"ஈழ வரலாற்று நூல்களில் முதன்மையான நூல்'' - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 17:04

13-4-12 அன்று சென்னையில் நடைபெற்ற பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

தமிழர் வரலாற்றில் இரண்டு தமிழர்கள் அமைப்புகள் இன்று தடை செய்யப்பட்டுள்ளன. ஒன்று தமிழ் ஈழத்தைச் சேர்ந்த அமைப்பு; இன்னொன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பு. தமிழீழத்தைச் சேர்ந்த அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம். தமிழ நாட்டைச் சேர்ந்த அமைப்பு தமிழர் தேசிய இயக்கம்.

ஈழத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ, நெடுமாறன் அவர்கள் எழுதிய நூல் இங்கே வெளியிடப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்பதால் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதிப்பு உரிமைகள் தடை செய்யப்படவில்லை. அது அரசி யலில் விருப்பம் சார்ந்த கருத்தாக இருக்கலாம். விருப்பத்திற்கு மாறான கருத்தாக இருக்கலாம். ஆனால் பதிப் புரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக ஐநா மன்றத்தால் மனித உரிமை உலக அமைப்புகளால் ஒப்புக்கொள்ளப் பட்ட உரிமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆகவே, இந்த மேடையில் ஒரு ஈடு இணையற்ற தலைவரைப் பற்றிய நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூலை எழுதியுள்ள அனைத்துத் தகுதிகளும் கொண்ட அரசியல் அனுபவம் மிக்க தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் இந்திராகாந்தி அம்மையார் அவர்களால் அவருடைய மூத்த மகன் என்று பாராட்டப்பட்டவர். அந்த மூத்த மகனால் எழுதப்பட்ட பிரபாகரன் பற்றிய நூல் இன்று வெளியிடப்படுகிறது.

இந்திராகாந்தி அம்மையார் மிகப் பெரிய பதவியில் இருந்தார். இந்திரா காந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கலாம். வாய்ப்பு உண்டு. அதை அருமைத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அம்மையார் மீது ஈழத் தமிழர்கள் பாசமும் பற்றும் கொண்டிருந்தார்கள் அந்த அம்மையார் அவர்கள் மறைந்த நேரத்தில் இரண்டு விடுதலைப்புலிகள் கருப்புக் கொடியை யாழ்ப்பாணத்தில் பறக்க விடுவதற்காக கொடிக்கம்பத்தில் ஏற முயன்றபோது சிங்களர்களால் சுட்டு பிணமாக வீழ்த்தப் பட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு. அந்த நேரத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தலைவர் பிரபாகரன் கூறினார். அந்த அஞ்சலியில் கலந்து கொள்ள முடிய வில்லை என்று பிரபாகரன் அவர்கள் வருத்தத்துடன் அறிக்கை விட்டார்கள்.

1984ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் முயற்சிக்கு இந்தியா தயாராக இருந்தது. விசாகப்பட்டினத்தில் இந்திய இராணு வத்தின் ஒரு படைப்பிரிவு தயாராக இருந்தது. கடல்வழியாகவும் விமானம் வழியாகவும் இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதியைப் பிரித்துத் தமிழீழத்தை உருவாக்க திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் என்ன உணர்வோடு உறுதியாக இந்த திட்டத்தை உருவாக்கி இருந்தார் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் அவர் திட்ட மிட்டதை முடித்திருப்பார். அவர் கண்ட கனவை அவர் நிறைவேற்றியிருப்பார்.

1983ல் உரையாற்றிய போது ஆகத்து 18இல் இந்திரா காந்தி அம் மையார்தான் சொன்னார். இலங்கையில் நடைபெறுவது ஜூனோசைட். - இன வெறிப் படுகொலை நடவடிக்கை என்று சொன்னார். இது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான முதன்மையான கருத்தாகும். இதுவரை யாரும் அங்கு நடைபெற்ற கொடு மையை இனவெறிப் படுகொலை என்று சொன்னதில்லை என்பது தான் எங்களின் துயரமான இன்றைய நிலை.

