குவியும் பாராட்டுக் கடிதங்கள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:05 |
நீங்கள் எழுதிய நூல் காலத்தால் அழியாத வரலாற்றுப் பெட்டகம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய உன்னத நூல். வரப்போகும் நம் இளைய தலைமுறையினருக்கு பதிவு செய்ய வேண்டிய கடமை தமிழ்ச் சான்றோருக்கு உள்ளது. அதையும் தாங்களே எழுதி யுள்ளது சிறப்புக்குரியது. உலகத் தமிழினத்திற்கு உண்மைக்குரிய மாமனிதராக நீங்கள் விளங்குகிறீர்கள்.
கோ. தமிழ்வேந்தன் சென்னை-48.
தங்களின் "ஈழப்போர்முனையில் புலிகளுடன்'... பதிப்பை அடுத்து' "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்', கையில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இங்கே இருபத்தி ஐந்து பவுண்டுகள் தங்கள் பதிப்பு. தலைவனின் வரலாறு அற்புதம். வேலூர் சிறையுடைப்பு, தலைவரின் கைப்பட எழுதிய கடிதங்கள், அனைத்தும் அற்புதம்.
பாபு சுதா, இலண்டன்.
"பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் முழுவதையும் படித்தேன். ஆழ்ந்து ஊன்றிப் படிக்கும்படியான பெரியதோர் அரியநூல். நற்றமிழ், நன்னடை, வாக்கிய அமைப்பு, படிக்கப் படிக்க சுவை. தம்பி உங்களிடமும் நீங்கள் தம்பியிடமும் வைத்திருக்கும் பற்றுறுதி வியப்புறச் செய்கிறது.
ஒரு புரட்சியாளரின் வரலாற்றை எழுதியிருக்கும் நீங்கள் "நான்காம் கட்டப் போரையும் உண்மையுடன் ஆய்ந் தறிந்து முழுமையான வரலாறாய் வெளியிடுவேன்' என்று கூறும் உறுதி வரிகள் அவ்வரலாறு வருவது எப்போது எனும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்பி தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களப் போர்ப் படைகளையும் இந்திய அமைதிப் படை யையும் முறியடித்த போர்க்களக் காட்சி களையும் ஓயாத அலைகள் போன்ற படையெடுப்பு நிகழ்வுகளையும் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி யுள்ள பாங்கு எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
புதுச்சேரியில் பிரெஞ்சு அரசுக் குத் துவிபாஷியாக இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை தான் வாழுங்காலத்தில் நடந்த படையெடுப்புகளைப் பற்றிய காட்சிகளைப் படிப்போர் முன் அப்படியே கொண்டுவந்து நிறுத்துவார். அப்படிப்பட்ட குறிப்புகள் (டைரியாக எழுதியவை) இன்று உலகின் சிறந்த இரண்டாவது டைரியாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறே தாங்களும் பதிவு செய்து வரலாற்றில் பதிந்துவிட்டீர்கள்.
ஒரு முழுமையான போராளி வீரத்தில், ஒழுக்கத்தில் போர் நெறியில், சொல் திறத்தில், பண்பாட்டில், மனிதாபிமானத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொன்றாய்க் காட்சிப்படுத்தியுள்ளீர்.
இராணுவத் தாக்குதலில் "ஒருவருக்கு மூவர்' என்பதை மாற்றிக் காட்டிய புலிகளின் வீரத்தையும்,
ஆம்புலன்சில் வெடிபொருள் எடுத்துச் சென்றதைக் கண்டித்து "அது ஒரு புனிதச் சின்னம்' என்று கூறிய தம்பியின் போர் நெறியையும்,
போராளியாயினும் காதல் ஒழுக் கம், இல்லறக் கோட்பாடு நெறிதவறா வாழ்க்கை இவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தம்பியின் இலட்சியங் கள் அனைத்தையும் ஆங்காங்கே சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.
இளம் வயது முதலே போராளி யாய்ப் போன தம்பி பிரபாகரனிடம் இப் படியொரு கல்விப் புலமையா! ஆழ்ந்து அகன்று தெளிவாகக் கற்றுணர்தல் என்னும் மெய்மைப் பாட்டைக் காண முடிகிறது.
இந்திய விடுதலை வரலாறு, நேத்தாஜி போன்ற வடநாட்டுத் தலை வர்கள் வரலாறு, மகாபாரதம் - விவேகா னந்தர் உரைகள் போன்றவற்றைக் கற்ற தம்பி, தமிழர் தலைவர்கள், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய நூல்கள் எதையும் படிக்கவில்லையா? அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அடுத்த வெளியீட்டில் குறித்தல் நன்று.
தமிழீழ விடுதலைப் போர் வர லாற்றில் தமிழ் நாட்டவர், வடநாட்டவர் செய்த துரோகச் செயல்கள் வெளிப் படையாகப் பதிவு செய்யப்பட்டமை நன்றே. தம்பியின் கடிதத்தை வெளி யிட்டு கருணாநிதியின் கீழ்மைச் செயலைப் பதிவு செய்துள்ளீர்.
எம்.ஜி.ஆர். புலிகளுக்குச் செய்த பேருதவியும் அவர் புலிகளிடம் - தம்பி பிரபாகரனிடம் கொண்டிருந்த பேரன்பும் தமிழ்நாட்டு வரலாற்றின் சிறப்புப் பதிவுகளே.
1945இல் நடந்த உலகப்போரின் போது நேர்ந்த நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி இந்திய விடுதலைப் போரின் போது பேசப்பட்டதை "பிரதமர் அட்லிக்கு இருந்த அந்தத் துணிவு ஏன் பிரதமர் ரணிலுக்கு இல்லை' என்ற தங்களின் கேள்வி, இந்திய இலங்கை வரலாற்றையும் ஈழத் தமிழரின் நிலைப் பாட்டையும் புலிகளின் வீரதீரச் செயல் களையும் முழுமனதோடு உணர்ந்த உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடே.ஈழத்தமிழ் மக்களோடு, புலிகளோடு, போர்க் களங்களின் தலங் களோடு எல்லாவற்றுக்கும் மேலாக.
"பிரபாகரன் தமிழர் தேசிய எழுச்சியின் வடிவம்' (பக்கம் 243) என்று, தம்பி பிரபாகரனோடு இத்துணை நெருக் கமாக இருந்து அரும்பணி ஆற்றி யிருப்பது அரும்பெரும் சிறப்பே. "இது பண்டார வன்னியன் உலா வித் திரிந்த காடு. இந்தக் காட்டில் இருந் தபடியே நான் போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவை அடைவேன்' - என்ற தம்பி பிரபாகரனின் வீரமுழக்கம் வெல்லும் நாளை நெஞ்சில் நிறுத்தி அடுத்த வரலாற்றை ஆவலாய் எதிர்பார்க்கிறோம். தமிழ் நலனுக்கு, தமிழர் நலனுக்கு.
தூ. சடகோபன் |