மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்கள் கடந்த 19-11-12 அன்று சென்னையில் காலமானார் என்ற துயரமிகு செய்தியை அறிந்து மிக்க வேதனையடைந்தேன்.
மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்கிய அவர் மனித நேயத்திலும் ஒப்பாரும் மிக்காருமில்லாமல் திகழ்ந்தார். கடமை, நேர்மை, அஞ்சாமை, கண்டிப்பு ஆகியவை அவருடன் உடன் பிறந்தவை. இதன் காரணமாக சக மருத்துவர்களாலும் மாணவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டார். தனது மருத்துவத்தை ஒரு தொழிலாகச் செய்யாமல் தொண்டாகச் செய்தார். ஏழை, எளிய நோயாளிகளுக்கு இலவசமாகவும் பரிவுடனும் உதவினார். அவருடைய பாட்டனார் சி.டி. நாயகம் அவர்கள் பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழர். 1938ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பாசறையாக அவர் நிறுவிய தியாகராயர் பள்ளி விளங்கியது. பாட்டனாரின் சிறந்த வாரிசாக அவரது பேரன் மரு. செ.நெ. தெய்வநாயகம் திகழ்ந்தார். தமிழ் இனஉணர்வும், தமிழ் வளர்ச்சித் தொண்டும் அவருடன் பிறந்தவை. இதன் காரணமாக நானும் அவரும் மிக நெருக்கமானோம். 2002ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பை உருவாக்கும் பணியில் எனக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர். அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தோன்றிய காலத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகாலமாக அதன் செயலாளர் நாயகமாகப் பணியாற்றி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் முன்னின்றார். அதே ஆண்டில் பொடாச் சட்டத்தில் நான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது உலகத் தமிழர் பேரமைப்பின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவை புதுச்சேரியில் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினார். அடிக்கடி கடலூர்ச் சிறைச்சாலைக்கு வந்து என்னைச் சந்தித்து உலகத் தமிழர் பேரமைப்பின் பணிகள் குறித்து விவாதிப்பார். உலகத் தமிழர் பேரமைப்பு இன்றைக்கு உலகத் தமிழர்கள் நடுவில் பெற்றிருக்கிற மதிப்பிற்கு அவரும் முக்கிய காரணமாக விளங்கினார் என்பதை நன்றியோடு பதிவு செய்கிறேன். உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பது என முடிவு செய்து அந்தப் பணியில் நாங்கள் ஈடுபட்டபோது அவர் உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார். அந்தப் பணிகளில் தன்னால் ஈடுபட முடியவில்லையே என வருந்தினார். ஒவ்வொரு முறையும் நான் அவரைச் சந்திக்கும்போது முள்ளிவாய்க்கால் முற்ற வேலைகள் குறித்தே திரும்பத் திரும்ப விசாரித்து மகிழ்வார். படுத்த படுக்கையில் இருந்தே ஒரு பெரும்தொகைக்கான காசோலையை அதற்காக அனுப்பிவைத்த பேருள்ளம் அவருக்கு இருந்தது. உலகத் தமிழர் பேரமைப்பு அவர் மறைவினால் ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆளாகியுள்ளது. என்னோடு தோள்கொடுத்துத் துணை நின்ற அன்புத் தோழரை இழந்துவிட்டேன். உலகத் தமிழர்கள் தங்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட உன்னதமான தொண்டரை இழந்துவிட்டார்கள். மருத்துவர் உலகம் மனிதநேயமிக்க சிறந்த மருத்துவரை இழந்துவிட்டது. அலோபதி மருத்துவத்தோடு சித்த மருத்துவத்தையும் இணைத்து எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அவர் அளித்த சிகிச்சை முறை எத்தனையோ நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவ உலகின் கவனத்தை அவர்பால் ஈர்த்தது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட கொடிய நோயிலிருந்து அவரை மீட்க எவராலும் முடியவில்லை. அவரின் மறைவால் வருந்தும் அவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் அவர் தலைமையில் இயங்கிய கல்வி நிலையங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - பழ. நெடுமாறன் |