அந்த அம்மையார் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்கள். எப்பொழுது? ஓரே நாளில் 40000 தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு. ஓரிரு நாட்களில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு 1983இல் அதற்கு முன்பு நடந்த கொலை களைப் பார்த்து தமிழர்கள் மீது நடத்தப் பட்ட இனவெறித் தாக்குதலை வைத்தே அப்படிச் சொன்னார்கள். 1983இலும் அதற்கு முன்பு நடைபெற்ற கொலை களையும் வைத்தே அதற்கு முன்பு இனவெறி நடவடிக்கையைப் பார்த்தே அந்த அம்மையார் இட் ஈஸ் ஜூனோ சைட் - இனவெறிப் படுகொலைத் தாக்கு தல் என்று சொன்னார். அந்தப் பார்வை தான் அந்தப் பாதைதான் அந்த அணுகு முறைதான் தமிழீழ மக்களுக்கு விடு தலையைக் கொண்டுவரத் தூண்டியது. அது இன்று இல்லாமல் போனது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

இன்று ஐ.நா. மன்றத்தின் அந்த மனித உரிமைக்குழு கொடுத்துள்ள அறிக்கை குறைவான அறிக்கை அல்ல. அந்த மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகள் குறித்த அந்த கருத்தை உலகில் முதன் முதல் ஓங்கி ஒலித்தார்கள். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதே நேரத் தில் அது முழுமையான கருத்து அல்ல. மனித உரிமை மீறல் என்ற அளவிலே தான் ஈழத்தில் நடக்கிற நிகழ்வைப் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையிலும் இன வெறிப் படுகொலை என்று சொல்ல வில்லை. இப்பொழுதும் இந்தத் தீர்மானத் திலும் இந்த இனவெறிப் படுகொலை என்ற சொல் இல்லை. மனித உரிமை மீறல் என்றுதான் உள்ளது.

மனித உரிமை மீறல் என்றால் இலங்கையில் இரண்டு மனிதர்கள் இருக் கிறார்கள். ஒன்று சிங்கள மனிதன். மற்றொன்று தமிழ் மனிதன். மனிதனு டைய உரிமை இலங்கையில் மீறப்பட்டி ருந்தால் சிங்கள மனிதனின் உரிமையும் மீறப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மனிதனுடைய உரிமை மட்டும்தான் மீறப்பட்டுள்ளது? அதிலும் அந்த தமிழ் மனிதனுடைய உரிமையை மீறியவன் யார் என்றால் சிங்கள மனி தன். அந்த மண்ணில் வெட்ட வெளிச்ச மாக தெட்டத்தெளிவாக நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு இன வெறி. அதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் தீர்மானத்தை ஒரு புது தொடக்கம் என்று கொண்டா லும் இந்த பெரிய குறைபாடு அந்த தீர்மானத்தில் இருக்கிறது. அமெரிக்கா இந்த கருத்தை மாற்றிக் கொள்ளும் காலம் வரும். அதற்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுகிற காலம் வரும்.

ஒரு பெரிய கொடுமை, இதுவரை இல்லாத கொடுமை அந்தத் தீர்மானத் தில் இருக்கிறது. அதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இலங்கையில் 1833லிருந்த எல்லா அறிக்கையிலும் இலங்கைத் தீவில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அது தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகிறது. அது தாயகம். அப்படிப்பட்ட தாயகம் வடக்கு-கிழக்கு. ஆனால் முதல் தடவையாக வரலாற்றில் அமெரிக்கா வெளியிட்டிருக்கிற அறிக் கையில் தீர்மானத்தில் வடக்கு என்று சொல்கிறார்கள். வடக்கு கிழக்கை விட்டு விட்டார்கள். முதல் தடவையாக தமிழர் களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு பெரிய மாநிலப் பரப்பு கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்தமாக விடப்பட்டு உள்ளது. வடக்கு என்று குறிப் பிட்டிருக்கிறார்கள். கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தை நடத்தி முடித்துவிட்டு தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிற கொடுமையான சூழல். வடக்கு என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளார்கள். இது ஒரு பெரிய கொடுமை. இந்திய அரசு செயவர்த்தனா அரசோடு செய்து கொண்ட உடன்படிக்கையில்கூட இந்த தமிழர்களின் தாயகப் பரப்பு இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. அதுவும் ஒரு பிழையான கருத்துதான்; சொற்றொடர்தான்.

