தமிழக உணர்வாளர்கள் லண்டன் மாநாட்டைப் புறக்கணித்தது ஏன்? - கே.ஜி. மகாதேவா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 14:22
ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, ஈழப்போராட்டத்தைச் சுமந்து நிற்கும் வலிகளை தங்களின் தொடர்ச்சியான உரத்த குரல்கள் மூலமாக உலகறியச் செய்து வரும் தமிழ்நாட்டு ஈழ உணர்வாளர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய முக்கியமானவர்கள்,
பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனிலுள்ள இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் சர்வதேச தமிழ் மாநாட்டைப் புறக்கணித்தது ஏன்?
கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி, நேற்று முன்தினம் முடிவடைந்த இந்த இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களுக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் ஈழ ஆதரவு இயக்கங்கள், அமைப்பு களின் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த நிலையில் முதல் அழைப்பு பெற்றுக் கொண்ட வைகோ, பழ. நெடுமாறன், சீமான் ஆகியோர் மாநாட்டைப் புறக்கணித் திருந்தனர். தமிழக அரசியல் கட்சி களைப் பொறுத்தவரை அழைப்பிதழ் பெற்ற விஜயகாந்தின் தே.மு.தி.க., மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் களும் லண்டன் செல்லவில்லை. ஈழத் தமிழர் விடிவில் முழு ஈடுபாடு கொண்டு, ஆரம்ப காலம் முதல் விடுதலைக்குத் தோள் கொடுத்த புலவர் புலமைப்பித்தனுக்கு அழைப்பு அனுப்பப் பட்டு, பல தடவைகள் அவருடன் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களும் வேறு சிலரும் லண்டனிலிருந்து தொலை பேசி மூலம் வலியுறுத்தியும் பின்வைத்த காலை அவர் முன்வைக்கவில்லை.
லண்டன் தமிழ் மாநாடு - நாலு பேர் சொன்னது!
ஈழத் தமிழர்கள் மீது அன்றும் இன்றும் இன, மொழி உணர்வு மூலம் எழுத்தாலும், பேச்சாலும் உயிர் கொடுக்கும் உணர்வூற்றுப் படைப்பாளர் கள் சிலரை "தினக்குரல்'' நேற்று தொடர்பு கொண்டபோது சமாதானம் கூறினாலும் அவர்களின் கருத்துக்களில் அனல் பறந்தது! இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து சர்வதேச அளவில், சுதந்திரமாக விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகத் தமிழர்களையும் கடந்து இங்கிலாந்தின் ஆளும் மற்றும் எதிர்ப்புக் கட்சி எம்.பி.க்கள் சுமார் எண்பது பேர் இணைந்து ஒரு குழுவை அமைத்து இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக வேகம் காட்டியிருக்கும் நிலையில், இதனை வரவேற்று இலங்கையில் நடந்திருப்பது போர்க் குற்றம் அல்ல, இனப்படுகொலை என்று வெளிச்சம் போட்டு தோலுரித்துக் காட்டி, உலக சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டிய பாரிய கடமை தமிழக அரசியல் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு உண்டு என்று வற்புறுத்த, எதிரும் புதிருமான மாநில அரசியலை இதில் போட்டுக் குழப்ப வேண்டாம் என்று சிலர் இடித்துரைக்க, போர்க் குற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர்களை அழைத்து மேடையில் அமர வைத்து, ஈழத் தமிழர் களைக் கொன்றொழித்த ராஜபக்ஷே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்று வதில் என்ன நியாயம் இருக்கிறது? போர்க் குற்ற விசாரணையை வலியு றுத்தும் மாநாட்டுக்கு, போரின் பங்காளிகள்-ஒரு வகையான போர்க் குற்றவாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் குளிர்காய லண்டன் போயிருக்கிறார்கள்... "என்ன கொடுமை இது...' என்று சிலர் நெருப்பைக் கொட்டினார்கள்.
"அந்த இரத்தக் கறையைக் கழுவ
தி.மு.க. எடுத்த நிலைப்பாடு!'
"லண்டன் உலகத் தமிழ் மாநாடு முயற்சி வரவேற்கத் தக்கதுதான். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்க சுதந்திரமான சர்வதேச நீதிவிசாரணை நடத்தப்பட்டு, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு, பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானம் போட்டு ஈழத் தமிழர் தம் உரிமையை நிலை நாட்ட சர்வதேச மாநாடு தேவை தான். ஆனால், தங்கள் மீதான உலகத் தமிழர்களின் போர்ப் பார்வையைத் திசை திருப்ப, தமிழினப் படுகொலையில் பங்கு கொண்டதன் மூலம் தங்கள் கரங்களில் படிந்த இரத்தக் கறையைக் கழுவும் முயற்சியில் இம்மாநாட்டை தி.மு.க. பயன்படுத்த இறங்கியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்' என்று தமிழ்நாட்டின் முன்னணிப் படைப்பாளி, பிரபல எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் "தினக்குரலிடம்' குமுறினார்.
