தமிழர்களை இன உணர்வு கொள்ள முடியாதபடி எவ்வகையில் வரலாறுகளைத் திருத்தி எழுத முடியுமே, அவ்வகையில் எல்லாம் தன்கை வரிசைக் காட்டினர் வடவர்கள். முறையான பண்பாடு, முதன்மையானக் கல்வி, முதன்மையான கட்டமைப்பு முனைப்பான வீரம்
எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்த இனம் இன்று எல்லா முகவரிகளையும் இழந்து நிற்கிறது. யாரையோ தாத்தா, எவரையோ மாமா, எவளையோ அன்னை என தொடர்பே இல்லாத வடவரை உறவாக திணித்தனர். அதன் விளைவு பாட்டன், வள்ளுவன், மாமன் கம்பன், பாட்டி அவ்வை எல்லாம் நமக்கு அயலவராய் போய்விட்டனர். அகம், புறம் எல்லாம் அடிவேரோடு மறந்தததன் வீழ்ச்சிதான் 7 கோடித் தமிழர்கள் இந்தியத் தமிழர்களாக (அடிமைகளாக) வாழ்கிறோம். இந்நிலை, இங்கு மட்டுமல்ல இலங்கையிலும்தான் இன்றைய பிரணாப் முகர்சியின் முப்பாட்டன் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் தமிழச்சி குவைனியை ஏமாற்றி திருமணம் செய்து ஈழத்தில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தான். இது நான் கூறவில்லை சிங்களவர்களின் வரலாற்று நூல் மகாவம்சம் சொல்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் சிங்களன் தமிழர்களின் மீது வல்லாளுமை செய்து வருகிறான். இங்குள்ள வடவர்களை வைத்துக்கொண்டு, இதனைப் பொறுக்காது, இழிசெயலை ஏற்காது தம்மினத்தின் விடுதலைக்காகத் தானாய் உருவானான் தழலின் வடிவாய் தமிழரின் எழுச்சி வடிவாய். பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்லால் உலகமே வியக்கும் நிலைக்கு தமிழினம் காட்டப்பட்டுள்ளது. 18 அகவையில் களத்தில் இறங்கிய பிரபாகரனுக்கு இன்றைக்கு அகவை 58 ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் மண் மீட்புக் களத்தில் போராளியாக நின்ற மாவீரனின் வரலாறுதான் தமிழரின் எழுச்சி வடிவம் எனும் நூலாக வந்துள்ளது. சந்தித்த சூழ்ச்சிகள், சூழ்ச்சியிலிருந்து தப்பிய நிகழ்ச்சிகள் என பல மெய்சிலிர்க்கும் வரலாற்றுச் சுவடுகளை அய்யா பழ.நெடுமாறன் தொகுத்துள்ளார். யாருமே அறிந்திடாத, யாருக்குமே தெரிந்திடாத புலிக் குகையை, புலியின் போர்ப் பறையை, புலியின் அறவழிப் பார்வையை எழுத்தால் வடித்துள்ளார். யார் நல்லோர், யார் தீயோர், யார் நண்பர், யார் பகைவர், யார் புலி, யார் எலி என அவ்வப்போது பிரபாகரனும் அவரைச் சார்ந்த புலிகளும் சொல்ல, சொல்ல தன் மனத்தில் உள்வாங்கி உருவாக்கிய வரலாற்று தொகுப்புதான் இந்நூல். உலகப் பார்வைக்கே வெளிவராத பிரபாகரனை இன்று அனைவருக்கும் அறிமுகப்படுத்திய அய்யா பழ. நெடுமாறனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். மூன்று கட்டப் போரினை முழுதாய் வடித்துள்ள இந்த நூலில் நான்காம் கட்டப் போரினைத் தொகுக்கவில்லை. கரணியம் போருக்குப் பின் புலி இன்று பதுங்கியுள்ளது. மீண்டும் வெளிவரும் அன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் போரும், போக்கும் மீண்டும் ஒரு நூலாக வரும் என்கிறார். மொத்தத்தில் புலி இன்னும் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த புலி உலகில் என்பது மட்டும் நமக்குப் புலப்படுகிறது. கீதை, பைபிள், குரான் எல்லாம் தமிழரின் அடையாளம் அல்ல. இவை அனைத்தும் வாழ்வியல் கோட்பாடும் அல்ல. உண்மையான வாழ்வியலை மெய்யான விடுதலை உணர்வினை நாம் பெற வேண்டுமானால் தமிழரின் எழுச்சியின் வடிவம் என்னும் இந்த நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். நன்றி : புகழ்ச்செல்வி டிசம்பர் 2012 |