ஏனென்றால் இங்கே என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவில் சென்னை, நெல்லை, மதுரை என்று சொல்லு கிறீர்களா இல்லை. தமிழ்நாடு என்று தான் சொல்லுகிறீர்கள் இல்லையா? அதைப்போல இந்திய அரசு ஈழத்தில் தமிழர்களின் தாயகம் அதன் பெயர் தமிழீழம். தமிழீழம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று ஒப்புக்கொள்கிற இந்திய அரசு/ உங்களுடைய நாட்டில் இருக்கிற மாநில மொழி அடிப்படையிலான உரிமையை ஒப்புக்கொள்கிற இந்தியஅரசு. மாநில உரிமை அந்த அடிப்படையில் பார்த்தால் கூட நீங்கள் தமிழ்நாடு என்று இங்கே சொன்னால் இலங்கையில் உள்ள எங்கள் பகுதியைத் தமிழீழம் என்று சொல்ல வேண்டும். ஏன் சொல்லத் தயங்குகிறீர்கள்? தமிழீழம் என்ற சொல் முன்பு இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் தமிழ்நாடும் சென்னைதான்.

அதுமட்டும் அல்ல. சிங்களர் களுக்கும் தனி நாடு இல்லை. ஒரு காலத்தில் கோட்டை ராஜ்யம் கண்டி ராஜ்யம் என்றுதான் இருந்தது. சிறீலங்கா என்ற பெயர் இல்லை. எங்களுக்கு யாழ்ப்பாண ராஜ்யம். அது தமிழர் களுடைய நாடு.

தமிழ்நாட்டில் சேரநாடு இருந்தது. சோழநாடு இருந்தது. பாண்டிய நாடு இருந்தது. ஆனால் தமிழ்நாடு என்று இல்லை. அதுபோல தமிழீழம் என்ற சொல்லை இந்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். ஈழத்தைத் தமிழர்களின் தாயகம் என்று அரசியல் அமைப்பு ஒப்புக்கொள்கிற வரையில் எங்கள் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டோம். (கைதட்டல்)

இந்த நூல் சிறப்பான நூல். சிறப்பான நூலாக இது அமைந்திருக் கிறது. நான் பேசவேண்டிய கருத் தெல்லாம் இந்த நூலில் இடம் பெற்று இருக்கிறது. பிரபாகரன் ஒரு ஈடு இணையற்ற தலைவன். ஈடு இணையற்ற தலைவன். (கைதட்டல்) என்னோடு பழகி யிருக்கிறார் நெருங்கிப் பழகியிருக்கிறார். தலைவர் நெடுமாறனோடு மிக நெருங்கிப் பழகியிருக்கிறார். என்னோடு வைத்திருக்கும் உறவு என் மீது அவர் வைத்திருப்பது பாசம். நெடுமாறன் மீது அவர் வைத்திருப்பது மரியாதை. மரியாதை. அந்த அளவுக்கு நெடுமாறன் அவர்கள் பிரபாகரனோடு பழகியிருக் கிறார்கள். தலைவர் பிரபாகரனுக்கு நெடு மாறன் அவர்களைப் பற்றி உயர்வான கருத்து இருந்தது. இருந்து கொண்டு இருக்கிறது.

ஆகவே அந்த அரும்பெரும் தலைவர் வரலாறு படைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெண்கள் களத்தில் நின்று போராடியிருக்கிறார்கள். ஆனால் முப்படைகளில் பெண்கள் பணியாற்றிய வரலாற்றை பிரபாகரன் தான் படைத்தார். சேர, சோழ, பாண்டியர்களிடம் படைகள் இருந்தன. தரைப்படை இருந்தது. பெரும் கடற்படை இருந்தது. ஆனால் வான்படை தமிழனுக்குப் பிரபாகரன் தான் கொடுத்தார். (பலத்த கைதட்டல்)

உலக விடுதலை வரலாற்றில் போராளிகள் கழுத்தில் நஞ்சுக் குப்பி யைக் கட்டியவர் பிரபாகரன் அந்த சரித் திரத்தை அவர் தான் படைத்தார். மரணத்திற்கு அஞ்சாத உறுதி. போராளியின் சாவுக்கு அஞ்சாத உறுதி. அதை நிலைநாட்டியவர் பிரபாகரன். இதையெல்லாம் இந்த நூலில் பதிவு செய்துள்ளார் தலைவர் நெடுமாறன்.