"தமிழினப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு நீதி விசாரணை மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனும் இலக்கை நோக்கி நடைபெற்ற லண்டன் தமிழ் மாநாட்டுக்கு ஈழ ஆதரவு கொண்ட கட்சிகள், அமைப்புகள், எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கும் சூழலில், முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையில் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தி.மு.க. அழைக்கப் பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் படுபாதகச் செயலை மறைத்து, உலகத் தமிழர்களின் கோபக் கனலைக் குறைக்க இந்த மாநாட்டை தி.மு.க.வினர் நன்றாகவே பயன்படுத்த முயற்சித் தாலும், லண்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தி.மு.க. மீண்டும் மூக்குடை பட்டதாகவே தெரிவிக்கின்றன. பத்திரி கைச் செய்திகளின்படி ஸ்டாலின் தனது லண்டன் உரையில் ஈழத் தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது போல் "இலங்கை யில் தமிழர்கள் சிறுபான்மைதான்' என்று தனது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை வெளியிட்டு, மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை யிடம் ஸ்டாலின் கொடுத்த மனுவில் உள்ள வசனங்களைப் படிக்கும்போது இந்த மனு டில்லி அங்கீகாரம் பெற்றுத் தான் திருத்தி வரையப்பட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது. காரணம், அந்த மனுவில் போர்க் குற்றம் மற்றும் இனப்படுகொலை போன்ற முக்கிய வார்த்தைகள் எந்த இடத்திலும் காணப் படவில்லை. பதிலாக, "போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள்' என்பதே இடம் பெற்றிருக்கிறது. ஸ்டாலின் தனது உரையை முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழே வந்ததும் இலங்கையைச் சேர்ந்த சில பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தனர் என்றும் தடுமாறி சமாளிக் கவே அவரால் முடியாமல் போய் அந்த இடமே பெரும் பரபரப்பாகிவிட்டது என்றும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெசொ என்றொரு செத்த பாம்பு. அந்த விலாசத்துடன் ஐ.நா. நுழைவு. தி.மு.க.வுக்கு பாவ முகங்கள் பல இருக்கலாம். இவற்றில் எந்த முகத்தையும் தரிசிக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்றல்ல, என்றும் தயாராக இல்லை என்பதை தி.மு.க.வுக்கு லண்டன் மாநாடும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது'' என்று கொதித் தெழுந்தார் பா. செயப்பிரகாசம்.
கொதிநிலை கடந்த நெடுமாறன், வைகோ அதிர்வுகள்!
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனை "தினக்குரல்' தொடர்பு கொண்டு, "லண்டன் தமிழ் மாநாட்டில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை'' என்று கேட்டதும், "முள்ளிவாய்க்கால் தமிழினப் படு கொலையின் பங்காளியுடன் மேடையில் எந்த உணர்வில் உட்காருவது, எப்படி முகம் பார்ப்பது?, என்று கோபக்கனல் தொடுத்தார். வைகோவும் இதே நிலைப் பாட்டைத்தான் கொண்டிருந்தார். "இந்த மாநாட்டுக்கு ஸ்டாலினை அழைத்து விட்டு என்னையும் நீங்கள் அழைப்பதா... கண்டிப்பாக நான் வரமாட்டேன்...'' என்று வைகோ மாநாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களிடம் கூறியிருக்கிறார்.
"ஈழத் தமிழ் மக்களின் அழி வுக்குக் காரணமான தி.மு.க.வினருடன் சமமாக அமர்ந்து விட்டு, தமிழ் மக்களின் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? பாவச்சுமையை அவர்கள் எந்த வடிவத்திலும் இறக்கி வைக்க முடியாது. நாங்களும் எந்த நிலைப் பாட்டிலும் துணைபோக முடியாது. அந்த இரத்தச் சரித்திரத்தை தி.மு.க. திருத்தி எழுதவும் முடியாது. மறைக்கவும் முடியாது!
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் மொத்தச் செலவை யும் பிரித்தானிய தமிழர் பேரவை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை "ரா''வின் கைகள் இருக்கின்றதா எனும் சந்தேகம் வலுக் கிறது. ஏன் என்றால், மாநாடு இனப் படுகொலை பற்றிக் குறிப்பிட்டு விவாதிக் காமல் போர்க் குற்றம் குறித்துத்தான் விவாதிக்கிறதாம். மாநாட்டை யார் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஓர் அமைப்பு அல்ல. சரியான தலைமை இல்லை என்றால் சர்ச்சைகளும் எழத்தான் செய்யும்...'' என்று கூறினார் பழ. நெடுமாறன்.
எரிமலையாக வெடிக்கும் புலவர் புலமைப்பித்தன்!
