்குழுவினர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். முசுலிம்களை மட்டுமே கொண்ட வணிகக் குழுவாக இது இயங்கிற்று என்பதை சோழர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல கல்வெட்டுகளில் அஞ்சு வண்ணம் என்ற மிகப்பெரிய கடல் வணிகக் குழுவின் பெயர் காணப்படுகிறது. கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் இவ் வணிகக் குழுவின் பெயர் பற்றி வி. வெங்கையா, டி.ஏ. கோபிநாதராவ், பி.சி. சர்கார், பி.பி. மகாலிங்கம், கே.வி. ரமேஷ், ஏ. சுப்பராயலு ஆகிய பல வரலாற்று அறிஞர்கள் மிக விரிவாக ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அஞ்சு வண்ணம் வணிகக் குழு குறித்த கல்வெட்டில் அலி, முகமது, உமர் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, அஞ்சு வண்ணம் என்பது இசுலாமிய கடல் வணிகக் குழுவே ஆகும் என்பது அறிஞர்களின் முடிவாகும்.

“சோழர் படையில் அகமது என்பவன் பல வீரர்களுக்குத் தலைவனாக இருந்தான் என்று கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது” என குறித்துள்ளார்.

கேரளம் என்ற சொல்லும், மலையாளம் என்ற மொழியும் பிறப்பதற்கு முன்னால் இருந்த சேர நாட்டைச் சேர்ந்த முசுலிம்கள், இலங்கையில் கிழக்கு மாநிலப் பகுதியான மட்டக்களப்பில் குடியேறியிருக்கிறார்கள். மட்டக்களப்பு வாழ் முசுலிம்களுடைய குடிபிறப்புகள், சடங்கு முறைகள், உணவு வகைகள் ஆகியன கேரள நாட்டுடன் தொடர்புடையனவாக இன்று வரையிலும் இருந்து வருகின்றன. மேலும், காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய ஊர்களிலிருந்தும் தமிழர்கள் இங்கு குடியேறியுள்ளனர். அவர்களின் வழிவந்தவர்களே இன்று மட்டக்களப்பில் வாழ்கின்றனர் என உறுதிபடத் தெரவித்துள்ளார்.

பாண்டியர்கள்

பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் முசுலிம்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1314 – 1362) காலக்கல்வெட்டு அவனது 16ஆவது ஆட்சி ஆண்டில் சுல்தான், உய்ய வந்தான், திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு மேற்கண்ட செய்தியைத் தெரிவிக்கிறது.

மாறவர்மன் வீரபாண்டியன் காலக்கல்வெட்டு (1334 – 1367) பவித்திர மாணிக்க பட்டினமான காகிற்றுர் நாடாள்வான், கருப்புடையார் சோனகப்பள்ளிக்கு கொடையாக சோனக வியாபாரிகள் தலைவனுக்குக் கொடுத்த ஆணையைக் கூறுகிறது. இரு போகத்திற்கும் நன்செய், புன்செய் விளைவில் அவ்வூரார் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களுக்கு இதுவரை உள்ள வரிகளும் இனி பிரிக்கப்படும் வரிகளும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக்கல்வெட்டு கிபி (1422 – 1463) துருக்க நயினா பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ, தொழுகை நடத்த அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்றத் திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் இப்பாண்டியனின் 25ஆம் ஆண்டில் நடைபெற்றன எனக் கூறுகிறது.

தென்வாலி நாட்டு பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் இப்பள்ளிக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க அரசன் ஓலை கொடுத்தான். இக்கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன. இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் பொறிக்கப்பட்டது.

பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும் தங்களது ஆட்சிக் காலத்தில் சமயப் பொறையை கடைப்பிடித்தார்கள் என்பதை இசுலாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு அவர்கள் அளித்த மானியங்களும், சைவக் கோயில்களுக்கு இசுலாமியர் வழங்கிய கொடைகளும் அளித்துப் போற்றினார்கள் என்பது மேலே கண்ட சான்றுகள் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மேலும் அரசு உயரதிகாரிகளாகவும், படைத் தளபதிகளாகவும், இசுலாமியர் விளங்கினார்கள் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும். சோழப் பாண்டிய நாடுகளில் சமய நல்லிணக்கம் போற்றி வளர்க்கப்பட்டது என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுச் சான்றுகள் எடுத்து நிறுவுகின்றன.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.