மற்ற உலக விடுதலைப் போராளிகளின் வரலாற்றையெல்லாம் எடுத்துப் பார்த்தால் விடுதலைப் போராட் டங்களை எல்லாம் பார்த்தால் அவர் களுக்கு மற்றவர்கள் ஆதரவு இருந்தது. தலைவர் நெடுமாறன் அவர்கள் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வியட்னாம் போராட்டத்தில் சோவியத் மற்றும் செஞ்சீனம் உட்பட பல நாடுகளின் ஆதரவு இருந்தது. பாலத்தீனத்தீன போராட்டத்தை எடுத்துக் கொண்டால் பல அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. நேதாசியின் போராட்டத்தைப் பார்த்தால் செர்மனி, இத்தாலி, சப்பான் போன்ற வல்லரசுகளின் ஆதரவு இருந்தது. ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் போராடிய பிரபாகரனின் வரலாற்றை நாம் பார்க்கிறோம். பெரிய விடுதலைப் போராட்ட வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர் பிரபாகரன். இந்த நூலில் அந்தப் பதிவு இருக்கிறது. இந்த நூல் ஈழத்திற்கு மட்டுமல்ல அத்தனை விடுதலைப் போராளிகள் இயக்கத் திற்கும் வழிகாட்டியாக இருக்கிறது. இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் கருத்துக்கள், பதிவுகள் உலகெங்கும் அலையலையாகப் பாயவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வெறும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு போராடவில்லை. வலிமை ஆற்றல் இருந்தது அவரிடம். அவர் உருவாக்கிய போராளிகளுக்கு அந்த வலிமை ஆற்றல் இருந்தது. அவர் மற்றவர் களிடம் இருந்து வேறுபட்டவர்.

இலங்கைத் தீவில் உங்கள் எல்லை தமிழர்களின் எல்லை என்ன என்று கிட்டுவைப் பார்த்து ஒருவர் கேட்கிறார். இலங்கையில் எங்கெல்லாம் சிங்களரின் குண்டு வீசப்படுகிறதோ அதெல்லாம் எல்லை என்கிறார். (கைதட்டல்) நெடுமாறன் அவர்கள் இந்த நூலில் எழுதுகிறார். மன்னாருக்கு தளபதியாக இருந்த சுதன் என்று ஒரு போராளி. அவன் கடைசியில் சாகடிக்கப் பட்டான். அந்த வீரனைப் பார்த்து நெடுமாறன் அவர்கள் கேட்கிறார். களத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நடுவில் எப்படிப் போகிறீர்கள் என்று கேட்கிறார். அந்த சுதன் தளபதி மாவீரன் அவன் இன்று இல்லை. அவன் சொல் கிறான் அண்ணா தெரிந்து கொள்ளுங் கள் நாங்கள் களத்திற்குப் போகிறபோது துப்பாக்கியை மட்டும் கொண்டு போக வில்லை. சவப்பெட்டியையும் சேர்த்தே கொண்டு செல்கிறோம் என்று சொல் கிறான். இப்படிப்பட்ட வீரர்களைத்தான் பிரபாகரன் உருவாக்கினார்.

இராசீவ்-செயவர்த்தனா உடன் படிக்கையின்போது தில்லிக்கு அழைத் துச் செல்லப்படுகிறார் பிரபாகரன். ஒரு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தீட்சித் வந்து அந்த விடுதியில் பிரபா கரனைச் சந்திக்கிறார். தீட்சித் மிரட்டு கிறார். இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். பிரபாகரன் நான் கடைசிவரையில் ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்று சொல் கிறார். ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார். தீட்சித்துக்குக் கோபம் வருகிறது இந்த உடன்படிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என் றால் என்னுடைய சுங்கான் பற்றவைத்து அணைந்து போவதற்குள் எங்கள் இந்தியப் படை உங்கள் வீரர்கள் அத் தனை பேரையும் துவம்சம் செய்துவிடும். ஒப்புக்கொள்ளுங்கள் என்கிறார் தீட்சித். எவ்வளவு கடுமையான சொல் பாருங் கள். ஆனால் பிரபாகரன் சொல்கிறார் நீங்கள் என்ன சொன்னாலும் சரி உங்கள் கோரிக்கைக்கு உடன்படமாட்டேன் என்று சொல்கிறார். தீட்சித்திற்குக் கடுமையான கோபம் வருகிறது. அவர் சொல்கிறார் மிஸ்டர் பிரபாகரன் நான் காவது தடவையாக இந்தியாவை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்கிறார். பிரபாகரன் சிரித்துக்கொண்டே சொல் கிறார். நீங்கள் சொல்வது உண்மை என்றால் நான் நான்கு தடவை என்னுடைய தமிழீழத்தைக் காப்பாற்றி இருக்கிறேன் என்று சொல்கிறார். (கைதட்டல்) அவர்தான் பிரபாகரன். நம்முடைய அரும்பெரும் தலைவர் பிரபாகரன். அவர் சொன்னார் ஒரு தடவை. நேர்காணலில் செயவர்த்தனா பற்றி கருத்து கூறும்படி கேட்கிறார்கள். பிரபாகன் சொல்கிறார். செயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந் திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று சொல்கிறார். இந்த நூலில் அப்படிப்பட்ட கருத்துகளை நாம் பார்க்கிறோம்.