"முள்ளிவாய்க்கால் கொடுமை யால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும் இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள், கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. யூத இனத்துக்குப் பின்னால் மாபெரும் இனப் படுகொலைக்கு ஆளானது, அனாதைச் சாதியாம் நமது தமிழ்ச்சாதி மட்டும்தான். இந்தியாவும் இலங்கையும் எப்போதுமே தமிழ் இனத்தை அழிப்பதில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தாம். போர்க் குற்ற விசாரணையை வற்புறுத்தும் லண்டன் மாநாட்டுக்கு தமிழகத்திலிருந்தும் போர்க் குற்றவாளிகள் போயிருக்கிறார்கள். இவர்களை வைத்தே இராசபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மாநாடு தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்று எரிமலையாக வெடித்து வினா தொடுக்கிறார் புலவர் புலமைப்பித்தன். லண்டன் உலகத் தமிழ் மாநாடு குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள்:
"இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தில் தமிழ் மாநாடு நடைபெறு வதை தவறு என்று சொல்ல மாட்டேன். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால், இந்த மாநாட்டில் யார் கலந்து கொண்டாலும் சரி, எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் நிறை வேறட்டும்! இது நியாயமா? இராஜபக்சே செய்த போர்க் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம், அதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு மாநாடு. எனக்கு இந்தியா அந்நிய நாடாகவும் இங்கிலாந்து உறவு நாடாக வும் தெரிகிறது. நன்றியோடு இங்கிலாந் தையும் பாராளுமன்ற உறுப்பினர் களையும் பாராட்டுகிறேன். ஆனால், இந்த மாநாட்டை யார் நடத்துகிறார்கள், பின்னால் யார் இருக்கிறார்கள் என்ப தெல்லாம் விளங்கவில்லை. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தம்பி கவிராஜ், ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே என்னைத் தொடர்புகொண்டு ஒவ்வொரு நாளும் ஓயாது பேசினார். தமிழகத்திலிருந்து யாரை எல்லாம் அழைக்கிறீர்கள் என்று நான் கேட்க, எல்லா அமைப்புகளையும் என்றார். தி.மு.க.வையும் தானா என்று வெளிப்படையாகக் கேட்டேன். ஆம் என்று அவர் கூறியதும் நான், அப்படியானால் இராஜபக்சேவின் தம்பிமார்கள், சரத் பொன்சேகாவையும் கூட அழைத்திருக்கலாமே என்றேன். அவர் சமாளித்தார், சமாதானம் சொன்னார். நான் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவரைப் போலவே லண்டனிலிருந்து தோழர் ஆனந்தனும் மாநாட்டுக்கு முதல் நாள் முன்பு வரை தொடர்ந்து அழைத்தார். கடுமையாக அதிருப்தி தெரிவித்தேன். இவர்கள் எப்படித் தி.மு.க.வை தமிழர் அமைப்பு என்று நம்புகிறார்கள்? இராசபக்சே போர்க் குற்றவாளி என்றால், மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் உண்மையில் கருணாநிதிதான் முதல் குற்றவாளி. ஒன்றரை லட்சம் பிணங்கள் மீது ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டவர். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தலைமையில் இருக்கும் தி.மு.க.வின் இன்றைய செயல் தலைவர் தளபதியும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இதைக் காட்டிலும் அந்த மாநாட்டுக்கு அவமானம் வேறென்ன இருக்கிறது! தி.மு.க.வை அழைத்தவர்கள் காங்கிரசையும், ராஜீவ் காந்தியின் குடும்பத்திலிருந்தும் கூட அழைத்திருக்கலாம். இன்று புகழின் உச்சத்திலிருக்கும் சோனியா காந்தியின் மருமகன் வதேராவைக் கூட நீங்கள் அழைத்திருக்கலாம். 2008ஆம் ஆண்டு முதல் 2009 மே 18ஆம் நாள் முடிய நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினை வில் நிறுத்திக் கொள்ளுங்கள். கோபால புரம் கோயபல்ஸ் நடத்திய மோசடி நாடகங்களை மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர்கள் மனதில் ஆழப்படுத்திக் கொள்ளுங்கள் போர்க் குற்றத்தில் பெரும் பங்கு வகித்தவர்களை அழைத்தே போர்க் குற்ற விசாரணை இராஜபக்சே மீது நடத்த வேண்டும் என்று மாநாடு தீர்மானம் நிறைவேற்று வதில் என்ன நீதி இருக்கப் போகிறது..!'' என்று தனது உள்ளக் கருத்துக்களை எரிமலையாய்க் கொட்டித் தீர்த்தார் புலவர் புலமைப்பித்தன்.
இலங்கையில் 2009இல் நடந்தது இனப்படுகொலைதான்!
மாநாட்டில் உரையாற்றிய தமிழர் களின் பேச்சுகளைக் குறிப்பெடுத்துக் கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்ற எம்.பி.க்கள் சைமன் மெக்டொனால்ட் மற்றும் ரோபர்ட் ஹெய்பன்ட், தொழிலா ளர்கள் கட்சித் தலைவர் டெரோமிக் கோயான் ஆகியோர் "இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலைதான். 2009இல் நடந்துள்ள இந்த இனப்படு கொலைகளை சர்வதேச புலனாய்வு விசாரணை செய்ய வேண்டும். 30 ஆண்டுகள் நடந்த விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. ஒரு இனத்திற்கான விடுதலைப் போராட்டமே'' என்று அழுத்தமாக முத்திரை பதித்தனர்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.