திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:24 |
27-11-2012 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஆவடியில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவுத்தூணில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வைத்
து வீரவணக்கவுரை ஆற்றினார். செ.ப. முத்தமிழ்மணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு திருச்சி செளந்தரராசன் அவர்கள் முன்னிலை வகித்தார். முகிலன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தார். எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தோழர்களும் தமிழர் தேசிய இயக்கம், விடியல் முன்னணி, மக்கள் நல இயக்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தத்தம் குடும்பத்தினருடன் திரளாக வருகை தந்து, மாவீரர்களுக்கு விளக்கேற்றியும் வீரவணக்கம் செலுத்தியும் தங்கள் தமிழின உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நெடுமாறன் தமது வீரவணக்கவுரையினை நிறைவு செய்யும்போது, "தம்பி பிரபாகரன் தலைமையில் நடைபெறப்போகும் 5ஆம் கட்ட விடுதலைப் போருக்கு நாம் அனைவரும் தோள் கொடுத்து துணை நிற்க வேண்டுமென்றும், தாய்த் தமிழக மக்களாகிய நாம் இந்தக் கடமையைச் செய்வோமானால் மேதகு பிரபாகரன் தலைமையில் "தனித்த ஈழம் அமைவது உறுதி'' என முழங்கியதும் சுற்றிநின்ற அனைவரும் தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவாக உரத்த கையொலி எழுப்பி முழக்கமிட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. |