இங்கே பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த நண்பர் நல்லகண்ணு உட்கார்ந்து இருக்கிறார். அமெரிக்கா போட்ட தீர்மானத்தை பொதுவுடைமைக் கட்சி ஆதரிக்கிறது. அமெரிக்கா போட்ட தீர்மானத்தை தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கிறது. எனக்கு பழைய நினைவு வருகிறது. இரண்டாம் உலகப் போரின்போது இரஷ்யா அமெரிக் காவுடன் இணைந்து போரிட்டது. கைகோத்து நின்றார்கள். இட்லரைப் பழிவாங்க. அதேபோல இப்போது அமெரிக்க தீர்மானத்தை பொதுவுடைமைக் கட்சி ஆதரிக்கிறது என்றால் இலங்கை யில் இட்லர் அடையாளம் காணப்பட்டு உள்ளார் என்று பொருள். (கைதட்டல்) அவர்கள் பிரபாகரனை இட்லர் போல அடையாளம் காட்டினார்கள். ஆனால் நீங்கள் காட்டிய அடையாளம் தவறா னது. உண்மையில் யார் இட்லர் என்றால் மகிந்த இராசபக்சே தான் இட்லர் என்பதை அடையாளம் காட்டுவது போல அமெரிக்காவுடன் கம்யூனிசுடு கட்சி கைகோர்த்து நிற்கிறது. (கைதட்டல்) மாசேதுங்குடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர், பழகியவர் இலங்கை கம்யூனிசுடுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசன். அவர் வலிமை மிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தார். அவர் கடைசி நேரத்தில் சொன்னார். தலைவர் நெடுமாறன் அவர்களுக்குத் தெரியும். அதை நெடுமாறன் அவர்கள் எழுதிய நூலில் பதிவு செய்திருக்கிறார் அவர் கடைசி நேரத்தில் சொன்னார். பிற்போக்கு வாதமும் இனவாதமும் நிறைந்த சிங்கள அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுவது என தமிழ் இளைஞர்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதாகும். இதன்மூலமாக தமிழ் மக்களின் இனக் கவுரவத்தை அவர்கள் காப்பாற்றியிருக் கிறார்கள். சர்வதேச ரீதியில் கொரில்லாப் போராட்ட வரலாற்றில் புகழ்மிக்க ஒரு அத்தியாயத்தை அவர்கள் எழுதி யிருக்கிறார்கள் என்றார் சண்முகதாசன்.

பிரபாகரன் ஈடுஇணையற்ற இயக் கத்தை உருவாக்கினார். போராளிகளை உருவாக்கினார். ஆகவே பிரபாகரன் படைத்த வரலாற்றை யாரும் படைக்க வில்லை. அவர் உருவாக்கிய வீரர் களைப் போல உலகத்தில் இணையான வீரர்களைப் பார்க்க முடியாது. இல்லை. இல்லவே இல்லை. இருந்தார்கள் வியட்னாமில் இருந்தார்கள். இசுரேலிய வீரர்கள் பலர் போராடியிருக்கிறார்கள். பாலத்தீன போராளிகள் இன்றும் போராடுகிறார்கள். ஆனால் பிரபாகர னின் போராளிகள் அவர்களுடைய வலிமை ஆற்றல் தனித்தன்மை வாய்ந்தது. என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உலக வரலாற்றில் அவர் உருவாக்கிய அறப்போராட்டம் கூட தனித்தன்மை யானது. எங்காவது தண்ணீர் கூடக் குடிக்காமல் உலக வரலாற்றில் உயிர் விட்ட உன்னத போராளி உண்டா? திலீபன் அதைக் காட்டினான். பிரபாகரன் அப்படிப்பட்ட வீரர்களை உருவாக்கினார். இப்படி நாம் சொலலிக்கொண்டே போகலாம்.

