தமிழீழ விடுதலைப் போரை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்ட அதே முறைமையூடான நகர்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கான அனைத்துலக அனுகூலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், விடுதலைப் புலிகளை சமாதானப் பொறிக்குள் சிக்கவைத்துப் பிளவு படுத்தியது - மிக அற்புதமான, கட்டுக்கோப்பான, தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட விடுதலைப் புலிகளின் உள்ளேயே பல விச ஜந்துக்களை ஊடுருவ வைத்து விட்டது. முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் வரை விடுதலைப் புலிகளின் அத்தனை நகர்வுகளும் உள்ளே ஊடுருவிய ஈனத் தமிழர்களால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு, தமிழின அழிப்பு முழுமைப்படுத்தப்பட்டது. துரோகங்கள் ஊடாகத் தன் கொடூரங்களை நிகழ்த்தித் தமிழீழ விடுதலைப் போரின் களத்தை வீழ்த்திய சிங்கள தேசம், புலத்தை நோக்கி அதே பாணியில் நகர்ந்து வருகின்றது அப்பட்டமாகத் தெரிய வருகின்றது. தமிழீழ மக்களுக்கு எந்த நியாயத்தையும் வழங்கத் தயாராக இல்லாத சிங்கள ஆட்சியாளர்கள், புலத்தை வீழ்த்துவதன் மூலம் தமிழீழ விடுதலை இலட்சியத்தின் மூச்சை நிறுத்தும் முயற்சியில் முற்றாகச் செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் பெரு விருட்சத்தின் ஆணி வேரை அறுப்பதற்குத் தீட்டப்பட்ட சிங்களக் கோடரியின் காம்பாகக் கருணாவைப் பயன்படுத்திய சிங்கள இனவாதம், தமிழீழ பெருவிருட்சம் இன்றும் வீழ்ந்துவிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் புலம்பெயர் விழுதுகளைத் தறிப்பதற்குத் தீட்டப்பட்ட சிங்களக் கோடரியின் காம்பாக கே.பி. பொருத்தப்படுகின்றார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குரிய விருந்தினராக உள்ள கே.பி. மூலமாகப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. தேசியத் தலைவரது காலடிக்குக் கீழேயே கருநாகங்களை உருவாக்கிய சிங்கள தேசம், புலம்பெயர் தமிழர்களது காலடித் தடங்களில் தேள்களையும், கொடுக்கான்களையும் உருவாக்கி வருகின்றது. இதன் உச்சக்கட்டமாகவே, புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக சிங்கள தேசத்தால் உருவாக்கப்பட்ட சிலர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதான தகவலாக வெளிவந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முதலாவது வருடத்திலேயே அதற்கான முன் முயற்சி எடுக்கப்பட்ட போதும், கொழும்புக்கு அழைக்கப்பட்ட விச ஜந்துகளுடன் ஓரிரு தமிழீழ உணர்வாளர்களும் தவறான புரிதல்களுடன் உள்வாங்கப்பட்டதால் சிங்களச் சதி அம்பலப்படுத்தப்பட்டு, அது அப்போது கைகூடாமல் போய்விட்டது. அதன் தொடர்ச்சியாக, இப்போது மீண்டும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளாக சிங்கள தேசத்தால் உருவாக்கப்பட்டவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி நகர முற்பட்டுள்ளார்கள். ஏற்கனவே, சிங்கள தேசம் சென்று விருந்துண்டு திரும்பியவர்கள் இன்றுவரை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மறைந்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். விடுதலைப் போர் வழங்கிய பக்குவத்தாலும், விடுதலைப் புலிகளது தமிழ்த் தேசிய சிந்தனைத் தெளிவினாலும் தகர்க்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்ட ஈழத் தமிழர்கள் மத்தியிலான சாதி அமைப்பில், புதியதொரு தீண்டத் தகாத சந்ததியாக உருவாகிவரும் இவர்கள் அல்ஜீரிய விடுதலைப் போரின்போது பிரஞ்சு ஆட்சியாளர்களுக்குத் துணை போன காரணத்தால் உருவான 'கார்க்கி' இனத்தின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். தங்கள் விடுதலைப் போரை எதிரிக்குக் காட்டிக் கொடுத்ததால் அல்ஜீரிய மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட 'கார்க்கி'களை பிரஞ்சு தேசமும் மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களது பாவங்களைக் கழுவ முடியாத 'கார்க்கி'கள் தலைமுறை தலைமுறையாக புறக்கணிப்புக்களை எதிர்கொண்டு குற்றச் செயல்களின் சூத்திரதாரிகளாக மாற்றம் பெற்றுள்ளனர். தமிழீழ மக்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளதால், அங்கே உருவாகியுள்ள 'கார்க்கி'களால் தங்களது பணிகளை வெளிப்படையாகவும் தொடர முடிகின்றது. ஆனால், புலம்பெயர் தேசங்களில் சிங்கள விசுவாசிகளாக மாற்றம் பெற்றுள்ள 'கார்க்கி'களது நிலமை மிக ஆபத்தும், அசிங்கங்களுமானதாகவே தொடரப் போகின்றது. தென்தமிழீழம் முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக சிங்கள தேசத்தின் உடைமையாக்கப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய சிங்கள தேசத்தின் காலனித்துவ நகர்வும் வேகம் பெற்று வருகின்றது. அச்சுறுத்தல்களுக்கும், அடிமைப்படுத்தல்களுக்கும் நடுவே சலிப்புற்றுப் போயுள்ள இளைய தலைமுறைத் தமிழர்கள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்து வருகின்றார்கள். சிங்கள தேசத்தால் விதைக்கப்பட்ட கருத்துருவாக்கத்தாலும், தொடர்ந்தே வரும் வன்முறைகளாலும், வாழ்க்கைச் சுமைகளாலும் தமிழர்களது மனித வளம் குடும்பக் கட்டுப்பாடுகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. இது, ஈழத் தமிழர்களது எதிர்கால இருப்புக்கே கேள்விக் குறியை உருவாக்கி வருகின்றது. அந்த எல்லை வரை சிங்கள தேசம் ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கு எல்லா வகையான இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்ளும். அதுவே இப்போது புலம்பெயர் தமிழ் 'கார்க்கி'களுக்கான பணியாகவும் உள்ளது. - இசைப்பிரியா |