வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2012 13:04
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான
விவரங்களையே தந்துள்ளார். இலங்கையில் போர் நடந்த போது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள்தான் உணர முடியும் என்று கூறியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங்களில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்துடன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார். ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர் உடன்பாடு செய்ய முடியாது, எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு. ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப்படித்தான் இந்திய அரசு செயல்படவேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் எனது நிலைப்பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி.
ஈழப்போராளிகளுக்கிடையே சகோதர யுத்தத்தை தூண்டிவிட்டதற்கும் அந்தப்போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும் நெடுமாறன்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். வரலாற்று உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இவ்வாறு கூறியிருக்கிறார். 1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் சகல போராளி இயக்கங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. ஈழ விடுதலை அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மனமாற விரும்பினார். இதற்காக குறிப்பிட்ட நாளில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் தன்னைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது இந்த அழைப்பை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி போராளி இயக்கத் தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையும் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன. போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்துவதற்கான முதல் நடவடிக்கையை இதன் மூலம் மேற்கொண்டவர் கருணாநிதிதான், தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிளவு வேலைகளை வரிசையாக சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். உதாரணத்திற்கு இங்கே ஒன்றை சுட்டிக்காட்டினேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தவரும் கருணாநிதியே. இந்த உண்மையை மறைக்க பிறர் மீது பழிசுமத்த முற்படும் அவரின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை.
தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதை தீர்மானத்தில் ஜெயலலிதா கொண்டுவந்தது எனக்கு நினைவு இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு அதன் நகல்களை நாங்களும் எங்களுடைய தோழமை கட்சிகளும் கொளுத்தி கைது செய்யப்பட்டோம். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்பவரைப் போல நாடறிந்த இந்த உண்மையை மறைப்பதற்கு கருணாநிதி முயற்சி செய்கிறார்.
டெசோ மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் போடக்கூடாது என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவரைச் சந்தித்து வற்புறுத்தியதாகவும் அதனை தான் ஏற்றுக்கொண்டதாகவும் நெடுமாறன் கூறியிருப்பது பொய்யாகும் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார். அது உண்மையில்லை என்றால் நடத்தப்பட்ட மாநாட்டின் பெயரிலோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிலுமோ தமிழீழம் என்ற சொல்லே இடம்பெறாமல் போனதற்கு யார் பொறுப்பு? மத்திய அமைச்சர் பொறுப்பு இல்லை என்று சொன்னால் இவர் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். எதைக் கண்டு அஞ்சி அவர் இவ்வாறு செய்தார் என்பதையாவது வெளியிடவேண்டும்.
நேற்றைய தினம் இந்திய நாடாளுமன்றத்திற்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டதற்கு பின்னணி என்ன? முன்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மதுரையில் நடத்தவிருந்த பெரும் ஆர்ப்பாட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதே
அதைப் போல இப்போதும் கைவிடப்பட்டிருக்கிறது. திரைமறைவில் நிர்பந்தம் செய்தது யார் பகிரங்கமாக வெளியிடும் துணிவு கருணாநிதிக்கு உண்டா?
ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது நடத்திய டெசோ மாநாடும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது. முதிர்ந்த வயதில் அதற்குத்தக்க பக்குவம் இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளால் மற்றவர்கள் மீது வசைபாடுவது அவரையே திருப்பித் தாக்கும் என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறாரோ அவ்வளவுக்கு அவருக்கு நல்லது.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.