இன்றுள்ள மிகக் கொடுமையான நிலைமை சிங்களக் குடியேற்றம். இன்னும் பத்து ஆண்டுகள் இது தமிழீழத்தில் நீடித்தால், சிங்களக் குடியேற்றம் தொடர்ந்து நடக்குமானால் அதற்குப் பிறகு தமிழீழம் என்ற தாயகம் இருக்காது. அதைத்தான் தொடக்கத்திலிருந்து தாயகம் என்ற கொள்கையைத் தலைவர் பிரபாகரன் வலியுறுத்திக் கொண்டு வருகிறார் என்பதை தலைவர் நெடுமாறன் அவர்கள் தெளிவாக இந்த நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள் அடிக் கிற கூத்து இனவெறிக் கூத்து. கொலை வெறிக் கூத்து கொஞ்சநஞ்சமல்ல.

நேற்று தமிழ்நாட்டுக்கு வந்தி ருந்த ஈழத்தில் நாடாளுமன்ற உறுப்பின ராக இருக்கிற சிறீதரன் மதுரையில் வழக்கறிஞரிடையே பேசியிருக்கிறார். இதுதான் கடைசியாக ஈழத்தைப் பற்றிய தகுதியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தமிழகத்தில் பேசிய கருத்து. அதைச் சொல்லி நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறினார். மதுரையில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அவர் பேசியிருக்கிறார். கடைசிக்கட்டப் போராட்டத்தில் 3 இலட்சம் மக்களும் 40ஆயிரத்திற்கும் மேலான போராளிகளும் கொல்லப் பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் கடைசிக் கட்டப் போரில் மட்டும் 1,40,000 பேர் கொல்லப்பட்டார்கள். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை அப்புறப் படுத்தும் பணியில் மும்முரமாக உள்ளார் கள். இரண்டாம்தர மூன்றாம்தர குடி மக்களாக தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள். இலங்கையில் வடக்கு-கிழக்கு பகுதிகள் தான் தமிழர்கள் அதிகம் வசித்த பகுதி யாக இருந்தன. அதற்கான அடையாளங் களையே அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. திரி கோணமலைப்பகுதியில் 22 சதவீதமாக இருந்த சிங்களர்கள் 72 சதவீதமாக உயர்ந்துள்ளார்கள். அம்பாறையில் 21 சதவீதமாக இருந்த சிங்களர்கள் 90 சத வீதமாக உயர்ந்துள்ளார்கள். இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் பகுதியில் குடியேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிங்கள இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலால் தமிழர்கள் மீண்டும் குடியேறுவது தடுக்கப் படுகிறது.

செனிவா தீர்மானம்தான் இலங் கைத் தமிழர்களிடையே புதிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங் கைத் தமிழர்களுக்கு சுதந்திரம், சம உரிமைகள் வழங்கப்படவேண்டு மென்றால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் கொடுக்கின்ற அழுத்தத்தின் காரணமாகவே அது வழங்கப்பட முடியும். என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. உங்கள் பொறுப்பை நீங்கள் உணர வேண்டும். ஒரு பொறுப்புள்ள ஈழ இளம் தமிழர் தலைவர் சொல்கிறார். தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகவே செனீவா தீர்மானத்திற்கு இப்போது இந்தியா ஆதரவு தெரிவித்து இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஆதரவே ஒரு மாற்றத்தை ஏற் படுத்தி இருக்கிறது. செனிவா தீர்மானம் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச மக்களின் பார்வைக்குச் சென்று இருக்கிறது. இருந்தபோதிலும், . இலங்கை இராணுவம் தமிழர் பகுதியிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படு கொலைக்கு எதிராக பொதுவிசாரணை நடக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்.

