கூடங்குளத்தில் நடைபெறும் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இந்திய அரசையோ தமிழக அரசையோ சிறிதுகூட சிந்திக்க வைக்கவில்லை. ஆனால்,
உலக நாடுகளின் தலைநகரங்களான டோக்கியோ, பாரிஸ், வியன்னா போன்றவற்றில் வாழும் மக்கள் கூடங்குளம் மக்களின் போராட்டத்தைக் கண்டு வியப்புடன் ஆர்வத்துடனும் அதைப்பற்றி அறியத் துடிக்கிறார்கள். ஜப்பானில் உள்ள பியூகூஷிமாவில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்து உலக முழுவதிலும் அணுமின் உலை பற்றிய அடிப்படைக் கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்திவிட்டது. ஆனால் இந்திய அரசோ பிடிவாதமாக அணுஉலையை செயற்படுத்தும் தனது திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. ஜப்பானில் நடைபெற்ற அணுஉலை விபத்தை மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள்; மின்சாரத்தினால் உருவாகும் வளர்ச்சியின் பயன்களை நுகர்வதற்கு தொடங்கிவிடுவார்கள் என இந்திய அரசு நம்புகிறது. கூடங்குளம் மக்களும் அருகில் உள்ள கேரள மக்களும் இந்திய அரசைவிட விரைவாக சிந்திக்கிறார்கள். அணுஉலைகள் அற்ற எதிர்கால உலகத்தைக் குறித்த அவர்களின் நம்பிக்கை வீண் கனவல்ல. உலகம் அந்த திசையை நோக்கி அடியெடுத்துவைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்தியா, சீனா, இரசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே இதில் பின்தங்கியுள்ளன. அணு உலைகள் பற்றிய தனது கொள்கையில் சிறிதளவு மாற்றம் காணக்கூட இந்தியா தயாராக இல்லை. ஆனால், உலக முழுவதும் பரவிவரும் அணுஉலை எதிர்ப்பு அலையை இந்திய அரசு சுலபமாக புறந்தள்ளிவிட முடியாது. அடுத்த 30 ஆண்டுகாலத்திற்குள் ஜப்பானில் உள்ள அணுமின் உலைகளை முழுவதுமாக மூடிவிட வேண்டும் என ஜப்பானிய அமைச்சரவை முடிவுசெய்திருக்கிறது. மாற்று மின்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அது திட்டமிட்டுள்ளது. 2012 மே மாதத்திற்குள் 50 அணுமின் உலைகளை ஜப்பானிய அரசு மூடிவிட்டது. ஆனாலும் சூலையில் அவற்றில் 2 மட்டும் மறுபடியும் இயக்கப்பட்டன. ஆனால் அவற்றையும் இழுத்துமூடி அணுமின் உலைகள் அற்ற நாடாக ஆக வேண்டும் என ஜப்பான் உறுதி பூண்டுள்ளது. மறுபடியும் ஒரு அணு உலை விபத்தைச் சந்திக்க அந்த நாடு தயாராக இல்லை. 2030ஆம் ஆண்டுக்குள் அணுமின்சக்தி உற்பத்தி செய்வதை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக ஜப்பானிய பிரதமர் யோஷிகிஹோ நோடா அறிவித்திருக்கிறார். மாற்று மின்சார உற்பத்தியை 30 சதவிகிதம் பெருக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அணுமின் உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடான பிரான்சு இப்போது அதிலிருந்து விடுபடுவதற்குத் திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் பிரான்சில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அணுமின் உலைகளின் பங்களிப்பை 75% குறைக்கப்போவதாகவும் அந்நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலந்தே தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஐரோப்பாவில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அணுமின் உலையை அறவே அகற்றும் புரட்சிகரமான நடவடிக்கையை செய்துள்ளன. புகுஷிமாவில் நடைபெற்ற விபத்துக்குப் பிறகு உலக நாடுகளில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த 16 அணுமின் உலைகளில் 12ன் வேலைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இன்னமும் தொடர்ந்து புதிய அணு உலைகளைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. 2011ஆம் ஆண்டில் சப்பான், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் 13 அணுமின் உலைகள் மூடப்பட்டுவிட்டன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அணுசக்தியை மட்டுமே நம்பியிருப்பதற்கு எதிரான முடிவுகளை உறுதியாக எடுத்துள்ளன. அணுசக்தி என்பது சுற்றுப்புறச் சூழலுக்கு சிறிதளவுகூட கேடுவிளைவிக்காதது என கருதப்பட்டது தவறு என்ற மறுசிந்தனை பிறந்துள்ளது. பொருளாதார கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான உலக அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் அணு உலைகளுக்கு அறவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் போராடிவரும் மக்களின் உண்மையான அச்சத்தைப் போக்குவதில் அரசு வெற்றிபெறவில்லை.
மக்களின் கோபாவேசத்தை அடக்குமுறையினாலோ அல்லது அன்னிய நாட்டின் கைக்கூலிகள் என்று ஏசுவதின் மூலமோ அடக்கிவிட முடியாது. எதிர்காலத் தலைமுறை அணுசக்தி அபாயத்திலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படும் என்ற உறுதியை கூடங்குளம் மக்களுக்கு அளிப்பது அவர்களை ஒருவழியில் சமாதானப்படுத்தும். 19-9-12 தேதியிட்ட எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம் |