ஒன்றை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கேட்பது ஊரல்ல; நாங்கள் கேட்பது நாடு. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் சிங்களர்களுக்கு எதிராக எதை யும் கேட்கவில்லை. நாங்கள் சிங்களர் களை ஒழிக்க வேண்டும் என்று கேட்க வில்லை. அவர்கள் தான் தமிழர்களை ஒழிக்க வேண்டும், தமிழை ஒழிக்க வேண்டும், தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் கேட்பது ஊரல்ல; நாங்கள் கேட்பது நாடு. சிங்கள வெறியர்கள் இரண்டரை இலட்சம் தமிழர்களின் வீடுகளை உடைத் துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள் இடிக்கப்பட்டாலும் போரை நிறுத்துங்கள் என்று அவர்கள் சொன்ன தில்லை. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு உணவு வழங்கினோம் என்கிறார்கள். உணவு தான் தமிழர்களின் நோக்கமாக இருந்திருந்தால் திலீபன் உண்ணாநோன்பு இருந்து செத்திருக்க மாட்டான். தெரிந்து கொள்ளுங்கள். புரிந்துகொள்ளுங்கள். எங்கள் உணர்வு களைப் புரிந்துகொள்ளுங்கள்.

இறுதியாக இந்த மேடையில் நான் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நேற்று விடுத்த அறிக்கை காட்டமான அறிக்கையாக இருந்தது. இதுவரையில் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது முதல் நேற்று அறிக்கை வெளியிட்டவரை அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையே நான் பார்க்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்துப் பார்வையிட ஏப்ரல் 16 முதல் 21ந் தேதி வரை 15 மக்களவை உறுப்பினர்களை இலங்கைக்கு நாடாளு மன்ற கூட்டுக்குழு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதிமுக சார்பில் ஒரு உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ரவிபெர்னார்டை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சிங்களருக்கு இணையாக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் போரின் போது இழந்த இடங்களிலேயே, அவர்கள் முன்னர் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியாக இருக்கிறது. இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் உள்நாட்டுப் போரில் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது போர்க் குற்றவாளிகளாக அறிவித்து ஐநா சபை நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை முகாமில் வாழும் தமிழர்கள் அனை வரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பக் குடியமர்த்தப்படவேண்டும் என்றும் சிங்களருக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகுக்க வேண்டுமென்றும் மறுத்தால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத்தடையை மத்திய அரசு விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றியது. இந்தத் தீர்மானம் மீது எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக செனிவா வில் நடைபெற்ற ஐநாவின் மனித உரிமைக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இருப்பினும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவ தற்கு இது முதற்படியாக இருக்கும் என்பதால் அதை நான் பாராட்டினேன். நாடாளுமன்றக்குழு இலங்கைக்குச் செல்வது பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப் பினர்கள் சுதந்திரமாக செயலாற்றினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாக இருக் கும் என்றும் உதவும் என்றும் நம்பினேன். மேற்கொள்ளப்பட்ட மறு வாழ்வு நடவடிக்கைகளைப் பார்வை யிட்டு அவற்றிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட உதவும் என்று நம்பினேன். அதனால்தான் அதிமுக சார்பில் ஒரு உறுப்பினரை அனுப்ப சம்மதித்தேன். ஆனால் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் போரினால் பாதிக் கப்பட்ட தமிழர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் நேரடியாகக் கலந்துரையாடவும் அவர்களுடைய உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வும் வாய்ப்பு இருக்காது என்பது தெரிந் தது. இராசபக்சே அரசின் அதிகாரிகள் அவர்கள் நடத்தும் கூட்டங்கள் இவற் றுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது ஏதோ முன் னேற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிற சுற்றுப்பயணம் போல் உள்ளது என்றும் இலங்கை அரசுக்குச் சாதகமாக கருத்து தெரிவிக்க தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் தான் என்பது புலப்படுகிறது. செனீவாவில் இயற்றப்பட்ட மென்மை யான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ஏற்றுக் கொள்ள முன்வர வில்லை. ஆகவே அந்த பயணக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவ தில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். தமிழக மக்களும் தமிழக அரசும் எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் இந்த மேடையில் கேட்டுக்கொள்ள விரும்பு கிறேன். நெடுமாறன் அவர்களுடைய இந்த நூலை நீங்கள் படித்தால், எதிர் காலத்தில் இந்திய அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் படித்தால் அவர் களிடம் மாற்றம் வரும். இந்தநூல் ஒரு அரும்பெரும் நூல். என்னைப் பொறுத்த வரை தமிழீழ மக்கள் கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஈழவரலாற்றைப் பொறுத்தவரையில் அண்மையில் வெளிவந்த நூல்களில் இது முதன்மையான நூல் என்று கூறி இந்த விழா தொடர்ந்து சிறப்புற நடக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்து அமர்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.